செவ்வாய், 12 ஜனவரி, 2010

மாத்தூரில் தலித் மக்கள் ஆலயத்திற்குள் நுழைந்தனர்

நாகை மாவட்டம், செம்பனார் கோவில் ஒன்றியம்- மாத்தூரில் உள்ள மாரியம்மன் கோயிலில் நீண்டகால மாகவே தலித் மக்கள் உள்ளே செல்லவோ, வழிபாடு செய்யவோ உரிமை மறுக்கப்பட்டிருந்தது. இக்கொடுமை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்திய கள ஆய்வின் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து, வாலிபர் சங்கத்தின் தலைமையில், டிசம்பர் 30 அன்று தலித் மக்கள் ஆலயம் நுழைவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தை

இந்நிலையில் 26.12.2009 அன்று மயிலாடுதுறை கோட்டாட்சியர் முன்னிலையில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அடுத்தகட்டமாக 28-ம் தேதி, செம்பனார்கோயில் காவல்நிலையத்தில் கோட்டாட்சியர், காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர், வட்டாட்சியர், மண்டலத் துணை வட்டாட்சியர், வாலிபர் சங்கத் தலைவர்கள், மாத்தூர் தலித் மக்களின் தலைவர்கள், சாதி ஆதிக்க சக்தியினரின் பிரதிநிதிகள், கோயில் நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்ற அமைதிப் பேச்சுவார்த்தை மீண்டும் நடைபெற்றது.

இதில், அன்று மதியமே அரசு - காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் தலித் மக்கள் ஆலயம் நுழைந்து, வழிபாடும் நடத்துவார்கள் என்றும், தலித் மக்களின் வழிபாட்டு உரிமையை எவரும் தடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஒப்பந்தம் ஏற்பட்டது.

ஆலய நுழைவு

அதன்படி மதியம் 2 மணிக்கு மாத்தூர் மாரியம்மன் கோயிலில் ஆர்டிஓ, டிஎஸ்பி மற்றும் அரசு, காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் 75 பெண்கள் உள்பட தலித் மக்கள் 150 பேர் ஆலயத்துக்குள் நுழைந்தனர். அப்போது கோயில் கருவறை, சாதி ஆதிக்க சக்திகளால் பூட்டப்பட்டிருந்தது. அதிகாரிகள் பூட்டை உடைத்துக் கருவறையைத் திறந்து விட்டனர். தலித் மக்கள் அமைதியாகவும், உரிமை பெற்ற வெற்றிப் பூரிப்போடும் வழிபாடு செய்தனர்.




அதன்பின், காலனித் தெருவில் வாலிபர் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் மார்க்ஸ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஜி.ஸ்டாலின், நிர்வாகிகள் பி.ஏ.ஜி.சந்திரசேகரன், கிருஷ்ணமூர்த்தி, கணேசன், சரவணன், கண்ணன் ஆகியோர் உரையாற்றினர்.