புதன், 16 டிசம்பர், 2009

வன மக்களுக்கு பட்டா வழங்க டில்லிபாபு எம்எல்ஏ கோரிக்கை

தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு வட்டம் மிகவும் பின்தங்கிய பகுதியாகும் மலைவாழ் மக்கள், இருளர் குருமன் மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் அதிகமாக வனப்பகுதிகளில் வசிக்கின்றனர். இவர்கள் மூன்று தலைமுறைகளாக விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். ஆனால் பல ஆண்டுகளாகியும் இவர்களுக்கு நிலப்பட்டா வழங்கப்படவில்லை.

குறிப்பாக மலைக் கிராமமான பிக்கன அள்ளி, திம்மராயன அள்ளி, மகேந்திர மங்களம், பௌமாரன அள்ளி, குண்டாங்காடு, வீரசாமனூர்மலை, கண்டகபைல் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட மலைக் கிராம மக்கள், பட்டா கேட்டு நீண்டகாலம் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், வனப்பகுதியில் வசித்துக் கொண்டு, விவசாயம் செய்துவரும் மக்களுக்கு வன உரிமை சட்டத்தின் கீழ் பட்டா வழங்கக் வேண்டுமென தருமபுரி கோட்டாட்சியர் மணிவண்ணனிடம் 261 மனுக்களை பி.டில்லிபாபு எம்.எல்.ஏ. வழங்கினார்.

அப்போது தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.குமார், மாவட்டச் செயலாளர் கே.என்.மல்லையன், மாவட்டப் பொருளாளர் கே.காளியப்பன், மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட நிர்வாகிகள் எஸ்.கே.கோவிந்தன், எஸ்.பி.சின்னராசு, வெங்கடேசன் ஆகியோர் உடனிருந்தனர்.