வியாழன், 11 பிப்ரவரி, 2010

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அருந்ததிய அமைப்புக்கள் நடத்திய பாராட்டு விழா

சமுதாயத்தின் அடித்தட்டில் அழுந்திக் கிடக்கும் அருந்ததியர் மக்களுக்காக போராட்டக்களம் கண்டு 3 சதவிகித உள்ஒதுக்கீட்டை வென்றெடுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, அருந்ததியர் அமைப்புகள் உணர்வுப்பூர்வமாக பாராட்டு விழா நடத்தினர்.

இந்த விழாவில் கண்களில் நம்பிக்கை ஒளியோடு பல்லாயிரக்கணக்கான அருந்ததியர் மக்கள் குடும்பம், குடும்பமாகக் கலந்து கொண்டனர்.

தலித் மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியர் மக்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என அருந்ததியர் அமைப்புகள் கடந்த 25 ஆண்டுகளாகப் போராடி வந்தன. இந்நிலையில் அந்த மக்களின் கோரிக்கையை வென்றெடுப்பதற்காக தோளோடு தோள்சேர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல்லாயிரக்கணக்கான மக்களை அணி திரட்டி போராட்டக்களம் கண்டது. இதன் விளைவாக கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்து 3 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றியது.

இதையடுத்து, தங்கள் வாழ்வாதாரக் கோரிக்கையை போராடி வென்றெடுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பாராட்டு விழா நடத்துவதென அருந் ததியர் அமைப்புகள் முடிவு செய்தன.

இதனடிப்படையில் கோவை காந்திபுரம் புது சித்தாபுதூரில் ஞாயிறன்று இந்த விழா நடந்தது. இதில் எழுத்தாளர் பிரபஞ்சன், அருந்தமிழர் விடுதலை இயக்கத்தின் மாநில அமைப்பாளர் கு.ஜக்கையன், ஆதித்தமிழர் விடுதலை முன்னணி மாநில அமைப்பாளர் இரவிக்குமார், ஆதித்தமிழர் சனநாயகப் பேரவை மாநில அமைப்பாளர் அ.சு.பவுத்தன், மக்கள் முன்னேற்ற முன்னணி பொதுச் செயலாளர் பால்ராசு, அருந்ததியர் மக்கள் முன்னேற்றக் கழக மேற்கு மண்டலப் பொறுப்பாளர் ராதாமணி, தலித் விடுதலைக் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் இரா.மூர்த்தி, தந்தை பெரியார் டாக்டர் அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் மாநிலத் தலைவர் நீலகிரி எம்.ஆர்.கிருஷ்ணன், அருந்ததியர் மனித உரிமை அமைப்பின் மாநில அமைப்பாளர் ஆர்.ஆர்.கருப்புச்சாமி, வீர அருந்ததியர் பேரவைப் பொதுச்செயலாளர் ஓ.ரங்கசாமி, அருந்ததியர் விடுதலை முன்னணி நிறுவனர் என்.டி.ஆர்.ஜெகஜீவன்ராம், ஜனநாயக மக்கள் இயக்கத் தலைவர் கோ.சென்னியப்பன், தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் நல உரிமை இயக்க மாநிலப் பொதுச்செயலாளர் வி.பி.மணி, பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பேசினர்.

விழாவில் சத்தியமங்கலம் சாக்கிய கலைக்குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிறைவாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் ஏற்புரை ஆற்றினார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளருமான பி.சம்பத், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ஆகியோர் பேசினர்.

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.தங்கவேல், என்.சீனிவாசன், மாவட்டச் செயலாளர்கள் யு.கே.வெள்ளிங்கிரி, கே.காமராஜ், ப.மாரிமுத்து, எம்.ராஜகோபாலன், ஏ.ரங்கசாமி, ஆர்.பத்ரி, மாநிலக்குழு உறுப்பினர் கே.சி.கருணாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த விழாவில் பங்கேற்ற அருந்ததியர் அமைப்பினர் தங்கள் கொடிகளை ஏந்தி உற்சாகமாக வந்திருந்தனர்.