வியாழன், 12 நவம்பர், 2009

தலித்துகள் மீது வெறித் தாக்குதல்: நம்பிவயல் கிராமத்தில் அராஜகம்

நம்பிவயல் கிராமத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் மீது நடத்தப்பட்ட கொலை வெறித் தாக்குதலையும், காவல்துறையினரின் அலட்சியத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், நம்பிவயல் கிராமத்தில் ஏர்டெல் நிறுவனம் ஒன்று, புகழேந்தி என்பவர் இடத்தில் டவர் அமைத்துள்ளது. கடந்த 21.10.2009 அன்று இந்த டவர் பராமரிப்பு பணிக்காக வேப்பங்குளம் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் அங்கு சென்று பணி முடித்து திரும்பியிருக்கிறார்.

அவரை புகழேந்தி என்பவர் வழிமறித்து நீ எந்த ஊர்? உன்னுடைய சாதி என்ன? எனக்கு ஏன், வணக்கம் செய்யவில்லை? என்று கேட்டு தகராறு செய்துள்ளார். விஜயக்குமார் தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை தெரிந்து கொண்டு சாதியைச் சொல்லி இழிவாக பேசி புகழேந்தி அடித்திருக்கிறார். கீழே விழுந்தவரை உயிர்நிலை யில் மிதித்தும் இருக்கிறார். இதனால் அவர் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளார்.

இவரை மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல கூட புகழேந்திக்கு பயந்து யாரும் முன்வரவில்லை. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குபேந்திரன் என்பவர் பட்டுக்கோட்டை மருத்துவமனையில் கொண்டு போய்ச் சேர்த்திருக்கிறார். புகழேந்தி மீது புகார் கொடுக்கப்பட்டும் காவல் துறை எந்தவித நடவடிக் கையும் எடுக்கவில்லை.

இதனைக் கண்டித்து சில ஜனநாயக அமைப்புகள் இணைந்து பட்டுக்கோட்டையில் 2.11.2009 அன்று தர்ணாப்போராட்டத்தை நடத்தியிருக்கின்றன. இதற்கு அடுத்த நாள் நம்பி வயல் கிராமத்தில் குபேந்தி ரன் வீடு, தங்கத்துரை டி.வி. மெக்கானிக் கடை ஆகியவை புகழேந்தி மற்றும் அவரின் உறவினர்களால் தாக்கப்பட்டு சொத்துக்கள் சூறையாடப்பட்டுள்ளது. மேலும் பக்கத்தில் உள்ள இப்ராகிம் என்பவரின் டீ கடையையும் தாக்கியுள்ளார்கள்.

இதனால், ஆத்திரமுற்ற பொதுமக்கள் சாலை மறியல் செய்திருக்கின்றனர். ஆனாலும் போலீசார் குற்றவாளிகளை கைது செய்ய மறுக்கின்றனர். பட்டுக்கோட்டை கோட்டாட்சியர், நேரில்சென்று விசாரணை மேற்கொண்டார்.

அதன் அடிப்படையில் குற்றவாளிகளில் கதிரேசன், பிரசாத் என்ற இருவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் முதல் குற்றவாளி புகழேந்தி கைது செய்யப்படவில்லை. இது அப்பகுதி தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு குற்றச் செயல்களுக்கு காரணகர்த்தாவான புகழேந்தியை காவல்துறை கைது செய்ய ஏன் தயக்கம் காட்டுகிறது என்பது புதிராக உள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பியுள்ளது. இச்செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிப்பதுடன், தஞ்சை மாவட்ட காவல் துறையினர் குற்றவாளி களை கைது செய்து சட்டப் படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்; பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் கூறியுள்ளார்.



நம்பிவயல் தாக்குதல்
சிபிஎம் ஆர்ப்பாட்டம்

தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்திய சாதிவெறியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், பாதிப்புக்குள்ளானவர்களுக்கு வன் கொடுமை பாதிப்பு அரசு நிதி வழங்கிடவும் வற்புறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம்.செல்வம் தலைமை தாங்கினார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் சின்னை.பாண்டியன் கண்டன உரையாற்றினார். கோரிக்கைகளை வலியுறுத்தி மதுக்கூர் ஒன்றியச் செயலாளர் எஸ்.சாம்பசிவம், திருவோணம் ஒன்றியச் செயலாளர் கே.ராமசாமி, நகரச் செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஏ. கோவிந்தசாமி, எம்.அய்யாவு, விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் ஏ.மூக்கையன், வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் ஆர்.வாசு, கிளைச் செயலாளர் எஸ்.ஏங்கெல்ஸ் மற்றும் நம்பிவயல் கிராம மக்கள் கட்சி ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



தீண்டாமை ஒழிப்பு முன்னணி
கண்டனம்

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தஞ்சை மாவட்ட அமைப்பாளர் சின்னை. பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

குற்றவாளி புகழேந்தியை காவல்துறையினர் கைது செய்யவில்லை. ஆனால் புகழேந்தி போலீஸ் அதிகாரிகளுக்கு நெருக்க மாக காட்டிக் கொள்வதாகவும் சொல்லப்படுகிறது. இதனால்தான் வன்கொடுமைக் குற்றம் புரிந்தும், வீடு கடைகளை அடித்து நொறுக்கியதற்கும் காரணமான புகழேந்தியை காவல்துறை கைது செய்ய மறுக்கிறதா? சாதிய ஆதிக்க சக்திகளுக்கு துணைபோகிறதா?

பட்டுக்கோட்டை பகுதியில் காவல்துறையின் நடவடிக்கை வன்கொடுமை தாக்குதலுக்கு உள்ளாகும் தலித் மக்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை. மதுக்கூர் ஒன்றியம் சொக்கனாவூர், பட்டுக்கோட்டை ஒன்றியம் தாமரங்கோட்டையிலும் தலித்துக்களை சாதி ஆதிக்க வெறியர் தாக்கிய போதும் காவல்துறை அவர்களுக்கு ஆதரவாக செயல் பட்டது. தொடர்ந்து சாதி ஆதிக்க வெறியருக்கு ஆதரவாக செயல்படும் பட்டுக்கோட்டை சரக காவல்துறையை தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தஞ்சை மாவட்டக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

இதில் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது என்று கூறியுள்ளார்.