வியாழன், 4 மார்ச், 2010

அகற்றப்பட்ட அதே இடத்தில் அம்பேத்கார் சிலையை நிறுவ வேண்டும்- வாலிபர் சங்கம் தொடுத்த வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கடலூர் மாவட்டம், பழையபட்டினம் கிராமத்தில் அகற்றப்பட்ட அதே இடத்திலேயே டாக்டர் அம்பேத்கரின் சிலையை மீண்டும் நிறுவ வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டத்தில் உள்ளது பழையபட்டினம் கிராமம். இக்கிராமத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்றவர்கள் கைது என்று தினசரி பத்திரிகைகளில் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பழையபட்டினம் கிராமத்திற்கு விசாரித்தனர்.
அப்போது அந்த கிராம மக்கள் தெரிவித்த விவரங்கள் வருமாறு: -
பல்வேறு சமூகத்தை சேர்ந்த மக்கள் பழையபட்டினம் கிராமத்தில் வசித்து வந்தாலும், தலித் மக்கள்தான் பெரும்பான்மையாக இருக்கிறோம். இந்நிலையில், கடந்த 2008-ம் ஆண்டு கிராமத்தின் பொது இடத்தில்- நூலகம், ஊராட்சி மன்ற கட்டிடம் உள்ள இடத்தில்- அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது.
அதுவரை பொதுமையாக இருந்த ஒரு தரப்பினர் (முஸ்லிம்கள்) அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கக் கூடாது என்றும், அந்த சிலையை அகற்ற வேண்டும் என்றும் குரல் எழுப்பி வந் தனர். இவர்களுக்கு ஆதரவாக அரசு எந்திரம் செயல்பட்டது.
மேலும், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவனை சந்தித்த அந்த சமூக மக்கள், அம்பேத்கர் சிலையை அகற்ற வேண்டும் என்றும் கூறவே, அவரும் சிலையை அகற்றி வேறு இடத்தில் வைக்க சம்மதம் தெரிவித்து எழுத்துப் பூர்வமாக கடிதம் கொடுத்தார். இது எங்கள் தலித் மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, எந்த தரப்பிற்கும் இடையூறு இன்றி பொது இடத்தில் உள்ள சட்டமேதை அம்பேத்கர் சிலையை அப்புறப்படுத்தக் கூடாது என்றும், அவர் சிலைக்கு மாலை அணிவிக்கும் போராட்டத்தையும் வாலிபர் சங்கம் அறிவித்தது. அதன்படி கடந்த டிசம்பர் மாதம் 25ம் தேதி வெண்மணி தியாகிகள் நினைவு தினத்தன்று தீண்டாமை ஒழிப்பு தினமாக கடைப்பிடித்து போராட்டத்தை நடத்தியது. இதற்கு அந்த கிராம மக்களும் ழுழு ஆதரவும் தெரிவித்தனர்.
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்ற வாலிபர் சங்கத்தினர் 200 பேரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதோடு கைது செய்தனர். மேலும் ஏராளமான காவல்துறையினரை குவித்து பதட்டத்தை ஏற்படுத்தியதோடு கிராமத்திற்குள் யாரையும் நுழைய விடாமல் அராஜகத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் அந்த சிலையை அகற்றி வேறு இடத்தில் வைப்பதற்கான முயற்சியில் காவல்துறையும், வருவாய்த் துறையும் ஈடுபட்டு வந்தது. இதனால் வாலிபர் சங்கத்தின் பழையபட்டினம் கிளைச் செயலாளர் டி.அமிர்தலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்தார். அந்த வழக்கில் அம்பேத்கர் சிலை யை அகற்ற தடை விதிக்க வேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கோகலே, நீதிபதி சசி தரன் ஆகியோர் 2010 ஜனவரி மாதம் 20ம் தேதி வரை தடை ஆணையை பிறப்பித்தனர். இதனை அறிந்த காவல்துறையும், வருவாய்த்துறையும் கடந்த ஜனவரி மாதம் 20-ம் தேதி நள்ளிரவில் நீதி மன்றத்தின் உத்தரவை மீறி சிலையை அகற்றி, தலித் மக்கள் வசிக்கும் பகுதியில்  உள்ள குளத்தை சமப்படுத்தி அம்பேத்கர் சிலையை நிறுவிவிட்டுச் சென்றனர்.
இந்த சம்பவத்தின் போது பழையபட்டினம் கிராமத்திற்குச் சென்று தலித் மக்களை வீட்டிலிருந்து வெளியே வர விடாமல் காவல் துறையினரை குவித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
காவல்துறையினரின் இந்த அராஜகச் செயல் தலித் மக்களிடையே மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் வாலிபர் சங்கத்தின் கிளைச் செயலாளர் அமிர்தலிங்கம் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கை தொடர்ந்தார். இம்மனுவை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம் பல கட்ட சாட்சியங்களை விசாரணை செய்தது. பின்னர் குழு ஒன்றையும் அமைத்தது. உயர்நீதிமன்ற பதிவாளர் விஜயன் தலைமையில் 5 வழக்கறிஞர்கள் பழையபட்டினம் கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கிற்காக கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் 2 முறை சென்னை சென்று சாட்சி யம் கூறினார்கள். இதேபோல் காவல்துறையினர், வருவாய்த்துறையினர் சாட்சியம் அளித்தனர்.
இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கோகலே, நீதிபதி சசிதரன் ஆகி யோர் வியாழனன்று தீர்ப்பளித்தனர். அதில் மிகப்பெரிய தலைவர்களின் சிலைகளை அவமதித்த காவல்துறை, வருவாய்த்துறையினரை இந்த நீதிமன்றம் வன்மையாக கண்டிக்கிறது என்றனர்.
நீதிமன்றத்தின் தடை உத்தரவையும் மீறி இரவு 11 மணிக்கு மேல் சிலையை அப்புறப்படுத்திய தையும் கண்டிக்கிறது. அம்பேத்கர் சிலையை ஏற்கனவே இருந்த பொது இடத்திலேயே மீண்டும் நிறுவ வேண்டும். பிப்ரவரி 20 இறுதிக்குள் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் திறப்பு விழா நடத்த வேண்டும் என்றும், சிலையை அப்புறப்படுத்திய வட்டாட்சியர், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், ஆய்வாளர் ஊதியத்தில் இருந்து ரூ. 20 ஆயிரம் பிடித்தம் செய்து மனுதாரர் அமிர்தலிங்கத்துக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அந்த தீர்ப்பில் உத்தரவிட்டனர்.
மனுதாரர் சார்பில் உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் திருமூர்த்தி, தியாகு, புருஷோத்தன் ஆகியோர் ஆஜரானார்கள்.
இந்த தீர்ப்பு குறித்து வாலிபர் சங்க கடலூர் மாவட்ட தலைவர் என்.அசோகன் கூறுகையில், இது வாலிபர் சங்கத்தின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் நீதி நியாயம் வென்றுள்ளது என்றும் தெரிவித்தார். நீதிமன்ற தீர்ப்பை தலித் மக்கள் வரவேற்றுள்ளதோடு வாலிபர் சங்கத்திற்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.

