செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

கோபி அருகே அருந்ததியர்கள் மீது கொடூரத்தாக்குதல்: ஆட்சியரிடம் முறையீடு

கோபிசெட்டிபாளையத்தை அடுத்த புள்ளப்பநாயக்கன்பாளையம் ஏழூரில் அருந்ததிய மக்கள் 4 பேர் மீது ஆதிக்க சாதியினர் கொடூரத் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து ஆதிக்க சாதியினரிடமிருந்து தங்களது உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி தலித் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

ஈரோடு மாவட்டம், கோபி வட்டத்தில் உள்ளது புள்ளப்பநாயக்கன்பாளையம் கிராமம். இதையடுத்த ஏழூரில் சுமார் 150 அருந்ததிய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 29.12.09 அன்று அச்சமூகத்தை சேர்ந்த ஒருவர் சாலை

யோரம் சிறுநீர்கழிக்கச் சென்றுள்ளார். அப்போது அருகில் இருந்த அரவை மில் உரிமையாளர் ஒருவர் அவரை சாதிப் பெயரை கூறி தரக்குறைவாக திட்டியதுடன் கொலைமிரட்டலும் விடுத்துள்ளார். இதுகுறித்து பங்களாப்புதூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் கொடுத்த புகாரை வாபஸ் பெறவேண்டும் என்று ஆதிக்க சாதியினர் தலித் மக்களை மிரட்டியதாகத் தெரிகிறது. இதையடுத்து அவர்கள் சமாதான பேச்சு வார்த்தைக்கு உடன்பட்டனர்.

இந்நிலையில் பேச்சுவார்த்தைக்கு உடன்படாத தலித் மக்கள் 4 பேர் மீது 15 பேர் கொண்ட ஆதிக்கசாதிக் கும்பல் கொடூரத் தாக்குதல் நடத்தியது. இதில் பாதிக்கப்பட்ட அவர்கள் நால்வரும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்டவர்கள் 15 பேர் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று கோரியும் பாதிக்கப்பட்ட அருந்ததிய இன மக்கள் பங்களாப்புதூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். ஆனால் இதுவரை அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இப்பிரச்சனை காரணமாக தாங்கள் எப்போதும் உயிர் பயத்துடனேயே வாழ்ந்து வருவதாக தலித் மக்கள் கூறினர். எனவே, மீண்டும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்கவும், தங்கள் உயிருக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் 11.01.10 திங்களன்று அவர்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இப்பகுதி மக்கள் பெரும்பாலும் விவசாயக் கூலிகளாவர். அவர்கள் ஆதிக்க சாதியினரின் தோட்டங்களிலும், வயல்களிலுமே வேலைபார்க்க வேண்டிய நிலை இருந்து வருகிறது. ஆனால் தற்போது இச்சம்பவம் காரணமாக பெரும் பாலும் ஆதிக்கசாதியினர் வேலை கொடுக்க மறுத்து விடுவதாகவும், இதனால் தங்கள் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டு செய்வதறியாது தவித்து வருவதாகவும் அவர்கள் கூறினர்.

அம்பேத்கர் வேலைவாய்ப்பு மையத்தில் பயிற்சி துவங்கியது

கோவையில், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் டாக்டர் அம்பேத்கர் கல்வி, வேலைவாய்ப்பு பயிற்சி மையம் துவக்கப்பட்டுள்ளது. இதில் அரசு வேலை- போட்டித் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள், 10.01.2010 அன்று துவங்கியது.

கோவை சரோஜ் நிலையத்தில் (கோவைப் பகுதி ஆயுள் காப்பீட்டு ஊழியர் சங்க அலுவலகம்) நடைபெற்ற பயிற்சி வகுப்புத் துவக்க விழாவில், பயிற்சி பெற வந்த மாணவர்களை கோவை மாவட்ட அமைப்பாளர் யு.கே.சிவஞானம் வாழ்த்திப் பேசினார். மையத்தின் ஒருங்கிணைப்பாளரும், தீக்கதிர் நாளிதழ் துணை ஆசிரியருமான க.கணேஷ் நோக்கங்களை விளக்கினார்.

பயிற்சி மையத்தில் முதல் கட்டமாக ஏப்ரல்-11ல் நடைபெற உள்ள தமிழக அரசுப் பணி தேர்வாணையத்தின் குரூப்-2 தேர்

வுக்காக பயிற்சி அளிக்கப்படுகிறது. வரலாறு, கணிதம், அறிவியல், தமிழ் மற்றும் பொது அறிவுக்கான அனைத்து பாடங்

களுக்கும் தனித்தனி வகுப்புகள் நடைபெற உள்ளன. முதல் நாள் துவக்க பயிற்சி வகுப்பிலேயே தலித் மற்

றும் அருந்ததியப் பகுதியை சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

பயிற்சி வகுப்பு துவக்கத்தில் அகில இந்திய ஆயுள் காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் கோவைப் பகுதி செயலாளர் வி.சுரேஷ், தலைவர் எம்.கஜேந்திரன், பொருளாளர் மணிகண்டன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ.

