செவ்வாய், 22 டிசம்பர், 2009

அருந்ததிய மக்களுடன் சந்திப்பு : என்.வரதராஜனுக்கு உற்சாக வரவேற்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் அருந்ததிய மக்களைச் சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன், குறைகளைக் கேட்டு வருகிறார்.

ஏற்கெனவே, ரெட்டி யார்சத்திரம் ஒன்றியம், பழனி ஏரியா ஆகிய பகுதிகளில் நடைபெற்ற சந்திப்பு இயக்கங்களில் பங்கேற்றார். புதனன்று (16.12.09) குஜிலியம்பாறை ஒன்றியத்தில் உள்ள சின்னழகு நாயக்கனூர், கணக்கப்பிள்ளையூர், சூலப்புரம், கூம்பூர் புதூர் ஆகிய பகுதிகளில் அருந்ததிய மக்களைச் சந்தித்தார்.

இந்நிகழ்ச்சிகளில் வெடிமுழக்கங்களுடனும், தப்பாட்டம், தேவராட்டம், மங்கள வாத்தியங்கள் முழங்க அவருக்கு அருந்ததிய மக்கள் வரவேற்பளித்தனர். இந்நிகழ்ச்சியையொட்டி இந்த கிராமங்கள் விழாக் கோலம் பூண்டிருந்தன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் பி.செல்வராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் கள் கே.ரங்கசாமி, ஏ.ராஜரத்தினம், குஜிலியம்பாறை ஒன்றியப் பெருந்தலைவர் ஆர்.ஆறுமுகம், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் வி.தர்மர், ஆர்.தியாகராஜன், எல்.தங்கவேல், எல்.ஜெயபால், டி.சௌந்திரராஜன், பி.பாலசுப்ரமணி மற்றும் மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உள்ஒதுக்கீடு: உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்பு

இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் அருந்ததியருக்கான உள் ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண் டுமென சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, சமூக நீதியை உயர்த்திப் பிடிப்பதாக உள்ளது என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்றது.

முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத் விடுத்த அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது:

இடைநிலைப் பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் அருந்ததியினருக்கான உள்ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அருந்ததிய மக்களுக்கான உள்ஒதுக்கீடு என்ற நீண்ட கால கோரிக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் அருந்ததிய அமைப்புகளால் முன்வைக்கப்பட்டு தமிழக அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதற்கான அரசாணை 2009 ஏப்ரல் 29 அன்று வெளியிடப்பட்டது. இந்த ஆணை வெளிவருவதற்கு முன்பாக 5 ஆயிரத்து 773 இடைநிலை ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான அறிவிப்பாணை வந் திருந்தது. உள்ஒதுக்கீடுக்கான அரசாணை வந்தபோது அந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைகள் நிறைவு பெறவில்லை. இதனால் பல ஆண்டுகளாக நீடித்து வந்த சமச்சீரற்ற நிலையைப் போக்குவதற்காக வந்த உள்ஒதுக்கீடு இந்த ஆசிரியர்கள் பணி நியமனத்திலும் வழங்கப்பட வேண்டும் என்ற நியாயமான கோரிக்கை எழுந்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி முதல்வர் கருணாநிதிக்கு கடிதமும் எழுதினார். ஆனால் அரசாணை வெளியிடப்படுவதற்கு முன்பாக ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைகள் துவங்கிவிட்டதால் இந்த உள்ஒதுக்கீட்டை அதில் நடைமுறைப்படுத்த முடியாது என்று அரசிடமிருந்து பதில் வந்தது.

தற்போது வந்துள்ள உயர்நீதிமன்றத் தீர்ப்பு அரசின் நிலையை நிராகரித்துள்ளது. உயர்நீதிமன்றத்தின் இந்த மேலான தீர்ப்பால் உள்ஒதுக்கீட்டின் அடிப்படையில் 173 அருந்ததியர்கள் உடனடியாக இடைநிலை ஆசிரியப் பணியில் அமருவார்கள். சமூக நீதியை உயர்த்திப் பிடித்துள்ள இந்தத் தீர்ப்பை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்கிறது. தீர்ப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு மாநில அரசை தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்துகிறது.

மின்வாரியத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணி நியமனத்தில் அருந்ததியருக்கான உள் ஒதுக்கீட்டை அமல்படுத்தக்கோரி நீதிமன்றத்தில் மனு, தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மின்வாரியத்தில் நடக்கும் நியமனத்தில் உள்ஒதுக்கீடு குறித்து மின்வாரியத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இந் நிலையில் மின்வாரிய நியமனங்களிலும் அருந்ததியருக்கான உள்ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

மேலும் அரசாணை வெளிவந்ததற்குப் பின்னர், இதேபோன்று இதர துறைகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பும் பணி தொடங்கியிருப்பின், அத்துறைகளிலும் அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீடு முறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவிட வேண்டுமென தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்துகிறது.

தமிழக அரசு, உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்திடாமல் தீர்ப்பை உடனடியாக நடைமுறைப்படுத்திட வேண்டுமென அரசை தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்துகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. (17.12.09)

நகராட்சி நிர்வாகத்தின் சாதிய மனோபாவம்

அருப்புக்கோட்டை நகராட்சியில், காலியாக இருந்த 17 துப்புரவுத் தொழிலாளர் பணியிடங்கள் அண்மையில் நிரப்பப்பட்டன.

இதில், 13 பேர் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஏனைய 4 பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்நிலையில், அருந்ததியர்கள் 13 பேரை மட்டும் துப்புரவுப் பணியில் ஈடுபடுத்தும் நகராட்சி நிர்வாகம், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 4 பேரை மட்டும் துப்புரவுப் பணி அல்லாத வேறு பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. நகராட்சி நிர்வாகத்தின் இந்த சாதிய மனோபாவத்திற்கு கடும் கண்டனம் எழுந்தது.

இதுகுறித்து சிஐடியு சார்பில் நகராட்சி ஆணையாளருக்கு புகார் மனு அனுப்பப்பட்டது.

துப்புரவுப் பணிக்கென தேர்வு செய்தவர்களில் சிலரை மட்டும் வேறு வேலை செய்ய சொல்வது சாதிய கண்ணோட்டத்துடனான அணுகுமுறையாகும். இதுவும் தீண்டாமையின் ஒரு வடிவமே. அருந்ததியர் சமூகத்தை சார்ந்த துப்புரவு பணியாளர்களை மற்றவர்களின் பணிகளையும் சேர்த்துச் செய்திட நிர்ப்பந்தம் செய்வது எந்த வகையிலும் நியாயம் இல்லை. இதுபோன்ற சம்பவங்கள் ஏற்கனவே இங்கு நடைபெற் றுள்ளன. இனியும் தொடரும் பட்சத்தில் சிஐடியு சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று சிஐடியு தனது புகாரில் கூறியது. (16.12.09)