தோளோடு தோள்நின்று போராட ரவிக்குமார் அழைப்பு

கோவை பெரியார் நகரில் நடைபெற்ற பாராட்டு விழாவில், ஆதித்தமிழர் விடுதலை முன்னணியின் மாநில அமைப்பாளர் கோவை இரவிக்குமார் பேசியதாவது:
25 ஆண்டுகாலமாக அருந்ததியர் உள்இடஒதுக்கீட்டு கோரிக்கை சமூகத் தளத்தில் இருந்தது. அதனை பொதுத்தளத்தில் எதிரொலித்து வெற்றியை ஈட்டித்தந்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான். தீண்டாமை ஒழிப்பு முன்னணி உருவான போது மற்ற கட்சிகளில் உள்ளது போன்று தலித் மக்களுக்கு பதவி தந்து கவுரவப்படுத்தும் ஓர் அமைப்பு என்றே நினைத்தோம். ஆனால் தலித் அல்லாதோரும் பொறுப்பேற்று, உருவான நான்காண்டு காலத்தில் எங்கு அநீதி நடந்தாலும் அருந்ததியர் இயக்கங்களுடன் இணைந்து களம் காண்கிறது.
கத்தியின்றி, ரத்தமின்றி பெரும் போராட்டங்களின்றி தீண்டாமைச்சுவர் வெற்றிகரமாக அகற்றப்பட்டது. நாங்கள் போராடிய போதும், முறையிட்ட போதும் அரசு கேட்கவில்லை. உத்தப்புரத்தை ‘உத்தமபுரமாக’ மாற்றுவதாகச் சொன்ன முதல்வர், மார்க்சிஸ்ட் கட்சி தலையிட்டதும் நடவடிக்கை எடுத்தார். ஆதித்தமிழர் விடுதலை முன்னணி சார்பில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேற்கு மாவட்டங்களில் இதேபோன்ற சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எங்களுடன் தோளோடு தோள் நின்று போராட வாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு ரவிக்குமார் பேசினார்.

தீண்டாமைக்கு எதிரான போரில் அனைவரும் இணைய என்.வரதராஜன் அழைப்பு

தீண்டாமைக்கொடுமைக்கு எதிரான போராட்டத்தில் யாரையும் வேறுபடுத்தி பார்க்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரும்பவில்லை. ஜனநாயக, சமூகநீதி சக்திகள் இந்த போராட்டத்தில் இணைந்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் குறிப்பிட்டார்.
கோவை 10-வது வட்டம் தந்தை பெரியார் நகரில் 21 ஆண்டுகாலமாக நீடித்த தீண்டாமைச் சுவரை அகற்ற போராடியதற்காக புதனன்று நடைபெற்ற நன்றி பாராட்டு விழாவில் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் பேசியதாவது:
தீண்டாமைக் கொடுமை கண்டு வெகுண்டெழுந்து வைக்கம் வரை சென்று போராடியவர் தந்தை பெரியார். ஆனால் இங்கு பெரியார் நகர் அருந்ததியர் மக்களை பொது வழியில் செல் லவிடாமல் வழிமறித்து 21 ஆண்டுகளாக தீண்டாமை சுவர் நீடித்துள்ளது. சுவருக்கு அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் உள்ளவர்கள் பஞ்சாலைத் தொழிலாளர்கள்தான். அங்கு ஒன்றாக கூலிப் போராட்டத்தை நடத்த வேண்டியவர்கள்தான்.
இங்குள்ள தீண்டாமைச் சுவரை அகற்றியதற்காக தமிழக முதல்வரைப் பாராட்டுகிறோம். கார் டிரைவருக்கு முக்கிய பணி கார் ஓட்டுவது. அதற்காக அவரை யாரும் பாராட்டிக் கொண்டிருப்பதில்லை. இருந்தாலும் விபத்தில்லாமல் லாவகமாக கார் ஓட்டியதற்காகப் பாராட்டுவோம். அதை விடுத்து நேரெதிர் திசையில் வந்தால் விபத்து தான் ஏற்படும்.
தமிழகத்தில் 50 இடங்களில் புதைகுழிச் சாக்கடைகள் உள்ளன. அவற்றில் இறங்கி அப்புறப்படுத்துவது யார்? அருந்ததிய இளைஞர்கள்தானே. தமிழகம் முழுவதுமுள்ள சுடுகாடுகளில் பிணம் எரிப்பது, புதைப்பதும் யார்? தலித் மக்கள்தானே.
சென்னையில் மட்டும் சாக்கடை அள்ள இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் அங்கு மட்டும் தான் 173 மயானப் பணியாளர்கள் அரசு ஊழியர்கள் ஆக்கப்பட்டுள்ளனர். இதனைத் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்திக் கொண்டுவர வேண்டும் என்கிறோம்.
தரிசு நில, புறம்போக்கு நில விநியோகம் என்றால், தொகுப்பு வீடுகள் கட்டித்தருவது என்றால், அதில் முதல் நபராக அருந்ததியருக்குக் கொடு என்கிறோம். 63 ஆண்டுகால சுதந்திர வாழ்வில் அருந்ததியர் வாழ்நிலை இன்னும் நிமிரவில்லையே? கட்டுவதற்குத் துணியின்றி, குந்தக் குடி சையின்றி பரிதவிக்கிறார்களே.
இந்த அவலத்தைப் போக்க அனைவரும் எழுந்து போராட வேண்டும், தீண்டாமையை ஒழிக்க பாடுபட வேண்டும். இதில் நாங்கள் யாரையும் வேறுபடுத்திக் பார்க்கவில்லை. இந்தியப் பணம் ரூ. 90 லட்சம் கோடி சுவிஸ் வங்கியில் உள்ளதே. இதற்கும் விலைவாசி உயர்வுக்கும் தொடர்பு இல்லையா? தாங்கமுடியாத விலைவாசியால் பல குடும்பங்கள் நொறுங்கிப் போயிருக்க, ஆன்-லைன் வர்த்தக அனுமதியால் பெருமுதலாளிகள் கொள்ளையடிக்கிறார்கள். அதை எதிர்த்த போராட்டத்திலும் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.
இவ்வாறு என்.வரதராஜன் பேசினார்.

உத்தப்புரத்தின் உந்துசக்தியே கோவை வெற்றி

உத்தப்புரத்தின் தீண்டாமைச்சுவரை அகற்றியதில் பெற்ற உந்துசக்தியால்தான் கோவை தீண்டாமைச் சுவரும் உடனடியாக அகற்றப்பட்டு வெற்றி கிட்டியது என்று கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கூறினார்.
கோவை தந்தை பெரியார் நகர் மக்களின் சார்பில் நடந்த நன்றி பாராட்டு விழாவில் அவர் கலந்து கொண்டு பேசியதாவது:
இங்கு பேசிய இரவிக்குமார் தீண்டாமைச்சுவர் உடனடியாக அகற்றப்பட்டது என்றார். இது சும்மா நடக்கவில்லை. மதுரை மாவட்டம் உத்தப்புரத்தில் இருந்த தீண்டாமைச் சுவரை அகற்றியதால் பெற்ற உந்து சக்தியால்தான் இது நடந்தது. உத்தப்புர தீண்டாமைச் சுவரை அகற்றுவதற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் நெடிய போராட்டமும், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதும், உத்தப்புரம் மக்களின் பல நாள் சிறைவாசமும் காரணமாக இருந்தன. உத்தப்புரம் ஒரு கிராமம். ஆனால் கோவை நகர்ப்புறம். கடந்த காலத்தில் இதை கவனிக்கவில்லை. தெரியவந்தவுடன் அதிரடி நடவடிக்கையில் இறங்கினோம்.
இவ்வாறு பி.ஆர்.நடராஜன் பேசினார்.
விழாவில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயலாளர் யு.கே.வெள்ளிங்கிரி, மாநிலக்குழு உறுப்பினர் கே.சி.கருணாகரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கோவை மாவட்ட அமைப்பாளர் யு.கே.சிவஞானம், சிபிஎம் சிங்கை நகரச் செயலாளர் கே.மனோகரன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். நூற்றுக்கணக்கான பொதுமக்கள் விழாவில் பங்கேற்றனர்.