நெல்சன் பாபு, மாவட்டக் குழு உறுப்பினர் என்.ஜாகீர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாக வழக்கறிஞர் வெண்மணி உள்ளிட்டோர் பங்கேற்று தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

தீண்டாமைக்கெதிரான உறுதியான போராட்டம்: ஜி.ராமகிருஷ்ணன் பெருமிதம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்ட பேரவைக் கூட்டம், நாகை புளு ஸ்டார் திருமண மண்டபத்தில் சனிக்கிழமையன்று (9.1.2010) நடைபெற்றது.

மாவட்டக்குழு உறுப்பினர்கள், ஒன்றியச்செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள், இடைக்குழு உறுப்பினர்கள் பேரவையில் பங்கு பெற்றனர். பேரவைக் கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் ஏ.வி.முருகையன் தலைமை வகித்தார். இதில் பங்கேற்ற கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ‘இன்றைய அரசியல் நிலைமை’ என்னும் பொருளில் சிறப்புரையாற்றினார்.

அப்போது வேதாரண்யம் ஒன்றியம், வாட்டாக்குடி கிராமத்தில் தலித்துகளுக்காகத் தனி மயானம் வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடி சமத்துவ மயானம் பெற்றது; செட்டிப்புலம் சிவன் கோயிலில் தலித் மக்கள் ஆலய நுழைவு செய்தது, வாலிபர் சங்கப் போராட்டத்தால் செம்பனார்கோயில் ஒன்றியம் மாத்தூர் மாரியம்மன் கோயிலில் தலித் மக்கள் ஆலய நுழைவு செய்தது ஆகியவை தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி அண்மைக் காலத்தில் பெற்ற வெற்றிகள் என்று ஜி.ராமகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

இப்பேரவையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நாகை மாலி, பி.வைரன், எம்.நடராஜன், எம்.காத்தமுத்து, டி.கணேசன், கோவை சுப்பிரமணியன், ஜி.கலைச்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தலித் இளைஞர்கள் மீது பொய் வழக்கு : மதுக்கூரில் மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் ஒன்றியம், மதுரபாஷானபுரம் கிராமத்தில் ஆதிக்க சாதியினரால் தாக்குதலுக்கு உள்ளான தலித் இளைஞர்கள் மீதே பொய் வழக்கு போட்டுள்ள காவல்துறையினரைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுக்கூர் பேருந்து நிலையத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.காசிநாதன் தலைமை தாங் கினார். தலித் இளைஞர்களை அரிவாளால் வெட்டிய ஆதிக்க சாதியினரை இதுவரை கைது செய்யாததைக் கண்டித்தும், பாதிக்கப்பட்டவர்கள் மீதே பொய் வழக்கு போட்டதைக் கண்டித்தும், சம்பந்தப்பட்டவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதியவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் சின்னை.பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.பக்கிரிசாமி, ஒன்றியச் செயலாளர் எஸ்.சாம்பசிவம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கே.ரகு நாதன், பி.சக்திவேல், ஜி.பெரமையன், எஸ்.தங்கவேல், எம்.கைலாசம், பி.ஜீவா, எம்.முருகேசன், ஏ.எஸ்.அருளானந்து, வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் வாசு உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திண்டிவனம் வட்டாரத்தில் பல்வேறு வடிவங்களில் தீண்டாமை

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டத்தில், பலவடிவங்களில் தீண்டாமைக் கொடுமை நிலவுகிறது.

மயிலம் ஒன்றியத்தில் உள்ள ரெட்டணை கிராமம், வெண்ணியம்மன் கோயிலுக்குள் தலித் மக்கள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், காலங்காலமாக தலித்மக்கள் வைக்கும் ஊரணிப்பொங்கல் பானையை உயர்சாதி வகுப்பினர் வசிக்கும் தெருக்களின் வழியாக எடுத்துச் செல்லவும் தடை செய்யப்பட்டுள்ளது.

