திங்கள், 15 பிப்ரவரி, 2010

கோவையில் தகர்ந்தது தீண்டாமைச் சுவர்

கோவை வரதராஜபுரம் ஜீவா வீதியில் கடந்த 22 ஆண்டுகளாக இருந்து வந்த தீண்டாமைச்சுவர் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முயற்சியால் தகர்க்கப்பட்டுள்ளது.

ஆனாலும் கடவுளின் பெயரால் இந்து மக்கள் கட்சியினர் பொதுச்சாலையின் நடுவில் அருந்ததியர் பகுதிக்கு செல்வதை தடுப்பதற்காக மாட்டுத் தொழுவத்தில் வைத்திருந்த பிள்ளையார் சிலை அகற்றப்படவில்லை. இதனால், சுவர் தகர்க்கப்பட்டாலும், அருந்ததியர் மக்களுக்கு முழுமையாக வழி கிடைக்கவில்லை.

கோயம்புத்தூர் வரதராஜபுரம் காமராஜர் ரோட்டில் உள்ளது ஜீவா வீதி. இந்த வீதியின் கடைசி பகுதியான தந்தை பெரியார் நகரில் அருந்ததியர் மக்கள் வசித்து வருகின்றனர். 1989-ம் ஆண்டு அருந்ததியர் மக்களுக்கு தமிழக அரசு ஆதிதிராவிட நலத்துறையின் மூலம் அதிகாரபூர்வமாக குடியிருக்கும் இடத்திற்கு வீட்டுமனை பட்டா வழங்கியது. இதனால் ஆத்திரமுற்ற ஆதிக்க சாதியினர் அருந்ததியர்கள் தந்தை பெரியார் நகருக்குள் செல்ல முடியாத வகையில் ஜீவா வீதியில் பொதுச்சாலையை மறித்து குறுக்குச்சுவர் கட்டி தடுத்துள்ளனர். இதேபோன்று ஜீவா வீதிக்கு அடுத்து உள்ள நேதாஜி வீதியின் வழியாகவும் அருந்ததியர்கள் செல்ல முடியாத வகையில் தடுப்புச்சுவர் கட்டி வழியை மறித்துள்ளனர். இதனால் எந்த பகுதி வழியாகவும் தங்கள் இடத்திற்கு செல்ல முடியாமல் இருந்து வந்த அருந்ததியர்கள் 1989-ம் ஆண்டே நேதாஜி வீதியில் இருந்த தடுப்பு சுவரை இடித்து தள்ளியுள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டு ஏராளமான அருந்ததியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த வழக்கில் அருந்ததியர்கள் சில தினங்களுக்கு முன்புதான் விடுதலையாகியுள்ளனர்.

இந்நிலையில் ஜீவா வீதியில் கடந்த 22 வருடங்களாக இருந்து வந்த தீண்டாமைச் சுவரை இடித்து, அருந்ததியர்களுக்கு வழி விட வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதுதொடர்பான செய்தி சனிக் கிழமை (ஜன.30) தீக்கதிர் நாளேட்டில் வெளியானது.

சுவர் இடிப்பு
அதைத்தொடர்ந்து, சனிக்கிழமையன்று காலை 9 மணியளவில் மாநகராட்சி அதிகாரிகள், சுவர் அமைந்துள்ள இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். அப்போது அது முழுக்க அருந்ததியர்கள் செல்லக் கூடாது என்பதற்காக கட்டப்பட்ட தீண்டாமைச் சுவர் என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் டாக்டர் பு.உமாநாத் மற்றும் மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா ஆகியோரின் உத்தரவின் அடிப்படையில் தீண்டாமைச் சுவரை இடிக்க ஜெசிபி வாகனம் வரவழைக்கப்பட்டது. இதனால் ஆத்திரமுற்ற சாதி ஆதிக்க வெறியர்கள், சுவரை இடிக்க விடாமல் வாகனத்தை மறித்து நின்றனர்.

