கோவை தந்தை பெரியார் நகருக்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜனை, தாரை தப்படையுடன், வாண வேடிக்கை முழங்க ஆரத்தி எடுத்து அருந்ததியர் மக்கள் வரவேற்றனர்.
கோவை, சிங்கை 10-வது வட்டம் தந்தை பெரியார் நகரில் 21 ஆண்டுகாலமாக நீடித்த தீண்டாமைச் சுவர், மற்றும் அதனைக்காக்க வைத்திருந்த பிள்ளையார் சிலை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஆதித்தமிழர் விடுதலை முன்னணி ஆகியவற்றின் தொடர் தலையீட்டிற்குப் பின் தமிழக அரசால் அகற்றப்பட்டது. அருந்ததியர் மக்களின் பயன்பாட்டுக்கு முழுமையாக பொது வழி கிடைத்தது.
இதையடுத்து, தீண்டாமைச் சுவரை அகற்ற பாடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கு நன்றி பாராட்டு விழாவை பெரியார் நகர் அருந்ததியர் மக் களும், ஆதித்தமிழர் விடுதலை முன்னணியினரும் நடத்தினர்.
இப்பாராட்டு விழாவிற்கு, விழாவிற்கு புதனன்று (10.2.2010) மாலை வருகை தந்த என்.வரதராஜன், பி.சம்பத் ஆகியோருக்கு, காமராசர் சாலை முகப்பிலிருந்து அருந்ததிய மக்கள் வரவேற்பளித்தனர். ஜீவா வீதி முதல் பெரியார்நகர் வரை வாழ்த்து தட்டிகள், வாழை மரங்கள் கட்டப்பட்டிருந்தன. திரளான பெண்கள் குலவையிட்டும் ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர். பட்டணம் சங்கே முழங்கு குழுவினரின் ஜமாப் மேளம் மற்றும் பறைகளும் அதிர அதிர முழங்கின. சர வெடிகளை வெடித்து மகிழ்ச்சி ஆரவாரத்துடன் இளைஞர்கள் நடனமாடியபடியே தலைவர்களை வரவேற்று அழைத்துச் சென்றனர்.
விழாவிற்கு பெரியார் நகர் பகுதி பிரமுகர் தண்டபாணி தலைமை வகித்தார். 1989ல் மற்றுமொரு பொதுவழிக்காக போராடிய துடியலூர் வேலுச்சாமி உள்ளிட்டோரை என்.வரதராஜன் சால்வைகள் அணிவித்துப் பாராட்டினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் யு.கே.வெள்ளிங்கிரி, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாநிலக்குழு உறுப்பினர் கே.சி.கருணாகரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட அமைப்பாளர் யு.கே.சிவஞானம், மாநிலக்குழு உறுப்பினர் வி.பெருமாள், தீக்கதிர் துணை ஆசிரியர் கே.கணேஷ், வழக்கறிஞர் வெண்மணி, மார்க்சிஸ்ட் கட்சியின் சிங்கை நகரச் செயலாளர் கே.மனோகரன், மாவட்டக்குழு உறுப்பினர் வி. தெய்வேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் தலைவர்களுக்கு பொதுமக்கள் சார்பில் சால்வைகளும், நினைவுப்பரிசாக புத்தகங்களையும் அளித்து பெரியார் நகர் மக்கள் கவுரவித்தனர். நூற்றுக்கணக்கான பொதுமக்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி ஊழியர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
வியாழன், 4 மார்ச், 2010
கோவை பெரியார் நகர் மக்கள் சார்பில் என்.வரதராஜனுக்கு உணர்ச்சிமிகு வரவேற்பு
லேபிள்கள்:
உணர்ச்சிமிகு வரவேற்பு,
கோவை,
பாராட்டு விழா,
பெரியார் நகர்