புதன், 24 மார்ச், 2010

தாழ்த்தப்பட்டோர் புள்ளி விவரங்கள் இல்லை: தேசிய ஆணையம் தகவல்

“தாழ்த்தப்பட்டோர் குறித்த புள்ளி விவரங்கள் தமிழக அரசிடம் இல்லை” என்று தாழ்த்தப்பட்டோ ருக்கான தேசிய ஆணையம் புகார் தெரிவித்துள்ளது.
தேசிய ஆணையத்தின் துணைத்தலைவர் என்.எம்.காம்ப்ளே, உறுப்பினர் மகேந்திரபோத் ஆகியோர் அடங்கிய குழு வியாழக்கிழமை சென்னை வந்தது.
தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, பல்வேறு துறைகளின் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர், செய்தியாளர்களிடம் கூட்டாக அவர்கள் அளித்த பேட்டி:
“தாழ்த்தப்பட்டோருக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கி பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால், அவற்றை செயல்படுத்தும் விதம் குறித்து மாவட்ட அளவிலோ அல்லது துறை ரீதியிலோ புள்ளி விவரங்களை வைத்திருக்கவில்லை. மாநில அரசுத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் எத்தனை பேர், அவர்களில் எத்தனை பேருக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது என்ற தகவல்கள் இல்லை.
அரசுத் துறைகளில் பணியாற்றும் தாழ்த்தப்பட்டோர் ஊழியர்களுக்கான சங்கங்களுக்கும், அரசுக்கும் இடையே கருத்துப் பரிமாற்றம் மேற்கொள்ள துணைச்செயலாளர் அளவிலான தொடர்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் அதுபோன்ற அதிகாரி நியமிக்கப்படவில்லை. பின்னடைவு காலிப் பணியிடங்களை சிறப்பு வேலை நியமனத்தின் மூலம் நிரப்ப வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அரசுத் துறைகளில் பின்னடைவுக் காலிப்பணியிடங்கள் ஏதுமில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கல்வித் துறையில் குறிப்பாக தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஆசிரியர்கள் எத்தனை பேர் பணிபுரிகின்றனர் என்ற தகவல் அரசிடம் இல்லை. கல்வித் துறையில் மொத்தமாக 5 சதவீதம் பின்னடைவு காலிப் பணியிடங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த, முற்போக்கான மாநிலமாக கருதப்படும் தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் குறித்த புள்ளி விவரங்கள் இல்லாதது வருத்தம் அளிக்கிறது.
தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கப்பட்ட நிலங்களில் ஆதிக்க சாதியினர் ஆக்கிரமிப்புச் செய்துள்ளனர். அவற்றை அகற்றி உரியவர்களுக்கு நிலங்களை வழங்கும் பணியில் அரசு அக்கறை காட்டவில்லை. ஆக்கிரமிப்பு தொடர்பாக, இதுவரை 8 ஆயிரம் புகார்கள் உள்ளன. சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றங்களையும் நாட முடியாமல் உள்ளனர்.
தாழ்த்தப்பட்டோர் நலன் தொடர்பாக முதல்வர் தலைமையில் விழிப்பு மற்றும் கண்காணிப்பு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாக அரசுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தக் கமிட்டி ஆண்டுக்கு இருமுறையாவது கூட வேண்டும். ஆனால், சம்பந்தப்பட்டவர்களை தனித்தனியாக முதல்வர் சந்திப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதிலிருந்து, ஏற்கெனவே அமைக்கப்பட்ட கமிட்டி செயல்படாமல் இருப்பது தெரிகிறது.
மனிதக் கழிவை மனிதனே அள்ளும் நிலை இல்லை என்று தமிழக அரசு தெரிவிக்கிறது. ஆனால், அந்த நிலைமை தமிழகத்தில் இருப்பதற்கான புகைப்பட ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன”. இவ்வாறு அவர்கள் கூறினர்.

சலவைத்தொழிலாளர்கள் கோட்டை நோக்கி பேரணி

தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் தங்களைச் சேர்க்க வலியுறுத்தி, சலவைத் தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமையன்று (19.2.2010) கோட்டை நோக்கி பேரணி நடத்தினர்.
தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் சங்கம் (சிஐடியு),  தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் முன்னேற்ற சங்கம்,  தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் மத்திய சங்கம், தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் பேரவை,  அண்ணா சலவைத் தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட 10 அமைப்புகள் இணைந்து தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கி உள்ளன.
இந்தக்குழு சார்பில், இந்தியாவில் 17 மாநிலங்களிலும், தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும் சலவைத் தொழிலாளர்கள் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதே போன்று தமிழகம் முழுவதும் உள்ள சலவைத் தொழிலாளர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்; நலவாரிய பதிவுக்கு வருவாய்த்துறை ஆய்வு செய்வதை கைவிட வேண்டும்; புதிய உறுப்பினர்களை பதிவு செய்வதோடு, அடையாள அட்டை வழங்க வேண்டும்; பழைய சலவைத்துறைகளை புதுப்பிக்க வேண்டும்; புதிதாக சலவைத்துறைகள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்பேரணி நடைபெற்றது.
பேரணியில் வி.கருப்பையா, பாபு (சிஐடியு), சுப்பிரமணி, சக்கரை (மத்திய சங்கம்) உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி மார்ச் 11- அன்று, தில்லியில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றும்  ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் தீண்டாமைக் கொடுமைகள்: தேசிய ஆணையத்திடம் முறையீடு