இதையடுத்து அருந்ததியர் பகுதியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் யு.கே.சிவஞானம், ரவிக்குமார், பெருமாள், வெண்மணி, கணேஷ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் சிங்காநல்லூர் நகரச் செயலாளர் மனோகரன், மாவட்டச் செயற்குழு உறுப் பினர் நெல்சன்பாபு, மாவட்டக் குழு உறுப்பினர் தெய்வேந்திரன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் அ.ர.பாபு உள்ளிட்ட ஏராளமானோர் திரண்டனர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு நிலவியது. இதையடுத்து ஏராளமான காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர்.

ஆதிக்க சக்தியினரின் எதிர்ப்பை மீறி மாநகராட்சி அதிகாரிகள் தீண்டாமைச் சுவரை இடித்து தள்ளினர். தெற்கு வட்டாட்சியர் சுப்பிரமணியம் தலைமையில் மாநகராட்சி உதவி ஆணையர் (கிழக்கு) லோகநாதன், நகர்புற திட்ட அலுவலர் சவுந்தரராஜ், உதவி நகர்ப்புற திட்ட அலுவலர்கள் ரவிச்சந்திரன், புவனேஸ்வரி, ஆய்வாளர் பொன்ராஜ், இளநிலைபொறியாளர் கலாவதி, காவல்துறை ஆய்வாளர் கௌதம் உள்ளிட்ட அதிகாரிகள் மேற்பார்வையில் இடிப்பு பணி நடைபெற்றது.

திருப்பிவிடப்படும் தலித் நல நிதி

தலித் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்படும் நிதி எப்படியெல்லாம் திருப்பி விடப்படுகிறது அல்லது பயன்படுத்தப்படாமலேயே போகிறது என்பது பற்றியெல்லாம் ஏராளமான செய்திகள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் வாசிக்கும்போது மேசையைத் தட்டும் ஒலியில் பல விஷயங்கள் அமுங்கிப் போகின்றன. சமத்துவபுரங்கள் அமைப்பதற்கு தலித்துகளின் நல நிதியில் கணிசமான தொகைக்கு வெட்டு விழுகிறது. தாட்கோ நிதி இதற்கு திருப்பி விடப்படுகிறது.

துணை முதல்வரான பிறகு புதிய சமத்துவபுரங்களை உருவாக்குவதில் ஸ்டாலின் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் என்கிறார்கள். கூடுதல் சமத்துவபுரங்கள் என்றால் தலித் நலன்களுக்கான நிதி கூடுதலாகத் திருப்பி விடப்படுகிறது என்பதுதானே அர்த்தம். எந்த நோக்கத்திற்காக சமத்துவபுரங்கள் அமைக்கப்படுகின்றனவோ, அது நடக்கிறதா என்ற கேள்வி ஒருபுறம்.

அதைவிடக் கொடுமை என்னவென்றால், சமத்துவபுரம் என்றாலே ஊருக்கு ஒதுக்குப்புறத்தில்தான் அமைக்கப்படுகிறது. தலித்தோடு ஒரே குடியிருப்புப் பகுதியில் இருக்க வேண்டுமென்றால் ஊருக்கு வெளியேதான் மற்ற பிரிவினரும் செல்ல வேண்டும் என்பதுதான் அரசு தர விரும்பும் செய்தியாக இருக்கிறது. ஒருவேளை, சமத்துவபுரம் அமைக்கப்படும் பகுதியை ரியல் எஸ்டேட்காரர்கள் சேர்ந்து முன்னேற்றினால் அதற்கு விடிவுகாலம் கிடைக்கலாம்.

இப்படி தலித்துகளுக்கு ஒதுக்கப்படும் நிதியைத் திருப்பி விடுவதில் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் கில்லாடிகள். தற்போதுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் 44 வீடுகளுக்கு தலித்துகள் நலனுக்கான நிதியிலிருந்துதான் பணத்தை எடுத்துக் கொடுத்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அதாவது, 44 சட்டமன்றத் தொகுதிகள் தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டதாம். எப்படியெல்லாம் யோசிக்குறாங்க... (தீக்கதிர் கட்டுரை)

கோவையிலும் ஒரு தீண்டாமைச்சுவர்!

