புதன், 16 டிசம்பர், 2009

திமுக பேரூராட்சித் தலைவரின் அராஜகம் - என்.வரதராஜனிடம் அருந்ததிய மக்கள் கண்ணீர்!

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், பழநி ஆகிய பகுதிகளில் உள்ள அருந்ததிய மக்களை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் என்.வரதராஜன் நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டார்.

அதனொரு பகுதியாக ஆயக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட டி.கே.என்.புதூர் அருந்ததியர் மக்களைச் என்.வரதராஜன் சந்திந்தபோது, அப்பகுதி அருந்ததிய மக்கள் கூறியதாவது:

எங்கள் தெருவிளக்கு உடைந்து உள்ளது. ஆனால் அந்த தெருவிளக்கை நாங்கள் தான் உடைத்தோம் என்று கூறி ஆயக்குடி காவல் நிலையத்தில் ஆயக்குடி திமுக பேரூராட்சித் தலைவர் கார்த்திகேயன் தூண்டுதலின் பேரில் நிர்வாக அதிகாரி புகார் கொடுத்துள்ளார். போலீசார் இந்த புகாரைப் பெற்றுக் கொண்டனர். சில தினங்களுக்கு முன்பு சப்- இன்ஸ்பெக்டர் சாந்தாலட்சுமி இரவு 12 மணிக்கு வந்து கோழி இருக்கிறதா, ஆடு இருக்கிறதா என்று கேட்டார். வீடுகளுக்குள் புகுந்து தேடினார். இதற்கு முருகேசன், சேகர், மதுரைவீரன் ஆகிய இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

உடனே, நீங்கள்தான் அந்த மூன்று பேரா? வாங்க தெருவிளக்கை உடைத்ததாக உங்கள் பேரில் பேரூராட்சியிலிருந்து புகார் கொடுத்திருக்கிறார்கள் என்று கூறி சட்டையைப்பிடித்து இழுத்துச் சென்றார். அதன்பிறகு அவர்கள் மீது பொதுச்சொத்துக்குச் சேதம் விளைவித்ததாகக் கூறி வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர். மார்க்சிஸ்ட் கட்சித் தோழர்கள் நீதிமன்றம் சென்று ஜாமீனில் மீட்டு வந்தனர். எங்கள் பிள்ளைகள் என்ன கிரிமினல்களா? உடைக்காத லைட்டை உடைத்தாக பொய்யான புகார் கூறி இப்படி இழுத்துச் செல்லலாமா? இவ்வாறு அருந்ததியப் பெண்கள் என்.வரதராஜனிடம் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

மேலும் இப்பகுதியைச் சேர்ந்த முருகேசனுக்கு, தமிழக அரசின் இலவச கேஸ் அடுப்பு வழங்கப்பட்டு இருந்ததாகவும், இந்நிலையில், முருகேசன், மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னையில் நடைபெற்ற அருந்ததியர் கோரிக்கை பேரணியில் கலந்து கொண்டதால், கேஸ் அடுப்பைத் திரும்பித் தருமாறு, பேரூராட்சித் தலைவர் கார்த்திகேயன் மிரட்டியதாகவும் தெரிவித்தனர்.

அவற்றை பொறுமையாகக் கேட்ட என்.வரதராஜன், இந்த பிரச்சனை சம்பந்தமாக உரிய நடவடிக் கையை மார்க்சிஸ்ட் கட்சி மேற்கொள்ளும் என்று உறுதியளித்தார்.

மேலும் கணக்கன்பட்டி, பச்சளநாயக்கன்பட்டி பகுதி அருந்ததியர் மக்களையும் என்.வரதராஜன் சந்தித்தார்.

கணக்கன்பட்டியில் வசிக்கும், 200 அருந்ததியர் குடும்பத்தினர் "எங்களுக்கென சுடுகாடு இல்லை; இறந்தவர்களை நெடுஞ்சாலையின் ஓரத்தில் தான் புதைக்கிறோம்; இப்பகுதியில் 30 சென்ட் புறம்போக்கு நிலம் உள்ளது; அந்த நிலமும் ஆக்கிரமிப்பில் உள்ளது; அதனை மீட்டு சுடுகாட்டிற்கு வழங்க வேண்டும்; கணக்கன்பட்டியின் ஒட்டுமொத்த கழிவுநீர் ஓடையும் எங்கள் பகுதியில் தான் வந்து சேர்கிறது; இதனால் பல்வேறு கொடிய நோய்களால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்; இந்த சாக்கடையில் தான் குடிநீர் குழாய் உள்ளது; அந்த சாக்கடை கலந்த நீரைத்தான் குடிக் கிறோம். இப்பகுதியில் இரண்டு கிணறுகள் திறந்த நிலையில் உள்ளதால் இதில் ஒரு குழந்தையும், வெளியூர்க்காரர் ஒருவரும் விழுந்து இறந்துள்ளனர். இதனை மூட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்; மேலும் ஒரு வீட்டில் 4 குடும்பம் வசிக்கும் நிலை உள்ளது; எனவே எங்களுக்கு வீட்டு மனை அல்லது தொகுப்பு வீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினர்.

பச்சள நாயக்கன்பட்டியிலும் இதே போன்ற கோரிக் கைகள் எழுப்பப்பட்டன. இந்த கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று என்.வரதராஜன் உறுதியளித்தார்.

இந்நிகழ்ச்சியின் போது மாவட்டச் செயலாளர் என்.பாண்டி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.ஆர்.முத்துச்சாமி, முன்னாள் எம்எல்ஏ என்.பழனிவேலு, பழநி நகர்மன்றத் தலைவர் வி. இராஜமாணிக்கம், பழனி நகரச் செயலாளர் எம்.குரு சாமி, பழனி ஏரியாச் செயலாளர் கே. அருள்செல்வன் உள்ளிட்டோர் என்.வரதராஜனுடன் சென்றனர்.