வியாழன், 12 நவம்பர், 2009

சிறுதாவூரில் மெத்தனம் காட்டுவது யார்? - முதலமைச்சருக்கு சிபிஎம் கேள்வி

காவேரிராஜபுரத்தில் நீதிபதி தினகரன் ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்டு, நிலமற்ற தலித் மக்களுக்கு வழங்கும் வகையில், நிலமீட்புப் போராட்டத்தை நடத்தப் போவதாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்திருந்த நிலையில், அப்போராட்டத்தை ஒடுக்க முதல்வர் கருணாநிதி தலைமையிலான அரசும் காவல்துறையும் தீவிரமாக இயங்கின. இப்போராட்டத்தை முதல்வர் கருணாநிதியும் தனக்கே உரிய பாணியில் விமர்சித்தார்.

அதற்குப் பதிலளித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என். வரதராஜன் (9.11.2009) அன்று வெளியிட்ட அறிக்கை வருமாறு:

காவேரிராஜபுரத்தில் நீதிபதி பி.டி.தினகரன் ஆக்கிரமிப்பில் இருந்த அரசுப் புறம்போக்கு நிலங்களை மீட்டு தலித் மக்களுக்கு வழங்கும் போராட்டம் தொடர்பாக முதலமைச்சர் கலைஞர் கரு ணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறுதாவூர் நிலம் பற்றி தற்போது மார்க்சிஸ்ட் கட்சியினர் அவசரம் காட்டவில்லை” என்று குற்றஞ்சாட்டியுள்ளது, எந்த விதத்திலும் பொருத்தமானது அல்ல.

“தற்போது” என்று முதலமைச்சர் கூறியுள்ளது அஇஅதிமுகவுடன் மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி உடன்பாடு கொண்ட பின்னணியைக் குறிப்பதாக உள்ளது. அவ்வாறு உடன்பாடு கொண்டு தேர்தல் களத்தில் நின்றிருந்த போதே திமுக தரப்பில் சிறுதாகூர் பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “சிறுதாவூர் நிலப் பிரச்சனையில் மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைபாடு எவ்வித மாற்றமும் இன்றித் தொடர் கிறது” என்று தெளிவுபடுத்தப் பட்டது. அதே காலகட்டத்தில் இப்பிரச்சனை தொடர்பான விசா ரணை ஆணையத்தின் முன்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் நேரடி சாட்சியம் அளிக்கப்பட்டது மட்டுமின்றி, கட்சியின் சார்பில் வழக்கறிஞர் மூலமான வாதங்களும் முன்வைக்கப்பட்டு விட்டன.

இப்பிரச்சனையில் இறுதி அறிக்கை தர வேண்டிய விசாரணை ஆணையத் தலைவர் நீதிபதி சிவசுப்பிரமணியன், வேறொரு விசார ணையில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதால் சிறுதாவூர் பிரச்சனை கிடப்பில் போடப்பட்டுள்ளதே தவிர, மார்க்சிஸ்ட் கட்சி அவசரம் காட்டாததால் அல்ல.

மேற்குவங்கத்துக்கு ஒரு சட்டம், தமிழ்நாட்டுக்கு ஒரு சட்டம் என்று மார்க்சிஸ்ட் கட்சியினர் செயல்படக்கூடாது என்றும் முதல மைச்சர் கூறியுள்ளார். நிலச்சீர்திருத்தச் சட்டம் மேற்குவங்கத்தில் எவ்வளவு சிறப்பாக அமல்படுத்தப்பட் டுள்ளது என்பதை, மண்டல் கமிஷன் அறிக்கையே பதிவு செய்துள்ளதையும், தமிழ்நாட்டில் நிலச்சீர்திருத்தச் சட்டம், மறைந்த அண்ணா அவர்களாலேயே ‘உச்சவரம்பா, மிச்ச வரம்பா’ என்று ஏகடியம் பேசப்பட்ட நிலைமாற வில்லை என்பதையும் மார்க்சிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விழைகிறது.

காவேரிராஜபுரத்தைப் பொறுத்தவரை, நீதிபதி தினகரன் தரப் பிலேயே ஆக்கிரமிப்பு வேலிகள் அகற்றப்பட்டுவிட்ட நிலையில், அந்நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு நீதிமன் றத் தடை யாணை ஏதுமற்ற பின்னணியில், தமிழக அரசு மெத்தனம் காட்டக் கூடாது என்பதற்காக அமைதியான முறையில் நீலமீட்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைபாட்டில் எந்த முரண்பாடும் இல்லை. ஆக்கிரமிப்பு நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கட்சி ஒத்துழைப்பை நல்கும். நிலமீட்பு போராட்டத்தை சட்டம் - ஒழுங்குப் பிரச்சனையாக சித்தரிக்க முதலமைச்சர் முற்பட வேண்டாம் எனவும் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