கோயம்புத்தூர் தந்தை பெரியார் நகரில் வசிக்கும் அருந்ததிய சமூகத்தினர் பயன்படுத்தும் சாலையை மறித்து, சாதி ஆதிக்க வெறியர்கள் சுவர் கட்டியிருக்கும் அராஜகத்தை, கோவை மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் ஆதித்தமிழர் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகள் அம்பலப்படுத்தியுள்ளன.

கோவை மாநகராட்சி, சிங்காநல்லூர் 10-வது வட்டம் காமராஜர் ரோடு அருகில் உள்ளது, தந்தை பெரியார் நகர். இங்கு குடியிருக்கும் 58 அருந்ததியர் குடும்பங்களுக்கு, ஆதிதிராவிட நலத்துறையின் மூலம் 1989-ஆம் ஆண்டில் வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது.

தந்தை பெரியார் நகரிலிருந்து ஜீவா வீதி வழியாக, காமராஜர் ரோடு எனும் பிரதான சாலையை இணைக்கும் 30 அடி சாலை உள்ளது. இச்சாலை வழியாகத்தான் பெரியார் நகரில் வசிக்கும் தலித் மக்கள் காமராஜர் சாலைக்கு செல்ல வேண்டியுள்ளது. இங்கு மாநகராட்சி மூலம் சாலை, கழிவுநீர் வடிகால் மற்றும் தெருவிளக்கு வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. அருந்ததியர் மக்கள் செல்லும் இச்சாலையை சாதி ஆதிக்க வெறியர்கள் சிலர், தீண்டாமை எண்ணத்தோடு சுவர்கட்டி மறித்து அடைத் துள்ளனர்.

1989 ஆம் ஆண்டில் அருந்ததிய சமூகத்தினருக்கு இந்த மனைப்பட்டாக்கள் வழங்கப்படுவதற்கு முன்பு வரை தடுப்புச்சுவர் எழுப்பப்படாத நிலையில், பட்டா வழங்கிய பிறகுதான் தடுப்புச்சுவர் கட்டியுள்ளனர். மறுபுறத்தில் - அதாவது தங்கள் பகுதியில்- வெகுசாமர்த்தியமாக விநாயகர் சிலையொன்றை வைத்து பெயருக்கு கோவில் என்று பெயர்ப்பலகையும் மாட்டியுள்ளனர்.

அந்தக் கோயிலில் பூசைகள் எதுவும் நடப்பதில்லை. அருகில் உள்ள வீட்டுக்காரர் அந்தக் கோயிலை மாட்டுத் தொழுவமாகவே பயன்படுத்தி வருகிறார். தலித் மக்கள் அந்தப் பாதையைப் பயன்படுத்தி, தங்கள் வீடுகளுக்கு முன்பாக நடந்து சென்றுவிடக்கூடாது என்பதே அந்தக் கோயில் மற்றும் தடுப்புச் சுவர் எழுப்பப்பட்டதன் பின்னணியாகும்.

தற்போது சுவர் இருக்கும்பாதை மட்டுமின்றி, அருந்ததிய மக்களின் குடியிருப்புக்குள் வருவதற்கான மற்றொரு பாதையும், மனைப்பட்டாக்கள் தரப்பட்ட சமயத்தில் அடைக்கப்பட்டே இருந்தது என்ற அதிர்ச்சியான தகவலையும் அருந்ததிய மக்கள் தெரிவிக்கின்றனர். அந்தப்பாதையைத் திறக்க கடுமையான போராட்டம் நடந்துள்ளது. அப்போது, காவல்துறையினர் பலர் மீது வழக்குத் தொடுத்தனர். 1989-ஆம் ஆண்டில் போடப்பட்ட அந்த வழக்கில் சில ஆண்டுகளுக்கு முன்புதான் தீர்ப்பு வந்து தலித் மக்கள் விடுதலையாகியுள்ளனர்.