சுவரை உடைத்தது மக்களை ஒன்றுபடுத்தத்தான்!

பஞ்சாலைகளில் மகத்தான கூலிப்போராட்டங்களை நடத்திக் காட்டியவர்கள் கோவை மக்கள். அவர்களை ஒன்றிணைப்பதற்காகவே தீண்டாமைச் சுவர் உடைக்கப்பட்டது என்று தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத் பேசினார்.
கோவை சிங்காநல்லூரில், தந்தை பெரியார் நகர் அருந்ததிய மக்கள் சார்பில் நடந்த பாராட்டு விழாவில் அவர் மேலும் பேசியதாவது:
உடைக்கப்பட்ட தீண்டாமைச்சுவரைப் பார்வையிடுவதற்காக நான் இப்பகுதிக்கு வந்த போது, இம்மக்களின் ஏக்கத்தைக் கண்டேன். சாதியைக் காக்கவும் ஒரு பிள்ளையாரா என்று நெஞ்சம் கலங்கியது. இது ஒடுக்குமுறை அல்லவா?
2007-ம் ஆண்டு மே மாதம் உத்தப்புரம் தீண்டாமைச் சுவரைக் கண்டறிந்து அகற்றக் கோரிய போது முதலில் தமிழக அரசு செவிசாய்க்கவில்லை. மனித உரிமை மறுக்கப்பட்ட தலித் மக்கள் ஆயிரம் பேருடன் பிறபகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஆயிரம் பேரும் திரண்டு மதுரையில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். பின்னர் பிரகாஷ்காரத் நேரில் வருவதாக அறிவித்தவுடன் உடனடியாக அரசு, சுவரின் ஒரு பகுதியை மட்டும் இடித்து வழி ஏற்படுத்தியது. காலம் தாழ்த்தினாலும் சுவரை இடித்த தமிழக அரசைப் பாராட்டினோம்.
கோவை நகரின் இந்த தீண்டாமைச்சுவர் பிரச்சனையிலும் அரசுக்கு உத்தப்புரம் ஞாபகம் வந்திருக்கும். ‘சுவரை இடி, இல்லாவிட்டால் இடிப்போம்,’ என்று நாம் நிர்ப்பந்திப்போம் என்று அறிந்துதான் தமிழக அரசே சுவரை இடித்துள்ளது. இதற்கும் தமிழக முதல்வரைப் பாராட்டுகிறோம்.
இச்செயலை விரைவாகச் செய்தார்கள் என்பதற்காக ‘நானல்லவோ விருந்து படைத்தேன். விருந்து படைத்தோரை விடுத்து, விருந்துண்டோரைப் பாராட்டலாமா?’ என்கிறார் முதல்வர். அடுக்கப்பட்ட மூட்டைகளில் அடிமூட்டையாக உள்ள அருந்ததியர்களுடன் இணைந்து விருந்துண்பதற்காக மகிழ்கிறோம். ஒற்றுமைப்படுத்திப் பேசிய கலைஞரைப் பாராட்டுகிறோம்.
சுவரை இடித்தபோது நானும், என்.வரதராஜனும் திண்டுக்கல்லில் இருந்தோம். தகவலறிந்த ஒரு மணி நேரத்தில் முதல்வரைப் பாராட்டினோம். நாங்கள் சொன்னோம், நீங்கள் செய்தீர்கள். அதனால் பாராட்டுகிறோம். ஆனால் திமுக ஐந்து முறை தமிழகத்தை ஆண்டுள்ளது. கடந்த 40 ஆண்டு கால திராவிட ஆட்சியில் இதுபோன்ற தீண்டாமைச்சுவர்களைக் கண்டறிந்தீரா? தமிழகம் முழுவதும் தீண்டாமை தலைவிரித்தாடுகிறதே? அரசு நிர்வாகத்தில் ஆட்சியர், எஸ்.பி., ஆணையர், தாசில்தார் என்று எத்தனை அதிகாரிகள், நிர்வாக அமைப்புகள்? அதனைக் கொண்டு ஏதேனும் நடவடிக்கை எடுத்தீரா? அந்தப் பொறுப்பேதும் அரசுக்கு இல்லையா? நீங்கள் உங்கள் கடமையைத்தான் செய்தீர்கள். இருந்தாலும் உடனே செய்தீர்கள் என்பதால் பாராட்டினோம். பிறகு ஏன் எரிச்சல்படுகிறீர்கள்?
இங்கு வரும்போது சில பெண்கள் சொன்னார்கள், ‘நாங்கள் ஒரு பாவமும் செய்யவில்லை,’ என்று. நமது வாழ்வை நொறுக்கும் விலைவாசி உயர்வை எதிர்த்துப் போராட விடாமல் தீண்டாமை, சாதிய வேறுபாடுகளைக் காட்டி நம்மைப் பிரிக்கப் பார்த்திருக்கிறார்கள். தற்போது உடைபட்ட சுவர்கள் இந்தியா முழுவதும் அதிர்வை ஏற்படுத்தும். ஆதிக்கச் சுவர்கள் இப்போதே அதிர்ந்துதான் போயுள்ளன. தீண்டாமை அவலம் ஜனநாயகத்திற்கே மிகப்பெரும் சவால்.
இவ்விழா, மகத்தான போராட்டங்களுக்கான கால்கோள் விழா. அரசியல் சட்டத்தின் சிற்பி அம்பேத்கர் சொன்னார்: நான் உருவாக்கிய அரசியல் சட்டம் அமலாகும் போதும் தலித் மக்கள் தீண்டாமைக் கொடுமைக்கு ஆட்படுகிறார்கள். நீங்கள் இச்சட்டங்களை மட்டும் நம்பி நிற்காதீர்கள். ஜனநாயக சக்திகளுடன் ஒன்றுபட்டு போராடுங்கள் என்று அறைகூவி அழைத்தார். அதன்படி மார்க்சிஸ்ட் கட்சி மக்களை ஒன்றுபட்டு நிறுத்தி வென்று காட்டும்.
இவ்வாறு பி.சம்பத் பேசினார்.

