புதன், 16 டிசம்பர், 2009

நெஞ்சில் தைத்த முள், புண்ணாக்கி விடுமோ?

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை கடந்த 2006-ம் ஆண்டு மே மாதம் தமிழக முதல்வர் அறிவித்தபோது தமிழ் மக்கள் அகமகிழ்ந்து வரவேற்றனர். சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகள் ஆதரவோடு ஒருமனதாக இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது.

‘பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை’ அகற்றிவிட்டார் என்று முதல்வருக்கு புகழாரம் சூட்டி மகிழ்ந்தனர், பெரியாரின் வழிவந்தவர்களாகச் சொல்லிக் கொள்வோர்.

தமிழ்ச் சமுதாயத்தில் எத்தனையோ விசயங்களில் அழிக்க முடியாத தடத்தைப் பதித்தவர் தந்தை பெரியார். கோயில்களில் ஒரு குறிப்பிட்ட சாதியினர் (பிராமணர்கள்) மட்டுமே அர்ச்சகர்களாக இருக்க முடியும் என்ற ஏகபோக நிலையை எண்ணி வேதனைப்பட்டார். சமூக ஏற்றத்தாழ்வில் அவர்களின் கருத்தியல் ரீதியான மேலாதிக்கத்திற்கு வெளிப்படையான, கூர்மையான அடையாளமாக இந்த விசயம் இருப்பதால்தான், இதை ‘என் நெஞ்சில் தைத்த முள்’ என்று பெரியார் சொன்னார். அவர் எப்போதோ சொல்லி வைத்ததல்ல, நீண்ட நெடுங்கால அவரது போராட்ட வாழ்க்கையின் கடைசி கட்டத்தில்தான் இதைச் சொல்லி வைத்தார். தனது கடந்தகால களப்பணிகளால் ஏற்பட்ட தாக்கங்களுக்காக தற்பெருமை கொள்ளாமல் சமூக அவலத்தை வேரறுக்க இறுதிமூச்சு வரை சலனமில்லாமல் பாடுபட்டவர். எனவே அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் நிலை ஏற்பட்டால் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்பட்டு விட்டது என்று மகிழ்ச்சி அடைவது நியாயமே.

ஆனால், தமிழக அரசு சட்டம் பிறப்பித்த பிறகு தற்போதைய நிலை என்ன?

2006-ம் ஆண்டு சட்டம் நிறைவேறிய பிறகு, 2007-ம் ஆண்டு மே மாதம் இந்து அறநிலையத் துறையின் கீழ் ஆறு பகுதிகளில் அர்ச்சகர் பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டன. இந்த பயிற்சி மையங்களில் சேரும் மாணவர்களுக்கு ரூ. 500 வீதம் மாத உதவித் தொகை வழங்கப்படும். ஆகம விதிகளை படித்து தேர்ச்சி பெற்றவுடன் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் மொத்தமுள்ள 36 ஆயிரம் கோயில்களில் பணி நியமனம் செய்யப்படுவர் என்று அரசு அறிவித்தது.

இந்த ஓராண்டு இலவச வகுப்பில் மொத்தம் 240 பேர் சேர்க்கப்பட்டனர். 207 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களில் மூவர் பிராமணர்கள். மற்றவர்கள் பிற்படுத்தப்பட்ட, தலித் சமுதாயத்தினர். கோயில்களில் அர்ச்சகர்கள் ஆவதன் தார்மீகப் பெருமையைக் கருதாவிட்டாலும், அரசு வேலை கிடைக்கப் போகிறது என்ற நம்பிக்கையில் இவர்கள் காத்திருந்தனர்.

ஆனால் மதுரை மீனாட்சியம்மன் கோயில் பரம்பரை அர்ச்சகர்கள் உள்ளிட்ட சிலர், தமிழக அரசின் இந்த சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். மத சுதந்திரத்தில் தலையிடக் கூடாது (?) என்ற அரசியல் சட்டப் பிரிவை காரணம் காட்டியதால் உச்சநீதிமன்றமும் மாற்றுச் சாதியினரை அர்ச்சகர்களாக நியமிப்பதற்கு தடை விதித்துவிட்டது!

இதற்கு முன்பு வேறொரு வழக்கில் இந்து மதத்தைச் சேர்ந்த எந்த சாதியினரும் கோயில் அர்ச்சகராகலாம் என்று கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. அதை 2002-ம் ஆண்டு இதே உச்சநீதிமன்றம் உயர்த்திப் பிடித்தது. ஏற்கெனவே 1972ம் ஆண்டு தமிழகம் சார்ந்த வழக்கிலும் இதேபோன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது.

எனினும் தற்போது பரம்பரை அர்ச்சகர்களுக்குச் சாதகமாக தடையுத்தரவு விதிக்கப்பட்டு வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கைச் சந்திக்க தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞரை நியமித்துள்ளதாகவும், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வர உறுதியோடு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

எனினும் அரசின் செயல்பாடு இந்த விசயத்தில் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

குறிப்பாக கோயிலில் வேறு சாதியினர் அர்ச்சகர் ஆக தற்காலிகத் தடைதான் விதிக்கப்பட்டுள்ளது. படித்து முடித்த 207 பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்காவிட்டாலும், பயிற்சி முடித்ததற்கான சான்றிதழை வழங்குவதில் வேறு தடை ஏதும் இல்லையே. ஆனால் அதைக்கூட இன்று வரை மாநில அரசு நிறுத்தி வைத்திருப்பது ஏன்? இங்கு படித்த அருண்குமார் என்பவர் மட்டும் அர்ச்சகராக தற்போது கோயிலில் பணியாற்றி வருகிறார், பிராமணர் என்பதால்!

மேலும், ஒரேயொரு ஆண்டு மட்டுமே செயல்பட்ட ஆறு அர்ச்சகர் பயிற்சி மையங்களையும் மாநில அரசு இழுத்து மூடிவிட்டது. அந்த மையங்கள் தொடர்ந்து செயல்பட்டிருந்தால் தற்போது பிற சாதி அர்ச்சகர்களாக இன்னும் 480 பேர் தேர்ச்சி பெற்றிருக்க முடியும். மொத்தம் 36 ஆயிரம் கோயில்

கள் இருக்கும் போது இந்த எண்ணிக்கை மிகவும் சொற்பமே! வழக்கை விரைந்து நடத்தி சட்டரீதியாகத் தடையைத் தகர்க்கவும், அரசியல் உறுதிப்பாட்டோடும் செயல்பட்டால்தான் இதில் வெற்றி பெற முடியும்.

ஆனால் அரசின் செயல்பாடு உறுதி மிக்கதாக இல்லை என்பதையே சம்பவங்கள் உணர்த்துகின்றன. பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் முற்றிலுமாக அகற்றப் பட்டுவிட்டதா அல்லது முள்ளின் பகுதி உள்ளேயே இருந்து புண்ணாக்கி விடுமோ? துணிந்து அகற்ற வேண்டும் முள்ளை!

(12.12.09 தீக்கதிர் கட்டுரை)