இந்நிலையில், அண்மையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய பல போராட்டங்கள், அருந்ததியர்களுக்கு உள்ஒதுக்கீடு, ஆலய நுழைவுப் போராட்ட வெற்றிகள் போன்றவை, பெரியார் நகர் மக்களுக்கு நம்பிக்கை அளித்தன. இதனால் தங்களுக்குரிய பாதை மறிக்கப்பட்ட கொடுமையிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி கோவை மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் ஆதித்தமிழர் விடுதலை முன்னணி அமைப்பாளர்களை அணுகி அருந்ததியர் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து கோவை மாநகராட்சியின் வடக்கு மண்டலத்தலைவர் சி.பத்மநாபன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் யு.கே.சிவஞானம், மாநிலக்குழு உறுப்பினர்கள் வி.பெருமாள், கே.கணேஷ், வழக்கறிஞர் வெண்மணி, மார்க்சிஸ்ட் கட்சியின் நகரச்செயலாளர் கே.மனோகரன், ஆதித்தமிழர் விடுதலை முன்னணியின் மாநில அமைப்பாளர் ரவிக்குமார் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஆதித்தமிழர் விடுதலை முன்னணியின் நிர்வாகிகள் அந்த இடத்தைப் பார்வையிட்டனர்.

பொதுப்பாதையை மறித்தே சுவர் எழுப்பப்பட்டுள்ளது என்பது உறுதியானதால் இவ்வமைப்புகள் சார்பில் கோவை மாநகர ஆணையர் அன்சுல் மிஸ்ராவை வெள்ளிக்கிழமையன்று (29.01.2010) சந்தித்து மனு அளிக்கப்பட்டது. மனுவைப் பெற்றுக்கொண்ட ஆணையர் பொதுப்பாதையை மறித்துக் கட்டப்பட்டுள்ள சுவர் அகற்றப்படும் என்று உறுதி அளித்தார்.

ரெட்டிப்பட்டி தலித் மக்களுக்கு நீதி வேண்டும்: ஆட்சியர் அலுவலகத்தில் டில்லிபாபு எம்எல்ஏ தலைமையில் 2 மணி நேரம் போராட்டம்!

ஊத்தங்கரை தாலுகா ரெட்டிப்பட்டி கிராம தலித் மக்கள், மிட்டா மிராசுகளின் ஆக்கிரமிப்பில் உள்ள தங்களின் சுமார் 500 ஏக்கர் நிலத்தை மீட்டுத்தர வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் போராடி வருகின்றனர்.

அதனொரு பகுதியாக, சுமார் நூறு பேர், இரண்டு நாள் நடைபயணம் மேற்கொண்டு, வியாழனன்று (28.01.2010) கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி மனு கொடுக்கச் சென்றனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம், பி.டில்லிபாபு எம்எல்ஏ, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எம்.தருமன், செயலாளர் எக்ஸ்.இருதயராஜ், பொருளாளர் வி.கோவிந்தசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.ரவீந்திரன், வட்டச் செயலாளர்கள் கிருஷ்ணகிரி நஞ்சுண்டன், போச்சம்பள்ளி சின்னசாமி, சி.ஐ.டி.யு. கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கே.மகாலிங்கம், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.அண்ணாமலை, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட ஆட்சியர் இல்லாததால் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.பிரபாகரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

ரெட்டிப்பட்டி தலித் மக்களின் நிலம் குறித்து ஏற்கெனவே ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு மீது வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. விசாரணையும் நடத்துள்ளது. இது குறித்த விவரங்களை வருவாய் அலுவலரி டம் கேட்டனர். விவரம் கோட்டாட்சியரிடம் உள்ளதாக அவர் தகவல் தெரிவித்தார். விசாரணை நடத்திய கோட்டாட்சியர் அல்லது மாவட்ட ஆட்சியர் வந்து பதில் அளித்த பிறகுதான் இங்கிருந்து செல்வோம் என்று கூறி அனைவரும் கோட்டாட்சியரின் அறைமுன் அமர்ந்து கொண்டனர்.