இவ்வாறு என்.வரதராஜன் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

தலித்துகள் மீது வெறித் தாக்குதல்: நம்பிவயல் கிராமத்தில் அராஜகம்

நம்பிவயல் கிராமத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் மீது நடத்தப்பட்ட கொலை வெறித் தாக்குதலையும், காவல்துறையினரின் அலட்சியத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், நம்பிவயல் கிராமத்தில் ஏர்டெல் நிறுவனம் ஒன்று, புகழேந்தி என்பவர் இடத்தில் டவர் அமைத்துள்ளது. கடந்த 21.10.2009 அன்று இந்த டவர் பராமரிப்பு பணிக்காக வேப்பங்குளம் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் அங்கு சென்று பணி முடித்து திரும்பியிருக்கிறார்.

அவரை புகழேந்தி என்பவர் வழிமறித்து நீ எந்த ஊர்? உன்னுடைய சாதி என்ன? எனக்கு ஏன், வணக்கம் செய்யவில்லை? என்று கேட்டு தகராறு செய்துள்ளார். விஜயக்குமார் தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை தெரிந்து கொண்டு சாதியைச் சொல்லி இழிவாக பேசி புகழேந்தி அடித்திருக்கிறார். கீழே விழுந்தவரை உயிர்நிலை யில் மிதித்தும் இருக்கிறார். இதனால் அவர் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளார்.

இவரை மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல கூட புகழேந்திக்கு பயந்து யாரும் முன்வரவில்லை. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குபேந்திரன் என்பவர் பட்டுக்கோட்டை மருத்துவமனையில் கொண்டு போய்ச் சேர்த்திருக்கிறார். புகழேந்தி மீது புகார் கொடுக்கப்பட்டும் காவல் துறை எந்தவித நடவடிக் கையும் எடுக்கவில்லை.

இதனைக் கண்டித்து சில ஜனநாயக அமைப்புகள் இணைந்து பட்டுக்கோட்டையில் 2.11.2009 அன்று தர்ணாப்போராட்டத்தை நடத்தியிருக்கின்றன. இதற்கு அடுத்த நாள் நம்பி வயல் கிராமத்தில் குபேந்தி ரன் வீடு, தங்கத்துரை டி.வி. மெக்கானிக் கடை ஆகியவை புகழேந்தி மற்றும் அவரின் உறவினர்களால் தாக்கப்பட்டு சொத்துக்கள் சூறையாடப்பட்டுள்ளது. மேலும் பக்கத்தில் உள்ள இப்ராகிம் என்பவரின் டீ கடையையும் தாக்கியுள்ளார்கள்.

இதனால், ஆத்திரமுற்ற பொதுமக்கள் சாலை மறியல் செய்திருக்கின்றனர். ஆனாலும் போலீசார் குற்றவாளிகளை கைது செய்ய மறுக்கின்றனர். பட்டுக்கோட்டை கோட்டாட்சியர், நேரில்சென்று விசாரணை மேற்கொண்டார்.

அதன் அடிப்படையில் குற்றவாளிகளில் கதிரேசன், பிரசாத் என்ற இருவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் முதல் குற்றவாளி புகழேந்தி கைது செய்யப்படவில்லை. இது அப்பகுதி தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு குற்றச் செயல்களுக்கு காரணகர்த்தாவான புகழேந்தியை காவல்துறை கைது செய்ய ஏன் தயக்கம் காட்டுகிறது என்பது புதிராக உள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பியுள்ளது. இச்செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிப்பதுடன், தஞ்சை மாவட்ட காவல் துறையினர் குற்றவாளி களை கைது செய்து சட்டப் படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்; பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் கூறியுள்ளார்.நம்பிவயல் தாக்குதல்
சிபிஎம் ஆர்ப்பாட்டம்

தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்திய சாதிவெறியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், பாதிப்புக்குள்ளானவர்களுக்கு வன் கொடுமை பாதிப்பு அரசு நிதி வழங்கிடவும் வற்புறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம்.செல்வம் தலைமை தாங்கினார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் சின்னை.பாண்டியன் கண்டன உரையாற்றினார். கோரிக்கைகளை வலியுறுத்தி மதுக்கூர் ஒன்றியச் செயலாளர் எஸ்.சாம்பசிவம், திருவோணம் ஒன்றியச் செயலாளர் கே.ராமசாமி, நகரச் செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஏ. கோவிந்தசாமி, எம்.அய்யாவு, விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் ஏ.மூக்கையன், வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் ஆர்.வாசு, கிளைச் செயலாளர் எஸ்.ஏங்கெல்ஸ் மற்றும் நம்பிவயல் கிராம மக்கள் கட்சி ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.தீண்டாமை ஒழிப்பு முன்னணி
கண்டனம்

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தஞ்சை மாவட்ட அமைப்பாளர் சின்னை. பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

குற்றவாளி புகழேந்தியை காவல்துறையினர் கைது செய்யவில்லை. ஆனால் புகழேந்தி போலீஸ் அதிகாரிகளுக்கு நெருக்க மாக காட்டிக் கொள்வதாகவும் சொல்லப்படுகிறது. இதனால்தான் வன்கொடுமைக் குற்றம் புரிந்தும், வீடு கடைகளை அடித்து நொறுக்கியதற்கும் காரணமான புகழேந்தியை காவல்துறை கைது செய்ய மறுக்கிறதா? சாதிய ஆதிக்க சக்திகளுக்கு துணைபோகிறதா?