தமிழகத்தில் தீண்டாமைக் கொடுமைகள் குறித்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தேசிய ஆணையத்திடம் தீண் டாமை ஒழிப்பு முன்னணி முறையீடு செய்தது.
பூட்டாசிங் தலைமையிலான தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தேசிய ஆணையம் வியாழனன்று (18.2.2010) சென்னைக்கு வருகை தருவதாக அறிவித்திருந்தது. பூட்டா சிங் வர இயலாத நிலையில், அதன் துணைத்தலைவர் தலைமையில் ஆணையம் வருகை தந்தது. பல தலித் அமைப்புகளின் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன் னாள் நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட ஏராளமானவர்கள் ஆணையத்தை சந்திக்க வந்திருந்தனர்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் மாநில அமைப்பாளர் பி.சம்பத், சட்டமன்ற உறுப் பினர்கள் எஸ்.கே.மகேந்திரன், பி.டில்லிபாபு, ஜி.லதா ஆகியோர் சென்றனர்.
பல அமைப்புகள் சார் பாக ஆணையத்திடம் ஏராளமான முறையீடு களும், மனுக்களும் அளிக் கப்பட்டன. ஆலோசனை யை வரவேற்றுப் பேசிய ஆணையத்தின் உபதலைவர் இந்தியாவில் தீண்டாமை சட்டப்பூர்வமாக ஒழிக்கப்பட்டு விட்ட நிலையில், “தீண்டாமை ஒழிப்பு முன்னணி” போன்ற அமைப்புகள் செயல்படுவது பற்றி வியப்புடன் வினவினார்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆணையத்திடம் விரிவான மனு அளிக்கப்பட்டது. அப்போது பேசிய மாநில அமைப்பாளர் பி.சம்பத், “தமிழ்நாட்டில் ஏராளமான வடிவங்களில் பல்லாயிரம் கிராமங்களில் தீண்டாமைக் கொடுமைகள் நீடிப்பதாகவும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் தலித் அமைப்புகள், ஜனநாயக அமைப்புகள் அவற்றை ஒழிப்பதற்காகவும், அரசை நிர்ப்பந்திப்பதற்காகவும் போராட்டங்களை நடத்த வேண்டிய தேவை இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
ஜி.லதா
சட்டமன்ற உறுப்பினர் ஜி.லதா பேசும்போது, “விழுப்புரம் மாவட்டம் காங்கியனூர் திரௌபதியம்மன் கோவிலுக்கு தலித் மக்களை அழைத்துச் செல்லும் போது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அமல்ராஜ் தலைமையிலான காவல்துறையினர் தன்னை கொடூரமாகத் தாக்கி காயப்படுத்தியதையும், இதர தலித் மக்கள் தாக்கப்பட்டதையும் உணர்ச் சிப்பூர்வமாக எடுத்துக்கூறி, அமல்ராஜ் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வற்புறுத்தினார்.
தலித் மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டை 18 சதவீதத்திலிருந்து 19 சதவீதமாக உயர்த்துவது, தலித் - பழங் குடி மக்களுக்கான ஆணையம் ஒன்றை தேசிய ஆணையம் போல உரிய அதிகாரம் வழங்கி அமைப்பது, தமிழக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பல்லாயிரம் பின்னடைவுக் காலியிடங்களை நிரப்புவது, தலித் உப திட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள், மக்கள் தொகைக்கு ஏற்ப நிதி ஒதுக்காதது, ஒதுக்கிய நிதியில் மாநில அரசு முறை யாகச் செலவிடாதது, உத்தப்புரத்தில் ஆதிக்க சக்திகள் நிர்ப்பந்தம் காரணமாக டி.கே.ரங்கராஜன் எம்.பி., நிதி ஒதுக்கியும், தமிழக அரசு பேருந்து நிறுத்த நிழற்குடை அமைத்துத்தர மறுப்பது, உத்தப்புரத்தில் தலித் மக்களை அரசமர வழிபாட்டிற்கு அனுமதி மறுக்கும் நிலை தொடர்வது, அருந்ததியர் உள்ஒதுக்கீடு உத்தரவை வேலை வாய்ப்பில் முழுமையாக தமிழக அரசை அமல்படுத்தக் கோருவது, மனித மலத்தை மனிதன் அள்ளும் கொடுமைக்கு தமிழகத்தில் முடிவு கட்டுவது, வன்கொடுமைத் தடுப்புச் சட்டங்களை தமிழகத்தில் உறுதியுடன் அமல்படுத்தக் கோருவது, திண்டுக்கல் மாவட்டம் பாலசமுத்திரம் கிராமத்தில் தலித் மக்கள் சுடுகாட்டிற்கு பாதை இல்லாததால், பிணத்துடன் ஆற்றில் நீந்தி அடக்கம் செய்யப்படும் கொடுமைக்கு முடிவு கட்டி, பாலம் அமைத்துக் கொடுப்பது அல்லது மாற்று சுடுகாடு ஏற்பாடு செய்து தருவது போன்ற கோரிக்கைகள் மனுவாகவும், நேரடியாகவும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியால் ஆணையத்திடம் அளிக்கப்பட்டது.
.இப்பிரச்சனைகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆண்டுகள் எட்டானாலும் அழுகிப் போகாதாம் ‘மனைப்பட்டா’

