செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

தீண்டாமைக் கொடுமையை தடுக்கும் திட்டம் ஆளுநர் உரையில் இல்லை

ஆதிதிராவிட சமுதாயத்தைச் சார்ந்த தொழில் முனைவோருக்கு வழங்கப்பட்ட ரூபாய் 83 கோடி அசல் மற்றும் வட்டி ரத்து செய்யப்பட்டிருப்பதை வரவேற்கின்றோம். அதே நேரத்தில் தலித் மக்களுக்கான சமூக நீதி மறுக்கப்பட்டு, தமிழகத்தில் 7 ஆயிரத்திற்கும் அதிகமான கிராமங்களில் தீண்டாமைக் கொடுமை பல வடிவங்களில் தொடர்வதைத் தடுப்பது குறித்து இவ் வுரையில் ஏதுமில்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என்று சட்டப் பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன் பேசினார்.

தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் மீதான விவாதத்தில் பங்கேற்று மகேந்திரன் எம்எல்ஏ மேலும் பேசியிருப்பதாவது:

கடந்த 2009 செப்டம்பர் 30-ம் தேதி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக பல போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது விழுப்புரம் மாவட்டம், காங்கியனூர் திரௌபதியம்மன் ஆலயத்திற்குள் தலித் மக்களை வழிபாட்டிற்கு அழைத்துச் சென்ற அன்றைய விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், குடியாத்தம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜி.லதா உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் காவல் துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டனர்.

இதில் சட்டமன்ற உறுப்பினர் ஜி.லதா கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி விழுப்புரம் அரசு மருத்துவமனையிலும் பின்னர் வேலூர் சி.எம்.சி மருத்துவமனையிலும், உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு பல நாட்கள் சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டது.

தலித் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக போராடிய இவர்கள் மீது தாக்குதல்கள் நடத்திய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழக முதல்வரை சந்தித்து மனு கொடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை நடவ டிக்கை எடுக்காதது மிகவும் கண்டனத்திற்குரியது. மேலும் தமிழகம் முழுவதும் தீண்டாமைக் கொடுமையை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அருந்ததியர்

உள்ஒதுக்கீடு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அருந்ததியர் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று அருந்ததிய மக்களுக்கு 3 சதவிகித உள்ஒதுக்கீடு வழங்கிய காரணத்தினால் கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கையில் அருந்ததியினர் பலன டைந்துள்ளனர். அதே நேரத்தில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களிலும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதிலும் உயர்நீதிமன்றம் சென்றுதான் உரிமையை நிலைநாட்ட வேண்டியுள்ளது என்பதையும் நினைவூட்ட வேண்டியுள்ளது. எனவே உள்ஒதுக்கீட்டை அரசின் அனைத்துத் துறைகளிலும் அமலாக்கிட வேண்டும்.

பழங்குடியினர்

சான்றிதழ்

பழங்குடியின மக்களில், பெற்றோர்கள் சாதிச்சான்றிதழ் பெற்றிருந்தால், அவர்களது பிள்ளைகளுக்கும் அதே சாதிச் சான்று வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது. ஆனால், வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் சாராட்சியர் இதனை ஏற்க மறுக்கிறார். மாவட்ட ஆட்சியர்- மாவட்ட கண்காணிப்புக் குழு, சான்றிதழ் வழங்கிடலாம் என்று பரிந்துரை செய்துள்ளார். அப்படியிருந்தும், சாராட்சியர் மறுக்கிறார். இப்பிரச்சனையில் அரசு தலையிட வேண்டும். இதேபோல குறுமன்ஸ், குறவன் போன்ற சமூகத்தினருக்கும் சாதிச்சான்று வழங்கும் பிரச்சனையில் அரசு தலையிட வேண்டும்.

இவ்வாறு மகேந்திரன் பேசினார்.