செவ்வாய், 5 ஜனவரி, 2010

சாதியக் கொடுமைகளை முறியடிக்க முற்போக்கு சக்திகள் இணைந்து போராட வேண்டும் - என்.வரதராஜன் அழைப்பு


நாடு சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகள் கடந்த பின்னரும் சாதியக் கொடுமைகள் ஆழமாகிக் கொண்டிருக்கின்றன; அவற்றை எதிர்கொண்டு முறியடிக்க முற்போக்கு சக்திகள் கைகோர்த்துப் போராட வேண்டியுள்ளது என்று கோவையில் என். வரதராஜன் கூறினார்.

தந்தை பெரியாரின் 36 வது நினைவுதினத்தை யொட்டி வியாழனன்று நடந்த நிகழ்ச்சியில் கோவை காந்திபுரம் நகரப்பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் சாதியக் கொடுமைகளுக்கு எதிராக கடும் போராட்டம் நடத்தியவர் பெரியார். தீண்டாமைக் கொடுமையை எதிர்த்து வைக்கம் வரை சென்று போராடினார். பெண்ணடிமைத் தனத்திற்கு எதிராக அழுத்தமான கருத்துக்களை முன்வைத்தவர்; சமத்துவத்தை வலியுறுத்தியவர். இந்திய நாடு சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகள் கடந்த பின்னரும் இத்தகைய கொடுமைகள் இன்னும் ஆழமாகிக் கொண்டிருக்கிறது. இன்று அக்கொடுமைகளை எதிர்கொண்டு முறியடிக்க ஜனநாயக முற்போக்கு சக்திகள் கைகோர்த்துப் போராட வேண்டியுள்ளது. அந்த உணர்வின் அடையாளமாக இன்று பெரியார் நினைவினை கடைப்பிடிக்கிறோம், என்றார்.

நிகழ்ச்சியில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் யு.கே.வெள்ளிங்கிரி, மாநிலக் குழு உறுப்பினர் கே.சி.கருணாகரன், தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் மாவட்ட அமைப்பாளர் யு.கே.சிவஞானம், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத் தலைவர் சி.பத்மநாபன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கருப் பையா, சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆறுமுகம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட நிர்வாகிகள் வி.பெருமாள், வழக்கறிஞர் வெண்மணி, வி.சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தந்தை பெரியார் திராவிடர் கழகத் தொண்டர்கள் திரளாகப் பங்கேற்றனர்.