புதன், 5 மே, 2010

சுக்கிலநத்தம் அம்பேத்கர் காலனிக்கு அடிப்படை வசதி செய்க! அரசுக்கு உத்தரவு

அருப்புக்கோட்டை சுக்கில நத்தம் ஊராட்சி அம்பேத்கர் காலனிக்கு அடிப்படை வசதிகளை உடனடியாக செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ளது சுக்கிலநத்தம் கிராமம். இங்கு 1997ம் ஆண்டு 17 தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட் டன. அம்பேத்கர் காலனி என பெயரிடப்பட்ட இக்குடியிருப்பு பகுதிக்கு அரசின் இலவச டிவி, கேஸ் அடுப்புகள் உள்ளிட்ட அரசின் உதவிகள் வழங் கப்பட்டு வந்தது. ஊராட்சி மன்றத் தலைவராக ராமநாதன் என்பவர் உள்ளார். இந்நிலையில் 2007ம் ஆண்டு ஊராட்சியில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்தத் தீர்மானத்தில், அம்பேத்கர் காலனியை சுக்கில நத்தத்தில் இருந்து நீக்கிவிடுவது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தீர்மானம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஊராட்சியின் இந்த தீர்மானத்தை கண்டித்தும், தீர்மானத்தை வாபஸ் பெற வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகியவை பல்வேறு போராட்டங்களை நடத்தின. இது குறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் மனுக்களும் அளிக்கப்பட்டன.

ஏப்ரல் 14ம் தேதி அருப்புக்கோட்டையில் நடைபெற்ற பொதுவிசாரணையில் பங்கேற்றவர்கள், இப்பிரச்சனை குறித்து நீதிமன்றத்தை அணுகலாம் என சுட்டிக்காட்டினர்.இதையடுத்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் விருதுநகர் மாவட்ட அமைப்பாளர் சாமுவேல்ராஜ், அம்பேத்கர் காலணி பிரச்சனை குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை வெள்ளியன்று நீதிபதிகள் இப்ராஹிம் கலிபுல்லா, வாசுகி முன்னிலையில் வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் உ.நிர்மலாராணி ஆஜரானார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளனர். அதில் அருப்புக்கோட்டை ஒன்றியம் சுக்கிலநத்தம் கிராம ஊராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் காலனிக்கு கடந்த இரண்டு ஆண்டுகாலமாக நிறுத்தப்பட்டிருந்த குடிநீர் உள்ளிட்ட அரசுத்திட்டங்களை, விருதுநகர் மாவட்ட ஆட்சியர், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர், உதவி இயக்குநர் (பஞ்சாயத்துகள்) உடனடியாக செயல்படுத்த வேண்டுமென கூறியுள்ளனர்.