புதன், 24 மார்ச், 2010

சாதிவெறியர்களை கைதுசெய்யக் கோரி மார்க்சிஸ்ட் கட்சி மறியல்- 150 பேர் கைது

ஒட்டன்சத்திரம் அருகே உள்ளது கொசவபட்டி. இப்பகுதி சிபிஎம் கிளைச் செயலாளராக இருப்பவர் பி.செல்வராஜ். இவர் தலித் வகுப்பைச் சேர்ந்தவர். காப்பிளியபட்டியில் தண்ணீர் வழங்குவது சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சனையில் ஊராட்சித் தலைவர் இளங்கோவன் மற்றும் ஆதிக்க சாதியினர் இவரை அழைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த பி.செல்வராஜ் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, 10 நாட்கள் சிகிச்சை பெற்றார். ஆனால், காவல்துறையினர் சம்பந்தப்பட்ட ஊராட்சித் தலைவர் இளங்கோவன் மற்றும் ஆதிக்க சாதியினர் மீது வழக்குப் பதிய மறுத்து விட்டனர். மாறாக, புகார் கொடுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச்செயலாளர் மீதே பொய்வழக்கு போட்டனர்.
இதையடுத்து, போலீசாரின் இந்த அராஜக நடவடிக்கையைக் கண்டித்து செவ்வாயன்று(16.2.10) ஒட்டன்சத்திரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மறியல் நடைபெற்றது.
தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் கே.ஆர்.கணேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற் குழு உறுப்பினர்கள் வி.குமரவேல், எம்.கருணாகரன், தாலுகா செயலாளர் சின்னக்கருப்பன், தாலுகா குழு உறுப்பினர்கள் எஸ்.பி.இராமசாமி, பழனியப்பன், பெருமாள் உள்ளிட்ட 150 பேர் மறியலில் கலந்து கொண்டனர். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளருமான பி.சம்பத், மாவட்டச் செயலாளர் என்.பாண்டி ஆகியோர் மறியலை ஆதரித்துப் பேசினர்.இந்த மறியலில் கலந்து கொண்ட 150 பேரையும் ஒட்டன்சத்திரம் போலீசார் கைது செய்தனர் .