புதன், 24 மார்ச், 2010

வாலிபர் சங்கத்திற்கு அம்பேத்கர் பாசறை நன்றி

கடலூர் மாவட்டத்தில், அரசமைப்புச் சட்ட சிற்பி அம்பேத்கர் சிலையை மீண்டும் நிறுவப்போராடிய வாலிபர் சங்கத்திற்கு புரட்சியாளர் அம்பேத்கர் விழிப்புணர்வு பாசறை பாராட்டும் நன்றியும் தெரிவித்தது.
இதுதொடர்பாக இந்த அமைப்பின் பொதுச்செயலாளர் கோ.நீலமேகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது:
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தாலுகா பழையபட்டிணம் கிராமத்தில் பொது இடத்தில் வைக்கப்பட்ட அண்ணல் அம்பேத்கர் சிலையை அகற்றியே தீருவோம் என திட்டம் போட்டு தீண்டாமைத் தீயை மூட்டும் செயலில் சில மத பழமைவாதிகள் இறங்கியபோது, சகோதரர்களாக இணைந்து வாழ வேண்டிய தலித்-முஸ்லிம் மக்களிடையே மோதல் நடக்க இருந்த நிலையில் ஒருசில தலைவர்களே சிலையை அகற்ற ஒப்புதல் அளித்து சாதிவெறிக்கு துணைபோனது வேதனைக்குரியது. துரோகத்தால் தலித் மக்கள் நிலை குலைந்தபோது, சாதி வெறியரோடு கூட்டு சேர்ந்து வருவாய் துறையும், காவல்துறையும், தலித் மக்களுக்கு எதிராக களம் இறங்கியபோது ஒடுக் கப்பட்ட மக்களின் உரிமை தோழன் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிவரும் வாலிபர் சங்கத் தோழர்கள் டி.அமிர்தலிங்கம் தலைமையில் அணிதிரண்டு, பல கட்ட போராட்டங்கள் நடத்தி தலித் மக்களின் சுயமரியாதை காக்கவும், அம்பேத்கர் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும் ஈடுபட்டதைப் பாராட்டுகிறோம்.
தலைவர்களின் சிலையை அவமரியாதை செய்வோர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயும் என தமிழக அரசு அறிவித்த நிலையிலும் இத்தகைய செயல் தொடர்கிறது.
சமூக மாற்றத்திற்காக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி இளைஞர்களை எழுச்சி பெற செய்யும் வாலிபர் சங்கம் சரியான நேரத்தில் தலையீடு செய்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அம்பேத்கர் சிலைக்கு சட்ட பாதுகாப்பு ஏற்படுத்தியதோடு அவரின் புகழுக்கு பெருமை சேர்த்தது. தலித் மக்களுக்காக போராட்டங்கள் நடத்தி சுயமரியாதை ஏற்படுத்தி தந்த இடதுசாரி பாதையில் அணி வகுக்கும் வாலிபர் சங்கத் தலைவர்களுக்கும் தோழர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை புரட்சியாளர் அம்பேத்கர் விழிப்புணர்வு பாசறை தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு நீலமேகம் கூறியுள்ளார்.