திங்கள், 15 பிப்ரவரி, 2010

கோவையில் தகர்ந்தது தீண்டாமைச் சுவர்

கோவை வரதராஜபுரம் ஜீவா வீதியில் கடந்த 22 ஆண்டுகளாக இருந்து வந்த தீண்டாமைச்சுவர் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முயற்சியால் தகர்க்கப்பட்டுள்ளது.

ஆனாலும் கடவுளின் பெயரால் இந்து மக்கள் கட்சியினர் பொதுச்சாலையின் நடுவில் அருந்ததியர் பகுதிக்கு செல்வதை தடுப்பதற்காக மாட்டுத் தொழுவத்தில் வைத்திருந்த பிள்ளையார் சிலை அகற்றப்படவில்லை. இதனால், சுவர் தகர்க்கப்பட்டாலும், அருந்ததியர் மக்களுக்கு முழுமையாக வழி கிடைக்கவில்லை.

கோயம்புத்தூர் வரதராஜபுரம் காமராஜர் ரோட்டில் உள்ளது ஜீவா வீதி. இந்த வீதியின் கடைசி பகுதியான தந்தை பெரியார் நகரில் அருந்ததியர் மக்கள் வசித்து வருகின்றனர். 1989-ம் ஆண்டு அருந்ததியர் மக்களுக்கு தமிழக அரசு ஆதிதிராவிட நலத்துறையின் மூலம் அதிகாரபூர்வமாக குடியிருக்கும் இடத்திற்கு வீட்டுமனை பட்டா வழங்கியது. இதனால் ஆத்திரமுற்ற ஆதிக்க சாதியினர் அருந்ததியர்கள் தந்தை பெரியார் நகருக்குள் செல்ல முடியாத வகையில் ஜீவா வீதியில் பொதுச்சாலையை மறித்து குறுக்குச்சுவர் கட்டி தடுத்துள்ளனர். இதேபோன்று ஜீவா வீதிக்கு அடுத்து உள்ள நேதாஜி வீதியின் வழியாகவும் அருந்ததியர்கள் செல்ல முடியாத வகையில் தடுப்புச்சுவர் கட்டி வழியை மறித்துள்ளனர். இதனால் எந்த பகுதி வழியாகவும் தங்கள் இடத்திற்கு செல்ல முடியாமல் இருந்து வந்த அருந்ததியர்கள் 1989-ம் ஆண்டே நேதாஜி வீதியில் இருந்த தடுப்பு சுவரை இடித்து தள்ளியுள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டு ஏராளமான அருந்ததியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த வழக்கில் அருந்ததியர்கள் சில தினங்களுக்கு முன்புதான் விடுதலையாகியுள்ளனர்.

இந்நிலையில் ஜீவா வீதியில் கடந்த 22 வருடங்களாக இருந்து வந்த தீண்டாமைச் சுவரை இடித்து, அருந்ததியர்களுக்கு வழி விட வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதுதொடர்பான செய்தி சனிக் கிழமை (ஜன.30) தீக்கதிர் நாளேட்டில் வெளியானது.

சுவர் இடிப்பு
அதைத்தொடர்ந்து, சனிக்கிழமையன்று காலை 9 மணியளவில் மாநகராட்சி அதிகாரிகள், சுவர் அமைந்துள்ள இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். அப்போது அது முழுக்க அருந்ததியர்கள் செல்லக் கூடாது என்பதற்காக கட்டப்பட்ட தீண்டாமைச் சுவர் என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் டாக்டர் பு.உமாநாத் மற்றும் மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா ஆகியோரின் உத்தரவின் அடிப்படையில் தீண்டாமைச் சுவரை இடிக்க ஜெசிபி வாகனம் வரவழைக்கப்பட்டது. இதனால் ஆத்திரமுற்ற சாதி ஆதிக்க வெறியர்கள், சுவரை இடிக்க விடாமல் வாகனத்தை மறித்து நின்றனர்.

இதையடுத்து அருந்ததியர் பகுதியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் யு.கே.சிவஞானம், ரவிக்குமார், பெருமாள், வெண்மணி, கணேஷ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் சிங்காநல்லூர் நகரச் செயலாளர் மனோகரன், மாவட்டச் செயற்குழு உறுப் பினர் நெல்சன்பாபு, மாவட்டக் குழு உறுப்பினர் தெய்வேந்திரன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் அ.ர.பாபு உள்ளிட்ட ஏராளமானோர் திரண்டனர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு நிலவியது. இதையடுத்து ஏராளமான காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர்.

ஆதிக்க சக்தியினரின் எதிர்ப்பை மீறி மாநகராட்சி அதிகாரிகள் தீண்டாமைச் சுவரை இடித்து தள்ளினர். தெற்கு வட்டாட்சியர் சுப்பிரமணியம் தலைமையில் மாநகராட்சி உதவி ஆணையர் (கிழக்கு) லோகநாதன், நகர்புற திட்ட அலுவலர் சவுந்தரராஜ், உதவி நகர்ப்புற திட்ட அலுவலர்கள் ரவிச்சந்திரன், புவனேஸ்வரி, ஆய்வாளர் பொன்ராஜ், இளநிலைபொறியாளர் கலாவதி, காவல்துறை ஆய்வாளர் கௌதம் உள்ளிட்ட அதிகாரிகள் மேற்பார்வையில் இடிப்பு பணி நடைபெற்றது.