ரெட்டணை, நெடி, மோழியனூர் ஆகிய கிராமங்களில் உள்ள அரசு சமூகக் கூடங்களிலும், தனியார் திருமண மண்டபங்களிலும் திருமணம், மஞ்சள்நீர் போன்ற சுப காரியங்கள் நடத்த தலித் மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

நெடி கிராமத்தில் உள்ள அய்யனாரப்பன் ஆலயத்திற்குள் தலித் மக்களை வழிபாடு நடத்த அனுமதிப்பதில்லை. காலங்காலமாக தலித் மக்கள் நடத்தி வந்த தெப்பத் திருவிழாவை நடத்த கடந்த ஏழு, எட்டு ஆண்டுகளாக அனுமதி மறுக்கப்படுகிறது.

ஆலகிராமம் நொளம்பூர், பாதிராப்புலியூர் ஆகிய கிராமங்களில் உள்ள திரௌபதியம்மன் கோயில் திருவிழாவில் கலந்து கொள்ள தலித் மக்களுக்கு அனுமதிக்கப்படுவதில்லை.

அவ்வையார்குப்பம் மதுரா பெரியாண்டப்பட்டில் உள்ள தலித்துக்களுக்கு சொந்தமான சுடுகாட்டை ஆதிக்க சாதியினர் முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளனர்.

பெரமண்டூர் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோயிலில் தலித் மக்கள் வழிபட அனுமதி மறுக்கப்படுகிறது.

இதேபோல் திண்டிவனம் தாலுகா முழுவதிலும் உள்ள பஞ்சாயத்துகளில் பெரும்பாலான தலித் பஞ்சாயத்து தலைவர்கள் சுயமாக செயல்பட முடியாத நிலைதான் உள்ளது. அதுமட்டுமல்ல அரசு அதிகாரிகள் மத்தியிலும் தலித் பஞ்சாயத்து தலைவர்கள் மதிக்கப்படுவதில்லை.

எனவே, இத்தகைய கொடுமைகளுக்கு முடிவுகட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், 26.01. 2010 அன்று போராட்டத்திற்குத் திட்டமிட்டுள்ளது.

இதன்படி நெடி கிராமத்தில் உள்ள அய்யானாரப்பன் ஆலயத்தில் பொங்கலிட்டு நேர்த்திக்கடன் செய்வது என்று வாலிபர் சங்கம் தீர்மானித்துள்ளது.

முன்னதாக தீண்டாமை ஒழிப்பு ஆயத்த மாநாட்டை, வாலிபர் சங்கம் நடத்தியது. சங்கத்தின் மயிலம் ஒன்றியக்குழுத் தலைவர்ஒன்றிய தலைவர் எம்.கலைச்செல்வன் தலைமை தாங்கினார். மாநாட்டை துவக்கி வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.ஆனந்தன் பேசினார். ஒன்றியச் செயலாளர் ஆய்வறிக்கையை சமர்ப்பித்தார். ஒன்றிய துணைச்செயலாளர் தே.சத்தியராஜ் வரவேற்புரையாற்றினார்.

மாநாட்டை வாழ்த்தி, தமிழ்நாடு பார்கவுன்சில் உறுப்பினர் ஏ.கோதண்டம், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.முத்துக்குமரன், மாவட்டத் தலைவர் ஆர்.கண்ணப்பன், மாவட்டச் செயலாளர் எம்.செந்தில், வட்டச்செயலாளர் கே.முனியாண்டி, ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் செந்தில்குமார், தலைவர் மணிமாறன், வி.சி.டி.எஸ். நிறுவனர் எஸ்.மார்ட்டின் உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர்.

வாலிபர் சங்க மாநில துணைச்செயலாளர் ஆர்.வேல்முருகன் நிறைவுரையாற்றினார். ஒன்றிய துணைச்செயலாளர் எஸ்.காளி தாஸ் நன்றி கூறினார்.

தீண்டாமைக் கொடுமையை தடுக்கும் திட்டம் ஆளுநர் உரையில் இல்லை

ஆதிதிராவிட சமுதாயத்தைச் சார்ந்த தொழில் முனைவோருக்கு வழங்கப்பட்ட ரூபாய் 83 கோடி அசல் மற்றும் வட்டி ரத்து செய்யப்பட்டிருப்பதை வரவேற்கின்றோம். அதே நேரத்தில் தலித் மக்களுக்கான சமூக நீதி மறுக்கப்பட்டு, தமிழகத்தில் 7 ஆயிரத்திற்கும் அதிகமான கிராமங்களில் தீண்டாமைக் கொடுமை பல வடிவங்களில் தொடர்வதைத் தடுப்பது குறித்து இவ் வுரையில் ஏதுமில்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என்று சட்டப் பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன் பேசினார்.

தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் மீதான விவாதத்தில் பங்கேற்று மகேந்திரன் எம்எல்ஏ மேலும் பேசியிருப்பதாவது:

கடந்த 2009 செப்டம்பர் 30-ம் தேதி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக பல போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது விழுப்புரம் மாவட்டம், காங்கியனூர் திரௌபதியம்மன் ஆலயத்திற்குள் தலித் மக்களை வழிபாட்டிற்கு அழைத்துச் சென்ற அன்றைய விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், குடியாத்தம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜி.லதா உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் காவல் துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டனர்.

