புதன், 3 மார்ச், 2010

கோவையில் முழுமையாக பாதை கிடைக்க உதவுக! முதல்வருக்கு என்.வரதராஜன் கடிதம்

கோவையில் தீண்டாமைச் சுவர் அகற்றப்பட்ட பகுதியில், அருந்ததிய மக்களுக்கு முழுமையான பாதை கிடைக்காமல் குறுக்கே இருக்கும் விநாயகர் சிலையை மாற்று இடத்தில் அமைத்து, பாதை ஏற்படுத்தி தருமாறு முதலமைச்சர் கருணாநிதிக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என். வரதராஜன் ஞாயிறன்று (பிப்ரவரி 7) வேண்டுகோள் விடுத்தார்.

இதுதொடர்பாக அவர், தமிழக முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதம் வருமாறு:

கோவை மாநகர், சிங்காநல்லூர் கிழக்குமண்டலம் 10-வது வட்டம் பெரியார் நகரை பிரதான சாலையான காமராஜர் சாலையுடன் இணைக்கும் ஜீவா வீதியின் நடுவே 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிக்க சக்திகள் அமைத்திருந்த தீண்டா மைச் சுவரை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணி கடந்த ஜனவரி 29ல் தமிழ்நாடு அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்தபோது, தாங்கள் உடனடியாக தலையிட்டு, அதனை ஜனவரி 30 அன்று அப்புறப் படுத்துவதற்கான நடவடிக்கை எடுத்ததை வரவேற்கிறோம்.

ஆயினும் அச்சுவரையொட்டி ஜீவா வீதியின் நடுவே சுயநலம் கொண்ட ஒருவர் அந்த தீண்டாமைச் சுவரைப் பாதுகாக்கும் நோக்கத்துடனும், மாட்டுத் தொழுவமாகப் பயன்படுத்தும் நோக்குடனும், 20 ஆண்டுகளுக்கு முன்பே அங்கு விநாயகர் சிலை ஒன்றினை வைத்து, அதனைச் சுற்றிலும் 4 தூண்கள் நிறுவி, அதன் மேல் தகரக் கூடாரம் அமைத்து உள்ளார்.

இதன் மூலம் சாலையின் பெரும்பகுதி மறிக்கப்படும் நிலையை ஏற்படுத்தியுள்ளார். அந்த கூடாரம் இன்றளவும் அப்புறப்படுத்தப்படாமல் உள்ளது. இந்நிலையில் 6.2.2010ல் அப்பகுதிக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத், மாவட்ட அமைப்பாளர் யு.கே.சிவஞானம், ஆதித்தமிழர் விடுதலை முன்னணியின் மாநில அமைப்பாளர் கோவை.ரவிக்குமார், வழக்கறிஞர் வெண்மணி, பெருமாள், கணேஷ் உள்ளிட்டோர் கொண்ட குழு நேரில் சென்று அப்பகுதி மக்களைச் சந்தித்து உள்ளது.

தீண்டாமைச் சுவர் அகற்றப்பட்ட நிலையிலும், அருந்ததிய மக்கள் முழுமையாக பயன்படுத்த முடியாத நிலையில் ஜீவா வீதி உள்ளது. இதனால் சுவர் அகற்றப்பட்டதன் முழுமையான பலன் அருந்ததிய மக்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. அந்த விநாயகர் சிலையை அங்கிருந்து அப்புறப்படுத்த தமிழக அரசு அதிகாரிகள் ஏற்றுக் கொண்டு ஓரிரு நாள் அவகாசம் அளித்தனர்.

தற்போது அப்பகுதி மக்கள் பெரியார் நகரில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே விநாயகர் சிலை வைத்து வழிபட இடம் தேர்வு செய்து மேடை அமைத்து உள்ளனர். அங்கு விநாயகர் சிலை வைப்பதன் மூலம் ஜீவா வீதியை சுதந்திரமாக பயன்படுத்த முடியும் என்பதோடு, விநாயகர் சிலையை அப்பகுதிமக்கள் எவ்வித இடையூறும் இன்றி வழிபடவும் முடியும். கோவை மாவட்ட மற்றும் மாநகராட்சி அரசு அதிகாரிகளும், மாவட்ட ஆட்சித் தலைவரிடம் விநாயகர் சிலையை அங்கிருந்து உடனடியாக மாற்றுவதற்கு சிபாரிசு செய்திருப்பதாக அறிகிறோம்.