கோவை பெரியார் நகர் மக்கள் சார்பில் என்.வரதராஜனுக்கு உணர்ச்சிமிகு வரவேற்பு

கோவை தந்தை பெரியார் நகருக்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜனை, தாரை தப்படையுடன், வாண வேடிக்கை முழங்க ஆரத்தி எடுத்து அருந்ததியர் மக்கள் வரவேற்றனர்.
கோவை, சிங்கை 10-வது வட்டம் தந்தை பெரியார் நகரில் 21 ஆண்டுகாலமாக நீடித்த தீண்டாமைச் சுவர், மற்றும் அதனைக்காக்க வைத்திருந்த பிள்ளையார் சிலை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஆதித்தமிழர் விடுதலை முன்னணி ஆகியவற்றின் தொடர் தலையீட்டிற்குப் பின் தமிழக அரசால் அகற்றப்பட்டது. அருந்ததியர் மக்களின் பயன்பாட்டுக்கு முழுமையாக பொது வழி கிடைத்தது.
இதையடுத்து, தீண்டாமைச் சுவரை அகற்ற பாடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கு நன்றி பாராட்டு விழாவை பெரியார் நகர் அருந்ததியர் மக் களும், ஆதித்தமிழர் விடுதலை முன்னணியினரும் நடத்தினர்.
இப்பாராட்டு விழாவிற்கு, விழாவிற்கு புதனன்று (10.2.2010) மாலை வருகை தந்த என்.வரதராஜன், பி.சம்பத் ஆகியோருக்கு, காமராசர் சாலை முகப்பிலிருந்து அருந்ததிய மக்கள் வரவேற்பளித்தனர். ஜீவா வீதி முதல் பெரியார்நகர் வரை வாழ்த்து தட்டிகள், வாழை மரங்கள் கட்டப்பட்டிருந்தன. திரளான பெண்கள் குலவையிட்டும் ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர். பட்டணம் சங்கே முழங்கு குழுவினரின் ஜமாப் மேளம் மற்றும் பறைகளும் அதிர அதிர முழங்கின. சர வெடிகளை வெடித்து மகிழ்ச்சி ஆரவாரத்துடன் இளைஞர்கள் நடனமாடியபடியே தலைவர்களை வரவேற்று அழைத்துச் சென்றனர்.
விழாவிற்கு பெரியார் நகர் பகுதி பிரமுகர் தண்டபாணி தலைமை வகித்தார். 1989ல் மற்றுமொரு பொதுவழிக்காக போராடிய துடியலூர் வேலுச்சாமி உள்ளிட்டோரை என்.வரதராஜன் சால்வைகள் அணிவித்துப் பாராட்டினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் யு.கே.வெள்ளிங்கிரி, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாநிலக்குழு உறுப்பினர் கே.சி.கருணாகரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட அமைப்பாளர் யு.கே.சிவஞானம், மாநிலக்குழு உறுப்பினர் வி.பெருமாள், தீக்கதிர் துணை ஆசிரியர் கே.கணேஷ், வழக்கறிஞர் வெண்மணி, மார்க்சிஸ்ட் கட்சியின் சிங்கை நகரச் செயலாளர் கே.மனோகரன், மாவட்டக்குழு உறுப்பினர் வி. தெய்வேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் தலைவர்களுக்கு பொதுமக்கள் சார்பில் சால்வைகளும், நினைவுப்பரிசாக புத்தகங்களையும் அளித்து பெரியார் நகர் மக்கள் கவுரவித்தனர். நூற்றுக்கணக்கான பொதுமக்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி ஊழியர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

பழங்குடியினர் பட்டியல் விவகாரம்: முதல்வர் தலையிட கோரிக்கை

பழங்குடியினர் பட்டியல் தொடர்பான விவகாரத்தில் தமிழக முதல்வர் தலையிட வேண்டும் என்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பொதுச்செயலாளர் பெ.சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, தமிழக முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் பெ.சண்முகம் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது:
ஈரோடு மாவட்ட மலையாளி, நரிக்குறவர், குறுமன்ஸ் இனத்தின் உட்பிரிவினர், குறவன் இனத்தின் உட்பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக, அவர்களின் வாழ்வியல் சூழல் குறித்து அறிக்கை அனுப்புமாறு, கடந்த 2001-ஆம் ஆண்டு மத்திய அரசு கேட்டுக் கொண்டது.
அதன் அடிப்படையில், பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தின் ஆய்வுக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழக பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் தமிழகம் முழுவதும் விரிவான ஆய் வினை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அளித்தது. அதன் அடிப்படையில், மேற்கண்ட மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான பரிந்துரையை, 2006ம் ஆண்டு மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பியது.
தற்போது இந்தியப் பதிவாளர் குறுமன்ஸ் இனத்தில் “குறுமன்” என்பதை மட்டும் ஏற்றுக் கொண்டு, இதர உட்பிரிவுகள் அனைத்தையும் ஏற்கத்தக்கதல்ல என்று தமிழக அரசுக்கு தெரிவித்து விட்டதாக அறிகிறோம்.
பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தல் - நீக்கல் குறித்து மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ள வழி முறைகளில் ஒன்றான மூன்று முறை திருப்பி அனுப்பப்பட்டு விட்ட பரிந்துரையை மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை என்ற வழிமுறையைக் காட்டி தள்ளுபடி செய்திருப்பது எந்த விதத்திலும் சரியானதல்ல என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
மேற்படி இனமக்கள் அனைவருமே கடந்த 30 ஆண்டு காலமாக பல்வேறு காலகட்டங்களில் தமிழக அரசால் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க பரிந்துரைக்கப்பட்டு நிலுவையில் வைக்கப்பட்டுள்ளவர்கள், ஒவ்வொரு முறையும் கிடப்பிலே போடுவது அல்லது புதிது புதிதாக விளக்கம் கேட்பது என்ற அணுகுமுறையைத்தான் இந்தியப் பதிவாளர் மேற்கொண்டு வருகிறார்.
எனவே, இந்தப் பிரச்சனையில் தாங்கள் உடன் தலையிட்டு இந்தியப் பதிவாளர் கேட்டுள்ள விளக்கங்களையும், விபரங்களையும் உடன் அனுப்ப ஏற்பாடு செய்வதுடன், தள்ளுபடி செய்யப் பட்டுள்ள குறுமன்ஸ் இனத்தின் உட்பிரிவினரை மீண்டும் பரிசீலிக்க தகுந்த நடவடிக்கை எடுத்து மேற்படி இனமக்கள் அனைவரையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க தங்களின் மேலான தலையீட்டை வேண்டுகிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

வாச்சாத்தி வழக்கு பிப்.26-க்கு ஒத்திவைப்பு

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் வாச்சாத்தி கிராமத்தில் 1992-ம் ஆண்டு மலைவாழ் மக்களைச் சேர்ந்த 18 பெண்களை வனத்துறையினர் பாலியல் கொடுமைப்படுத் தினர். இதுதொடர்பாக வனம், காவல், வருவாய் ஆகிய துறைகளைச் சேர்ந்த 269 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. பின்னர் இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கடந்த 16 ஆண்டுகாலமாக கிருஷ்ணகிரி அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. பிறகு, கடந்த ஆண்டு ஜூன் மாதம் தருமபுரி அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப் பட்டது.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 18 பெண்கள் குறுக்கு விசாரணையில் சாட்சியமளித்தனர். அதன் பின்பு சிறைக்காவலர் லலிதாபாய் சாட்சியம் அளித்தார்.
மாவட்ட அமர்வு நீதி மன்றத்தின் நீதிபதி எஸ்.குமரகுரு தலைமையில் வியாழக்கிழமை(11.2.2010) அன்று மீண்டும் வழக்கின் விசாரணை நடந்தது. சிபிஐ சார்பில் ஏடிஎஸ்பி(ஓய்வு) சாட்சியம் அளித்தார். வனத்துறையினருக்காக வழக்கறிஞர்கள் ஆர்.வெங்கடேசன், விஜயராகவன், அன்பு ஆகியோர் வாதாடினர்.
பிறகு இந்த வழக்கின் அடுத்த விசாரணையை இம்மாதம் 26ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

நரிக்குடி ஒன்றியம், உளுத்திமடை கிராமத்தில் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்திய தலித் மக்களைத் தாக்கிய ஆதிக்கசாதியினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், பாதிக்கப்பட்ட தலித் மக்கள் மீதே வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதைக் கண்டித்தும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நரிக்குடியில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் தேவி தலைமை வகித்தார். கலைவேந்தன் துவக்கவுரை ஆற்றினார். போராட்டத்தை ஆதரித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.முருகேசன் பேசினார். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்கள் வி.முருகன், எஸ்.ஞானகுரு, ஒன்றியச் செயலாளர் ஏ.பி.கண்ணன், பூமிநாதன், அன்புச்செல்வன் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.

