செவ்வாய், 12 ஜனவரி, 2010

துறையூர் அருகே கொட்டையூரில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அநீதி

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கொட்டையூர் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு டீ கடைகளில் இரட்டை கிளாஸ் முறை பயன்படுத்தப்பட்டு வந்தது. மேலும், செருப்பு அணிந்து செல்வதற்கும், கோயிலுக்குள் நுழைவதற்கும் பல ஆண்டுகளாக அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் வாலிபர் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான இந்த அநீதியை எதிர்த்து 30.12.2009 அன்று கொட்டையூர் கிராமத்தில் ஆலய நுழைவோம் என்றும் இரட்டை டம்ளர் உள்ளிட்ட இழிவை அகற்றுவோம் என்றும் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் செவ்வாயன்று துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் சுமூக தீர்வு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து தாழ்த்தப்பட்ட மக்கள், வாலிபர் சங்கம் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கத்தினருடன் அப்பகுதியில் உள்ள கோயிலுக்குள் சென்று வழிபட்டனர். அதேபோல டீ கடைகளிலும் பொதுக் கிளாசில் டீ குடித்தனர்.

முன்னதாக நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் தாசில்தார் நந்தகுமார், துறையூர் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சித்ரா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலாளர் அண்ணாதுரை, ஒன்றியச் செயலாளர் எம்.காசிராஜன், துறையூர் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எம்.சங்கிலிதுரை, எஸ்.மருதமுத்து, உப்பிலியபுரம் ஒன்றியச் செயலாளர் எஸ்.முத்துசரம், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் வெற்றிச்செல்வன், ஒன்றியச் செயலாளர் எம்.ஆனந்தன், மாவட்டத் தலைவர் எ.சசிகுமார் மற்றும் முத்துகுமார், அசோக், சுரேஷ், அழகுமலை, பாக்கியராஜ், சக்திவேல், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.சந்திரன் உள்பட ஏராளமான கொட்டையூர் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையில் நெறிக்குறவர்கள் ஆர்ப்பாட்டம்குடிமனைப்பட்டா மற்றும் பல்வேறு வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி, திருத்துறைப்பூண்டியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில், நெறிக்குறவர் சமூகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

29.12.2009 செவ்வாயன்று நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகரச் செயலாளர் எம்.பி.கே.பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஐ.வி.நாகராஜன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.தங்கராசு, பி.என்.தங்கராசு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.சுப்பிரமணியன், எஸ்.நவமணி, ஒன்றியச் செயலாளர் ஜோதிபாசு, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் டி.வடிவேல், கே.பி.ஜோதிபாசு, மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் பவானி, வாலிபர் சங்க மாவட்டக்குழு உறுப் பினர் டி.வி.காரல் மார்க்ஸ், நகரக்குழு உறுப்பினர்கள் டி.வி.பன்னீர் செல்வம், கே.பசுபதி, ஆர்.எம்.சுப்பிரமணியன், எஸ்.சாமிநாதன், கே.கோபு, ஜி.முனியப்பன், கே.ஜி.ரகுராமன் (வாலிபர்), கலைச்செல்வி (மாதர்), நகர்மன்ற உறுப்பினர் ஜி.ரேவதி ஆகியோர் ஊர்வலத் தில் பங்கேற்றனர்.

முன்னதாக தோழர் பி.சீனிவாசராவ் நினைவு மண்டபம் அருகிலிருந்து நெறிக்குறவர் சமூகத் தலைவர்கள் கே.நாகூரான், வீரமணி, இராஜேந்திரன், காளிமுத்து ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் கைக்குழந்தைகளுடன் கோரிக்கைகளை முழங்கி ஊர்வலமாக வந்தனர். நீடாமங்கலம் நகரச் செயலாளர் சி.டி.ஜோசப் ஆர்ப்பாட்டத்தை வாழ்த்திப் பேசினார்.

