வியாழன், 4 மார்ச், 2010

தலித் பிணத்தை எரிக்கவிடாமல் அராஜகம் : கட்டளைப் பட்டியில் தொடரும் தீண்டாமை

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ளது கட்டளைபட்டி கிராமம். இங்கு அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த பழனிச்சாமி (50) கடந்த 8-ம் தேதி இறந்தார். இந்நிலையில் அவரது உடலை அடக்கம் செய்ய  ஏற்பாடு செய்தனர்.
அப்போது திடீரென ஆதிக்க சமூகத்தை சேர்ந்தவர்கள் சுடுகாடு எங்களுக்கு சொந்தமானது. எனவே, தலித் பிணத்தை எரிக்க விடமாட்டோம் என சுடுகாட்டிற்கு வந்து தடுத்தனர். மேலும், இரவோடு இரவாக அந்த இடத்தை சுற்றிலும் கல் ஊன்றி வேலி போடவும் முயற்சி செய்தனர். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர்.
பின்னர் தாசில்தார், டிஎஸ்பி ஆகியோர் இரு தரப்பினரையும் பேச்சு வார்த்தைக்கு அழைத்தனர்.
பேச்சுவார்த்தையில், நிலம் தங்களுக்குச் சொந்தமானது என்று கூறும் ஆதிக்கசாதியினரிடம் அது தொடர்பான பட்டா அல்லது பத்திரம் இருந்தால் தாருங்கள் என்று அதிகாரிகள் கேட்டனர். அதற்கு அவர்கள் தயங்கவே, உரிய ஆதாரம் வழங்கும் வரை ஏற்கனவே உள்ள நடை முறையே தொடரும் என்று ஒப்பந்தம் ஏற்படுத்தினர்.
அருந்ததியர் தரப்பில் ஊர் பெரியவர்கள் கிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன், துரைப்பாண்டி, மாரிச்சாமி ஆகியோர் உட்பட பலர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.
பின்பு காவல்துறையின் பாதுகாப்புடன் பழனிச்சாமியின் உடலை அருந்ததியர் மக்கள் அடக்கம் செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக அருந்ததிய மக்கள் கூறியதாவது:
இந்த இடம் ஊர்ப் பொது இடம்தான். அனைத்து சமூக மக்களும் நீண்ட காலமாக இங்குதான் பிணங்களை எரித்து வருகிறோம். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆதிக்க சமூகத்தை சேர்ந்த ஒருவர் இறந்து விட்டார். அன்றைய தினம் நாங்கள் அனைவரும் திருமண நிகழ்ச்சிக்காக விருதுநகர் சென்று விட்டோம். அதற்கு இறுதி சடங்கு செய்ய நாங்கள் வரவில்லை என்ற கோபத்திலேயே இவ்வாறு செய்கின்றனர். மேலும் எங்களுக்கு தற்போது வரை சுடுகாட்டுக்கு கூரை இல்லை. மழைக் காலங்களில் நனைந்து கொண்டே பெரும் சிரமத்துடன்தான் பிணங்களை எரிக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஏற்கனவே, தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் தலித் மக்களை சுகாதார வளாகத்திற்குள் அழைத்து செல்லும் போராட்டம் இதே கட்டளைப்பட்டியில்தான் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.