“இப்போ என்ன கெட்டா போச்சு, காசு கப்புத் தந்தாத்தானே கத நடக்கும். சும்மா வெறுங்கையிலேயே முழம் போட முடியுமா, என்ன? ஒன்னும் கவலப்படாதீங்க, உங்க பட்டா ஒன்னும் அழுகிப் போயிறாது” என்று ஓர் உடன்பிறப்பு உபதேசித்திருக்கிறார் கோவை இருகூரில். தலைமுறை கடந்த போராட்டம் என்றாலும் தளராத நம்பிக்கையோடு பட்டாக்களை கையில் வைத்துக் கொண்டு காத்திருக்கிறார்கள் பாமர தலித் மக்கள்.
ஆம். இடத்தைக் கண்டுபிடிக்கப் போராட்டம், அதைக் கையகப்படுத்த போராட்டம், அதை மனைப்பட்
டாக்களாகப் பெறப் போராட்டம் என்று 1984 முதல் போராடி, ஒரு வழியாக 2002ம் ஆண்டில் 294 பட்டாக்
களைப் பெற்றிருக்கிறார்கள் இருகூர் தலித்மக்கள். அதன் பின்னர் எட்டு ஆண்டுகளாக ‘என் பட்டாவுக்கான இடம் எங்கே?’ என்று அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள். இதற்கிடையில் திருப்பூர் வருவாய் மாவட்டம், கோவை வருவாய் மாவட்டமாகி, பல்லடம் தாலுகாவை சூலூருக்கும் மாற்றியாகி விட்டது. மாதம் ஒரு தாசில்தார், வருடம் ஒரு கலெக்டரிடம் மனு, இடையில் வழக்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்று அல்லாடிக் கொண்டுள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் தே.செந்தில்ராஜ் கூறுகிறார்.
இருகூர் ஈஸ்வரன் கோயில் மானிய பூமியை கோவில் குருக்கள் ராமானுஜ ஐயரும் அவரது சகோதரர்களும் தான் அனுபவித்து வருகிறார்கள் என்று 1984ல் அறிந்தோம். அதனை வீடில்லாத ஏழை தலித் மக்களுக்கு வழங்குன்னு அரசிடம் கோரிக்கை வச்சோம். மானிய பூமி அரிஜன நத்தமா வகை மாற்றமாச்சு, அறநிலையத் துறையிலிருந்து ஆதிதிராவிடர் நலத்துறைக்கு மாற்றமாச்சு, 4(1) அறிவிக்கை வெளியிட்டு நிலத்தையும் எடுத்தாச்சு. அப்போ ராமானுஜ ஐயர் கோர்ட்டுக்குப் போனார், அரசாங்கத்துக்கே சாதகமாகத் தீர்ப்பாச்சு. ஆனால் ஆட்சி மாறுனதால 1994ல் இருந்த பட்டியல மாத்திட்டு, 1996ல் புதுப்பட்டியில் போட்டாங்க அதிமுக காரங்க. 2002ல திமுக ஆட்சியல இன்னொரு மனைப்பட்டா குடுத்தாங்க. அரிஜன சேவா சங்கம் மூலமா போட்ட கேசுல 15 பேரை சேர்த்துக்கனும்னு உயர்நீதிமன்றமும் சொல்லியிருக்கு. ஆனா அரசு அதிகாரிங்க காலதாமதப்படுத்திட்டே இருந்ததால ‘1994 பட்டியல ஒத்துக்கணும்னு’ அதிமுக பிரமுகர் பழனிச்சாமி கேஸ் போட, அதையே காரணமா வச்சு, எட்டு வருசமா இடத்த அளந்து தர மாட்றாங்க. மொத்தம் 8.5 ஏக்கரா பூமி ஒன்னத்துக்கும் உதவாம இருக்கு. கருவேல மரந்தான் தோப்பா வளர்ந்திருக்கு என்று ஆவேசமாய் வெடிக்கிறார் செந்தில்ராஜ்.
ஆதிதிராவிடர், பள்ளர், பறையர், வள்ளுவர், அருந்ததியர் என 294 மனைப் பட்டாக்கள் பெற்ற தலித் மக்கள் இன்னும் பலர் வாடகை வீடுகளிலேயே வசிக்கிறார்கள். இதனிடையே 1984ல் கோரிக்கை வைத்த போது இருந்த எண்ணிக்கையை விட இந்த 26 ஆண்டுகளில் இன்னுமொரு பங்கு பட்டா கோரிக்கை வேறு எழுந்துள்ளது. பல்லடம் ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் ‘வழக்கில் தடையாணை ஏதுமில்லை என்பதால் பட்டாதாரர் குடியேறத் தடையேதுமில்லை’ என்று பதிலளிக்கிறார். கோவை ஆதிதிராவிடர் நலத்துறை வெங்கடேஷ் சமீபத்தில் அளித்துள்ள பதிலில், ‘பழனிச்சாமி என்பவர் தொடுத்த வழக்கில் தீர்ப்பு வந்த பின்தான் நில அளவை செய்ய முடியும்’ என்கிறார். ஆனால் பட்டாக்களைப் பெற்ற மக்களுக்கோ சொந்தமாய் ஒரு குடிசை அமைக்கும் கனவுகூட கைகூடவில்லை.
இதனிடையே இப்பிரச்சனையைத் தீவிரமாக கையிலெடுத்து களமிறங்கியுள்ளது தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி. முதற்கட்டமாக மக்களைச் சந்தித்து, பின்னர் கோரிக்கை மனு ஒன்றை மாவட்ட ஆட்சியர் பு.உமாநாத்திடம் அளித்து பேசியுள்ளனர். அவர்களிடம், பிரச்சனையை விசாரித்து ஒரு வாரத்தில் பதிலளிப்பதாக ஆட்சியர் உறுதியளித்துள்ளார். உறுதியான நடவடிக்கை ஏதுமில்லாத பட்சத்தில் தீவிரமாக களமிறங்க தீண்டாமை ஒழிப்பு முன்னணி முடிவு செய்துள்ளது.
பட்டா வைத்துள்ள மாகாளியம்மன் கோவில் வீதி ராதிகா மற்றும் மதுரை வீரன் கோவில் வீதியில் சிலரைச் சந்தித்த போது, கைக்கெட்டிய பட்டா கவைக்கு உதவாத கையறு நிலையை ஆதங்கத்தோடு தெரிவித்தனர். எது எப்படியிருந்தாலும் பல்லாயிரம் பேருக்கு பட்டாக்கள் அளித்ததாகக் கூறும் அரசு, வழங்கிய பட்டாக்களின் நிலை என்ன என்பதையும் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தாளில் ‘சர்க்கரை’ என்று எழுதி விட்டாலே இனித்து விடும் என்ற போக்கில் நடந்து கொள்வது ஏழைகளுக்கு நீதி வழங்குவது ஆகாது. (ந.நி)

பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்குக்கு விலை சொல்வதா? - கருணாநிதிக்கு மார்க்சிஸ்ட் கட்சி கேள்வி

