வியாழன், 4 மார்ச், 2010

சுவரை உடைத்தது மக்களை ஒன்றுபடுத்தத்தான்!

பஞ்சாலைகளில் மகத்தான கூலிப்போராட்டங்களை நடத்திக் காட்டியவர்கள் கோவை மக்கள். அவர்களை ஒன்றிணைப்பதற்காகவே தீண்டாமைச் சுவர் உடைக்கப்பட்டது என்று தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத் பேசினார்.
கோவை சிங்காநல்லூரில், தந்தை பெரியார் நகர் அருந்ததிய மக்கள் சார்பில் நடந்த பாராட்டு விழாவில் அவர் மேலும் பேசியதாவது:
உடைக்கப்பட்ட தீண்டாமைச்சுவரைப் பார்வையிடுவதற்காக நான் இப்பகுதிக்கு வந்த போது, இம்மக்களின் ஏக்கத்தைக் கண்டேன். சாதியைக் காக்கவும் ஒரு பிள்ளையாரா என்று நெஞ்சம் கலங்கியது. இது ஒடுக்குமுறை அல்லவா?
2007-ம் ஆண்டு மே மாதம் உத்தப்புரம் தீண்டாமைச் சுவரைக் கண்டறிந்து அகற்றக் கோரிய போது முதலில் தமிழக அரசு செவிசாய்க்கவில்லை. மனித உரிமை மறுக்கப்பட்ட தலித் மக்கள் ஆயிரம் பேருடன் பிறபகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஆயிரம் பேரும் திரண்டு மதுரையில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். பின்னர் பிரகாஷ்காரத் நேரில் வருவதாக அறிவித்தவுடன் உடனடியாக அரசு, சுவரின் ஒரு பகுதியை மட்டும் இடித்து வழி ஏற்படுத்தியது. காலம் தாழ்த்தினாலும் சுவரை இடித்த தமிழக அரசைப் பாராட்டினோம்.
கோவை நகரின் இந்த தீண்டாமைச்சுவர் பிரச்சனையிலும் அரசுக்கு உத்தப்புரம் ஞாபகம் வந்திருக்கும். ‘சுவரை இடி, இல்லாவிட்டால் இடிப்போம்,’ என்று நாம் நிர்ப்பந்திப்போம் என்று அறிந்துதான் தமிழக அரசே சுவரை இடித்துள்ளது. இதற்கும் தமிழக முதல்வரைப் பாராட்டுகிறோம்.
இச்செயலை விரைவாகச் செய்தார்கள் என்பதற்காக ‘நானல்லவோ விருந்து படைத்தேன். விருந்து படைத்தோரை விடுத்து, விருந்துண்டோரைப் பாராட்டலாமா?’ என்கிறார் முதல்வர். அடுக்கப்பட்ட மூட்டைகளில் அடிமூட்டையாக உள்ள அருந்ததியர்களுடன் இணைந்து விருந்துண்பதற்காக மகிழ்கிறோம். ஒற்றுமைப்படுத்திப் பேசிய கலைஞரைப் பாராட்டுகிறோம்.
சுவரை இடித்தபோது நானும், என்.வரதராஜனும் திண்டுக்கல்லில் இருந்தோம். தகவலறிந்த ஒரு மணி நேரத்தில் முதல்வரைப் பாராட்டினோம். நாங்கள் சொன்னோம், நீங்கள் செய்தீர்கள். அதனால் பாராட்டுகிறோம். ஆனால் திமுக ஐந்து முறை தமிழகத்தை ஆண்டுள்ளது. கடந்த 40 ஆண்டு கால திராவிட ஆட்சியில் இதுபோன்ற தீண்டாமைச்சுவர்களைக் கண்டறிந்தீரா? தமிழகம் முழுவதும் தீண்டாமை தலைவிரித்தாடுகிறதே? அரசு நிர்வாகத்தில் ஆட்சியர், எஸ்.பி., ஆணையர், தாசில்தார் என்று எத்தனை அதிகாரிகள், நிர்வாக அமைப்புகள்? அதனைக் கொண்டு ஏதேனும் நடவடிக்கை எடுத்தீரா? அந்தப் பொறுப்பேதும் அரசுக்கு இல்லையா? நீங்கள் உங்கள் கடமையைத்தான் செய்தீர்கள். இருந்தாலும் உடனே செய்தீர்கள் என்பதால் பாராட்டினோம். பிறகு ஏன் எரிச்சல்படுகிறீர்கள்?
இங்கு வரும்போது சில பெண்கள் சொன்னார்கள், ‘நாங்கள் ஒரு பாவமும் செய்யவில்லை,’ என்று. நமது வாழ்வை நொறுக்கும் விலைவாசி உயர்வை எதிர்த்துப் போராட விடாமல் தீண்டாமை, சாதிய வேறுபாடுகளைக் காட்டி நம்மைப் பிரிக்கப் பார்த்திருக்கிறார்கள். தற்போது உடைபட்ட சுவர்கள் இந்தியா முழுவதும் அதிர்வை ஏற்படுத்தும். ஆதிக்கச் சுவர்கள் இப்போதே அதிர்ந்துதான் போயுள்ளன. தீண்டாமை அவலம் ஜனநாயகத்திற்கே மிகப்பெரும் சவால்.
இவ்விழா, மகத்தான போராட்டங்களுக்கான கால்கோள் விழா. அரசியல் சட்டத்தின் சிற்பி அம்பேத்கர் சொன்னார்: நான் உருவாக்கிய அரசியல் சட்டம் அமலாகும் போதும் தலித் மக்கள் தீண்டாமைக் கொடுமைக்கு ஆட்படுகிறார்கள். நீங்கள் இச்சட்டங்களை மட்டும் நம்பி நிற்காதீர்கள். ஜனநாயக சக்திகளுடன் ஒன்றுபட்டு போராடுங்கள் என்று அறைகூவி அழைத்தார். அதன்படி மார்க்சிஸ்ட் கட்சி மக்களை ஒன்றுபட்டு நிறுத்தி வென்று காட்டும்.
இவ்வாறு பி.சம்பத் பேசினார்.