செவ்வாய், 15 டிசம்பர், 2009

மார்க்சிஸ்ட் கட்சிக்கு பாராட்டு விழா - அருந்ததியர் இயக்கங்கள் முடிவு

அருந்ததியர் உள்ஒதுக்கீடு கிடைப்பதற்கு உற்ற துணைவனாக உடனிருந்து உறுதியாகப் போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோவையில் ஜனவரி 24ம் தேதி பாராட்டு விழா நடத்துவதென அனைத்து அருந்ததியர் இயக்கங்களின் கூட்டுக் கூட்டம் முடிவு செய்தது.

திருப்பூரில் புதன்கிழமை (9.12.09) அருந்ததியர் இயக்கங்களின் கூட்டுக் கூட்டம் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் அருந்தமிழர் விடுதலை இயக்கம் சார்பில் கு.ஜக்கையன், வி.குமார், கவுதம சக்திவேல், பி.முருகேசன், டி.நாகராஜ், கோவை சூர்யா, கோவை ஜெயராமன், ஏ.அருண், ப.சுந்தரம், இளவேனில், வெ.பொ.நாவ ளவன், ஆதித்தமிழர் பேரவை சார்பில் நீலவேந்தன், தமிழ்வேந்தன், நாகராஜ், கருப்பசாமி, ஆதித் தமிழர் சனநாயகப் பேரவை சார்பில் அ.சு.பவுத்தன், அருந்ததியர் மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் விழுதுகள் ஆர்.நாதன், அருந்ததியர் விடுதலை முன்னணி சார்பில் என்.டி.ஆர்., ஆதித்தமிழர் விடுதலை முன்னணி சார்பில் கோவை ரவிக்குமார், சோ.ப.மதன்குமார், தந்தை பெரியார் டாக்டர் அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் கா.பத்ரன், பி.ரவி, கே.மூர்த்தி, ஜி.குமாரவேல், தலித் விடுதலைக் கட்சி சார்பில் இரா.மூர்த்தி, மு.சுந்தரம், ஆறுச்சாமி, வீர அருந்ததியர் பேரவை சார்பில் அர.விடுதலைச் செல்வன், ஓ. ரங்கசாமி, என்.முருகன், தீண்டாமை ஒழிப்பு முன் னணி சார்பில் பி.ராமமூர்த்தி, செ.முத்துக்கண்ணன் (திருப்பூர்), யு.கே.சிவஞானம், கணேஷ் (கோவை), ஆர்.பத்ரி, ஆர்.சதாசிவம் (நீலகிரி), பி.வெங்கடேசன் (தர்மபுரி), ந.வேலுசாமி, சி.துரைசாமி (நாமக்கல்), பி.பி.பழனிசாமி, கருப்பசாமி (ஈரோடு) உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் அருந்ததியர் மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 3 சதவிகிதம் உள் ஒதுக்கீடு கிடைப்பதற்காக அருந்ததியர் அமைப்புகளோடு உற்ற துணைவனாக உறுதியாகப் போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அருந்ததியர் மக்கள் அமைப்புகளின் ஒற்றுமையை வலுப்படுத்தி மேலும் முன்னெடுத்துச் செல்வதென தீர்மானிக்கப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோவையில் வரும் ஜனவரி 24-ம் தேதி பாராட்டு விழா நடத்துவது என்றும், இந்த விழாவிற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத், கோவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ஆகியோரை அழைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இந்த விழாவுக்கு மாநிலம் முழுவதுமிருந்து பல்லாயிரக்கணக்கான அருந்ததியர் மக்களை அணி திரட்டி வருவது, அதற்காக ஜனவரி 17-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை ஒரு வார காலத்துக்கு அருந்ததியர் குடியிருப்புப் பகுதிகளில் ஊர்க் கூட்டங்கள் மற்றும் தெருமுனைப் பிரச்சாரம் நடத்துவது, இந்த விழா பற்றி சுவர் விளம்பரங்கள், தட்டி பலகைகள் மூலம் பரவலாக விளம்பரம் செய் வது, துண்டறிக்கைகள் வெளியிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

நிறைவாக பேசிய தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத், ஒன்றுபட்ட போராட்டம் காரணமாகவே அருந்ததிய மக்களுக்கு உள்ஒதுக்கீடு கிடைத்துள்ளது. இது முறையாக அமலாவதற்கான போராட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டியுள்ளது. நிலம், குடிமனைப்பட்டா போன்ற கோரிக்கைகளுக்காக தொடர்ந்து இணைந்து போராடுவோம் என்றார்.