குடிசை மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்கவில்லை என்றால் சட்டமன்றம் முன்பு வருகிற ஏப்ரல் 19-ஆம் தேதியன்று ‘பட்டினிப்போராட்டம்’  நடைபெறும் என 14-02-2010 அன்று நடைபெற்ற கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அறிவித்துள்ளதை கடுமையாக விமர்சித்து முதல்வர் கலைஞர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். போராட்டம் ஏன் என்பதை தெளிவுபடுத்திட வேண்டிய அவசியம் உள்ளது.
இக்கட்டுரையாளரை, கட்சியின் மாநிலக்குழு மாநிலச்செயலாளராக தேர்ந்தெடுத்தமைக்காக கலைஞர் வாழ்த்து தெரிவித்திருந்தார். தமிழகத்திலுள்ள மூத்த தலைவர்களில் முக்கியமானவரிடமிருந்து வாழ்த்துச் செய்தி கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது. எனவே, உடனடியாக என் சார்பிலும், கட்சியின் மாநிலக்குழு சார்பிலும் கலைஞருக்கு நன்றி தெரிவித்தோம்.
பல ஆண்டுகளாக குடியிருக்கும் குடிசை வாசிகளுக்கு பட்டா கோரி பல கட்ட இயக்கங்கள் நடத்திய பிறகும் பட்டா கிடைக்காததால்தான் ஏப்ரல் 19-ல் போராட்டம் நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. கடைசியாக நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் இறுதி நாளில், மார்ச் 13-ஆம் தேதியன்று புதிய சட்டமன்ற வளாகம் திறக்கப்படும் என முதல்வர் அறிவித்தார். நாங்கள் போராட்டம் நடத்தப்போவது ஏப்ரல் 19-ம் தேதியன்று. அதாவது வளாகம் திறக்கப்பட்டு ஒரு மாதத்திற்குப் பிறகுதான் போராட்டம் நடைபெறும். இந்நிலையில், போராட்டத்தால் வளாகத் திறப்பு விழாவிற்கு இடையூறு உள்ளது போல் கலைஞர் சொல்வதின் உள்நோக்கம் என்ன? போராட்டத்தை திசை திருப்புவதா?
போராட்டத்தின் நோக்கம் என்ன?
கோயில் நிலத்தில் குடியிருப்போர், அரசு புறம்போக்கு இடத்தில் குடியிருப்போர், மாநில அரசு மற்றும் மாநகராட்சி இடத்தில் குடியிருப்போர், நத்தம் புறம்போக்கில் குடியிருப்போர், தனியார் டிரஸ்ட் நிலத்தில் குடியிருப்போர் என சுமார் 10 லட்சம் குடும்பங்கள், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சொந்த வீடில்லாமல் உள்ளனர். இவர்களின் வாழ்வாதாரமான வீட்டுமனைபட்டா கோரிதான் ஏப்ரல் 19-ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள பட்டினிப்போர். இவர்கள் கோரிக்கைகளுக்காகத்தான் ஏப்ரல் 19-ல் பட்டினிப்போர்.
இந்த 10 இலட்சம் பேரின் கோரிக்கைகளை பகுதிவாரியாக  விளக்குவதற்கு ஏடு இடம் தராது என்றாலும், உதாரணத்திற்கு ஓரிரு பகுதிகளைப் பரிசீலிப்போம்.
மேலே இருக்கின்ற படத்தை உன்னிப்பாகப் பாருங்கள். அந்தக் கட்டிடத்தில் மூவர் ணக்கொடியின் கீழ் ஆதிதிரா விடர் பொதுநலச்சங்கம் என்ற வாசகங்களைப் பார்க்கலாம். அந்த வாசகத்திற்கு மேல் தோற்றம் 1947 என்று உள்ளது. சங்கம் உருவாகி சுமார் 62 ஆண்டுகள் ஆகின்றன. இது அம்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட சர்வே எண்.72க்குட்பட்ட மங்களபுரம். 10-2-2010 அன்று, நானும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் டி.கே.சண்முகம், அம்பத்தூர் நகரச் செயலாளர் லெனின் சுந்தர் ஆகியோர் அப்பகுதி மக்களை சந்தித்தோம். தங்களுக்கு பட்டா வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை மனுவை அவர்கள் அளித்தனர்.
மங்களபுரத்தில் சுமார் 780 குடும்பங்கள் உள்ளன. மக்கள்தொகை சுமார் 3 ஆயிரம். இதில் 97 சதவிகிதம் தலித் மக்கள். இது கிராமநத்தம் பகுதி. கால்கடுக்கச் சென்று அதிகாரிகளை சந்தித்தது தான் மிச்சம். சுமார் நூறாண்டுகளுக்கு மேல் வசிக்கும் மங்களபுரத்தில் உள்ள குடும்பங்களுக்கு இதுநாள் வரையிலும் பட்டா வழங்கப்படவில்லை.
பாடிப்புதுநகர்
அம்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட (சர்வே எண். 253/14) பாடிப்புதுநகரில் சுமார் 900 குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களுக்கு குடிசை மாற்று வாரியம், மனை ஒதுக்கீடு செய்து கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறார்கள். தொடர்ச்சியாக தங்களுக்கு பட்டா வேண்டுமென்று வலியுறுத்துகிறபோது, குடிசை மாற்று வாரிய அதிகாரிகள், பாடிப்புதுநகர் இடம் வருவாய்த்துறைக்கு சொந்தமானது. வருவாய்த்துறை எங்களிடம் ஒப்படைக்காமல் பட்டா வழங்க முடியாதென கூறுகிறார்கள். வருவாய்த் துறைக்கு குடிசை மாற்று வாரிய தலைவர் பலமுறை கடிதம் எழுதியும் எதுவும் நடக்கவில்லை.  இவ்வாறு ஒவ்வொரு பகுதியிலும் பட்டா கிடைக்காத பல சோகக்கதைகள் உண்டு. இதற்கு கலைஞரின் பதில் என்ன?
இவ்வாறு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பட்டா கிடைக்காத அவல நிலை உள்ளது. இதைப்போலவே கோயில் இடத்தில் குடியிருப்போருக்கு அரசாணை 456-ன் படி தரை வாடகை விதிக்கப்பட்டு, குடியிருப்போர் விழி பிதுங்கி நிற்கின்றனர். அதிகமான வாடகை விதிக்கப்பட்டு, வாடகை கட்ட முடியாமல் சிரமப்படுவோர் மேல்முறையீடு செய்ய வேண்டுமென்றால், வாடகை பாக்கியை செலுத்திட வேண்டும். வாடகை பாக்கி பல லட்சம் வருவதால் வாடகை செலுத்த முடியவில்லை. ஆனால் கோயில் நிர்வாகம் 456 அரசாணைப்படி 70-80 ஆண்டுகள் அங்கேயே வசித்து வரும் இவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என அறிவித்து வெளியேற்றிட முயற்சித்து வருகிறது.
தோழர் மணலி கந்தசாமி, தனது அரசு உத்தரவிட்டதை பாராட்டினார். ஆனால் மார்க்சிஸ்ட்கள் பாராட்ட மறுப்பது மட்டுமன்றி போராட்டம் வேறு நடத்துகிறீர்களே என்ற ஆதங்கம் முதல்வரின் அறிக்கையில் பளிச்சென தெரிகிறது. பாராட்டத்தக்க காரியங்களை கலைஞரின் அரசு மேற்கொண்ட போதெல்லாம் - அந்த நடவடிக்கையை சிபிஐ(எம்) பாராட்டத் தவறியதில்லை. ஆனால் இன்றைக்கும் பல லட்சம் குடும்பங்கள் பட்டா இல்லாமல் அனுதினமும் அஞ்சி அஞ்சி வாழும் நிலையில், பொறுப்பு வாய்ந்த எந்த இயக்கமும் ஏழை மக்களை பாதுகாத்திட அரசை நிர்ப்பந்திக்க போராட்டம் நடத்துவது தவிர்க்க இயலாது என்பது அறிந்த ஒன்றே. இந்த அடிப்படை அரசியல் கடமையைத்தான் சிபிஐ(எம்) மேற்கொண்டு வருகிறது என்பதை தெரிவிக்கிறேன்.
1946-ஆம் ஆண்டு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இந்தியாவிற்கு சுதந்திரம் தர வேண்டுமென்று, அட்லி பிரதமராக இருந்தபோது முடிவெடுத்தார்கள். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது. சுதந்திரத்திற்காக போராடிய கண் ணீரும் செந்நீரும் சிந்திய காந்திக்கும், நேருவிற்கும், கம்யூனிஸ்ட்டுகளுக்கும் பெருமை சேராது. இந்தியாவிற்கு சுதந்தி ரம் கிடைத்ததன் பெருமை இங்கிலாந்து பிரதமர் அட்லிக்கே போய்ச்சேரும் என்றால் கலைஞர் ஏற்றுக் கொள்வாரா?
கீழத்தஞ்சையில் பண்ணையடிமையை ஒழிக்க 1952-ஆம் ஆண்டு ராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது பண்ணையாள் பாதுகாப்புச்சட்டம் கொண்டு வந்தார். பண்ணையடிமையை ஒழிப்பதில் உயிர்த்தியாகம் செய்த களப்பால் குப்புவுக்கோ, வாட்டாக்குடி இரணியனுக்கோ, சிவராமனுக்கோ, இவர்களுக்கெல்லாம் தலைமை தாங்கிய பி.சீனிவாசராவுக்கோ எந்த பங்கும் இல்லை. பண்ணையடிமையை ஒழித்த பெருமையெல்லாம் இராஜாஜியை சாரும் என்றால் யாராவது ஏற்றுக் கொள்வார்களா? கீழத் தஞ்சையில் தலித் மக்கள் குடியிருக்கும் மனைகளை குடியிருக்கும் விவசாயிகளுக்கே சொந்தமாக்க வேண்டுமென்று கம்யூனிஸ்ட்டுகள் நடத்திய போராட்டம், அவர்கள் செய்த தியாகம், அதுதான் அன்றைய திமுக அரசு சட்டம் கொண்டு வர நிர்ப்பந்தமாக அமைந்தது.
தமிழகத்தில் குடிசை மக்களுக்கு மனைப்பட்டா கேட்டால் வங்கத்தையும், கேரளத்தையும் காட்டுகிறார். திமுக வுக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்திய மக்களுக்கு இது தான் கலைஞர் தரும் பதிலா? பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டை பாக்குக்கு விலையைச் சொல்வதா?
- ஜி.ராமகிருஷ்ணன்,
மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)
தமிழ்நாடு மாநிலக்குழு