இரவு சுமார் எட்டு மணி அளவில் வருவாய் கோட்டாட்சியர் அன்பரசு வந்தார். வருவாய் அலுவலர் முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட தலைவர்களை அழைத்து அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

1984 யு.டி.ஆர். பட்டா மாறுதல் குறித்த ஆவணங்களை சென்னை ஆவணக் காப்பகத்திலிருந்து பெற வேண்டும்; அதன் பிறகு ஒரு குழு மூலம் ஆய்வு மேற்கொண்டு அதன் அறிக்கையை ஆட்சியரிடம் அளிக்க இருப்பதாக கோட்டாட்சியர் கூறினார். இதற்கு இரண்டு மாத காலம் ஆகும் எனவும் அவர் கூறினார். பிரச்சனைக்குரிய இந்நிலத்தை இதற்கிடையில் விற்கவும், பத்திரப் பதிவு செய்யவும் தடை விதிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாகவும் கோட்டாட்சியர் தெரிவித் தார்.

போச்சம்பள்ளி தாலுகாவில் உள்ள வறண்ட ஏரிகளுக்கு கிருஷ்ணகிரி அணையிலிருந்து உபரி நீரைக் கொண்டு செல்வதற்கான கால்வாய் அமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கக் கோரும் முன்மொழிவை உடனடியாக அரசுக்கு அனுப்பி வைப்பதாக வருவாய் அலுவலர் தொவித்தார். இதுபோல் இட்டிக்கல் அகரம் தலித் மக்களுக்கு அளிக்கப்பட்ட நிலத்திற்கு, வனத்துறையினர் அத்துமீறி உரிமை கோருவதை தடுப்பது, வசந்தப்பள்ளியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முனி வெங்கடப்பன் ஏழைகளிடமிருந்து ஆக்கிரமித்த தரிசு நிலத்தை, 2 ஏக்கர் இலவச நிலத்திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் மீது விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகவும் அலுவலர்கள் தெரிவித்தனர்.

வாச்சாத்தி வழக்கு பிப்.11-க்கு ஒத்திவைப்பு

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி வட்டம் வாச்சாத்தி கிராமத்தில் 1992-ம் ஆண்டு மலைவாழ் இனத்தை சேர்ந்த 18 பெண்கள் வனத்துறையை சேர்ந்தவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக வனத்துறை காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் 269 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கு கடந்த 16 ஆண்டுகளாக கிருஷ்ணகிரி அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பின்னர் கடந்த ஜூன் மாதம் தருமபுரி அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு இவ்வழக்கு நடந்து வருகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற குறுக்கு விசாரணையில் பாதிக்கப்பட்ட 18 பெண்கள், பின்னர் சிறைவார்டன் லலிதா பாய் சாட்சியமளித்தனர்,

ஜனவரி 28 அன்று மாவட்ட நீதிபதி எஸ்.குமரகுரு முன்பு நடைபெற்ற குறுக்கு விசாரணையில் குற்றவாளி தரப்பில் டி.எப். ஓ. துரைசாமி சாட்சியமளித்தார். அரசுத் தரப்பு சிபிஐ சிறப்பு வழக்கறிஞர் ஜெயபால், எதிர்த்தரப்பு வழக்கறிஞர் விஜயராகவன், வாதாடினர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் பிப்ரவரி 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். பிப்ரவரி 11 அன்று மத்திய புலனாய்வுத்துறை மாவட்ட துணைக்கண்காணிப்பாளர் ஜகநாதன் சாட்சியமளிக்க உள்ளார்.

