புதன், 24 மார்ச், 2010

சலவைத்தொழிலாளர்கள் கோட்டை நோக்கி பேரணி

தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் தங்களைச் சேர்க்க வலியுறுத்தி, சலவைத் தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமையன்று (19.2.2010) கோட்டை நோக்கி பேரணி நடத்தினர்.
தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் சங்கம் (சிஐடியு),  தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் முன்னேற்ற சங்கம்,  தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் மத்திய சங்கம், தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் பேரவை,  அண்ணா சலவைத் தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட 10 அமைப்புகள் இணைந்து தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கி உள்ளன.
இந்தக்குழு சார்பில், இந்தியாவில் 17 மாநிலங்களிலும், தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும் சலவைத் தொழிலாளர்கள் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதே போன்று தமிழகம் முழுவதும் உள்ள சலவைத் தொழிலாளர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்; நலவாரிய பதிவுக்கு வருவாய்த்துறை ஆய்வு செய்வதை கைவிட வேண்டும்; புதிய உறுப்பினர்களை பதிவு செய்வதோடு, அடையாள அட்டை வழங்க வேண்டும்; பழைய சலவைத்துறைகளை புதுப்பிக்க வேண்டும்; புதிதாக சலவைத்துறைகள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்பேரணி நடைபெற்றது.
பேரணியில் வி.கருப்பையா, பாபு (சிஐடியு), சுப்பிரமணி, சக்கரை (மத்திய சங்கம்) உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி மார்ச் 11- அன்று, தில்லியில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றும்  ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.