திங்கள், 18 ஜனவரி, 2010

கண்பார்வையற்ற அருந்ததிய இளைஞர் மீது தாக்குதல் - குடும்பத்தையும் ஊரைவிட்டு ஒதுக்கிய சாதி வெறியர்கள்

தேனி மாவட்டம், காட்டுநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர்- அருந்ததிய இளைஞர் ராம்பெருமாள். இருகண்களிலும் பார்வை யை இழந்தவர். இவர், கடந்த 22.12.2009 அன்று மாலை 5.45 மணியளவில், காட்டு நாயக்கன்பட்டி பயணிகள் நிழற்குடையில் உட்கார்ந்து இருந்த போது, அங்குவந்த ஆதிக்க சாதியைச் சேர்ந்த செல்லத்துரை, சுருளி, சுருளியப்பன், கண்ணன் ஆகியோர் “சக்கிலிய நாயே நீ சமமாக உட்காருவதா” என்று சொல்லி செருப்பு களால் கொடூரமான முறையில் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த ராம்பெருமாள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இதனிடையே, ராம்பெருமாளையும் அவரது குடும்பத்தையும் ஊரை விட்டும் ஒதுக்கி வைத்து கொடுமை புரிந்துள்ளனர்.

தினசரி கூலி வேலை செய்தால்தான் குடும்பத்தை நடத்த முடியும் என்ற நிலையில், இவரின் குடும்பத்தி னரை யாரும் வேலைக்கு கூப்பிடாமல் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். தான் தாக்கப்பட்டதுடன், தனது குடும்பம் ஊரை விட்டும் ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பதை நினைத்து, கண்பார்வையற்ற அருந்ததிய இளைஞர் ராம்பெருமாள், மனரீதியிலும், உடல் ரீதியிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.

ஆகவே, அருந்ததிய இளை ஞரை சாதியை சொல்லி செருப்பால் தாக்கியும், அவரது குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கியும் வைத் துள்ள ஆதிக்க சாதியினர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தேனி மாவட்ட அமைப்புக்குழு உறுப்பினர் ஆர்.காரல் மார்க்ஸ், மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டார்.

காணி இன மக்களுக்கு அரசு திட்ட உதவி அமலாகவில்லை

குமரி மாவட்டம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் களியல் பேரூர் சிறப்புக்கூட் டம் பேரூராட்சிக்குழு உறுப்பினர் ராஜினி தலைமையில் நடைபெற்றது. களியல் வட்டாரச் செயலாளர் ராகவன், மாவட்டத் தலைவர் தங்கப்பன், நாகப்பன் நாயர் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்டச் செயலாளர் மலைவிளைபாசி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.

களியல் பேரூர் கிளைத் தலைவராக ராஜினி, துணைத் தலைவராக இருதயதாஸ், செயலாளராக ஒமனா, துணைச் செயலாளராக வேலப்பன் காணி, பொருளாளராக நாகப்பன் நாயர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

களியக்காவிளை பேரூராட்சிக்கு உட்பட்ட மலையோரப் பகுதி தலைக்குமலை, சிற்றாறு - சிலோன் காலனி, மல்லமுத்தன்கரை கோதயாறு பகுதிகளில் வசிக்கும் காணி இன ஆதிவாசி மக்களுக்கு சமூக நலத்திட்டங்கள் ஒன்றும் இதுவரை அமலாக்கவில்லை; விவசாயத் தொழிலாளர் சமூக பாதுகாப்பு அட்டை களி யல் கிராம அலுவலகம் வாயிலாக விநியோகம் செய்யப்பட்டாலும், சலுகைகள் வழங்கப்படவில்லை; ஆகவே, இந்த திட்டங்களை உடனடியாக அமல்படுத்துவதுடன், சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் அரசை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்திற்கு மலைப் பகுதிகளிலிருந்து ஏராளமான ஆதிவாசிகள் உள்ளிட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

வாலாஜாபேட்டை குறவன் மக்களின் 50 ஆண்டு கால போராட்டம் வெற்றி

வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டை நகரில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் குறவன் இன மக்களின் குழந்தைகள் மேற்படிப்பிற்கு செல்லும் வகையில், சாதிச்சான்று வழங்காமல் நீண்ட காலம் புறக்கணிக்கப்பட்டு வந்தனர். பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், குறவன் இன மக்கள், குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கம் துவங்கி, கடந்த 2009- ஜூன் மாதம் அரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.டில்லிபாபு எம்எல்ஏ தலைமையில் கோரிக்கை மனுவை வட்டாட்சியரிடம் அளித்தனர். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலும் போராட்டம் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து, குறவன் இன மக்களுக்கு, குறவன் சாதிச்சான்றிதழ் வழங்கப்பட்டது.