மார்ச் 1- விவசாயிகள் மறியலில் மலைவாழ் மக்களும் பங்கேற்கின்றனர்

அனுபவ நிலத்திற்கு பட்டா - மனைப்பட்டா உள்ளிட்ட கோரிக்கை களை வற்புறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மார்ச் முதல் தேதி தமிழகம் முழுவதும் வட்டாட்சியர் அலுவலகம்  முன்பு நடத்த உள்ள மறியல் போராட்டத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கமும் பங்கேற்பது என சங்கத்தின் மாநிலக்குழு  முடிவு செய்துள்ளது. இம்மறியல் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மலைவாழ் மக்களை ஈடுபடச் செய்திட முயற்சிகளை மேற்கொள்வதென சங்கத்தின் மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் எஸ்.பழனிச்சாமி தலைமையில் அரூரில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.பாலகிருஷ்ணன், மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம், மாநில துணைத் தலைவர் பி.டில்லிபாபு எம்.எல்.ஏ, மாநிலப் பொருளாளர் எம்.அழகேசன் உட்பட மாநிலக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
மலைப் பகுதிகளில் பட்டா வழங்க விதிக்கப்பட்டுள்ள தடை ஆணை 1168-ஐ ரத்து செய்து பட்டா வழங்க வேண்டும்; வன உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்; ஆதிவாசி மக்களுக்கு நில உரிமையும் - வன உரிமையும் வழங்க வகை செய்யும் வன உரிமைச் சட்டம் 2006-ஐ நடைமுறைப்படுத்த தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்; சென்னை உயர்நீதிமன்றம் இச் சட்டத்தின் கீழ் பட்டா கொடுக்க விதித்துள்ள தடை உத்தரவை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; மலையடிவாழ் பகுதிகளில் வனவிலங்குகளால் வேளாண் உற்பத்தி அழிக்கப்படுவதும், மனித உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடர்கதையாகி வரும் நிலையில், இத்தகைய பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்குவதிலும் அதிகாரிகள் மெத்தனப் போக்குடன் நடந்து கொள்கின்றனர்; வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியேறாமல் தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்; மரபணு மாற்ற தொழில்நுட்பத்தை உணவுப் பயிர்களில் பயன்படுத்துவதற்கு மத்திய அரசு நிரந்தர தடை விதிக்க வேண்டும்.
குறுமன்ஸ் சான்றிதழ் பெறுவதில் சிக்கல் நீடிப்பு
தமிழ்நாட்டில் குறுமன்ஸ், காட்டு நாயக்கன், மலைவேடன், கொண்டாரெட்டி ஆகிய பழங்குடியின மக்களுக்கு இனச்சான்றிதழ் வழங்கப்படுவது இல்லை. இதுகுறித்து அனைத்து மாவட்ட அதிகாரிகளிடமும் நேரில் புகார் செய்தும், பல கட்ட போராட்டங்களை நடத்தியும் தீர்வு காணப்படுவதற்குப் பதிலாக கோட்டாட்சியர்கள் சிக்கலான உத்தரவுகளை தொடர்ந்து பிறப்பித்து வருகின்றனர். வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் கோட்டாட்சியர் மாவட்ட விழிப்புணர்வு குழுவால் மெய்த்தன்மை உறுதி செய்யப்பட்ட 21 நபர்களின் வாரிசுகளுக்கு குறுமன்ஸ் சான்றிதழ் தர மறுத்து உத்தரவு வெளியிட்டுள்ளார். சிவகாசி கோட்டாட்சியர், காட்டு நாயக்கன் சமுதாயத்தை சார்ந்த 15 நபர்களின் மனுக்களை நிராகரித்து நிரந்தர உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை மாநகரில் பல தலை முறைகளாக வசித்துவரும் பழங்குடியினத்தவருக்கு கூட சான்றிதழ் மறுக்கப்படுகிறது.
கல்வியாண்டு முடியும் நிலையில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 முடித்து வெளியே வரும் மாணவர்களின் எதிர்காலம் இருண்ட நிலைக்கு தள்ளப்படும் ஆபத்து இதனால் ஏற்பட்டுள்ளது. மேற்குறித்த பிரச்சனையில் தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு பொருத்தமான உத்தரவுகளை பிறப்பிக்குமாறு தமிழக அரசை மலைவாழ் மக்கள் சங்க மாநிலக்குழு கோருகிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாகிகள் மாற்றம்
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவராக பெ.சண்முகம், மாநில பொதுச்செயலாள ராகபழனிச்சாமி, துணைச் செயலாளர்களாக ஆ.பொன்னுசாமி, அண்ணாமலை ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஆற்றில் நீந்தி சென்று பிணங்களை புதைக்கும் துயரம்

