கோவை பெரியார் நகரில் நடைபெற்ற பாராட்டு விழாவில், ஆதித்தமிழர் விடுதலை முன்னணியின் மாநில அமைப்பாளர் கோவை இரவிக்குமார் பேசியதாவது:
25 ஆண்டுகாலமாக அருந்ததியர் உள்இடஒதுக்கீட்டு கோரிக்கை சமூகத் தளத்தில் இருந்தது. அதனை பொதுத்தளத்தில் எதிரொலித்து வெற்றியை ஈட்டித்தந்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான். தீண்டாமை ஒழிப்பு முன்னணி உருவான போது மற்ற கட்சிகளில் உள்ளது போன்று தலித் மக்களுக்கு பதவி தந்து கவுரவப்படுத்தும் ஓர் அமைப்பு என்றே நினைத்தோம். ஆனால் தலித் அல்லாதோரும் பொறுப்பேற்று, உருவான நான்காண்டு காலத்தில் எங்கு அநீதி நடந்தாலும் அருந்ததியர் இயக்கங்களுடன் இணைந்து களம் காண்கிறது.
கத்தியின்றி, ரத்தமின்றி பெரும் போராட்டங்களின்றி தீண்டாமைச்சுவர் வெற்றிகரமாக அகற்றப்பட்டது. நாங்கள் போராடிய போதும், முறையிட்ட போதும் அரசு கேட்கவில்லை. உத்தப்புரத்தை ‘உத்தமபுரமாக’ மாற்றுவதாகச் சொன்ன முதல்வர், மார்க்சிஸ்ட் கட்சி தலையிட்டதும் நடவடிக்கை எடுத்தார். ஆதித்தமிழர் விடுதலை முன்னணி சார்பில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேற்கு மாவட்டங்களில் இதேபோன்ற சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எங்களுடன் தோளோடு தோள் நின்று போராட வாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு ரவிக்குமார் பேசினார்.