பாராட்டு விழா
இந்நிலையில், குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் முதலாமாண்டு விழாவும், குறவன் இன மக்களின் வாழ்வுரிமைக்காக தொடர்ந்து போராடி வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பாராட்டு விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

வாலாஜா கடப்பாரங்கையன் தெருவில் நடந்த விழாவிற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி.பெருமாள் தலைமை தாங்கினார். நகர நிர்வாகிகள் எஸ்.ஜூட்டன் (தலைவர்), எம்.கணபதி (செயலர்), ஆர்.சுந்தரமூர்த்தி (பொருளாளர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம், எம்எல்ஏக்கள் ஜி.லதா, பி.டில்லிபாபு, சங்கத்தின் மாநில அமைப்பாளர் ஏ.வி.சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.நாராயணன், சிஐடியு மாவட்டச் செயலாளர் என்.காசிநாதன், எஸ்.ஆனந்தன் (காஞ்சிபுரம்), பி.வீரபத்ரன் (குறுமன்ஸ் சங்கம்), ஜி.ஆர்.பிரகாஷ் (கொண்டாரெட்டி மக்கள் சங்கம்), ஏ.பரமசிவம் (அக்காஸ்ட்), என்.ஜோதி (சிபிஎம்), நிலவு குப்புசாமி (வி.ச.), ஏ.ரேணு (வி.தொ.ச.), தா. வெங்கடேசன் (சிபிஎம்), பத்மாமணி (மாதர் சங்கம்) உள்ளிட்டோர் பேசினர்.

ஒன்றுபட்டு போராடினால்தான் ஆதிக்க சக்திகள் மற்றும் ஆட்சியாளர்க ளிடமிருந்து உரிமைகளை வென்றெடுக்க முடியும்; அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இறுதிவரை துணையாக இருக்கும் என்று விழாவில் பேசிய தலைவர்கள் குறிப்பிட்டனர்.

மழையால் பாதிக்கப்பட்ட ஆதிவாசி மக்கள்

கோத்தகிரி கெந்தோனை ஆதிவாசி கிராமத்தில், மலைப் பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்பட்டு வந்தது. இந்த நிலையில் சமீபத் தில் நீலகிரியில் பெய்த கனமழையால் இந்த வீடுகள் சேதம் அடைந்தன.

இந்நிலையில் இந்த வீடுகளை உடனடியாக சீரமைத்து கட்டி ஆதிவாசி மக்களுக்கு வழங்க வேண்

டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வாலிபர் சங்கத்தினர், கோத்தகிரி மார்க்

கெட் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோத்தகிரி பகுதி வாலிபர் சங்க செயலாளர் மகேஷ் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ரஞ்சித்குமார் போராட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார். ஜே.ஆல்தொரை, குருமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் போராட்டத்தை ஆதரித்துப் பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோத்தகிரி பகுதி செயலாளர் தர்மராஜ், மாரியப்பன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதிவாசி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். (ஜனவரி 5, 2010 வெளியான செய்தி)

தலித் இளைஞர்கள் மீது கொலைவெறி தாக்குதல் : தாக்கப்பட்டவர்கள் மீதே பொய்வழக்கு போட்ட பட்டுக்கோட்டை காவல்துறை

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது, மதுரபாஷானியபுரம் கிராமம். இங்கு தலித் பகுதியில், 31.12.2009 நள்ளிரவு 12 மணியளவில் தலித் இளைஞர்களான அ.ராஜேஷ், பொ.மோகன் ஆகியோர் அமர்ந்து இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த, ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திலுள்ள காடந்தங் குடி கிராமத்தைச் சேர்ந்த- ஆதிக்க சாதியைச் சேர்ந்த ந.ஜவஹர், வேதமுத்து, குகன் ஆகிய மூவரும், “என் னங்கடா, எழுந்திரிக்காமல் உட்கார்ந்திருக்கிறீர்கள்” என்று கூறி, சாதியை சொல்லி இழிவாகப் பேசியதுடன், ராஜேஷ், மோகன் ஆகிய இருவரையும் விரட்டி விரட்டி அரிவாளால் வெட்டியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த ராஜேஷ், மோகன் ஆகியோர் பட்டுக்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சம்பவம் குறித்து போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், பட்டுக்கோட்டை பொறுப்பு டி.எஸ்.பி. மருத்துவமனைக்கு சென்று தலித் இளைஞர்கள் ராஜேஷையும், மோகனையும், புகாரை திரும்பப் பெறுமாறு சொன்னதுடன், இல்லையேல் உங்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்வேன் என்றும் மிரட்டியுள்ளார். அத்துடன், ஆதிக்க சாதியினர் மீதான புகாரை பதிவு செய்யாமல் காலம் கடத்தியுள்ளார்.

