வியாழன், 12 நவம்பர், 2009

தடையையும் மீறி நடந்த நிலமீட்புப் போராட்டம் - கி.வரதராசன் உள்பட 500 பேர் கைது


நீதிபதி பி.டி.தினகரன் சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ள அரசு புறம்போக்கு மற்றும் தரிசு நிலங் களை மீட்டு நிலமற்ற தலித் விவசாயத் தொழிலாளர்களுக்கும் ஏழைகளுக்கும் விநியோகம் செய்திட காவேரிராஜபுரத்தை நோக்கி சென்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர்கள் மற்றும் 200 பெண்கள் உட்பட 500 பேரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

இந்த ஒற்றைப் போராட்டத்தைத் தடுப்பதற்காக, திருவள்ளூர் மாவட்டம் முழுவதிற்குமே அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்தும், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தும், காவல் துறையினர் மற்றும் அரசின் அனைத்து கெடுபிடிகளையும், மிரட்டல்களையும் மீறி இந்த போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. காவேரிராஜபுரம் கிராமத்தை காவல்துறை முழுமையாக ஆக்கிரமித்து முற்றுகையிட்டிருந்தும் தலித் மக்கள் திரளாக இந்த போராட்டத்தில் பங்கேற்று சிறைசென்றனர்.

போலீசாரின் தடை உத்தரவையும் மீறி, திட்டமிட்டபடி, தமிழ்நாடு விவசாயிகள் திங்களன்று (நவ. 9- 2009) காவேரி ராஜபுரத்தை நோக்கி ஆயிரக்கணக்கானோர் ஊர்வலமாக சென்றனர். அவர்களை காவல்துறையினர் திருவள்ளூர் காமராஜர் சிலை அருகில் தடுத்து நிறுத்தினர். இதனால் போராட்டக் குழுவினர் அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் ஒன்றரை மணி நேரம் இம்மறியல் போராட்டம் நீடித்தது. மீண்டும் அங்கிருந்து காவேரிராஜபுரத்தை நோக்கி புறப்பட முயற்சித்த போது காவல்துறை ஐ.ஜி, டி.ஐ.ஜி ஆகியோர் தலைமையில் கூடியிருந்த போலீசார் வலுக்கட்டாயமாக அனைவரையும் கைது செய்தனர்.

இதில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கி.வரதராசன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் உ.வாசுகி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் கே.முகமது அலி, மாநிலப் பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பொருளாளர் பெ.சண்முகம், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கோ.வீரையன், பொதுச்செயலா ளர் எஸ்.திருநாவுக்கரசு, பொருளாளர் ஜி.மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் கே.செல்வராஜ், மாநிலக்குழு உறுப்பினர் ப.சுந்தரராசன், விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் எஸ்.எம். அனீப், பி.துளசி நாராயணன், கே. ஆறுமுகம், பி.கதிர்வேல், அ.து.கோதண்டன், வி.எம்.ராமன் (காவேரிராஜபுரம்) உள்ளிட்ட 500 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதில் சுமார் 200 பேர் பெண்களாவர். பெண்கள் கை குழந்தைகளுடன் கைதானது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, மறியல் போராட்டத்தின் போது உரையாற்றிய தலைவர்கள், நீதிபதி பி.டி.தினகரன் சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ள நிலங்களை மாவட்ட நிர்வாகமும், முதலமைச்சரும் உடனடியாக மீட் டெடுக்க வேண்டும் என்றும், அந்த நிலங்களை இரண்டு ஏக்கர் இலவச நிலம் வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

நீதிபதியால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலங்களை மீட்டெடுக்கும் வரை விவசாயிகள் சங்கத்தின் போராட்டம் ஓயாது என்றும், எத்தகைய மிரட்டல்களையும் செங்கொடி இயக்கம் சந்திக்கும் என்றும், அடக்கு முறைக்கு அஞ்சாது என்றும் எச்சரித்தனர்.