செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

ஆதிக்கச் சக்திகளின் 50 ஆண்டு தடை தகர்ந்தது! - நெடி கிராம அய்யனார் கோவிலில் தலித் மக்கள் வழிபாடு

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நெடி கிராமத்தில் 100 தலித் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பொது ஏரியில் இம்மக்களுக்கு கிடைக்க வேண்டிய பங்கு, அய்யனார் கோயிலில் வழிபடும் உரிமை ஆகியவற்றை ஆதிக்க சாதியினர் மறுத்து வந்தனர்.
இதனை எதிர்த்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் 30.01.10 அன்று ஆலயத்திற்குள் பொங்கலிட்டு சாமி கும்மிடும் போராட்டம் நடத்தினர். அப்போது கிராம ஆதிக்க சக்தியினர் திரண்டு வந்து பொங்கலை மட்டும் வைக்கலாம்; ஆனால், வழிபாடு நடத்த விடமாட்டோம் என்று கூறி, கோயிலையும் பூட்டி அராஜகம் செய்தனர்.
இதையடுத்து மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, 01.02.2010 அன்று சமாதான கூட்டம் நடத்தியது. அப்போது, பிப்ரவரி 5-அன்று பொங்கலிட்டு சாமியை வழிபடுவது என்று கிராம மக்கள் வாலிபர் சங்கத்தின் சார்பில் முடிவு செய்தனர். இதையடுத்து வாலிபர் சங்கத்தினர் வெள்ளியன்று (பிப்.5) மாநிலத் தலைவர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு தலைமையில் கிராம மக்களை அழைத்துக் கொண்டு அய்யனார் கோயிலில் பொங்கலிட்டு வழி பாடு நடத்தினர். இந்த போராட்டத்தில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.செந்தில், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ஆர்.கே. தமிழ்ச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் கே.முனியாண்டி, ஒன்றியச் செயலாளர்கள் சத்தியராஜ், காளிதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாலிபர் சங்கத்திற்கு பாராட்டு
தங்களது உரிமையை மீட்டுக் கொடுத்த வாலிபர் சங்கத் தலைவர்களுக்கு கிராம மக்கள் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர். கிராமத்திற்கு நூலகம் ஒன்றை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டனர். அனைவருக்கும் பொங்கல் வழங்கி கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த போராட்டம் காரணமாக அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக திண்டிவனம் வட்டாட்சியர் பெ.சீத்தாராமன், மாவட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் தட்சிணாமூர்த்தி தலைமையில் நூற் றுக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கந்துவட்டிக் கொடுமை : துப்புரவுத் தொழிலாளி மீது கொலை வெறித் தாக்குதல்

அருப்புக்கோட்டை நகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்து வருபவர் ஆத்திபட்டியை சேர்ந்த பாப்பன்(45). இவருக்கு தெரிந்த மாரியம்மாள் என்பவர், 34-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் கலைச்செல்வி யிடம் வட்டிக்கு பணம் வாங்கியதாக தெரிகிறது. அந்த பணத்தை மாரியம்மாளிடம் இருந்து மற்றொருவர் வாங்கிவிட்டாராம்.
எனவே, கொடுத்த பணத்திற்கு வட்டி தரவில்லை எனக்கூறி வேலைசெய்து விட்டு மாலையில் வந்த பாப்பனை கவுன்சிலர் செல்வி அடியாட்களுடன் வந்து ஆட்டோவில் கட்டாயப்படுத்தி தூக்கிச் சென்றுள்ளார். பின்பு செல்வி மற்றும் 4 பேர் சேர்ந்து பாப்பனை பல மணிநேரம் கொடூர ஆயுதத்தால் தாக்கியுள்ளனர்.
பாப்பன் தற்போது அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். பாதிக்கப்பட்ட பாப்பனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஏ.சேகர், நகர செயலாளர் எம். தாமஸ், ஒன்றியச் செயலாளர் ஆர்.சந்திரமோகன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

நரிக்குறவர் காலனியில் நிலம் ஆக்கிரமிப்பு

வேலூர் மாவட்டம் சோளிங்கர் கொண்டபாளையம் நெறிக்குறவர் காலனி உள்ளது. இந்நிலையில் இக்காலனிக்கு வரும் வழிகளை ஆக்கிரமித்து, ஆதிக்க சாதியினர் வீடுகளைக் கட்டியுள்ளனர். இதனால் மிகவும் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள், மாவட்ட ஆட்சியருக்கும், கோட்டாட்சியருக்கும் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையடுத்து, நெறிக்குறவர் காலனிக்கான பொது வழி ஆக்கிரமிப்புக்களை அகற்றக்கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வாலாஜா தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விவசாயிகள் சங்கத் தலைவர் ஆர்.காளப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்டப் பொருளாளர் ஆர்.குப்புசாமி, நிலவு குப்புசாமி, தா.வெங்கடேசன், எல்.சி.மணி, பத்மா மணி, ஆர்.ரேணு, பெருமாள், ஜோதி உள்ளிட்ட பலர் பேசினர்.
நெறிக்குறவர் சமூகத் தலைவர்கள் ஆர்.கேந்திரராஜ், முருகன் ஆகியோர் தாங்கள் நீண்ட காலமாக அனுபவித்து வரும் கொடுமைகளை விளக்கினர்.  எங்களுக்காக முதன் முறையாக போராடவும், எங்களை பேசவும் வைத்த விவசாயிகள் சங்கத்திற்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம் என்றும் கூறினர்.
கொண்டபாளையம் நெறிக்குறவர் காலனியில் வசிக்கும் 43 குடும்பங்களுக்கு, ஆதிக்க சக்திகளின் ஆக்கிர மிப்புகளை அகற்றி சுற்றுச்சுவர் அமைக்கக் கோரி வாலாஜா தாசில்தாரிடம் கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது. மனுவைப் பெற்றுக் கொண்ட அவர், மண்டல துணை தாசில்தாரை விரைவில் அனுப்பி விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