பழனி அருகேயுள்ள பாலசமுத்திரத்தில் ஆற்றை நீந்திக் கடந்து, பிணங்களை புதைக்கும் அருந்ததிய மக்களின் துயரத்தைக் கேள்விப்பட்டு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தூதுக்குழு அம்மக்களை சந்தித்தது.
அது பற்றிய விபரம் வருமாறு:
பழனி அருகேயுள்ளது பாலசமுத்திரம் பேரூராட்சி. இந்த ஊரில் 1-வது வார்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அருந்ததிய மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து இன்று வரை தீர்க்க முடி யாத பிரச்சனையாக உள்ளது மயான பிரச்சனை. ஊரில் யாராவது இறந்து போனால் அந்த பிணத்தை அருகில் உள்ள ஆற்றில் நீந்திச் சென்றுதான் ஆற்றின் அக்கறையில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்வார்கள். இந்த ஆற்றில் எப் போதும் கழுத்தளவு தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும். இதே போல அருகேயுள்ள குரும்பபட்டியில் வசிக்கும் அருந்ததிய மக்களும், இராமநாதநகர் மக்களும், குறவன்பாறை ஆகிய பகுதி மக்களும் நீந்திச் சென்றுதான் இந்த மயா னத்தில் பிணங்களை அடக்கம் செய்வார்கள். இது சம்பந்தமாக இப்பகுதி அருந்ததிய மக்கள் பல முறை அரசு அதிகாரிகளிடம் மனுக் கொடுத்தும் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் சில ஆங்கில மற்றும் தமிழ்ப் பத்திரிகைகளில் செய்தி வந்தது. இந்த செய்தியைக் கேள்விப்பட்டவுடன் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.பாண்டி, பழனி ஏரியாச் செயலாளர் கே. அருள்செல்வன், பழனி நகர்மன்றத் தலைவர் வி.ராஜமாணிக்கம் ஆகியோர் கொண்ட தூதுக்குழுவினர் 1-வது வார்டு பாலசமுத்திரம் மக்களை நேரில் சந்தித்து இந்தப் பிரச்சனை சம்பந்தமாக விசாரித்தனர். இதனையடுத்து ஆற்றின் அக்கறையில் உள்ள சுடுகாட்டையும் சென்று பார்வையிட்டு வந்தனர்.
பின்னர் இப்பிரச்சனை, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று தலைவர்கள் கூறினர்.
அதனடிப்படையில், அருந்ததிய மக்களுக்கு மயானம் கிடைத்திட அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பி.சம்பத் அரசை வலியுறுத்தியுள்ளார். (18.2.2010 தீக்கதிர் செய்தி)

சிபிஎம் தொடர் முயற்சியால் தலித் மக்களுக்கு மின்சாரம் கிடைத்தது

தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தமிழரசியின் தொகுதிக்கு உட்பட்ட பூதகுடியில், அரசின் இலவச வண்ணத் தொலைக்காட்சி பெற்றும், மின் வசதியில்லாததால் அதைப் பயன்படுத்த முடியாத நிலையில் ஒரு பகுதி தலித் மக்கள் இருந்தனர்.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இப்பிரச்சனை தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளையும், மாவட்ட நிர்வாகத்தையும் அணுகி தொடர்ந்து முறையிட்டதன் அடிப்படையில், ஓராண்டாக தவித்த மக்களுக்கு, ஒரு வழியாய் மின்சாரம் கிடைத்துள்ளது. மின்வாரிய அதிகாரி கள் புதனன்று மின்கம்பங்களை நட்டு, மின்சார இணைப்பு வழங்கினர்.
இதில், இலவச மின்சாரம் பெற்ற தலித் மக்கள் மார்க்சிஸ்ட் கட்சிக்கும், மின்வாரிய அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