வன்கொடுமைகள் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம்: சிவகங்கை ஆட்சியரை இடம்மாற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

தலித்துக்களுக்கு இழைக்கப்படும் வன்கொடுமைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத சிவ கங்கை மாவட்ட ஆட்சியரை மாற்ற வேண்டும் என்று, தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டக்குழு கூட்டம் வி.சௌந்த ரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில், இக்கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
அத்தீர்மானத்தில் இதுபற்றி மேலும் குறிப்பிட்டு இருப்பதாவது:
தீண்டாமை மற்றும் வன்கொடுமைகளுக்கு ஆளாகி பாதிக்கப்படுகிற தலித் மக்கள் கொடுக்கிற புகார்கள் மீது உரிய வழக்குகள் பதிவு செய்யப்படுவதில்லை. பதிவு செய்யப்பட்ட வழக்குகளும் கூட அடுத்த சில மாதங்களில் எம்எஃப் (பொருண்மைத் தவறு) என்று தள்ளுபடி செய் யப்படுகிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைத்தடுப்புச் சட்ட அமலாக்கத்தின் கண்காணிப்பு மற்றும் விழிப்புக்குழுவின் தலைவர் என்ற முறையில் மாவட்ட ஆட்சியர் சிறப்புக் கவனம் செலுத்துவதில்லை. வன்கொடுமை நிகழ்ந்த இடங்களை நேரில் பார்வையிடுவது, வன்கொடுமைக்கு ஆளாகி இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது, தலித் மக்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் மாவட்ட ஆட்சியர் ஈடுபடுவதில்லை.
கடந்த 26.01.2010 குடியரசு தினத்தன்று கிராமசபைக் கூட்டத்திற்கு சென்று கொண்டிருந்த திருப்புவனம் ஒன்றியம் டி.ஆலங்குளம் ஊராட்சி மன்ற (தலித்) பெண் தலைவர் மனோன்மணி என்பவரையும், அவரது கணவரையும் ஆதிக்க சாதியைச்சேர்ந்த ஊராட்சி எழுத்தர் கத்தியால் குத்தி கொலைமுயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவத்தில் காவல்துறை உரிய வழக்கும் பதிவு செய்யவில்லை, குற்றவாளியையும் இதுவரை கைது செய்யவில்லை.
அதேபோல மானாமதுரை ஒன்றியம் வேம்பத்தூர் ஊராட்சி மன்ற (தலித்) தலைவர் முருகன் குடும்பத்தினர் மீது ஆதிக்க சாதியினர் தாக்கியதில் அவரது தம்பி முத்துக்கிருஷ்ணன் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திலும் காவல்துறை உண்மைக் குற்றவாளிகளை விட்டு விட்டதாகத்தெரிகிறது. இத்தகைய தலித் ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீதான வன்கொடுமை தாக்குதல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க, வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படியான கடமைகளை மாவட்ட ஆட்சியர் ஆற்றிடவில்லை.
எனவே சிவகங்கை மாவட்டத்திற்கு செயல்துடிப்புள்ள, ஐஏஎஸ் அதிகாரியை மாவட்ட ஆட்சியராக நியமித்திடுமாறு தமிழக முதல்வரையும், தலைமைச் செயலாளரையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டக்குழு கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் எம்.அர்ச்சுணன், செயற்குழு உறுப்பினர்கள் எ.ஆர்.கே.மாணிக்கம், ஆர்.கே. தண்டியப்பன், எம்.கந்தசாமி, ஆர்.மணியம்மா, ஒன்றியச் செயலாளர்கள் எஸ்.பாண்டி யன், ஏ.ஆர்.மோகன், வி.கருப் பச்சாமி, எ.கிருங்கைச்செல் வன், எஸ்.எம்.பூபதி, கே.அழ கர்சாமி, ஏ.ஜெயராமன், ஏ.சேது ராமன், பி.செல்வராஜ் மற்றும் சாந்தி, ஷேக்முத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

வங்கிக்கடன் கேட்டு நெறிக்குறவர்கள் மனு

திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் பெரும் பண்ணையூரில் வசிக்கும் நெறிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த 14 குடும்பத்தினர், தொழிற்கடன் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டுதலுடன், மாவட்ட ஆட்சியர் எம்.சந்திரசேக ரனை சந்தித்த நெறிக்குறவர் சமூகத் தலைவர் சொ.காளிமுத்து, வங்கிகள் தங்கள் வாழ்க்கை மேம்பாட்டிற்கு உதவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
மாவட்ட ஆட்சியர் அச்சமூகத்தினரின் கோரிக்கையை அக்கறையுடன் ஏற்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

தீண்டாமையால் பாழடைந்த திருப்பூர் தொழிற்பேட்டை !

திருப்பூர் முதலிபாளையம் அருகே சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் தாட்கோ தொழிற்பேட்டை அமைந்துள்ளது. இதில் 99 தொழிற்கூடங்கள் இயங்கிவருகின்றன. முழுக்க ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் தொழில் முன்னேற்றத்திற்காக அமைக்கப்பட்ட இந்த தொழிற்பேட்டை தற்போது பாழடைந்த நிலையில் உள்ளது. பெரும்பாலான இளைஞர்கள் தொழிற்கூடத்தை கைவிட்டுவிட்டனர். தொழிற்கூடங்களை இயக்கி வரும் சிலரும் குறைந்த வேலைவாய்ப்பு சூழலில் தத்தளித்து வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி தொழில் முனைவோர் கூறுகையில் , “இங்கு தொழில் நடத்தும் இளைஞர்கள் பலர் திறமையானவர்களே, இருந்தாலும் வேலை செய்ய போதுமான  ஆர்டர்கள் (வாய்ப்புகள்) கிடைக்கவில்லை. வாய்ப்பு வழங்கக் கூடிய பெரும் தொழில்கள் எல்லாம் ஆதிக்க சாதியினர் வசமே இருக்கின்றன. இதனால் தலித் இளைஞர்கள் ஒருவகை “தொழில் தீண்டா மைக்கு” ஆளாகின்றனர். இதனால் திறமையிருந்தும் சாதியின் காரணமாக தலித் இளைஞர்கள் இழப்பை சந்திக்கின்றனர்” என்று குறிப்பிட்டனர்.