பட்டுக்கோட்டை பகுதியில் காவல்துறையின் நடவடிக்கை வன்கொடுமை தாக்குதலுக்கு உள்ளாகும் தலித் மக்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை. மதுக்கூர் ஒன்றியம் சொக்கனாவூர், பட்டுக்கோட்டை ஒன்றியம் தாமரங்கோட்டையிலும் தலித்துக்களை சாதி ஆதிக்க வெறியர் தாக்கிய போதும் காவல்துறை அவர்களுக்கு ஆதரவாக செயல் பட்டது. தொடர்ந்து சாதி ஆதிக்க வெறியருக்கு ஆதரவாக செயல்படும் பட்டுக்கோட்டை சரக காவல்துறையை தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தஞ்சை மாவட்டக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

இதில் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது என்று கூறியுள்ளார்.

சாதிவெறியில் நடந்த கவுரவக் கொலை

பழநி சாலைப்புதூர் அழகாபுரியில் வசித்து வந்தவர் தலித் சமூகத்தைச் சேர்ந்த அம்மாபட்டியன் மகன் பத்ரகாளி (வயது 25). பத்ரகாளியும், பழநி சண்முகாநதி பகுதியைச் சேர்ந்த கள்ளர் சமூகத்தவரான சீனிவாசனின் (வயது 65) மகள் ஸ்ரீபிரியா (வயது 21)-வும் வெவ்வேறு கல்லூரியில் பி.எட் பட்ட வகுப்பு படித்து வந்த நிலையில், பழநி அருகே அழகாபுரியில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் பயிற்சி ஆசிரியர்களாக கடந்த ஆண்டு வேலை செய்தனர். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இதற்கு ஸ்ரீபிரியா வீட்டினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 29-ம் தேதி பத்ரகாளியும், ஸ்ரீபிரியாவும் சேலத்தில் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர்.

இதையறிந்து பழநியில் இருந்த வீட்டைக் காலி செய்து தமது குடும்பத்தாருடன் திருச்சிக்குச் சென்றுவிட்ட சீனிவாசன், புதுமணத் தம்பதிகளை தானும் தனது உறவினர்கள் மூலமும் மிரட்டியுள்ளார்.

எனவே பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஸ்ரீபிரியா தமக்குப் பாதுகாப்புக் கோரி மனுக் கொடுத்திருந்தார். பாதுகாப்புக் கருதி உடுமலை அருகே மடத்துக்குளம் தேவேந்திரர் வீதியில் உள்ள பத்ரகாளியின் அக்கா ராணி வீட்டில் பத்ரகாளியும், ஸ்ரீபிரியாவும் தங்கியிருந்தனர்.

கடந்த 4-ம் தேதி சீனிவாசன், அவரது உறவினர்கள் ஆசைத்தம்பி என்கிற ராஜ்கண்ணன் (27), பண்ணாடி (30) ஆகியோர் மடத்துக்குளத்துக்கு வந்து ஸ்ரீபிரியாவைச் சந்தித்துள்ளனர். திருச்சியில் அம்மாவின் உடல் நிலை மிக மோசமாக இருப்பதால் நேரில் வந்து பார்த்துச் செல்லும்படி அவர்கள் அழைத்துள்ளனர்.

அப்போது பத்ரகாளி வெளியே சென்றிருந்தார். எனவே இவர்கள் அழைப்பதில் சந்தேகம் அடைந்த ஸ்ரீபிரியா நேரில் வர மறுத்ததுடன் வேண்டுமானால் செல்போனில் பேசுவதாகக் கூறியுள்ளார். இதைக் கேட்டு அவர்கள் திரும்பி சென்றுவிட்டனர்.

