திங்கள், 16 நவம்பர், 2009

குறவன் இனச் சான்றிதழ் கேட்டு போராட்டம் : வேலூர் மாவட்டத்தில் காவல்துறை அடக்குமுறை

குறவன் இன மக்களுக்கு சாதி சான்றிதழ் கேட்டு மனு கொடுக்க வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களை அவமரியாதை செய்த மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து வெள்ளியன்று(13.11.2009) தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குறவன் இன மக்களுக்கு சாதிச்சான்றிதழ கேட்டு, கடந்த 4- ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் குறவர் இன மக்கள் சங்கத்தினர் இணைந்து பட்டினிப் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் முடிவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளருமான பெ.சண் முகம், கட்சியின் வேலூர் மாவட்டச் செயலாளர் ஏ.நாராயணன், குறவர் பழங்குடி மக்கள் சங்கத் தலைவர் ஏ.வி.சண்முகம் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் செ.ராஜேந்திரனை சந்தித்து மனு அளித்து முறையிட்டனர்.

அப்போது, எங்களின் கோரிக்கைக்கு எப்போது தீர்வு கிடைக்கும் என்று தலைவர்கள் கேட்டபோது, கோபமடைந்த ஆட்சியர், தலைவர்களை “வெளியே போங்கள்'' என்று கூறிஅவமானப்படுத்தினார்.

இச்சம்பவத்தைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு காவல்துறை அனுமதி அளிக்காமல் வியாழன் இரவு 10 மணியளவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்கு வந்து அனுமதி இல்லை என்பதைத் தெரிவித்தனர்.

மேலும், பெருமளவு காவல்துறையினரை அந்த பகுதியில் குவித்து, மறுநாள் ஆர்ப்பாட்டம் நடத்தும் இடத்திற்கு வரும் கட்சியினரை வழியிலேயே மடக்கி கைது செய்தனர்.

மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.டி.சங்கரி, எம்.வி.எஸ்.மணி ஆகியோரை வலுக்கட் டாயமாக தரதரவென்று இழுத்துச் சென்று போலீஸ் வேனில் ஏற்றினர். பின்னர் ஆர்ப்பாட்டத்திற்காக வந்து கொண்டிருந்த, பெ.சண்முகம், டில்லிபாபு எம்எல்ஏ, ஜி.லதா எம்எல்ஏ உள்ளிட்ட தலைவர்கள் வந்த வாகனத்தையும் வழிமடக்கி கைது செய்ய முற்பட்டனர். இதனால் வாக்குவாதம் எழுந்தது. முடிவில் டிஎஸ்பி பாலசந்தர், ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதால் உங்களைக் கைது செய்கிறோம் என்று சொல்ல, பதிலுக்கு தலைவர்களும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்வோம் என்று உறுதியுடன் இருக்கவே, பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு மாவட்ட ஆட்சியர் இல்லை. கூட்டத்தில் இருப்பதாக கூறினர். வெகுநேரமாகியும் மாவட்ட ஆட்சியர் வராததால் கோபமுற்ற தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்பின்னர் காவல்துறையினரின் ஏற்பாட்டின் பேரில், தலைவர்கள் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து கோரிக்கைகளை எடுத்துரைத்தனர்.