சனி, 14 நவம்பர், 2009

தலித் மக்களின் நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம், நவம்பர் 12, 13 (2009)ஆகிய தேதி களில் சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தாலுகா, ஒட்டப் பிடாரம் பஞ்சாயத்திற்குட்பட்ட 1533 ஏக்கர் நிலங்களை சிப்காட் இரண் டாம் கட்டத்திற்காக கையகப்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலங்களில் 70 சதவீதம் தலித் மக்களுக்கு சொந்தமானவை. இவர்களுக்கு இது மட்டுமே வாழ்வாதாரம். அந்தப் பகுதியில் நன்கு விளையும் நிலங்களும், நிலத்தடி நீர்மட்டம் போதுமான அளவும் விவசாயம் மற்றும் குடிநீருக்கு லாயக்கான நிலத்தடி நீர் உள்ள பகுதியும் இதுவே. இந்த நிலங்களின் சொந்தக்காரர்களுக்கு இதைத் தவிர வேறு வாய்ப்புகள் கிடையாது.

ஆனால் இந்த இடத்திலிருந்து அதிகபட்சமாக பத்து கிலோமீட்டர் தூரத்திலும், குறைந்தபட்சம் 4 கிலோ மீட்டர் தூரத்திலும் வனத்துறைக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் உள்ளது. இதில் அபூர்வ தாவரங்களோ, விலங்கினங்களோ கிடையாது. வேறு பெரிய மரங்களும் கிடையாது. வகைப்படுத்துதலில் மட்டுமே அது வனப்பகுதியாக உள்ளது. இதுதவிர அரசு தரிசு நிலங்களும் உள்ளன.

எனவே, மேற்கண்ட 1533 ஏக்கர் அளவுள்ள அந்த இடம் கையகப்படுத்தப்பட்டால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும். எனவே ஒட்டப்பிடாரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் சிப்காட் வளாகத்திற்காக தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த விவசாயிகளின் நிலங்களைக் கையகப்படுத்தும் முயற்சியைக் கைவிட வேண்டும்.