கொடுவாயில் தலித்துக்களுக்கு முடிவெட்டிவிட மறுக்கும் கொடுமை

பொங்கலூர் ஒன்றியம் கொடுவாயில் தலித்துகளுக்கு முடிதிருத்த மறுக்கும் தீண்டாமையைக் கைவிட வலியுறுத்தி பொதுக் கூட்டம் நடைபெற்றது. திங்களன்று (15.2.2010) தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நடந்த இப்பொதுக் கூட்டத்துக்கு சிஐடியு பனியன் சங்கச் செயலாளர் ஜி.சம்பத் தலைமை தாங்கினார்.
தலித் மக்களுக்கு எதிராக தீண்டாமையைக் கடைப்பிடிப்பது சட்டப்படி குற்றம். குறிப்பாக கொடுவாயில் ராகம் சலூன் என்ற முடிதிருத்தும் கடையில் தலித் இளைஞர்களுக்கு முடிதிருத்த கடை உரிமையாளர் மறுப்பதற்கு எதிராக கடந்த டிசம்பர் 25, 2009 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மறுபுறத்தில், இந்த தீண்டாமையை நியாயப்படுத்தி, கொடுவாயைச் சேர்ந்த வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், மூன்றே நாட்களில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று திருப்பூர் வட்டாட்சியர் உறுதியளித்தார். எனினும் 50 நாட்கள் கடந்த பின்னும் பழைய நிலை நீடிக்கிறது. முடிதிருத்த மறுக்கும் தீண்டாமைக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு நிர்வாகமும், காவல்துறையும் வாக்குறுதி அளித்தபடி நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடித்து வருகின்றன. இனியும் இதே நிலை தொடர்ந்தால் போராட்டம் தொடரும் என்று பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் கடுமையாக எச்சரித்தனர்.
மேலும் தீண்டாமை கொடுமைக்கு எதிராக- ஜனநாயகத்தை நேசிக்கும் அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து குரல் எழுப்ப வேண்டும் என்றும் தலைவர்கள் கேட்டுக் கொண்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல், திருப்பூர் எம்.எல்.ஏ. சி.கோவிந்தசாமி, மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.கண்ணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் பி.ராமமூர்த்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.மோகன், விவசாயிகள் சங்க மாவட்டத் துணைச் செயலாளர் எஸ்.லோகநாதன், முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் எஸ்.கந்தவேல் ஆகியோர் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினர்.

பின்னடைவுப் பணியிடங்களை நிரப்பாமல் தலித் மக்களுக்கு தமிழக அரசு அநீதி! - எஸ்.கே.மகேந்திரன் எம்எல்ஏ குற்றச்சாட்டு

பின்னடைவு பணி யிடங்களை நிரப்பாமல் தலித் மக்களுக்கு தமிழக அரசு அநீதி இழைத்து வருகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்  எஸ்.கே.மகேந்திரன் எம்எல்ஏ குற்றம் சாட்டினார்.
அருந்ததியருக்கான உள்ஒதுக்கீட்டை அனைத்து அரசுத்துறைகளிலும் அமல்படுத்த வலியுறுத்தி திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும்  தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகியவற்றின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று எஸ்.கே.மகேந்திரன் எம்எல்ஏ மேலும் பேசியதாவது:
அருந்ததியருக்கான  உள்இடஒதுக்கீடு அரசாணை வெளியிட்ட பின்னரும் பல துறைகளில் இன்னும் அருந் ததியருக்கான  உள்இடஒதுக்கீடு அமலாக்கப்படவில்லை. குறிப்பாக கடந்த ஆண்டு இடைநிலை ஆசிரியர் பணிநியமனம் நடந்த போது ஒதுக்கீடு வழங்காததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்றம் தலையிட்ட பின்புதான் அருந்ததியர்களுக்கான இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.
மாநில அரசுகள் சட்டத்தை போடுவதுடன் அதை முறையாக அமலாக்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு எந்த துறையிலும் முறையாக அமலாக்கப்பட வில்லை. சமீபத்தில் தமிழகத்தில் உள்ள 71 துறைகளில் மட்டும் ஆய்வு செய்தபோது தாழ்த்தப்பட்டவர்களுக்கான பின்னடைவு பணியிடங்கள் 21 ஆயிரம் என கண்டறியப்பட்டது.
மீதமிருக்கக் கூடிய துறைகளில் ஆய்வு செய்தால் 50 ஆயிரத்தை தாண்ட வாய்ப்பு உள்ளது. இது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட கூடிய சமூக அநீதி. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மட்டும் 7ஆயிரத்து இருநூறு பின்னடைவு பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
இதுபோன்ற பின்னடைவு பணியிடங்களை முழுமையாக நிரப்பும் போதுதான் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், அருந்ததியர்களுக்கும் சமூக நீதி வழங்கப்பட்டதாக அர்த்தம்.
இவ்வாறு எஸ்.கே.மகேந்திரன் எம்எல்ஏ பேசினார்.

சாதிவெறியர்களை கைதுசெய்யக் கோரி மார்க்சிஸ்ட் கட்சி மறியல்- 150 பேர் கைது

ஒட்டன்சத்திரம் அருகே உள்ளது கொசவபட்டி. இப்பகுதி சிபிஎம் கிளைச் செயலாளராக இருப்பவர் பி.செல்வராஜ். இவர் தலித் வகுப்பைச் சேர்ந்தவர். காப்பிளியபட்டியில் தண்ணீர் வழங்குவது சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சனையில் ஊராட்சித் தலைவர் இளங்கோவன் மற்றும் ஆதிக்க சாதியினர் இவரை அழைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த பி.செல்வராஜ் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, 10 நாட்கள் சிகிச்சை பெற்றார். ஆனால், காவல்துறையினர் சம்பந்தப்பட்ட ஊராட்சித் தலைவர் இளங்கோவன் மற்றும் ஆதிக்க சாதியினர் மீது வழக்குப் பதிய மறுத்து விட்டனர். மாறாக, புகார் கொடுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச்செயலாளர் மீதே பொய்வழக்கு போட்டனர்.
இதையடுத்து, போலீசாரின் இந்த அராஜக நடவடிக்கையைக் கண்டித்து செவ்வாயன்று(16.2.10) ஒட்டன்சத்திரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மறியல் நடைபெற்றது.
தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் கே.ஆர்.கணேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற் குழு உறுப்பினர்கள் வி.குமரவேல், எம்.கருணாகரன், தாலுகா செயலாளர் சின்னக்கருப்பன், தாலுகா குழு உறுப்பினர்கள் எஸ்.பி.இராமசாமி, பழனியப்பன், பெருமாள் உள்ளிட்ட 150 பேர் மறியலில் கலந்து கொண்டனர். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளருமான பி.சம்பத், மாவட்டச் செயலாளர் என்.பாண்டி ஆகியோர் மறியலை ஆதரித்துப் பேசினர்.இந்த மறியலில் கலந்து கொண்ட 150 பேரையும் ஒட்டன்சத்திரம் போலீசார் கைது செய்தனர் .

