திங்கள், 18 ஜனவரி, 2010

கண்பார்வையற்ற அருந்ததிய இளைஞர் மீது தாக்குதல் - குடும்பத்தையும் ஊரைவிட்டு ஒதுக்கிய சாதி வெறியர்கள்

தேனி மாவட்டம், காட்டுநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர்- அருந்ததிய இளைஞர் ராம்பெருமாள். இருகண்களிலும் பார்வை யை இழந்தவர். இவர், கடந்த 22.12.2009 அன்று மாலை 5.45 மணியளவில், காட்டு நாயக்கன்பட்டி பயணிகள் நிழற்குடையில் உட்கார்ந்து இருந்த போது, அங்குவந்த ஆதிக்க சாதியைச் சேர்ந்த செல்லத்துரை, சுருளி, சுருளியப்பன், கண்ணன் ஆகியோர் “சக்கிலிய நாயே நீ சமமாக உட்காருவதா” என்று சொல்லி செருப்பு களால் கொடூரமான முறையில் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த ராம்பெருமாள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இதனிடையே, ராம்பெருமாளையும் அவரது குடும்பத்தையும் ஊரை விட்டும் ஒதுக்கி வைத்து கொடுமை புரிந்துள்ளனர்.

தினசரி கூலி வேலை செய்தால்தான் குடும்பத்தை நடத்த முடியும் என்ற நிலையில், இவரின் குடும்பத்தி னரை யாரும் வேலைக்கு கூப்பிடாமல் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். தான் தாக்கப்பட்டதுடன், தனது குடும்பம் ஊரை விட்டும் ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பதை நினைத்து, கண்பார்வையற்ற அருந்ததிய இளைஞர் ராம்பெருமாள், மனரீதியிலும், உடல் ரீதியிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.

ஆகவே, அருந்ததிய இளை ஞரை சாதியை சொல்லி செருப்பால் தாக்கியும், அவரது குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கியும் வைத் துள்ள ஆதிக்க சாதியினர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தேனி மாவட்ட அமைப்புக்குழு உறுப்பினர் ஆர்.காரல் மார்க்ஸ், மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டார்.