மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கையை ஏற்று, கோவை பெரியார் நகரில், அருந்ததிய மக்களுக்கு தடையாக ஏற்படுத்தப்பட்டு இருந்த விநாயகர் சிலையை இடமாற்றம் செய்த தமிழக அரசின் நடவடிக்கையை, கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் வரவேற்றார்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முன்முயற்சியை அடுத்து, கோவை மாநகரம் சிங்காநல்லூர் கிழக்கு மண்டலம் 10-வது வட்டம் பெரியார் நகர் ஜீவா வீதியில் இருந்த தீண்டாமைச் சுவரை 30.01.2010ல் தமிழக அரசு அகற்றியது. எனினும் தீண்டாமைச் சுவரைப் பாதுகாக்கும் நோக்குடன் சுவரின் முன்புறம் ஜீவா வீதியின் நடுப்பகுதியில் வீதியின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை மாற்று இடத்தில் வைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. இப்பின்னணியில், தமிழக முதல்வர் தலையிட்டு பிள்ளையார் சிலையை மாற்று இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுத்ததை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வரவேற்கிறது.
இப்பிரச்சனையில் அவ்வட்டார அருந்ததியர் மக்கள் மற்றும் ஜனநாயகப் பிரிவினர் ஒன்றுபட்டு செயலாற்றியதற்காக நெஞ்சார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான கிராமங்களில் அருந்ததியர் உட்பட தலித் மக்களுக்கு எதிராக ஏராளமான தீண்டாமைக் கொடுமைகளும், ஒடுக்குமுறையும் நிலவுகின்றன. இவற்றுக்கு முடிவு கட்டுவதற்கு உறுதியான தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
இவ்வாறு என்.வரதராஜன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பி.சம்பத்
இப்பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு எடுத்துள்ள சரியான நடவடிக்கைகளை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத்தும் வரவேற்றார்.
மேலும், கடந்த ஆண்டு அக்டோபர் 27 அன்று சென்னையில் அமைப்பின் சார்பில் கோட்டை நோக்கி தலித் - பழங்குடியினர் பேரணி நடத்தி, முதல்வரிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை பட்டியலில் வலியுறுத்தி இருந்தபடி தமிழகத்தில் பரவலாக கிராமங்களில நிலவும் தீண்டாமைக் கொடுமைகளைக் கண்டறிந்து முடிவு கட்டுமாறும், தேசிய தலித், பழங்குடியினர் ஆணையத்தைப் போன்று தமிழ்நாடு தலித் பழங்குடியினர் ஆணையம் அமைத்து அதற்கு சட்டப்பூர்வமான அந்தஸ்தும், அதிகாரமும் அளிக்குமாறும்; தமிழ்நாட்டில் தலித் -பழங்குடி மக்களுக்கு எதிரான தீண்டாமைக் கொடுமைகளுக்கும் வன்கொடுமைகளுக்கும் எதிராக உடனடியாகவும், உறுதியாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறும் பி.சம்பத் தனது அறிக்கையில் வலியுறுத்தினார்.
வியாழன், 4 மார்ச், 2010
கோவை பெரியார் நகர் விநாயகர் சிலை இடமாற்றம்: மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்பு
லேபிள்கள்:
இடமாற்றம்,
என்.வரதராஜன்,
பி.சம்பத்,
பிள்ளையார் சிலை,
வரவேற்பு