செவ்வாய், 8 டிசம்பர், 2009

தலித் மக்களின் நிலங்களை எடுக்க அரசு முயற்சி - கே.பி. பெருமாள்

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகாவில் தமிழ்நாடு அரசு சிப்காட் அமைத் திட நிலம் எடுக்கப்போவதாக அறிவித்துள்ளது.

ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட முப்புலிவெட்டி, மேட்டூர், லட்சுமிபுரம், சுப்பிரமணியபுரம், மேலமீனாட்சிபுரம், தெற்கு ஆவரங்காடு, வடக்கு பரம்பூர், ஓட்டப்பிடாரம், தெற்கு பரம்பூர் ஆகிய கிராமங்களிலும், குறுக்குச்சாலை பஞ்சாயத்திற்கு உட்பட்ட கீழ மீனாட்சிபுரம், ராமச்சந்திராபுரம் ஆகிய 11 கிராமங்களின் விவசாய விளைநிலங்களில் 1553.85 ஏக்கர் நிலத்தை அரசு கையகப் படுத்தப்போவதாக அறிவித்துள்ளது.

இந்த விளைநிலங்கள் முழுவதும் கரிசல் பூமி. தற்போது 90சதவீத நிலங்கள் கடந்த மூன்றாண்டு காலமாக விவசாயம் செய்து வருகிற பகுதி என்று அரசின் அடங்கலில் உள்ளது. இங்கு உளுந்து, பாசிபயறு, தட்டை பயிறு, பருத்தி, எள், திணை, சோளநாத்து, சூரியகாந்தி, மக்காச்சோளம் போன்றவை களை பிரதானமாக விவசாயம் செய்து வரு கின்றனர்.

இந்த 11 கிராமங்களிலும் 15 ஆயிரம் மக்கள் வசித்து வருகிறார்கள். 1500 குடும் பங்கள் இந்த விளைநிலங்களை பயன்படுத்தி விவசாயம் செய்கின்றன. இதில் 70சதவீத நிலங்கள், தலித் மக்களுடைய நிலங்களாகும். இந்த பகுதியில்தான் பெரும்பகுதியான தலித்துகள் நிலஉடைமையாளராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுப்பிரமணியபுரம், லெட்சுமிபுரம் கிராமங் களில் ஊரைச்சுற்றி நிலங்கள் இருக்கின்றன. இந்த நிலங்களை எடுத்தால் அங்கு மக்கள் குடியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. இவர்களுடைய வீடுகள் தவிர மற்ற நிலங்கள் முழுவதையும் அரசு எடுக்கப்போவதாக அறிவித்துள்ளது.

ஆடு, மாடு, கோழிகள் கூட மேய்வதற்கு இந்த கிராமங்களில் நிலம் இல்லாமல் போய்விடும். இந்த இரண்டு கிராமங்களிலும் சுகாதார வசதிகள், பஸ் போக்குவரத்து, நல்ல சாலை வசதிகள், சுப்பிரமணியபுரத்தில் பள்ளிக்கூட வசதி இல்லை, அங்கன்வாடி (பாலகர் பள்ளி) பள்ளி கூட இல்லை. இந்த இரண்டு கிராம மக்களும் பிரதான சாலைக்கு செல்ல வேண்டுமானால் 2 கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டும். கடை வீதிக்கு செல்ல வேண்டுமானால் 4 கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டும்.

இப்படி எந்த அடிப்படை வசதியும் இல்லாத ஊரில் குடியி ருக்க ஒரே காரணம், தங்களின் சொந்த நிலம் இங்கு உள்ளது. அதன் வருவாயில் தங்கள் வாழ்க்கையை இங்கு செலுத்த முடிகிறது என்ற நம்பிக்கையில் இந்த இரண்டு கிராமங் களிலும் மக்கள் குடியிருக்கிறார்கள்.

அரசு சிப்காட்டிற்கு நிலம் எடுக்கப் போகி றது என்ற செய்தி வெளியான உடன் அனைத்து கிராமங்களின் சார்பில் 26.10.09ல் தாலுகா அலுவலகத்திற்கு பேரணியாக சென்றனர்.

தமிழக அரசு, நிலம் இல்லாத ஏழைகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் வழங்குகிறோம் என்று பல புள்ளி விவரங்களை தெரிவித்தும், பல விளம்பரங்கள், பிரச்சாரங்களையும் நடத்தி வருகிறது.

ஆனால் மறுபுறுத்தில், தலித்துகள் பெரும்பகுதியினர் நில உடைமையாளராக உள்ள இந்த பகுதியில், அவர்களுடைய நிலத் தை சிப்காட்டிற்காக அரசு எடுத்து விட்டால் அந்த தலித்துகள் நிலமற்ற கூலிகளாக மாற வேண்டிய நிலையை தமிழக அரசே உருவாக்குகிறது. அதாவது நிலம் இருப்பவர்களை நிலம் இல்லாதவர்களாகவும், நிலம் இல்லாத வர்களை நிலம் உள்ளவர்களாகவும் அரசு மாற்றுகின்ற கொள்கை இதில் புலப்படும். தமிழக அரசின் நில விநியோகத் திட்டத்தில் முரண்பாடான நிலையை இதன் மூலம் உணர முடிகிறது.

எனவே, ஓட்டப்பிடாரம், பகுதியில் சிப் காட்டிற்கு விளை நிலங்களை அரசு எடுப்பதை நிரந்தரமாக கைவிடும் வரையும், சிப்காட்டை ஓட்டப்பிடாரத்திற்கு வடக்கில் உள்ள வனத் துறைக்கு சொந்தமான இடத்தில் அமைத்திட வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மக்களை திரட்டி தொடர்ந்து போராடும்.
- (3.12.09 தீக்கதிர் கட்டுரை)