நிறைவாக நகராட்சி ஆணையர் (பொறுப்பு) திருமலைவாசன் கோரிக்கை மனுவை பெற்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.


மாத்தூரில் தலித் மக்கள் ஆலயத்திற்குள் நுழைந்தனர்

நாகை மாவட்டம், செம்பனார் கோவில் ஒன்றியம்- மாத்தூரில் உள்ள மாரியம்மன் கோயிலில் நீண்டகால மாகவே தலித் மக்கள் உள்ளே செல்லவோ, வழிபாடு செய்யவோ உரிமை மறுக்கப்பட்டிருந்தது. இக்கொடுமை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்திய கள ஆய்வின் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து, வாலிபர் சங்கத்தின் தலைமையில், டிசம்பர் 30 அன்று தலித் மக்கள் ஆலயம் நுழைவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தை

இந்நிலையில் 26.12.2009 அன்று மயிலாடுதுறை கோட்டாட்சியர் முன்னிலையில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அடுத்தகட்டமாக 28-ம் தேதி, செம்பனார்கோயில் காவல்நிலையத்தில் கோட்டாட்சியர், காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர், வட்டாட்சியர், மண்டலத் துணை வட்டாட்சியர், வாலிபர் சங்கத் தலைவர்கள், மாத்தூர் தலித் மக்களின் தலைவர்கள், சாதி ஆதிக்க சக்தியினரின் பிரதிநிதிகள், கோயில் நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்ற அமைதிப் பேச்சுவார்த்தை மீண்டும் நடைபெற்றது.

இதில், அன்று மதியமே அரசு - காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் தலித் மக்கள் ஆலயம் நுழைந்து, வழிபாடும் நடத்துவார்கள் என்றும், தலித் மக்களின் வழிபாட்டு உரிமையை எவரும் தடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஒப்பந்தம் ஏற்பட்டது.

ஆலய நுழைவு

அதன்படி மதியம் 2 மணிக்கு மாத்தூர் மாரியம்மன் கோயிலில் ஆர்டிஓ, டிஎஸ்பி மற்றும் அரசு, காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் 75 பெண்கள் உள்பட தலித் மக்கள் 150 பேர் ஆலயத்துக்குள் நுழைந்தனர். அப்போது கோயில் கருவறை, சாதி ஆதிக்க சக்திகளால் பூட்டப்பட்டிருந்தது. அதிகாரிகள் பூட்டை உடைத்துக் கருவறையைத் திறந்து விட்டனர். தலித் மக்கள் அமைதியாகவும், உரிமை பெற்ற வெற்றிப் பூரிப்போடும் வழிபாடு செய்தனர்.
அதன்பின், காலனித் தெருவில் வாலிபர் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் மார்க்ஸ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஜி.ஸ்டாலின், நிர்வாகிகள் பி.ஏ.ஜி.சந்திரசேகரன், கிருஷ்ணமூர்த்தி, கணேசன், சரவணன், கண்ணன் ஆகியோர் உரையாற்றினர்.

தலித் தெருவுக்கு வராத தேர் : திமுக பிரமுகரைக் கண்டித்து மறியல்

மதுரை- மேலூர் சாலையில் உள்ள உத்தங்குடி அய்யப்பன் கோயில் மண்டல பூஜை சனிக்கிழமையன்று (26.12.09) நடைபெற்றது. இந்த பூஜையையொட்டி அனைத்துத் தெருக்களிலும் கோயில் தேர் உலா வந்தது. ஆனால் தலித் மக்கள் வசிக்கும் தெருவிற்குள் மட்டும் தேர் வரவில்லை.

இதனிடையே, கோயில் அலங்காரக் குடையைத் தலித் இளைஞர்கள் கையால் தொட்டார்கள் என்பதற் காக, தலித் மக்கள் தாக்கப்பட்டனர். இதில் தலித் கர்ப்பிணிப் பெண் லட்சுமி, வினோத்குமார், பி.கண்ணன், பிரதாப் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

உத்தங்குடி ஊராட்சித் தலைவரான தனலட்சுமியின் கணவரும், துணைத் தலைவர் ரவிச்சந்திரன், கவுன்சிலர் மணிமாறன், அம்பிகாபதி ஆகியோரும் இத்தாக்குதலில் ஈடுபட்டதாக தலித் மக்கள் குற்றம் சாட்டினர்.

