புதன், 10 பிப்ரவரி, 2010

குறவன் இன மக்களுக்கு சாதிச் சான்றிதழில் வஞ்சகம்

குறவன் இன மக்களுக்கு வழங்கப்பட்ட சாதிச்சான்றிதழில் கல்விச் சலுகைகளுக்கு மட்டுமே என குறிப்பிடப்பட்டு உள்ளதால், அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற இச்சான்றிதழை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது; எனவே, அனை வருக்கும் வழங்குவது போல சாதிச்சான்று வழங்கிட வேண்டும் என்று தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்க மாநில அமைப்பாளர் ஏ.வி.சண்முகம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளருக்கு மனு அனுப்பினார்.

அந்த மனுவில் மேலும் குறிப்பிடப்பட்டு இருந்ததாவது:

வேலூர் மாவட்டம், வாலாஜா நகரத்தில் வாழும் குறவன் இன மக்களுக்கு குறவன், எஸ்.சி. சாதிச்சான்று கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு வட்டாட்சியர் 2009 ஏப்ரல் மாதம், குறவன் எஸ்.சி. சாதிச்சான்று வழங்கினார். ஆனால் அந்த சாதிச்சான்றிதழில் இச்சான்று கல்வி சலுகைகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் மற்ற தாலுகாக்களில் எங்குமே இதுபோல் வழங்காத பட்சத்தில், வாலாஜா வட்டாட்சியர் மட்டும் இதுபோல் சான்று வழங்கியுள்ளதால், எங்களது பிள்ளைகள் வேலைவாய்ப்பில் பதிவு செய்திடவும், அரசின் நலத்திட்ட உதவிகளுக்கு இந்த சான்றிதழைப் பயன்படுத்தவும் முடியாத நிலையில் உள்ளோம்.

எனவே, இந்த சான்றிதழில் உள்ள கல்விச் சலுகைகளுக்கு மட்டும் என்று எழுதியுள்ளதை மாற்றி, அனைவருக்கும் வழங்கு வதுபோல், சாதிச்சான்று வழங்கிட ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஏ.வி.சண்முகம் குறிப்பிட்டிருந்தார்.