அருந்ததியர் உள்ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த வேண்டும்- பிப்.15-ல் மாநிலம் தழுவிய போராட்டம்

அருந்ததியர் உள்ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் பிப்ரவரி 15-ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் போராட்டங்களை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அருந்ததிய அமைப்புகளின் தலைவர்கள் இப்போராட்டங்களை தலைமை ஏற்று நடத்துவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்கள், கல்லூரி ஆசிரியர்கள், மின்வாரியத் தொழில்நுட்ப உதவியாளர்கள் நியமனங்களில் அருந்ததியர் உள்ஒதுக்கீட்டை தமிழக அரசு அமல்படுத்தாத தைக் கண்டித்தும், அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிலும் அருந்ததியருக்கான உள்ஒதுக்கீட்டை உறுதியாக அமல்படுத்தக் கோரியும், பல மாவட்டங்களில் அருந் ததியினர் பிரிவினருக்கு உரிய சாதிச் சான்றிதழ் வழங்காததைக் கண்டித்தும், தமிழகத்தின் அனைத்து பின்னடைவு காலியிடங்களை உடனடியாக நிரப்பவும், பல்லாயிரக்கணக்கான காலியிடங் களை பூர்த்தி செய்ய வலியுறுத்தியும் பல்வேறு மாவட்டங்களில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.
அதில் பங்கேற்போர் விபரம்:
ஈரோடு  -    பி.சம்பத், எஸ்.எஸ்.சுப்பிரமணியன், பி.பி.பழனிச்சாமி, சக்தி கருப்பசாமி, கே.சென்னியப்பன்.
விருதுநகர்  - கே.பாலபாரதி, கே.சாமுவேல்ராஜ், பி.சுகந்தி, ஜக்கையன்
திருநெல்வேலி - என்.நன்மாறன், ஆர்.கிருஷ்ணன், மரியதாஸ்
திருச்சி  -  எஸ்.கே. மகேந்திரன், எம்.ஜெயசீலன், அண்ணாதுரை,
கோவை - ஜி.லதா, யு.கே.சிவஞானம், ரவிக்குமார், வி.பெருமாள், வெண்மணி
திருப்பூர் - சி.கோவிந்தசாமி, எஸ்.கண்ணன், ராமமூர்த்தி
நாமக்கல் - டில்லிபாபு, துரைசாமி
தருமபுரி - பி.சண்முகம், வெங்கடேசன், வேல்முருகன்
தேனி - ஏ.லாசர், வெங்கடேசன்.
தூத்துக்குடி - க.கனகராஜ், இசக்கிமுத்து
நீலகிரி - சதாசிவம், ஆர்.பத்ரி
சேலம் - கே.எஸ்.கனகராஜ், ஆர்.தர்மலிங்கம்.
ஈரோட்டில் மின்வாரியத் தலைமைப்பொறியாளர் அலுவலகம் முன் பாகவும், திருப்பூரில் மாந கராட்சி அலுவலகம் முன்பும், மற்ற இடங்களில் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் முன்பாகவும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.

காவேரிராஜபுரத்தில் விவசாயிகள் மறியல்

திருவள்ளூர் மாவட்டம் காவேரிராஜபுரத்தில் நீதிபதி தினகரன் ஆக்கிரமித்துள்ள அரசு புறம் போக்கு நிலங்களை மீட்டு அக்கிராமத்தில் உள்ள இருளர் மற்றும் அருந்ததியர் உள்ளிட்ட தலித்துகளுக்கும், நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கும் வழங்க வலியுறுத்தி விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.
திருத்தணியை அடுத்த காவேரிராஜபுரத்தில் அரசுக்கு சொந்தமான நிலங்களை கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி.தினகரன் ஆக்கிரமித்துள்ளார். இந்நிலையில், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை எடுத்து அப்பகுதியில் உள்ள இருளர் மற்றும் அருந்ததியர் உள்ளிட்ட தலித் மக்களுக்கும் நிலமற்ற தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த நான்கு மாதங்க ளாக நிலமீட்பு போராட்டம், ஆர்ப்பாட்டம் என பல்வேறு போராட்டங்களை விவசாயிகள் சங்கத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
வலுவான போராட்டங்களுக்கு பிறகு, நில ஆக்கிரமிப்பு காரணத்திற்காக நீதிபதியின் பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் மத்திய நில அளவை குழுவினர் கடந்த ஒரு மாதமாக நிலத்தை அளந்து வருகின்றனர். நீதிபதிக்கு சொந்தமான பட்டா நிலம், அரசு புறம்போக்கு நிலம் என தனித்தனியாக பிரித்து அளந்து முடித்துள்ளனர்.
இந்த நிலையில் அரசு புறம் போக்கு நிலம் என கருதும் 199.53 ஏக்கர் நிலத்தை முதல் கட்டமாக எடுத்து நிலமற்றவர்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி புதன்கிழமையன்று (பிப்.10) திருவள்ளூர் காமராஜர் சிலை அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் மறியல் நடைபெற்றது.
அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் எஸ்.திருநாவுக்கரசு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.தயாநிதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலகுழு உறுப்பினர் ப.சுந்தரராசன், மாவட்டச் செயலாளர் கே.செல்வராஜ், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.எம்.அனீப், மாவட்டச் செயலாளர் பி.துளசி நாராயணன், மாவட்டப் பொருளாளர் கே.ஆறுமுகம், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் அ.து.கோதன்டன், மாவட்ட துணைச் செயலாளர் பி.நடேசன், மக்கள் வாழ்வாதார மண்ணுரிமை இயக்க மாநிலத் தலைவர் வி.எம்.ராமன், மக்கள் இயக்கத்தின் கூட்டமைப்பு தலைவர் கொல்லாபுரி ஆகியோர் பேசினர். இதில் 300 பெண்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பெ.சண்முகம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செய லாளர் பெ.சண்முகம் பேசியதாவது:-
காவேரிராஜபுரம் நில விவகாரம் சம்மந்தமாக கடந்த மூன்று மாதமாக அரசு அசைவின்றி இருக்கிறது. மத்திய அரசு நில அளவை குழுவை வைத்து நிலங்களை ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நிலம் என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து உச்சநீதிமன்றத்திற்கும், மாநில அரசுக்கும் அறிக்கை அனுப்பிய பிறகு நடவடிக்கை எடுக்க வேண்டும். காலம் தாழ்த்தவே இந்த நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். தமிழக அரசு நிலத்தை எடுத்து ஏழைகளுக்கு வழங்க யாரிடமும் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை. சாதிய சாயம் பூசுவது எல்லாம் பிரச்சனையை திசை திருப்பும் நோக்கமே என்றார்.