மிட்டா மிராசுகளிடம் தலித்துகளின் நிலம் வருவாய்த்துறை உதவியுடன் தொடரும் அநீதி - -சி.முருகேசன்

வசதி படைத்தவர்களிடம் உள்ளூர் அதிகாரமும் கிடைத்துவிட்டால் முடிசூடா மன்னர்களாக மாறிவிடுகிறார்கள். அதற்கு உதாரணமாக உள்ளது ரெட்டிப்பட்டி. இங்கு ஆங்கிலேயர் காலத்தில் தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட நில உரிமையை கூட தட்டிப் பறித்துள்ளனர். தலித்துக்களை ஏழைகளாகவே- தொடர்ந்து தங்களுக்கு சேவகம் செய்யும் நபர்களாகவே நீடிக்க வைத்துள்ளனர். தொடரும் சமூக ஒடுக்குமுறை குறித்து ஒரு நேரடி ரிப்போர்ட்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகாவில் உள்ளது தலித் கிராமமான ரெட்டிப்பட்டி. பர்கூர் சிப்காட் தொழிற்பேட்டைக்கும் வாணிப்பட்டி ஏரிக்கும் மத்தியில் ரெட்டிப்பட்டியை சேர்ந்த தலித் மக்களுக்கு உரிமையுள்ள சுமார் ஐநூறு ஏக்கர் நிலம் உள்ளது. புல எண்கள்: 109, 110, 111, 115, 117, 119, 120 உள்ளிட்ட நிலங்கள், அரசு ஆவணங்களில் தோட்டி மானியம் என குறிக்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பகுதி மேட்டு நிலமாக இருந்ததால் மானாவாரி விவசாயம் நடைபெற்று வந்தது. விவசாயம் சோறு போடாததால் சில குடும்பங்கள் வெளியூர்களில் பிழைப்பு தேடி சென்றுள்ளன.

ஆனந்தூர் தரப்பிலுள்ள இப்பகுதியின் கிராம நிர்வாகம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆனந்தூர் மிராசுதார் துரைசாமி செட்டி குடும்பத்தினரிடம் இருந்து வருகிறது. இதைப் பயன்படுத்தி தலித் மக்களின் தோட்டி மானிய நிலங்களை இக்குடும்பத்தினர் கைப்பற்றியுள்ளனர். 1985-ல் இத்தகைய நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு யு.டி.ஆர். பட்டாவும் பெற்றுள்ளனர். இதில் அண்ணாமலை மகன் துரைசாமி என்கிற தலித் விவசாயியின் அனுபவத்தில் இருந்த 20 ஏக்கர் நிலமும் உள்ளது.

மிராசுதார்கள் பட்டாவுடன் வந்து நிலங்களுக்கு சொந்தம் கொண்டாடியபோது தலித் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். எதிர்த்து நிற்கக்கூட ஆற்றல் இல்லாத அவர்கள், பட்டாவைக் கண்டு ஒடுங்கிப் போயினர். எதிர்த்து நின்ற ஒரு சிலர் காவல்துறை மற்றும் குண்டர் படையின் தாக்குதலுக்கு உள்ளாகினர். அ.துரைசாமியை காவல்துறை மூலம் கடும் சித்ரவதை செய்து நிலத்தை விட்டு துரத்தியதாக அவரது மகன் ஜெயவேல் கூறினார். இவர்கள் வசித்த வீடு இடிந்து புல் முளைத்துள்ளது. முறைகேடான பட்டாக்களை ரத்து செய்யவும், இதற்கு காரணமான வருவாய் துறையினர் மீது நடவடிக்கை கோரியும் அ.துரைசாமி தொடர்ந்து மனுக்கள் கொடுத்துள்ளார். 2001-ல் தருமபுரி மாவட்டமாக இருந்தபோது ஆட்சியர் கா.பாலச்சந்திரன் பிறப்பித்த ஆணையில் கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் விசாரித்து 30 நாட்களுக்குள் அறிக்கை அனுப்பவேண்டும் என கூறியிருந்தார். கிராம நிர்வாகத்தை மிட்டாதார் வகையறாக்கள் தன்வசம் வைத்திருந்ததால் ஆட்சியரின் உத்தரவு மதிப்பிழந்து போனது. ஆனாலும் நிலத்திற்குள் மிராசுதார் குடும்பத்தாரை அனுமதிக்காமல் தடுத்து வந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டமாக மாறிய பிறகு 15.11.2005 தேதியில் கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியரிடம் புதிய மனு கொடுத்துள்ளார். இதன் மீதான விசாரணை 5 மாதங்கள் கழித்து 5.4.2006 ல் நடந்துள்ளது. அடுத்த இரண்டு மாதத்திற்குள் அ.துரைசாமி இறந்தார். வருவாய்த் துறையும் இதில் முடங்கிக் கொண்டது. உடனடியாக மிராசுதார்கள் ஏழரை ஏக்கர் நிலத்தை வெளியூர் நபர்களுக்கு விற்றுள்ளனர். தொடர்ந்து இதர நிலங்களையும் சிறுகச் சிறுக விற்கத் துவங்கினர். கிராமத்தை ஒட்டிய மந்தைவெளி நிலம் கூட இவர்களது ஆக்கிரமிப்பிலிருந்து தப்பவில்லை. கிராம நிர்வாக அதிகாரி ஜெகதீசன், இந்த 5 ஏக்கர் நிலத்திற்கு பட்டா போட்டு வைத்துள்ளாராம். முழுவதும் ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் கிராமமான ரெட்டிப்பட்டியில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆனாலும் மிராசுதார்களின் ஆதிக்கம்தான் எங்கும் நிரம்பி உள்ளது.