கோவை தீண்டாமைச் சுவர் : பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

கோவை 10-வது வட்டம் பெரியார் நகரில் ஆதிதிராவிடர் நலத்துறையால் வழங்கப்பட்ட இடத்தில் அருந் ததியர் சமூகத்தினர் 58 வீடுகள் கட்டி வசித்து வந்தனர். 1989 முதல் தந்தை பெரியார் நகர் என்று அழைக்கப்பட்ட அந்த பகுதிக்கு செல்லும் ஜீவா வீதி என்ற 30 அடி அகல பொதுப்பாதை உள்ளது. ஆனால், தலித் மக்கள் இந்த வீதியில் நடப்பதா என்ற வன்மத்துடன், அந்த வீதியை மறித்து ஆதிக்க சாதியினர் சுவர் எழுப்பினர். இந்த சுவருக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது என்பதற்காக சுவருக்கு இந்தப் புறம் பெயரளவிற்கு பிள்ளையார் சிலையை நிறுவி கோயிலாக்கினர், ஆதிக்க சாதியினர். பல்லாண்டு காலமாக அருந்ததியர் மக்கள் முறையிட்டும் பொதுப்பாதை பயன்பாட்டுக்கு வரவில்லை. பிள்ளையார் சிலை உள்ள அந்த பகுதியை, ஆதிக்க சாதியைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் மாட்டுத் தொழுவமாக பயன்படுத்தி வந்தார்.
இந்த நிலையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் சுவரை அகற்றக் கோரியும் முழுமையான பாதை கிடைத்திட நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாநகராட்சி ஆணையரிடம் புகார் செய்யப்பட்டது.
இப்புகாரை அடுத்து, அரசு நிர்வாகம் கடந்த சனிக்கிழமையன்று தீண்டாமைச் சுவரைச் இடித்து அகற்றியது. ஆனால் அங்கிருந்த பிள்ளையார் சிலை அகற்றப் படவில்லை. இதனால் முழுமையான பாதை அருந்
ததியர்களுக்கு கிடைக்கவில்லை.
இந்நிலையில் கோவை கோட்டாட்சியர் பாலச்சந்திரன் தலைமையில் பேச்சு வார்த்தை திங்களன்று (01.02.2010) மாலை ஆர்.டி.ஓ அலுவலகத்தில் நடைபெற்றது. அரசுத் தரப்பில் வட்டாட்சியர் சுப்பிரமணியன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாவட்ட அமைப்பாளர் யு.கே.சிவஞானம், கோவை வடக்கு மண்டலத் தலைவர் சி.பத்மநாபன், வழக்கறிஞர் வெண்மணி, ஆதித்தமிழர் விடுதலை முன்னணி அமைப்பாளர் ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆதிக்க சாதியினர் தரப்பில் சம்பந்தபட்டவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.  ஆனால், நாங்கள்தான் கோயில் நிர்வாகிகள் எனக் கூறிக்கொண்டு இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சியை சேர்ந்த சிவப்பிரகாசம், எரியீட்டி வேலு மற்றும் சுரேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
30 அடி அகலப் பொதுப்பாதை முழுமையாக அருந்ததியர் மக்களின் பயன்பாட்டிற்கு வரவேண்டும் என்று பெரியார் நகர் பகுதி மக்கள் சார்பில் உறுதிபடத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் எதிர்த்தரப்பினர் முடி வெடுக்க கால அவகாசம் கேட்டதால் வரும் வியாழனன்று பேச்சுவார்த்தை மீண்டும் தொடரும் என அறிவிக்கப்பட்டது.

ஆக்கிரமிக்கப்பட்ட தலித் மக்களின் சுடுகாட்டு நிலம்

மண்ணச்சநல்லூர் தாலுகாவிலுள்ள சி.ஆர். பாளையத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் சுமார் 500 பேர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு சிறுகனூர் ஊராட்சித்தலைவர் மற்றும் வருவாய் கிராம அலுவலர் ஆகியோரால் உப்பாறு ஓடைப்புறம் போக்கில் சுடுகாட்டிற்காக இடம் ஒதுக்கித் தரப்பட்டது. இந்த இடத்தை சி.ஆர். பாளையத்தை சேர்ந்த சிலர் (ரங்கசாமிகவுண்டர், ராமதாஸ் உள்ளிட்டோர்)  பிளாட் போட்டு விற்க முயற்சிப்பதாக தெரியவந்தது.
இதையடுத்து, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மயான இடத்தை மீட்டுத்தரக் கோரி, திங்களன்று (1.02.2010) சிஆர். பாளையம் கிராம முக்கியஸ்தர்கள் பாலு, ரங்கநாதன், அகிலாண்டேஸ்வரி, செல்வராஜ், வார்டு ஊராட்சி உறுப்பினர் சின்னப்பொண்ணு ஆகியோர் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பாளர் எம்.ஜெயசீலன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் எஸ்.பாண்டியன், எஸ்.பிலால், டி.ரஜினிகாந்த் ஆகிய 500 பேர் கையெழுத்திட்ட மனுவை, திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் தலித் மக்கள் அளித்தனர்.