சனி, 12 டிசம்பர், 2009

போராட்ட வரலாற்றை மறைக்கலாமா? - பி.சம்பத்


“....நீங்கள் பேசும் போது சொல்லிக் கொண்டீர்கள். நீங்கள் என்னிடம் கோரிக்கை வைத்ததாகவும் அதை நான் நிறைவேற்றிக் கொடுத்ததாக வும் பேசும் போது துரைச்சாமியும், ரவிச்சந்திரனும் சொன்னார்கள். நான் சொல்லுகிறேன். நீங்கள் யாரும் கோரிக்கை வைத்து நான் கொடுக்க வில்லை. இப்படிச் சொல்வதற் காக நீங்கள் என்னை மன்னிக்க வேண் டும். நானே கோரிக்கை வைத்து, நானே நிறைவேற்றிக் கொண்ட திட்டம்தான் இந்தத் திட்டம். நான் யாரிடத்தில் கோரிக்கை வைப்பது? என்னிடத்திலே தான் கோரிக்கை வைக்க வேண்டும்....”

..... அருந்ததியர் மக்களுக்கு 3 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கியதற்காக, சென்னையில் ( 5.12.09)நடைபெற்ற பாராட்டு விழாவில், தமிழக முதல்வர் கலைஞர் ஆற்றிய உரையின் ஒரு பகுதி இது.

இந்த உரையில் கலைஞரும், திராவிட இயக்கமும், சமூகரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆற்றியப் பணிகளை உணர்ச்சி கரமாக எடுத்துரைத்துள்ளார். அருந்ததியர் மக்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண் டும் என்ற கோரிக்கையை ஏற்று, 3 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டுள்ளதை நாம் ஏற்கனவே வரவேற்றுள்ளோம்.

ஆனால் இந்த உள்ஒதுக்கீடு பெற நடைபெற்ற போராட்டங்களைப் பற்றி எதுவுமே குறிப்பிடாமல், எல்லாமே தனது சாதனையாகவும் தனது இயக்கத்தின் சாதனையாகவும் விவரிப்பது என்ன தார்மீக நியாயம் என நமக்கு விளங்கவில்லை. அருந்ததியர் உள்ஒதுக்கீடு என்பது இப்போதைய திமுக ஆட்சியில் மட்டும் முன்வைத்து பெறப்பட்ட கோரிக்கையல்ல. 25 ஆண்டு களுக்கு மேலாக அருந்ததியர் அமைப்புக்களும், அருந்ததியர் மக்களும் அதற்காக எண்ணற்ற போராட்டங்களை நடத்தியுள்ளனர். இப்போராட்டங்கள் எதுவும் ஆளும் வர்க்கங்களாலும் அரசாங்கத்தாலும், ஏன் இதற்கு முந்தைய திமுக ஆட்சிக் காலங்களிலும் கண்டுகொள்ளப்படவே இல்லை. ஊடகங்களும் கூட அருந்தியர் மக்களின் கோரிக்கைக்கு உரிய நியாயமோ முக்கியத்துவமோ தரவில்லை.

அருந்ததியர் மக்களின் நீண்ட நெடும் போராட்டங்களை ஆய்வுசெய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, 2 ஆண்டுகளுக்கு முன்பே அம்மக்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கியது. 2007 ஜூன் 12-ம் நாள் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அருந்ததியர் மக்களைத் திரட்டி கோட்டை நோக்கிப் பேரணியை மார்க்சிஸ்ட் கட்சி நடத்தியது. அருந்ததியர் அமைப்புகளின் தலைவர் களோடு தமிழக முதல்வரை அன்றைய தினமே மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள் சந்தித்தார்கள். சிறப்பான கலந்துரையாடலுக்குப் பிறகு தமிழக முதல்வர், அருந்ததியர் மக்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க கொள்கையளவில் ஏற்றுக்கொள்வதாக அப்போது அறிவித்தார். மார்க்சிஸ்ட் கட்சியும் அருந்ததியர் அமைப்புகளும் கேட்டுக் கொண்டதற்கிணங்க இக்கோரிக்கையை ஆய்வு செய்து சிபாரிசு அளிக்க ஒரு கமிஷன் அமைக்கவும் ஏற்றுக்கொண்டார். இதன் பிறகு இது அமலாக காலம் கடக்கவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் மாநாடுகள், 100 இடங்களில் தர்ணா, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மாநிலம் தழுவிய மறியல் என பலகட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதன் பிறகு நீதியரசர் ஜனார்த்தனம் கமிஷன் அமைக்கப்பட்டு அதன் சிபாரிசாக 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க அறிக்கை தரப் பட்டது.