இதுபற்றி ஜனவரி 2-ம் தேதி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை சந்தித்து முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதன் பிறகும் கூட நடவடிக்கை இல்லை. மாறாக தாக்குதலுக்குள்ளான ராஜேஷ், மோகன் ஆகியோர் மீதே 307 மற்றும் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, தலித் இளைஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஜவகர், வேதமுத்து, குகன் ஆகியோரை, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்யாததுடன், மாறாக அவர்கள் மீதே வழக்கு போட்ட காவல்துறையின் இந்த நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் தனது அறிக்கையில் கண்டித்தார்.

தலித் இளைஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய சாதி ஆதிக்க வெறியர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்; பாதிக்கப்பட்டவர்கள் மீதே பொய் வழக்கு போட்ட பட்டுக்கோட்டை டி.எஸ்.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதே போல தலித் இளைஞர்கள் தாக்கப்பட்டதற்கு தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் சின்னை.பாண்டியனும், கண்டனம் தெரிவித்தார்.

பட்டுக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ராஜேஷ், மோகன் ஆகியோரை, சின்னை.பாண்டியன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.பக்கிரிசாமி, ஒன்றியச் செயலாளர் எஸ்.சாம்பசிவம் ஆகியோர் மருத்துவமனையில் நேரில் பார்த்து ஆறுதல் கூறினர். அதன்பிறகு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்வேலனிடம் சம்பவத்தை நேரில் விளக்கி மனுவும் அளித்தனர்.

தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக தொடர் போராட்டம் : திருப்பூர் கூட்டத்தில் முடிவு

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்புக்குழு கூட்டம் 2.1.2010 சனிக்கிழமையன்று திருப்பூரில் கு.ஜக்கையன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆதித்தமிழர் சனநாயகப் பேரவை, ஆதித்தமிழர் பேரவை, புரட்சிப் புலிகள், அருந்தமிழர் விடுதலை இயக்கம், தமிழ்நாடு அருந்ததியர் ஜனநாயக முன்னணி, களம் ஆகிய தலித் அமைப்புகள், தீண்டாமை ஒழிப்பு முன்னணியில் உள்ள சிஐடியு, தமுஎகச, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் மற்றும் மத்தியதர அரங்கங்கள் ஆகியவற்றின் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் துவக்கி வைத்து உரையாற்றினார். மாநில அமைப்பாளர் பி.சம்பத் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் போராட்டங்களையும், தலையீடுகளையும் விளக்கினார். கே.சாமுவேல்ராஜ் தீர்மானங்களை முன்மொழிந்தார். எஸ்.கே.மகேந்திரன் எம்.எல்.ஏ நிறைவுரையாற்றினார்.

இக்கூட்டத்தில் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

அருந்ததியர் உள்ஒதுக்கீடு
அருந்ததியர் மக்களின் 3 சதவீத உள்ஒதுக்கீடு கல்வித்துறையில் மட்டும் அமலாகிறது. தமிழக அரசின் வேலைவாய்ப்பை பொறுத்தவரை இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர், மின்வாரியப் பணி ஆகியவற்றில் உள்ஒதுக்கீடு அமலாகவில்லை. வேலைவாய்ப்பு அலுவலகங்களில் சில மாவட்டங்களில் உள் ஒதுக்கீடு அடிப்படையில் பதிவு செய்ய மறுப்பதையும், பல மாவட்டங்களில் அருந்ததியர் என சான்றிதழ் தர மறுப்பதையும் கண்டித்தும், தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியும் கோவை, திருப்பூர், நாமக்கல், விருதுநகர், திண்டுக்கல், நெல்லை, தருமபுரி ஆகிய 7 மையங்களில் வேலை வாய்ப்பு அலுவலகம் முன்பும், ஈரோட்டில் மின்வாரிய தலைமைப் பொறியாளர் அலுவலகம் முன்பும் பிப்ரவரி 15-ஆம் தேதியன்று ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பஞ்சமி நிலமீட்பு போராட்டம்
தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலம் சட்ட விரோதமான நிலப்பதிவுகள் மூலம் அபகரிக்கப்பட்டுள்ளது. எனவே பஞ்சமி நிலத்தை மீட்டு தலித் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் தலித் மக்கள் உட்பட விவசாயத் தொழிலாளர்களுக்கு உடன டியாக 2 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும் எனவும் கோரி பிப்ரவரி 20 அன்று செங்கல்பட்டில் நில மீட்பு மாநாடு நடைபெறும்.