இதுகுறித்து இங்குள்ளவர்களிடம் கேட்டபோது, ஆடு, மாடு மேய்க்கக்கூட எங்களுக்கு இடம் இல்லை. எங்க நிலத்தை திருப்பித்தர மாட்டாங்க. அவங்க தயவுல தான் பிழைக்கிறோம். வேலையும் சரி, மாடு கண்ணு மேய்க்கறதும் சரி அவங்கள நம்பி தான் இருக்கிறோம் என்றனர்.

ரெட்டிப்பட்டி கிராமத்தில் தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் குறித்து சில விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஜெகதீசன் பெற்றுள்ளார். பல விவரங்களை அளிக்க வருவாய் துறையும், ஆவணகாப்பகமும் காலம் கடத்துவதாக அவர் கூறினார். ஏழைகளின் நலன்களை பாதுகாப்பதாக கூறும் ஆட்சியாளர்கள் ரெட்டிப்பட்டி தலித் மக்களின் நில உரிமையை மீட்டுத் தருவார்களா?

மிராசுதார்களின் மூர்க்கத்தனம்
ரெட்டிப்பட்டியில் தனது தோட்டத்தை ஒட்டி மிராசுதார்களின் ஆக்கிரமிப்பில் உள்ள ஒரு பகுதி நிலத்தை தலித் அல்லாத பொன்னுசாமி, குத்தகைக்கு உழுது வந்தார். சும்மா கிடந்த நிலம் அவரது உழைப்பால் உயிர் பெற்றது. தலித் மக்களுடன் அவர் நெருக்கமானதால் மிராசுதார்கள் ஆத்திரமடைந்தனர். இதையொட்டி நடந்தவற்றை பொன்னுசாமி விவரித்தார்: விளைந்த நெல்லை அறுவடை செய்துவிட்டு வெளியேறுவதாக கூறினேன். ஏற்காத துரைசாமி செட்டியாரும், அவர் குடும்பத்தாரும் ரவுடிகள் துணையோடு என்னை தாக்கினர். என்மேல் கொலை முயற்சி வழக்கு போட்டு ஜெயிலுக்கு அனுப்பினர். இந்த சம்ப வத்தை தலித் மக்களை மிரட்டுவதற்கும் பயன்படுத்திக்கொண்டனர் என்றார்.

நடைபயணம் - ஆர்ப்பாட்டம்:
இந்நிலையில், தங்களின் நிலத்தை மீட்டுத்தரவும், முறைகேடாக பட்டா வழங்கியோர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி புதனன்று (27.01.2010) ரெட்டிப்பட்டியிருந்து ஆட்சியர் அலுவலகம் நோக்கி, தலித் மக்கள் நடைபயணம் மேற்கொள்கின்றனர். வியாழனன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட் டமும் நடைபெற உள்ளது.

(தீக்கதிரில் வெளியான கட்டுரை)