இதில் சட்டமன்ற உறுப்பினர் ஜி.லதா கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி விழுப்புரம் அரசு மருத்துவமனையிலும் பின்னர் வேலூர் சி.எம்.சி மருத்துவமனையிலும், உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு பல நாட்கள் சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டது.

தலித் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக போராடிய இவர்கள் மீது தாக்குதல்கள் நடத்திய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழக முதல்வரை சந்தித்து மனு கொடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை நடவ டிக்கை எடுக்காதது மிகவும் கண்டனத்திற்குரியது. மேலும் தமிழகம் முழுவதும் தீண்டாமைக் கொடுமையை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அருந்ததியர்

உள்ஒதுக்கீடு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அருந்ததியர் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று அருந்ததிய மக்களுக்கு 3 சதவிகித உள்ஒதுக்கீடு வழங்கிய காரணத்தினால் கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கையில் அருந்ததியினர் பலன டைந்துள்ளனர். அதே நேரத்தில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களிலும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதிலும் உயர்நீதிமன்றம் சென்றுதான் உரிமையை நிலைநாட்ட வேண்டியுள்ளது என்பதையும் நினைவூட்ட வேண்டியுள்ளது. எனவே உள்ஒதுக்கீட்டை அரசின் அனைத்துத் துறைகளிலும் அமலாக்கிட வேண்டும்.

பழங்குடியினர்

சான்றிதழ்

பழங்குடியின மக்களில், பெற்றோர்கள் சாதிச்சான்றிதழ் பெற்றிருந்தால், அவர்களது பிள்ளைகளுக்கும் அதே சாதிச் சான்று வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது. ஆனால், வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் சாராட்சியர் இதனை ஏற்க மறுக்கிறார். மாவட்ட ஆட்சியர்- மாவட்ட கண்காணிப்புக் குழு, சான்றிதழ் வழங்கிடலாம் என்று பரிந்துரை செய்துள்ளார். அப்படியிருந்தும், சாராட்சியர் மறுக்கிறார். இப்பிரச்சனையில் அரசு தலையிட வேண்டும். இதேபோல குறுமன்ஸ், குறவன் போன்ற சமூகத்தினருக்கும் சாதிச்சான்று வழங்கும் பிரச்சனையில் அரசு தலையிட வேண்டும்.

இவ்வாறு மகேந்திரன் பேசினார்.

தலித் பிணத்தை பொதுப்பாதையில் கொண்டு செல்ல முடியாத அவலம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட 4-வது வார்டு பகுதி வளையமாபுரம். இங்குள்ள பொதுப்பாதை வழியாக, தலித்துக்களின் பிணங்களை எடுத்துச்செல்ல, ஆதிக்க சாதியினர் நீண்ட காலமாக தடை விதித்து வைத்துள்ளனர்.

இதையடுத்து, இக்கொடுமையை எதிர்த்தும், தலித் மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் வெள்ளிக்கிழமையன்று வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தின.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத் தலைமையேற்று சிறப்புரையாற்றினார். அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் கோ.வீரய்யன் நிறைவுரையாற்றினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஐ.வி.நாகராஜன், முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் கே.ரங்க சாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெ.நாவலன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர்.மோகன், கே.கைலாசம், ஆர்.லட்சுமி, எஸ்.நவமணி, ஒன்றியச் செயலாளர்கள் கே.சுப்பிரமணியன் (வலங்கைமான்), எப்.கெரக்கோரியா (குடவாசல்), பி.கந்தசாமி (நீடாமங்கலம்), விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் என்.இராதா, வளையமாபுரம் கிராம நிர்வாகிகள் ஜி.ராசு, வி.சேகர், கலியபெருமாள், சாந்தா, லதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக வலங்கைமான் பயணிகள் விடுதி அருகிலிருந்து 200 பெண்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக புறப்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் வந்தனர்.

தலித் மக்களின் உரிமைகளை தடுக்கும் சட்டவிரோத சக்திகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; இந்தக் கடமையைச் செய்யத் தவறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நேரடி நடவடிக்கையில் ஈடுபடுவோம் என ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய தலைவர்கள் எச்சரித்தனர்.

போராட்டத்தின் போது பெய்த கனமழையையும் பொருட்படுத்தாது எழுச்சியுடன் மக்கள் பங்கேற்றனர். ( தீக்கதிரில் 8.1.2010 அன்று வெளியான செய்தி)