செவ்வாய், 5 ஜனவரி, 2010

ஜனவரி 8-ம் தேதிக்கு வாச்சாத்தி வழக்கு ஒத்திவைப்பு

தருமபுரி அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வரும் வாச்சாத்தி வழக்கு வரும் ஜனவரி 8ம் தேதி குறுக்கு விசாரணை நடத்த ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 20, 21, ஆகிய தேதிகளில் நடைபெற்ற குறுக்கு விசாரணையில் பாதிக்கப்பட்ட 18 பெண்களில் 9 பேர் தனக்கு நேர்ந்த கொடுமைகளை சாட்சியாக அளித்தனர். பின்னர் நவம்பர் 13 அன்று நடைபெற்ற குறுக்கு விசாரணையில் மீதமுள்ள 9 பெண்கள் சாட்சியமளித்தனர்.

பின்னர் இவ்வழக்கில் டிசம்பர் 23 அன்று குறுக்கு விசாரணை மாவட்ட நீதிபதி எஸ். குமரகுரு தலைமையில் நடை பெற்றது. அரசு தரப்பு சிபிஐ சிறப்பு வழக்கறிஞர் ஜெயபால், எதிர்தரப்பு வழக்கறிஞர் வெங்கடேசன் ஆகியோர் ஆஜராகினர். சிறைவார்டன் மா. லலிதாபாய் சாட்சியமளித்தார். அப்போது பாதிக்கப்பட்ட பெண்கள் தனக்கு நேர்ந்த கொடுமைகளை தன்னிடம் கூறியதாக கூறினார். பாதிக்கப்பட்ட பெண்கள் சிறை சூப்பிரண்ட்டிடம் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை கூறியதாகவும் அவர் கூறினார்.

பின்னர் நீதிபதி இவ்வழக்கில், ஜனவரி 8 அன்று குறுக்கு விசாரணை நடத்த உத்தரவிட்டார். அன்று மாவட்ட வனக்காவல் அதிகாரி துரைசாமி சாட்சியமளிக்கவுள்ளார். இவ்வழக்கில் எதிர்தரப்பு வழக்கறிஞராக விஜயராகவன் குறுக்கு விசாரணை நடத்துகிறார்.