இதன் பிறகு கோட்டையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அனைத்துக் கட்சிகளும் இந்த உள்ஒதுக்கீடுக்கு ஒப்புதல் தெரிவித்தன. அதன் பிறகு சட்டமன்றத்தில் 3 சதவீத உள்ஒதுக்கீடுக்கான சட்ட மசோதா கொண்டுவரப்பட்டு, நிறைவேற்றப்பட்டு சில மாதங்களுக்குப் பிறகு இதற்கான அரசாணை வெளிவந்தது. இந்த உள்ஒதுக்கீட் டில் சில அருந்ததியர் பிரிவினர் விடுபட்டுள்ளதால் அவர்களையும் இணைத்து உள்ஒதுக்கீடு அளவை உயர்த்த வேண்டும் என்ற உணர்வு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், அருந்ததியர் அமைப்புகளுக்கும் இருந்தது. ஆயினும் 3 சதவீத உள்ஒதுக்கீடு? முதல் கட்ட வெற்றி என்ற நிலை எடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழக அரசின் முன்முயற்சிக்கும், முடிவுக்கும் வரவேற்பு தெரிவித்தது. இதற்காக நீண்ட காலம் போராடிய அருந்ததியர் மக்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்தும், தனித்தும் போராடிய அருந்ததியர் அமைப்புகளுக்கும் மார்க்சிஸ்ட் கட்சி பாராட்டு தெரிவித்தது. அருந்ததியர் உள்ஒதுக்கீடு பற்றிய பிரச்சனையில் இவை தான் வரலாற்று ரீதியான உண்மைகள். தமிழக முதல்வரும், சில பத்திரிகையாளர் சந்திப்புகளில் அருந்ததியர் உள்ஒதுக்கீடு பிரச்சனையில் மார்க்சிஸ்ட் கட்சி காட்டிய ஆர்வத்தையும் தலையீட்டையும் ஏற்றுக்கொண்டார்.

ஆனால் 5.12.2009-ந் தேதிய பாராட்டு விழாவில் அருந்ததியர் மக்களின் போராட்டங்களைப் பற்றியோ, அருந்ததியர் அமைப்புக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய இயக்கங்களைப் பற்றியோ எதுவும் குறிப்பிடாமல், எல்லாமே தனது சாதனையாகவும் தனது இயக்கத்தின் சாதனையாகவும் பறைசாற்றிக் கொண்டார். எந்தக் கட்சியும் அதன் தலைவரும் அரசியல் ஆதாயம் தேட முனைவதில் தவறில்லைதான். ஆனால் அதற்காக ஒடுக்கப்பட்ட அருந்ததியர் மக்களின் போராட்ட வரலாற்றையும் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் அருந்ததியர் அமைப்புகளின் பங்கையும் பற்றியும் கோடிட்டுக்கூடக் காட்டாமல், தானே கோரிக்கை வைத்ததாகவும், தானே நிறைவேற்றிக் கொண்டதாகவும் பறைசாற்றுவது அவருக்கும், அவரது இயக்கத்திற்கும் சுயபெருமையாக இருக்கலாம். ஆனால், ஆளுங்கட்சியின் ஏற்பாட்டின் பேரில் நடத்தப்பட்ட இந்த பாராட்டு விழாவில் பங்கேற்றவர்கள் கூட முதல்வரின் கூற்றை முற்றாக ஏற்றிருக்க மாட்டார்கள்.  (7.12.09)


(கட்டுரையாளர்: அமைப்பாளர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி,
மாநிலச் செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்).