வியாழன், 12 நவம்பர், 2009

சாதிவெறியில் நடந்த கவுரவக் கொலை

பழநி சாலைப்புதூர் அழகாபுரியில் வசித்து வந்தவர் தலித் சமூகத்தைச் சேர்ந்த அம்மாபட்டியன் மகன் பத்ரகாளி (வயது 25). பத்ரகாளியும், பழநி சண்முகாநதி பகுதியைச் சேர்ந்த கள்ளர் சமூகத்தவரான சீனிவாசனின் (வயது 65) மகள் ஸ்ரீபிரியா (வயது 21)-வும் வெவ்வேறு கல்லூரியில் பி.எட் பட்ட வகுப்பு படித்து வந்த நிலையில், பழநி அருகே அழகாபுரியில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் பயிற்சி ஆசிரியர்களாக கடந்த ஆண்டு வேலை செய்தனர். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இதற்கு ஸ்ரீபிரியா வீட்டினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 29-ம் தேதி பத்ரகாளியும், ஸ்ரீபிரியாவும் சேலத்தில் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர்.

இதையறிந்து பழநியில் இருந்த வீட்டைக் காலி செய்து தமது குடும்பத்தாருடன் திருச்சிக்குச் சென்றுவிட்ட சீனிவாசன், புதுமணத் தம்பதிகளை தானும் தனது உறவினர்கள் மூலமும் மிரட்டியுள்ளார்.

எனவே பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஸ்ரீபிரியா தமக்குப் பாதுகாப்புக் கோரி மனுக் கொடுத்திருந்தார். பாதுகாப்புக் கருதி உடுமலை அருகே மடத்துக்குளம் தேவேந்திரர் வீதியில் உள்ள பத்ரகாளியின் அக்கா ராணி வீட்டில் பத்ரகாளியும், ஸ்ரீபிரியாவும் தங்கியிருந்தனர்.

கடந்த 4-ம் தேதி சீனிவாசன், அவரது உறவினர்கள் ஆசைத்தம்பி என்கிற ராஜ்கண்ணன் (27), பண்ணாடி (30) ஆகியோர் மடத்துக்குளத்துக்கு வந்து ஸ்ரீபிரியாவைச் சந்தித்துள்ளனர். திருச்சியில் அம்மாவின் உடல் நிலை மிக மோசமாக இருப்பதால் நேரில் வந்து பார்த்துச் செல்லும்படி அவர்கள் அழைத்துள்ளனர்.

அப்போது பத்ரகாளி வெளியே சென்றிருந்தார். எனவே இவர்கள் அழைப்பதில் சந்தேகம் அடைந்த ஸ்ரீபிரியா நேரில் வர மறுத்ததுடன் வேண்டுமானால் செல்போனில் பேசுவதாகக் கூறியுள்ளார். இதைக் கேட்டு அவர்கள் திரும்பி சென்றுவிட்டனர்.

சிறிது நேரம் கழித்து அவர்கள் மீண்டும் வந்துள்ளனர். அங்கிருந்த ராணி மற்றும் பக்கத்து வீட்டுப் பெண் இருவரையும் பக்கத்தில் இருந்த அறையில் தள்ளி கதவைத் பூட்டிவிட்டு ஸ்ரீபிரியாவின் கழுத்து, மார்பு, அடிவயிறு பகுதியில் சரமாரியாகக் கத்தியால் குத்தினர். இதில் பலத்த காயமடைந்த ஸ்ரீபிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சாதி கவுரவத்தை மீறி தலித் இளைஞரை திருமணம் செய்வதா? என்ற ஆத்திரத்தில் இந்தக் கொ
லையைச் செய்து விட்டு மூவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

உடுமலை டிஎஸ்பி ராஜா தலைமையில் போலீசார் தீவிரமாகத் தேடி வியாழக்கிழமை ஸ்ரீபிரியாவின் தந்தை சீனிவாசன், ஆசைத்தம்பி, பண்ணாடி மூவரையும் கைது செய்தனர். இவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீபிரியாவின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்குப் பின் அவரது கணவர் பத்ரகாளி குடும்பத்தாரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

இதேபோன்று இப்பகுதியில் 'சாதி கௌரவத்தை' பாதுகாக்கிறோம் என்று கூறிக்கொண்டு, கடந்த 2 ஆண்டு காலத்தில் மட்டும் 7 'கவுரவ' கொலைகள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.