விழுப்புரத்தில் வாழ்வுரிமை மாநாடு
தலித் கிறிஸ்தவர்களை பட்டியல் இனத்தவர் என அறிவிக்க வேண்டும் என்கிற நீதிபதி ரங்கநாத் மிஸ்ராவின் பரிந்துரைகளை அமலாக்கிட வேண்டும் எனக் கோரி ஜனவரி 25- திருச்சியில் பெருந்திரள் கண்டன இயக்கமும், மார்ச் 20- விழுப்புரத்தில் தலித் கிறிஸ்தவர்கள் வாழ்வுரிமை மாநாடும் நடைபெறும்.

சென்னையில் கருத்தரங்கம்
தமிழகத்தில் தலித் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீட்டை 18 சதவீதத்தில் இருந்து 19 சதவீதமாக உயர்த்திடக் கோரியும், பின்னடைவுப் பணியிடங்கள், காலியிடங்களை நிரப்பிடக் கோரியும் பிப்ரவரியில் சென்னையில் சிறப்புக் கருத்தரங்கம் நடை பெறும்.

மதுரையில் பேரணி
தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட தொகுப்பு வீடுகளை மராமத்து செய்திடக் கோரியும், அவர்களின் வாழ்விடங்களில் குடிநீர், சுகாதாரம், மருத்துவம், சாலை, கழிப்பிடம், பொது விநியோகம் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரியும் மார்ச் மாதத்தில் மதுரையில் பேரணி நடைபெறும்.

ஒண்டிவீரனுக்கு நினைவுச் சின்னம்
விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரனுக்கு மணிமண்டபமும், சிலையும் அமைத்திடக்கோரி மார்ச் மாதத்தில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

விளக்கப் பிரச்சாரம்
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை உறுதியான முறையில் அமலாக்கிடக் கோரியும், வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சரத்துக்களை மக்கள் மத்தியில் பிரச் சாரம் செய்திடவும் சிறு பிரசுரம் வெளியிடுவது என்றும், அதை ஜன வரி இறுதி வாரத்தில் மக்களிடம் கொண்டு செல்வது எனவும் தீர்மா னிக்கப்பட்டது.

தலித் மக்களின் மேம்பாட்டிற்காக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இன்சூரன்ஸ் தொழிற்சங்க அமைப்பும் இணைந்து கோவையில் டாக்டர் அம்பேத்கார் கல்வி - வேலைவாய்ப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் பல்வேறு தொழிற்சங்க அமைப்புகளின் உதவியோடு சென்னை, திருப்பூர், ஈரோடு, விருதுநகர், நெல்லை ஆகிய மாவட்டங்களில் மார்ச் இறுதிக்குள் அமைப்பது.

சட்ட உதவி மையம்
தலித் மக்களின் சட்ட ரீதியான உரிமைகளைப் பாதுகாத்திடவும், அதற்காக போராடவும் சென்னை, மதுரையில் சட்ட உதவி மையம் அமைப்பது.

