கோவை பெரியார் நகரில் தீண்டாமைச்சுவர் இருந்த பகுதியில் பொதுப்பாதையை மறித்தபடி வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை திங்களன்று அதிகாரிகளால் அகற்றப்பட்டு வேறு இடத்தில் வைக்கப்பட்டது. இதனால் அருந்ததியர் மக்களுக்கு முழுமையான பொதுப்பாதை பயன்பாட்டுக்கு வந்தது.
கோவை 10-வது வட்டம் பெரியார் நகரில் கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக அருந்ததியர் மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் அங்கு குடியேறியவுடன் அருகில் உள்ள ஜீவா வீதியில் வசித்து வரும் ஆதிக்க சாதியினர், அப்பொதுவழியில் அருந்ததியர் நுழைவதைத் தடுக்கும் நோக்கில் சுவர் எழுப்பினர்.
பின்னர் சுவரைக் காக்க திடீர் பிள்ளையார் சிலையையும் வைத்தனர். இதனால் முக்கிய சாலையான காமராசர் சாலையை அடைய அருந்ததியர் மக்கள் நீண்டதூரம் சுற்றித்தான் செல்ல வேண்டியிருந்தது. பலமுறை அம்மக்கள் அரசு நிர்வாகத்தில் முறையிட்டும் எவ்விதப் பலனும் ஏற்படவில்லை. இந்நிலையில் தகவலறிந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் ஆதித்தமிழர் விடுதலை முன்னணி ஆகியவை பாதையை மீட்க களத்தில் இறங்கின.
கடந்த ஜனவரி 29-ம் தேதியன்று கோவை மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ராவிடம் தீண்டாமைச்சுவர் மற்றும் கோவிலை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு அமைப்புகளின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து ஜனவரி 30-ம் தேதியன்று கோவை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் தீண்டாமைச்சுவரை இடித்து அகற்றின. ஆனாலும் ஆதிக்க சக்தி கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கிருந்த பிள்ளையார் கோவில் மட்டும் அகற்றப்படாமல் அவ்விடத்திலேயே நீடித்தது.
இதனால் பொதுப்பாதையை அருந்ததியர் மக்களால் முழுமையாகப் பயன்படுத்த முடியவில்லை. இந்நிலையில் கோட்டாட்சியர் பிரபாகரன் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 6 அன்று தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத் தீண்டாமைச் சுவர் அகற்றப்பட்ட இடத்தைப் பார்வையிட்டார். இதனையடுத்து ஜீவா வீதியை முழுமையாகப் பயன்படுத்த காலதாமதமின்றி நடவடிக்கை எடுத்து உதவுமாறு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் ஞாயிறன்று முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதையடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் பு.உமாநாத் உத்தரவின் பேரில் திங்களன்று பிள்ளையார் சிலை அப்புறப்படுத்தப்பட்டது. முன்னதாக ஆகம முறைப்படி பிள்ளையார் சிலைக்கு பூசை செய்யப்பட்டது. பின்னர் உடனடியாக சிலையைத் தனியாக எடுத்து, அருந்ததிய மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள சக்தி முத்துமாரியம்மன் கோவில் அருகில் நிறுவப்பட்டது. மாநகராட்சி ஏற்பாடு செய்த அர்ச்சகர்கள் இருவர் பூசைகளைச் செய்தனர். ஏற்கனவே கோவிலுக்கென அமைக்கப்பட்டிருந்த நான்கு தூண்கள், சிறிய மேடை, தகரக்கொட்டகை ஆகியவை இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதனால் முழுமையான பொதுவழி பெரியார் நகர் மக்களுக்கு கிடைத்தது.
கோட்டாட்சியர் பிரபாகரன், தெற்கு வட்டாட்சியர் சுப்பிரமணி யன், மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலர்கள் ரவிச்சந்திரன், புவனேஸ்வரி, 11-வது வட்ட உதவிப் பொறியாளர் கலாவதி உள்ளிட்ட அதிகாரிகளும், மாநகர காவல்துறை உதவி ஆணையர் கோபால் சாமி தலைமையிலான போலீசாரும் சிலை அகற்றப்படும்போது உடனிருந்தனர்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட அமைப்பாளர் யு.கே.சிவஞானம், ஆதித்தமிழர் விடு தலை முன்னணி மாநில அமைப்பாளர் கோவை இரவிக்குமார், மார்க்சிஸ்ட் கட்சியின் சிங்கை நகரச்செயலாளர் கே.மனோகரன் உள்ளிட்ட திரளானோர் குவிந்திருந்தனர்.
முழுமையான பாதை கிடைத்தவுடன் பெரியார் நகர் அருந்ததியர் மக்கள் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர். அவர்கள் மார்க்சிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகளுக்கு மகிழ்வோடு தங்கள் நன்றியையும் தெரிவித்தனர்.
வியாழன், 4 மார்ச், 2010
தலித் மக்களுக்கு முழு பாதை கிடைத்தது
லேபிள்கள்:
கோவை,
பிள்ளையார் சிலை அகற்றம்,
பெரியார் நகர்,
மக்கள் மகிழ்ச்சி