செவ்வாய், 5 ஜனவரி, 2010

தலித் மக்களுக்கான சிறப்பு நிதியை முறையாக செலவிடாத புதுவை அரசு

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ஆலோசனைக்குழு கூட்டம், எல்.கலிவரதன் தலைமையில் நடைபெற்றது. முன்னணியின் புதுவை அமைப்பாளர் ஜி.ராமசாமி, நிர்வாகிகள் ராஜாங்கம் நிலவழகன், கொளஞ்சியப்பன்-தவமணி, லெனின், முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், சிறப்பு உட்கூறு திட்ட நிதியை புதுச்சேரி மாநில காங்கிரஸ் அரசு முறையாக செலவு செய்யாமல் வேறு திட்டங்களுக்கு திருப்பி விடுவதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

புதுச்சேரி அரசு ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக மத்திய அரசிடம் நிதிபெற்று திட்டமிட்டு செலவிடுவதாக பெருமையடித்துக் கொள்கிறது. ஆனால் திட்ட நிதியை, உரிய காலத்தில் முறையாக செலவு செய்வதில்லை என மாநில பொதுக்கணக்குக் குழு புதுச்சேரி அரசு மீது குறைகூறியுள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது. இந்தப் போக்கு பட்ஜெட், திட்டம், நிதி ஒதுக்கீடு அரசின் செயல்பாடு ஆகியவை கேள்விக்குறி ஆகியுள்ளது.

மேலும், ஆதிதிராவிட நலத்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் 8.32 சதவீதம் மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் திட்ட நிதியில் 4.52 சதவீதம்தான் தலித் மக்களுக்கு சென்றிருக்கிறது. இது, தலித் மக்களின் வளர்ச்சியில் புதுவை அரசு கொண்டிருக்கும் அலட்சியமான பார்வையை அம்பலப்படுத்தியுள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டதோடு, புதுச் சேரி காங்கிரஸ் அரசும், தலித் சார் துறையும் உடனடியாக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

எஞ்சிய சில மாதங்களில், திட்டத்தின் 95 சதவீத நிதியை செலவு செய்யும் வாய்ப்பே இல்லை. அவ்வாறு அவசர கதியாக செலவு செய்யுமேயானால் பெரும் ஊழல் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே, எச்சரிக்கையோடும் முறைகேடுகள் இன்றி தலித் மக்களுக்கான திட்ட நிதியை செலவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது.

கரையாம்பத்தூர் பகுதியில் ஆண்டாண்டு காலமாக நூற்றுக்கும் மேற்பட்ட தலித்மக்கள் சிறுசிறு பகுதியில் விவசாயம் செய்து வரும் நிலையில், அத்தகைய நிலங்களை அம்மக்களுக்கே பட்டா செய்து தரவேண்டும் என்றும் இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

-(19.12.2009 அன்று செய்தியானது)