சிறிது நேரம் கழித்து அவர்கள் மீண்டும் வந்துள்ளனர். அங்கிருந்த ராணி மற்றும் பக்கத்து வீட்டுப் பெண் இருவரையும் பக்கத்தில் இருந்த அறையில் தள்ளி கதவைத் பூட்டிவிட்டு ஸ்ரீபிரியாவின் கழுத்து, மார்பு, அடிவயிறு பகுதியில் சரமாரியாகக் கத்தியால் குத்தினர். இதில் பலத்த காயமடைந்த ஸ்ரீபிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சாதி கவுரவத்தை மீறி தலித் இளைஞரை திருமணம் செய்வதா? என்ற ஆத்திரத்தில் இந்தக் கொ
லையைச் செய்து விட்டு மூவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

உடுமலை டிஎஸ்பி ராஜா தலைமையில் போலீசார் தீவிரமாகத் தேடி வியாழக்கிழமை ஸ்ரீபிரியாவின் தந்தை சீனிவாசன், ஆசைத்தம்பி, பண்ணாடி மூவரையும் கைது செய்தனர். இவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீபிரியாவின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்குப் பின் அவரது கணவர் பத்ரகாளி குடும்பத்தாரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

இதேபோன்று இப்பகுதியில் 'சாதி கௌரவத்தை' பாதுகாக்கிறோம் என்று கூறிக்கொண்டு, கடந்த 2 ஆண்டு காலத்தில் மட்டும் 7 'கவுரவ' கொலைகள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

தடையையும் மீறி நடந்த நிலமீட்புப் போராட்டம் - கி.வரதராசன் உள்பட 500 பேர் கைது


நீதிபதி பி.டி.தினகரன் சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ள அரசு புறம்போக்கு மற்றும் தரிசு நிலங் களை மீட்டு நிலமற்ற தலித் விவசாயத் தொழிலாளர்களுக்கும் ஏழைகளுக்கும் விநியோகம் செய்திட காவேரிராஜபுரத்தை நோக்கி சென்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர்கள் மற்றும் 200 பெண்கள் உட்பட 500 பேரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

இந்த ஒற்றைப் போராட்டத்தைத் தடுப்பதற்காக, திருவள்ளூர் மாவட்டம் முழுவதிற்குமே அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்தும், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தும், காவல் துறையினர் மற்றும் அரசின் அனைத்து கெடுபிடிகளையும், மிரட்டல்களையும் மீறி இந்த போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. காவேரிராஜபுரம் கிராமத்தை காவல்துறை முழுமையாக ஆக்கிரமித்து முற்றுகையிட்டிருந்தும் தலித் மக்கள் திரளாக இந்த போராட்டத்தில் பங்கேற்று சிறைசென்றனர்.

போலீசாரின் தடை உத்தரவையும் மீறி, திட்டமிட்டபடி, தமிழ்நாடு விவசாயிகள் திங்களன்று (நவ. 9- 2009) காவேரி ராஜபுரத்தை நோக்கி ஆயிரக்கணக்கானோர் ஊர்வலமாக சென்றனர். அவர்களை காவல்துறையினர் திருவள்ளூர் காமராஜர் சிலை அருகில் தடுத்து நிறுத்தினர். இதனால் போராட்டக் குழுவினர் அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் ஒன்றரை மணி நேரம் இம்மறியல் போராட்டம் நீடித்தது. மீண்டும் அங்கிருந்து காவேரிராஜபுரத்தை நோக்கி புறப்பட முயற்சித்த போது காவல்துறை ஐ.ஜி, டி.ஐ.ஜி ஆகியோர் தலைமையில் கூடியிருந்த போலீசார் வலுக்கட்டாயமாக அனைவரையும் கைது செய்தனர்.

இதில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கி.வரதராசன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் உ.வாசுகி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் கே.முகமது அலி, மாநிலப் பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பொருளாளர் பெ.சண்முகம், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கோ.வீரையன், பொதுச்செயலா ளர் எஸ்.திருநாவுக்கரசு, பொருளாளர் ஜி.மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் கே.செல்வராஜ், மாநிலக்குழு உறுப்பினர் ப.சுந்தரராசன், விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் எஸ்.எம். அனீப், பி.துளசி நாராயணன், கே. ஆறுமுகம், பி.கதிர்வேல், அ.து.கோதண்டன், வி.எம்.ராமன் (காவேரிராஜபுரம்) உள்ளிட்ட 500 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதில் சுமார் 200 பேர் பெண்களாவர். பெண்கள் கை குழந்தைகளுடன் கைதானது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, மறியல் போராட்டத்தின் போது உரையாற்றிய தலைவர்கள், நீதிபதி பி.டி.தினகரன் சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ள நிலங்களை மாவட்ட நிர்வாகமும், முதலமைச்சரும் உடனடியாக மீட் டெடுக்க வேண்டும் என்றும், அந்த நிலங்களை இரண்டு ஏக்கர் இலவச நிலம் வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

நீதிபதியால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலங்களை மீட்டெடுக்கும் வரை விவசாயிகள் சங்கத்தின் போராட்டம் ஓயாது என்றும், எத்தகைய மிரட்டல்களையும் செங்கொடி இயக்கம் சந்திக்கும் என்றும், அடக்கு முறைக்கு அஞ்சாது என்றும் எச்சரித்தனர்.