புதன், 24 மார்ச், 2010

ஆற்றில் நீந்தி சென்று பிணங்களை புதைக்கும் துயரம்

பழனி அருகேயுள்ள பாலசமுத்திரத்தில் ஆற்றை நீந்திக் கடந்து, பிணங்களை புதைக்கும் அருந்ததிய மக்களின் துயரத்தைக் கேள்விப்பட்டு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தூதுக்குழு அம்மக்களை சந்தித்தது.
அது பற்றிய விபரம் வருமாறு:
பழனி அருகேயுள்ளது பாலசமுத்திரம் பேரூராட்சி. இந்த ஊரில் 1-வது வார்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அருந்ததிய மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து இன்று வரை தீர்க்க முடி யாத பிரச்சனையாக உள்ளது மயான பிரச்சனை. ஊரில் யாராவது இறந்து போனால் அந்த பிணத்தை அருகில் உள்ள ஆற்றில் நீந்திச் சென்றுதான் ஆற்றின் அக்கறையில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்வார்கள். இந்த ஆற்றில் எப் போதும் கழுத்தளவு தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும். இதே போல அருகேயுள்ள குரும்பபட்டியில் வசிக்கும் அருந்ததிய மக்களும், இராமநாதநகர் மக்களும், குறவன்பாறை ஆகிய பகுதி மக்களும் நீந்திச் சென்றுதான் இந்த மயா னத்தில் பிணங்களை அடக்கம் செய்வார்கள். இது சம்பந்தமாக இப்பகுதி அருந்ததிய மக்கள் பல முறை அரசு அதிகாரிகளிடம் மனுக் கொடுத்தும் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் சில ஆங்கில மற்றும் தமிழ்ப் பத்திரிகைகளில் செய்தி வந்தது. இந்த செய்தியைக் கேள்விப்பட்டவுடன் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.பாண்டி, பழனி ஏரியாச் செயலாளர் கே. அருள்செல்வன், பழனி நகர்மன்றத் தலைவர் வி.ராஜமாணிக்கம் ஆகியோர் கொண்ட தூதுக்குழுவினர் 1-வது வார்டு பாலசமுத்திரம் மக்களை நேரில் சந்தித்து இந்தப் பிரச்சனை சம்பந்தமாக விசாரித்தனர். இதனையடுத்து ஆற்றின் அக்கறையில் உள்ள சுடுகாட்டையும் சென்று பார்வையிட்டு வந்தனர்.
பின்னர் இப்பிரச்சனை, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று தலைவர்கள் கூறினர்.
அதனடிப்படையில், அருந்ததிய மக்களுக்கு மயானம் கிடைத்திட அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பி.சம்பத் அரசை வலியுறுத்தியுள்ளார். (18.2.2010 தீக்கதிர் செய்தி)