திங்கள், 31 மே, 2010

தலித் மக்கள் சமத்துவம் காண இணைந்து போராடுவோம்- கே.வரதராசன்



தலித் மக்களின் சமத்து வத்திற்கான போராட்டத்தை தலித் மக்களுக்கு அப்பாற் பட்டு இருக்கக்கூடிய மக்கள் தங்கள் கடமையாகக் கருதி போராட்டக்களத்தில் இறங்க வேண்டும் என அகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் கே.வரதராசன் கூறினார்.

புதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாட்டினை துவக்கி வைத்து அவர் பேசியதாவது:

பகுத்தறிவு பங்காளிகளின் மன்றமாக உள்ள தமிழ்நாட்டில், டீக் கடைகளில் தலித்துகளுக்கு இரட்டை கிளாசில் டீ தரப்படும் நிலை இன்னும் தொடர்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் தலித் வீடுகளில் நாய் வளர்க்கக்கூடாது என்று ஊர்க்கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. தலித் வீட்டு நாய் ஆண் குட்டிப்போட்டால் என்ன செய்வது என்றால், அதற்கு குடும்பக்கட்டுப்பாடு செய் எனச்சொல்லும் வகையில் சாதியக்கொடுமை தலைவிரித்தாடுகிறது. நாய்க்கும் சாதி கற்பிக்கும் நிலை இருப்பது வெட்கக்கேடான செயலாகும்.

தமிழகத்தில் தீண்டாமை ஒழிப்புக்காக பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகிறோம். 148 தீண்டாமை வடிவங்கள் இருப்பதாக ஆந்திராவில் நடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது. தமிழகத்தில் 80 வகையான தீண்டாமை வடி வங்கள் இருப்பதாகக் கூறப் பட்டாலும், மேலும் இக்கொடு மையின் வடிவங்கள் இருக்கக் கூடும். கூலி உயர்வு பற்றி பேசும் நீங்கள், எதற்கு சாதியைப் பற்றிப் பேசுகிறீர்கள் என நம்மைப் பார்த்து கேள்வி எழுப்புகிறார்கள். சாதிய ஒடுக்கு முறை மட்டுமின்றி, பொருளாதார ஒடுக்குமுறைக்கும் எதிராக போராட வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். ஏனெனில் வர்க்கமும் சாதியமும் இணைந்து கிடக்கிறது. வெண்மணியில் துவங்கிய போராட்டம் என்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது. பொருளாதாரப் போராட்டத்தை சமுதாயப் போராட்டத்துடன் இணைத்து நடத்த வேண்டும்.

சாதிப்பிரச்சனையால் அமைதி கெடுவதாக ஆட்சியாளர்கள் புகார் கூறுகிறார்கள். இருக்கும் இழிவுகள் அப்படியே இருக்கட்டும் என்று இருப்பது ஒரு வகையான அமைதி. சாதிக்கொடுமைக்கு எதிராக அரசும், அரசு அதி காரிகளும் தலையிட்டு செய்வது ஒரு வகை அமைதி. முதல் அமைதி என்பது சுடுகாட்டில் நிலவும் மயான அமைதியாகும். அதை நாம் ஏற்கமுடியாது. சமத்துவ ரீதியான அமைதி நிலவ போராட்டம் தான் வழியாக இருக்க முடியும். அத்தகைய சமத்துவத்திற் கான போராட்டத்தை வலுவாக, அழுத்தமாக நடத்த வேண்டும். அதற்கு தலித் மக்களுக்கு அப்பாற்பட்டு இருக்கக்கூடிய மக்கள் தங்கள் கடமையாக கருதி போராட்டக்களத்தில் இறங்க வேண்டும் என அவர் கூறினார்.