இத்தாக்குதல் சம்பவத்தால் உத்தங்குடியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். காவல்துறையிடம் தலித் மக்கள் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. ஆனாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்திய திமுக ஊராட்சித் துணைத் தலைவர் ரவிச்சந்திரன் உள் ளிட்டோரை கைது செய்ய வலியுறுத்தி உத்தங்குடியில் தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிறன்று மறியல் போராட்டம் நடை பெற்றது.

விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் மாநில நிர்வாகி செல்லப்பாண்டியன், தமிழர் தேசியப்பேரவை துணைத்தலைவர் ஆறுமுகம், உழவர் இயக்க மாவட்டத்தலைவர் மலைச்சாமி உள்ளிட்ட ஏராளமானோர் மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் அளித்த உறுதிமொழியின் பேரில் மறியல் கைவிடப்பட்டது.

தாக்குதலுக்குள்ளான கர்ப்பிணி பெண் லட்சுமி, வினோத்குமார், பி.கண்ணன், பிரதாப் ஆகியோர் அரசு ராஜாஜி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்ததும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் எம்.தங்கராஜ் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று விவரங்களை கேட்டறிந்தனர். போராட்டத்துக்கு துணை நிற்பதாக உறுதி கூறினர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் தலித் மக்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை வாபஸ் வாங்கவேண்டும் என வலியுறுத்தினர்.

சாதி, மத வேறுபாட்டுக்கு சந்தனம் பூசுவது யாராயினும் அவர்களை சட்டம் அனுமதிக்காது என கடந்த மூன்று நாட்களுக்கு முன்புதான் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதி அறிக்கை விட்டார். ஆனால், அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்களே மதுரையில் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பதும், தலித்துக்களின் புகார் மீது வழக்கு பதிவு செய்யக்கூட காவல்துறை மறுக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மயிலாடுதுறையில் இரத்ததானம்

வெண்மணி தியாகிகள் தினத்தை முன்னிட்டு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இரத்ததான கழகம் சார்பில் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் 25 யூனிட் இரத்ததானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு சங்கத்தின் நகரத் தலைவர் டி.கே.ஆர்.கதிரவன் தலைமை தாங்கினார். நகரச் செயலாளர் ஏ.பிரகாஷ் வரவேற்றார். நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளர் சி.மேகநாதன், ஒன்றியத் தலைவர் எம்.இளைய ராஜா, ஒன்றியப் பொருளாளர் ஜி.வைரவன், துணைச் செயலாளர் எஸ்.ஜெயராஜ், துணைத் தலைவர் டி.அலெக்சாண்டர், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சதீஸ், சி.ராஜா, எஸ்.ஆம்ஸ்ட்ராங் மற்றும் இளம்பெண்கள் மாவட்ட கன்வீனர் எம்.சிவரஞ்சனி, இரத்ததானக் கழக நிர்வாகிகள் பா.குமரவேல், ஏ.சரவணன், பொருளாளர் எம்.கார்த்தி, செயற்குழு உறுப்பினர் சி.ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜ்குமா, நகர்மன்றத் துணைத்தலைவர் தம்பி சத்தியேந்திரன் ஆகியோர், இரத்ததானம் செய்த கொடையாளர்களுக்கு அரசின் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினர். சங்கத்திற்கு கேடயமும் வழங்கப்பட்டது. அரசு மருத்துவமனை தலைமை அதிகாரி கே.சந்திரசேகரன், இரத்த வங்கி அதிகாரி ஆர்.மகேந்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இரத்த தான கழகத்தின் செயலாளர் ஏ.ஆர்.விஜய் நன்றி கூறினார்.