காவல்துறைக்கு கண்டனம்
காங்கியனூரில் ஆலய நுழைவு உரிமை கேட்டு போராடிய மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணித் தலைவர்கள் மீதும், தலித் மக்கள் மீதும் கடுமையான தடியடி நடத்தி பொய் வழக்கு தொடுத்துள்ள மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும், பொய் வழக்குகளை வாபஸ் பெறவும் வேண்டும்; ஆதம்பாக்கம் திருவள்ளூர் நடுநிலைப்பள்ளியை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்; ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளுக்கு கூடுதல் மானியம் வழங்கிட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தலித் மக்களின் கோயில்களை அபகரிக்க முயற்சி

அறந்தாங்கி ஒன்றியத்திலுள்ள ஆயிங்குடி - வல்லவாரியில் மொத்தம் 9 கோயில்கள் உள்ளன. இதில் 7 கோயில்களை ஆதிக்க சக்திகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். மீதமுள்ள ஸ்ரீஅய்யனார் கோயில், ஸ்ரீகருத்தப்பெரியான் மற்றும் பரிவார தேவதைகள் அடங்கிய 2 கோயில்கள், பரம்பரை பரம் பரையாக அவ்வூரில் உள்ள தலித்துகளால் நிர்வகிக்கப்பட்டு வருவதாகும். இவை தவிர மற்ற 7 கோயில் களிலும் தலித்துகளுக்கு இதுநாள்வரை ஆலயத்திற்குள் நுழைந்து வழிபடும் உரிமை மறுக்கப்பட்டே வந்துள்ளது.

தலித்துகள் வசமுள்ள இரண்டு கோயில்களில், நிர்வாகம், பூசாரி, சாமியாடிகள் அனைத்திலும் தலித்துகளே இருந்து வருகின்றனர். இவ்விரண்டு கோயில்களும் சக்திவாய்ந்த தெய்வங்களாக அப்பகுதி மக்களால் கருதப்படுவதால் பக்தர்களின் வருகையும், காணிக்கைகளும் கணிசமான அளவில் கூடிக் கொண்டே வந்துள்ளது. குறிப்பாக மற்ற சாதி மக்களும் இக்கோயில்களுக்கு வருகை புரிந்து தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.

இது அப்பகுதி சாதி இந்துக்களின் கண்களை உறுத்த ஆரம்பிக்கவே, திடீரென ஒரு நாள் ஆதிக்க சக்தியைச் சேர்ந்த சிலர் கோயிலுக்குள் அத்துமீறி நுழைந்து, பூஜை வேலைகளைச் செய்ய ஆரம்பித் துள்ளனர். பல்வேறு பகுதிகளிலிருந்து நேர்த்திக்கடனாக கொண்டு வரப்பட்ட 18 கிடாய்களில் 15 கிடாய் களை அபகரித்து கொண்டும் சென்றுள்ளனர். தற்போது தலித்துகளின் கோயில்களை பூட்டி சாவிகளையும் ஆதிக்க சாதியினர் தங்கள் கைவசம் வைத்துக் கொண்டு, தலித்துகளை தடுத்து வருகின்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த தலித் மக்கள் கோட்டாட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை 21.12.2009 அன்று சந்தித்து, நாங்கள் நிர்வகித்து வந்த எங்கள் பரம்பரைக் கோவிலை எங்களுக்கு மீட்டுத்தர வேண்டும் என மனுக்கொடுத்து முறையிட்டுள்ளனர். மனுக் கொடுத்ததை அறிந்த ஆதிக்க சாதியினர் தலித்துகளான பெரியய்யா மகன் சுப்பிரமணியன்(60), பெரியண்ணன் மகன் கருப்பையா(47) ஆகிய இருவரையும் மறித்து தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியபடி செருப்பால் அடித்துள்ளனர்.

இதுதொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றாலும், அதிகாரிகளும், காவல்துறையினரும் கட்டப்பஞ்சாயத்து செய்வதிலேயே குறியாக இருந்தனர். மிகவும் வறிய நிலையில் இருக்கும் தலித்துகளை சாதி ஆதிக்கத்துடனும் பணபலத்துடனும் இருக்கும் ஆதிக்க சாதியினர் வசிக்கும் பகுதியில் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் தரப்பிலிருந்தே அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்நிலையில், மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் இந்த விசயத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும்; செருப்பால் அடித்து துன்புறுத்தியவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத் தின்கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்; தலித்துகள் வசமிருந்த கோயில்களின் நிர்வாகம், பூசாரி, சாமியாடி உரிமைகளை அவர்களே தடை யின்றித் தொடர உத்தரவாதமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்; அவர்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பளிக்க வேண்டும் மீதமுள்ள 7 கோயில்களிலும் ஆலயத்திற்குள் நுழைந்து வழிபடும் உரிமையை தலித்துகளுக்கும் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துவதாக கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எம்.சின்னத்துரை அறிக்கையில் வலியுறுத்தினார்.