தலித் ஊராட்சித்தலைவி மீது கொலைவெறித் தாக்குதல்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் உள்ள டி.ஆலங்குளம் தலித் ஊராட்சித் தலைவரான தன்னையும், தனது கணவரையும் கொடூரமான ஆயுதத்தால் வெட்டிய சாதிவெறியன் மீது மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பாதிக்கப்பட்ட தலித் ஊராட்சித் தலைவர் ம.மனோன்மணி கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர், மதுரையில் புதனன்று (10.2.2010)செய்தியாளர்களிடம் கூறியதாவது:
டி.ஆலங்குளம் ஊராட்சியின் முதல் தலித் பிரதிநிதியாக கடந்த 2006-ஆம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறேன். அப்போது ஊராட்சி மன்ற எழுத்தராக பணிபுரிந்த பா.பாலகுரு என்பவர், நான் தலித் என்பதால் மக்கள் பணி செய்ய விடாமல் தொடர்ந்து தடுத்து வந்தார். மேலும் கடந்த 31.3.2008 அன்று எனது சாதியைச் சொல்லித் திட்டி மானபங்கம் செய்ய முயன்றார். இதுகுறித்து திருப்புவனம் காவல் நிலையத்தில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நட வடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் நான் கொடுத்த புகாரின் அடிப்படையில், எழுத்தர் பாலகுரு, இடமாறுதல் செய்யப்பட்டார். இதனால் அவரும், அவரு டைய அடியாட்களும் தொடர்ந்து மிரட்டி வந்தனர்.
இந்நிலையில் கடந்த 26.1.2010 அன்று குடியரசு தினக்கொடியேற்றி, கிராம சபைக் கூட்டம் நடத்துவதற்காக செல்ல காரில் புறப்பட்டஎன்னை, பாலகுரு சாதியைச் சொல்லித் திட்டி, நீ கொடியேற்றக்கூடாது என்று கூறிக்கொண்டே தான் மறைத்து வைத்திருந்த வாளால் வெட்டினார். இதில் எனக்கும், எனது கணவர் மதிவாணனுக்கும் படுகாயம் ஏற்பட்டது. அப்போது காரின் முன் அமர்ந்திருந்த திருப்புவனம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமலிங்கமும், நானும் காப் பாற்றுங்கள் என சத்தம் போட்டதால் பாலகுரு அங்கிருந்து ஓடிவிட்டார். திருப்புவனம் காவல் நிலையத்தில் சென்று கதறினோம். அவர்கள் முதலுதவி அளித்து மதுரை தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வாக்குமூலம் வாங்கப்பட்டது. ஆனால், எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என முதல் தகவல் அறிக்கையை பார்த்த பின்புதான் தெரியவந்தது.
எம்.பில். படித்துள்ள என்னை மக்கள் பணி செய்யவிடாமல் பாலகுரு தடுப்பது குறித்து பலமுறை புகார் அளித்தும் மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தாக்குதல் நடத்திய பாலகுரு மீது உரிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யாத மானாமதுரை டி.எஸ்.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் குடும்பத்தினருக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண் டும். எங்களுடைய மருத்துவச்செலவு முழுவதையும் தமிழக அரசே ஏற்க வேண்டும்.
இவ்வாறு மனோன்மணி கூறினார்.
இப்பேட்டியின் போது மக்கள் கண்காணிப்பக நிர் வாக இயக்குநர் ஹென்றி டிபேன், வழக்கறிஞர் சி.சே. ராசன், சுப்பு ஆகியோர் உடனிருந்தனர்.

தலித் பிணத்தை எரிக்கவிடாமல் அராஜகம் : கட்டளைப் பட்டியில் தொடரும் தீண்டாமை

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ளது கட்டளைபட்டி கிராமம். இங்கு அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த பழனிச்சாமி (50) கடந்த 8-ம் தேதி இறந்தார். இந்நிலையில் அவரது உடலை அடக்கம் செய்ய  ஏற்பாடு செய்தனர்.
அப்போது திடீரென ஆதிக்க சமூகத்தை சேர்ந்தவர்கள் சுடுகாடு எங்களுக்கு சொந்தமானது. எனவே, தலித் பிணத்தை எரிக்க விடமாட்டோம் என சுடுகாட்டிற்கு வந்து தடுத்தனர். மேலும், இரவோடு இரவாக அந்த இடத்தை சுற்றிலும் கல் ஊன்றி வேலி போடவும் முயற்சி செய்தனர். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர்.
பின்னர் தாசில்தார், டிஎஸ்பி ஆகியோர் இரு தரப்பினரையும் பேச்சு வார்த்தைக்கு அழைத்தனர்.
பேச்சுவார்த்தையில், நிலம் தங்களுக்குச் சொந்தமானது என்று கூறும் ஆதிக்கசாதியினரிடம் அது தொடர்பான பட்டா அல்லது பத்திரம் இருந்தால் தாருங்கள் என்று அதிகாரிகள் கேட்டனர். அதற்கு அவர்கள் தயங்கவே, உரிய ஆதாரம் வழங்கும் வரை ஏற்கனவே உள்ள நடை முறையே தொடரும் என்று ஒப்பந்தம் ஏற்படுத்தினர்.
அருந்ததியர் தரப்பில் ஊர் பெரியவர்கள் கிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன், துரைப்பாண்டி, மாரிச்சாமி ஆகியோர் உட்பட பலர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.
பின்பு காவல்துறையின் பாதுகாப்புடன் பழனிச்சாமியின் உடலை அருந்ததியர் மக்கள் அடக்கம் செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக அருந்ததிய மக்கள் கூறியதாவது:
இந்த இடம் ஊர்ப் பொது இடம்தான். அனைத்து சமூக மக்களும் நீண்ட காலமாக இங்குதான் பிணங்களை எரித்து வருகிறோம். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆதிக்க சமூகத்தை சேர்ந்த ஒருவர் இறந்து விட்டார். அன்றைய தினம் நாங்கள் அனைவரும் திருமண நிகழ்ச்சிக்காக விருதுநகர் சென்று விட்டோம். அதற்கு இறுதி சடங்கு செய்ய நாங்கள் வரவில்லை என்ற கோபத்திலேயே இவ்வாறு செய்கின்றனர். மேலும் எங்களுக்கு தற்போது வரை சுடுகாட்டுக்கு கூரை இல்லை. மழைக் காலங்களில் நனைந்து கொண்டே பெரும் சிரமத்துடன்தான் பிணங்களை எரிக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஏற்கனவே, தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் தலித் மக்களை சுகாதார வளாகத்திற்குள் அழைத்து செல்லும் போராட்டம் இதே கட்டளைப்பட்டியில்தான் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தலித் மக்களுக்கு முழு பாதை கிடைத்தது