ஆகவே, தாங்கள் தாமதமின்றி தலையீடு செய்து ஜீவா சாலையின் நடுவே எந்த வாகனமும் செல்ல முடியாதபடி வழிமறித்து அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலையை, அப்பகுதி மக்கள் ஏற்பாடு செய்துள்ள மாற்று இடத்திற்கு மாற்றிட மாவட்ட, மாநகர அரசு அதிகாரிகள் மூலம் ஆவன செய்யுமாறும், அதன் மூலம் ஜீவா சாலையை முழுமையாகப் பயன்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்துமாறும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும், ஜீவா சாலையில் இதரப் பகுதி மக்கள் வசிக்கும் பகுதியில் சிமெண்ட் சாலை, குடிதண்ணீர், பாதாளச் சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதைப்போன்று, அப்பகுதியில் குடியிருக்கும் அருந்ததியர் மக்களுக்கும் அமைத்துக் கொடுக்குமாறு வலியுறுத்துகிறோம்.

அருந்ததியர் மக்கள் இந்த நடவடிக்கைகளை தமிழக அரசிடம் இருந்து தாமதமின்றி எதிர்பார்ப்பதால் தாங்கள் உடனடியாக தலையிட வேண்டுகிறோம்.

இவ்வாறு என்.வரதராஜன் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

தொழில் கடன் கேட்டு நெறிக்குறவர்கள் மனு

திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதிகளில் வசிக்கும் நெறிக்குறவர்கள், தாங்கள் தொழில் தொடங்குவதற்கு வங்கிக் கடன் கேட்டு, மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனு அளித்தனர்.

நெறிக்குறவர் சமூகத் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளருமான கே.நாகூரான் தலைமையில் நடைபெற்ற இந்த மனு அளிப்பின் போது ஆட்சியர், வங்கி மேலாளர்களைத் தொடர்பு கொண்டு கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டது.

திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் பி. சீனிவாசராவ் நகர், அடஞ்ச விளாகம், இடும்பாவனம், திருத்துறைப்பூண்டி ஆகிய பகுதிகளில் வசிக்கும் 35 நெறிக்குறவ குடும்பத்தினர் மனு அளித்துள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் வங்கிக் கடன் கிடைக்க வழிவகை காண வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கட்சியின் நகர்ச் செயலாளர் எம்.பி.கே.பாண்டியனும் கோரிக்கை விடுத்துள்ளார். (7.2.10 தீக்கதிர் செய்தி)

கோவை தீண்டாமைச்சுவர் அகற்றப்பட்ட இடம் : பி.சம்பத் பார்வையிட்டார்

கோவையில் பொதுவழியில் அருந்ததியர் மக்கள் நுழைவதைத் தடுக்க ஆதிக்க சாதியினர் எழுப்பியிருந்த தீண்டாமைச்சுவர் அண்மையில் தகர்க்கப்பட்டது. அந்த இடத்தை தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத் பார்வையிட்டார்.

கோவை 10 வது வட்டத்தில் உள்ள பெரியார் நகரில் கடந்த 1989-ம் ஆண்டு முதல் அருந்ததியர் மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் அங்கு குடியேறியவுடன் அருகில் உள்ள ஜீவா வீதியில் வசித்து வரும் ஆதிக்க சாதியினர் அப்பொதுவழியில் அருந்ததியர் நுழைவதைத் தடுக்கும் நோக்கில் சுவர் எழுப்பி, அருகே பிள்ளையார் சிலை வைத்து அடைத்தனர். இதற்கு அருந்ததியர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோதும் கடந்த 20 ஆண்டுகளாக அரசு நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும், ஆதித்தமிழர் விடுதலை முன்னணியும் இப்பிரச்சனையைக் கையில் எடுத்தன. மாநகராட்சி ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து எழுந்த நெருக்கடி காரணமாக அரசு நிர்வாகம் உடனடியாக சுவரை அப்புறப்படுத்தியது. தற்போது அங்குள்ள பிள்ளையார் சிலையையும் அருந்ததியர் வாழும் பகுதியிலேயே தனியான மேடையில் வைத்து வழிபடும் வகையில் அம்மக்கள் சம்மதத்துடன் தேர்வு செய்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத் சுவர் இருந்த இடத்தை நேரில் பார்வையிட்டார். அவரை அருந்ததிய மக்கள் நெகிழ்ச்சியுடன் வரவேற்றனர். பின்னர் பொதுமக்களிடம் விபரங்களைக் கேட்டறிந்த அவர், “ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தீண்டாமை ஒழிப்பு முன்னணி தொடர்ந்து உறுதியுடன் பணியாற்றும்,’’ என்று தெரிவித்தார்.

அவருடன் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கோவை மாவட்ட அமைப்பாளர் யு.கே.சிவஞானம், மதுரை புறநகர் மாவட்ட அமைப்பாளர் தங்கராஜ், கோவை மாவட்ட நிர்வாகிகள் வி.பெருமாள், கே.கணேஷ், வழக்கறிஞர் வெண்மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் வி.தெய்வேந்திரன், ஆதித்தமிழர் விடுதலை முன்னணியின் மாநில அமைப்பாளர் கோவை இரவிக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகளும் திரளான ஊழியர்களும் வந்திருந்தனர்.