புதன், 16 டிசம்பர், 2009

தலித் மயானப் பாதை அடைப்பு: சிபிஎம் தலைமையில் சடலத்துடன் மறியல்

வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே உள்ள கே.வி.குப்பம் ஒன்றியத்திற்கு உட்பட்டது செஞ்சி ஊராட்சி. இங்குள்ள தலித் காலனியில் 600-க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள்.

அதேபகுதியைச் சேர்ந்த கோபால்நாயுடு என்பவருக்குச் சொந்தமான நிலத்தைத்தான் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக தலித் மக்கள் மயானப் பாதையாக பயன்படுத்தி வந்தனர். இதற்கு கிராமத்தில் உள்ள ஆதிக்க சக்திகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் தலித் காலனியைச் சேர்ந்த பெருமாள் மனைவி லட்சுமி (65) வெள்ளியன்று இரவு இறந்தார். இவரது சடலத்தை அடக்கம் செய்ய சனிக்கிழமை மாலை மயானத்துக்குக் கொண்டு சென்றனர். அப்போது முட்கள் மற்றும் தென்னை மரங்களால் மயானப் பாதை அடைக்கப்பட்டிருந்து. இதை கண்டு ஆவேசமைந்த தலித் மக்கள், உறவினர்களுடன் சடலத்தை சாலையில் வைத்து மறி யலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த காட்பாடி தாசில்தார் ரேணு, காவல் ஆய்வாளர் மகேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து, தலித் மக்களிடமும், பட்டா நிலத்தின் உரிமையாளரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர் மாவட்டச் செயலாளர் ஏ.நாராயணன், செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.டி.சங்கரி, எம்.வி.எஸ்.மணி, தாலுகா செயலாளர் ஏகநாத ஈஸ்வரன், ராமச்சந்திரன், செந்தாமரை உள்ளிட்டோர் அரசு அதிகாரிகளிடம் பேசினர். சட்டம்- ஒழுங்கு சீர்குலையாமல் இருக்க தலித்மக்கள் பயன்படுத்திய மயானப்பாதையின் முள்வேலியை அகற்ற வலியுறுத்தினர்.

இதுபற்றி வேலூர் மாவட்ட ஆட்சியர் செ.ராஜேந்திரனிடம் தொலைபேசியில் தகவல் கொடுத்தார் தாசில்தார் ரேணு. அதைத்தொடர்ந்து தற்காலிகமாக வழி விடுவது எனவும், ஓரிரு நாளில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண்பது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

இதையடுத்து ஊராட்சி மன்றத் தலைவர் துரைசாமி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் உள்ளிட்டோர் முட்களை, மரங்களை அகற்றி மயானப் பாதையைச் சீர் செய்தனர். இதனால் 4.30 மணியில் இருந்து 5.30 வரை நடைபெற்ற மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.