கோவை பெரியார் நகரில் தீண்டாமைச்சுவர் இருந்த பகுதியில் பொதுப்பாதையை மறித்தபடி வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை திங்களன்று அதிகாரிகளால் அகற்றப்பட்டு வேறு இடத்தில் வைக்கப்பட்டது. இதனால் அருந்ததியர் மக்களுக்கு முழுமையான பொதுப்பாதை பயன்பாட்டுக்கு வந்தது.
கோவை 10-வது வட்டம் பெரியார் நகரில் கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக அருந்ததியர் மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் அங்கு குடியேறியவுடன் அருகில் உள்ள ஜீவா வீதியில் வசித்து வரும் ஆதிக்க சாதியினர், அப்பொதுவழியில் அருந்ததியர் நுழைவதைத் தடுக்கும் நோக்கில் சுவர் எழுப்பினர்.
பின்னர் சுவரைக் காக்க திடீர் பிள்ளையார் சிலையையும்  வைத்தனர். இதனால் முக்கிய சாலையான காமராசர் சாலையை அடைய அருந்ததியர் மக்கள் நீண்டதூரம் சுற்றித்தான் செல்ல வேண்டியிருந்தது. பலமுறை அம்மக்கள் அரசு நிர்வாகத்தில் முறையிட்டும் எவ்விதப் பலனும் ஏற்படவில்லை. இந்நிலையில் தகவலறிந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் ஆதித்தமிழர் விடுதலை முன்னணி ஆகியவை பாதையை மீட்க களத்தில் இறங்கின.
கடந்த ஜனவரி 29-ம் தேதியன்று கோவை மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ராவிடம் தீண்டாமைச்சுவர் மற்றும் கோவிலை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு அமைப்புகளின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து ஜனவரி 30-ம் தேதியன்று கோவை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் தீண்டாமைச்சுவரை இடித்து அகற்றின. ஆனாலும் ஆதிக்க சக்தி கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கிருந்த பிள்ளையார் கோவில் மட்டும் அகற்றப்படாமல் அவ்விடத்திலேயே நீடித்தது.
இதனால் பொதுப்பாதையை அருந்ததியர் மக்களால் முழுமையாகப் பயன்படுத்த முடியவில்லை. இந்நிலையில் கோட்டாட்சியர் பிரபாகரன் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 6 அன்று தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத் தீண்டாமைச் சுவர் அகற்றப்பட்ட இடத்தைப் பார்வையிட்டார். இதனையடுத்து ஜீவா வீதியை முழுமையாகப் பயன்படுத்த காலதாமதமின்றி நடவடிக்கை எடுத்து உதவுமாறு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் ஞாயிறன்று முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதையடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் பு.உமாநாத் உத்தரவின் பேரில் திங்களன்று பிள்ளையார் சிலை அப்புறப்படுத்தப்பட்டது. முன்னதாக ஆகம முறைப்படி  பிள்ளையார் சிலைக்கு பூசை செய்யப்பட்டது. பின்னர் உடனடியாக சிலையைத் தனியாக எடுத்து, அருந்ததிய மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள சக்தி முத்துமாரியம்மன் கோவில் அருகில் நிறுவப்பட்டது. மாநகராட்சி ஏற்பாடு செய்த அர்ச்சகர்கள் இருவர் பூசைகளைச் செய்தனர். ஏற்கனவே கோவிலுக்கென அமைக்கப்பட்டிருந்த நான்கு தூண்கள், சிறிய மேடை, தகரக்கொட்டகை ஆகியவை இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதனால் முழுமையான பொதுவழி பெரியார் நகர் மக்களுக்கு கிடைத்தது.
கோட்டாட்சியர் பிரபாகரன், தெற்கு வட்டாட்சியர் சுப்பிரமணி யன், மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலர்கள் ரவிச்சந்திரன், புவனேஸ்வரி, 11-வது வட்ட உதவிப் பொறியாளர் கலாவதி உள்ளிட்ட அதிகாரிகளும், மாநகர காவல்துறை உதவி ஆணையர் கோபால் சாமி தலைமையிலான போலீசாரும் சிலை அகற்றப்படும்போது உடனிருந்தனர்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட அமைப்பாளர் யு.கே.சிவஞானம், ஆதித்தமிழர் விடு தலை முன்னணி மாநில அமைப்பாளர் கோவை இரவிக்குமார், மார்க்சிஸ்ட் கட்சியின் சிங்கை நகரச்செயலாளர் கே.மனோகரன் உள்ளிட்ட திரளானோர் குவிந்திருந்தனர்.
முழுமையான பாதை கிடைத்தவுடன் பெரியார் நகர் அருந்ததியர் மக்கள் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர். அவர்கள் மார்க்சிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகளுக்கு மகிழ்வோடு தங்கள் நன்றியையும் தெரிவித்தனர்.

கோவை பெரியார் நகர் விநாயகர் சிலை இடமாற்றம்: மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கையை ஏற்று, கோவை பெரியார் நகரில், அருந்ததிய மக்களுக்கு தடையாக ஏற்படுத்தப்பட்டு இருந்த விநாயகர் சிலையை இடமாற்றம் செய்த தமிழக அரசின் நடவடிக்கையை, கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் வரவேற்றார்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முன்முயற்சியை அடுத்து, கோவை மாநகரம் சிங்காநல்லூர் கிழக்கு மண்டலம் 10-வது வட்டம் பெரியார் நகர் ஜீவா வீதியில் இருந்த தீண்டாமைச் சுவரை 30.01.2010ல் தமிழக அரசு அகற்றியது. எனினும் தீண்டாமைச் சுவரைப் பாதுகாக்கும் நோக்குடன் சுவரின் முன்புறம் ஜீவா வீதியின் நடுப்பகுதியில் வீதியின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை மாற்று இடத்தில் வைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. இப்பின்னணியில், தமிழக முதல்வர் தலையிட்டு பிள்ளையார் சிலையை மாற்று இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுத்ததை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வரவேற்கிறது.
இப்பிரச்சனையில் அவ்வட்டார அருந்ததியர் மக்கள் மற்றும் ஜனநாயகப் பிரிவினர் ஒன்றுபட்டு செயலாற்றியதற்காக நெஞ்சார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான கிராமங்களில் அருந்ததியர் உட்பட தலித் மக்களுக்கு எதிராக ஏராளமான தீண்டாமைக் கொடுமைகளும், ஒடுக்குமுறையும் நிலவுகின்றன. இவற்றுக்கு முடிவு கட்டுவதற்கு உறுதியான தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
இவ்வாறு என்.வரதராஜன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பி.சம்பத்
இப்பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு எடுத்துள்ள சரியான நடவடிக்கைகளை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத்தும் வரவேற்றார்.
மேலும், கடந்த ஆண்டு அக்டோபர் 27 அன்று சென்னையில் அமைப்பின் சார்பில் கோட்டை நோக்கி தலித் - பழங்குடியினர் பேரணி நடத்தி, முதல்வரிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை பட்டியலில் வலியுறுத்தி இருந்தபடி தமிழகத்தில் பரவலாக கிராமங்களில நிலவும் தீண்டாமைக் கொடுமைகளைக் கண்டறிந்து முடிவு கட்டுமாறும், தேசிய தலித், பழங்குடியினர் ஆணையத்தைப் போன்று தமிழ்நாடு தலித் பழங்குடியினர் ஆணையம் அமைத்து அதற்கு சட்டப்பூர்வமான அந்தஸ்தும், அதிகாரமும் அளிக்குமாறும்; தமிழ்நாட்டில் தலித் -பழங்குடி மக்களுக்கு எதிரான தீண்டாமைக் கொடுமைகளுக்கும் வன்கொடுமைகளுக்கும் எதிராக உடனடியாகவும், உறுதியாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறும் பி.சம்பத் தனது அறிக்கையில் வலியுறுத்தினார்.

பிப். 10- பெரியார் நகருக்கு என்.வரதராஜன் வருகை

 கோவையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முயற்சியால் அகற்றப்பட்ட தீண்டாமைச்சுவர் இருந்த பகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன் பிப்ரவரி 10-ம் தேதி நேரில் பார்வையிடுகிறார்.

அவருடன் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் யு.கே.வெள்ளிங்கிரி, கே.சி.கருணாகரன், கே.மனோகரன். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கோவை மாவட்ட அமைப்பாளர் யு.கே.சிவஞானம், ஆதித்தமிழர் விடுதலை முன்னணியின் ரவிக்குமார் ஆகியோரும் செல்கின்றனர்.