வெள்ளத்தாலும் பாதிக்கப்படும் தலித்துகள்!

சமூக ரீதியான ஒடுக்குமுறைகளை காலம் காலமாக சந்தித்து வரும் தலித் மக்கள், இயற்கைப் பேரழிவுகளாலும் அதிகம் பாதிக்கப்படுபவர்களாக இருக்கின்றனர். இது தொடர்ந்து வெளிவரும் ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்படுகிறது.
உ.பி. மற்றும் பீகார் மாநிலங்களில் ஆண்டுதோறும் ஏற்பட்டு வரும் வெள்ளப்பெருக்குகள் தலித்துகளையே அதிகமாகப் பாதிக்கிறது என்பதும், நிவாரண நடவடிக்கைகளிலும் சமூக ரீதியான பாகுபாடுகள் உள்ளன என்பதும் பழைய செய்திகள். கடந்த ஆண்டு ஆந்திராவை உலுக்கி எடுத்த வெள்ளம் தலித்துகள் வாழும் பகுதிகளில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபர் 2009ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு கர்நூல், மகபூப்நகர், குண்டூர் மற்றும் கிருஷ்ணா ஆகிய மாவட்டங்களைக் கடுமையாகத் தாக்கியது. பலநாட்கள் கடுமையான இருட்டில் ஆந்திர மக்கள் பொழுதைக் கழித்தனர். இந்த நான்கு மாவட்டங்களில் மட்டும் சுமார் இரண்டு லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை இழந்தனர். எக்கச்சக்க
மான ஏக்கர்களில் இருந்த பயிர்கள் நாசமாகின. கடந்த நூறு ஆண்டுகளில் இவ்வளவு பயங்கரமான வெள்ளத்தை ஆந்திரா பார்த்ததில்லை. ஆந்திர மாநிலம் உருவானபிறகு இதுதான் பெரும் சேதத்தை ஏற்படுத்திய இயற்கைப் பேரழி
வாகும். பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்பாலானவர்கள் இன்னும் நிவாரணத்தைப் பெறவில்லை.
இந்தப் பிரச்சனைகள் பின்னுக்குப் போகும் வகையில் தனித் தெலுங்கானா கோரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் தர வேண்டும் என்று கோரி மக்களைத் திரட்டும் வகையில் கர்நூல் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியுள்ளது. மற்ற மாவட்டங்களில் அத்தகைய இயக்கங்கள் நடைபெறவுள்ளன. மற்ற அனைத்து கட்சிகளுமே தெலுங்கானா விவகாரத்தில் மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிடும் பணியை மேற்கொண்டுள்ளன. இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் நிலை குறித்த ஆய்வுகள், அதிர்ச்சிக்குரிய விபரங்களை வெளிக்கொண்டு வந்துள்ளது.
ஏழைகளை, குறிப்பாக தலித்துகளைத்தான் வெள்ளம் கடுமையாகப் பாதித்துள்ளது என்பதுதான் அந்த விபரங்கள். ஆந்திர வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 308 கிராமங்களில் 1,090 குடியிருப்புப் பகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டது. பல்வேறு தலித் அமைப்புகள் உள்ளிட்ட 13 தொண்டு நிறுவனங்கள் இணைந்து இந்த ஆய்வை நடத்தின. தலித்துகளுக்கு ஏற்பட்ட இழப்பு, சமமான இழப்பீடு விநியோகம், நிவாரண நடவடிக்கைகளின்போது மரியாதை மற்றும் பாரபட்ச அணுகுமுறை ஆகிய அம்சங்களைக் கண்டறிய இந்த ஆய்வு முயன்றது. தலித்துகள் எந்தவகையிலாவது நிவாரணத்தைப் பெற்றுள்ளார்களா என்பதைத்தான் அந்த ஆய்வு கண்டறிய விரும்பியது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 38 விழுக்காடு குடும்பங்கள் தலித்துகளின் குடும்பங்கள்தான். வெள்ளத்தில் பலியானவர்கள் மற்றும் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்ததாகக் கருதப்படுபவர்கள் ஆகியோரில் 55 விழுக்காட்டினர் தலித்துகளாவர். வெள்ளம் தாக்கும்முன்பே மோசமான வீடுகளில்தான் தலித்துகள் வாழ்ந்து வந்தார்கள். அந்த வீடுகளையும் வெள்ளம் விட்டுவைக்கவில்லை. வெள்ளத்தின் தாக்குதலால் வீடுகளை இழந்தவர்களில் பாதிப்பேர் தலித்துகள்தான் என்று ஆய்வு கூறுகிறது. நிலங்களில் பயிர்களை இழந்தவர்களில் குறைவான அளவில்தான் தலித்துகள் பாதிக்கப்பட்டார்கள். பயிர்ச் சேதத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 28 விழுக்காடுதான் தலித்துகள். அவர்கள் கைகளில் நிலங்கள் இல்லை என்பதுதான் இவ்வளவு குறைவாக அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதற்குக் காரணமாகும்.
தாழ்வான பகுதிகளில்தான் பொதுவாக தலித்துகள் வாழ்கின்றனர் என்பதுதான் அதிகமான பாதிப்புகளுக்குக் காரணம் என்கிறார் தொண்டு நிறுவனமொன்றைச் சேர்ந்த ஜி.நரசிம்மா. நிவாரணப் பணிகளில் தலித்துகளுக்கு  முன்னு
ரிமை தர வேண்டும். இருப்பிடங்களுக்கான மனையிடங்களை அவர்களுக்கு முதலில் வழங்கிட வேண்டும் என்று நாங்கள் கோரி வருகிறோம் என்கிறார் அவர். முன்னுரிமை பெற வேண்டிய இவர்கள், பல கிராமங்களில் கடைசியாகத்தான் நிவாரணம் பெறும் அவலம் உள்ளது. இதில் கொடுமை என்னவென்றால், பல தொண்டு நிறுவனங்களே இதர பகுதியினரைப் பார்த்து நிவாரணம் வழங்கிவிட்டுதான் தலித் பகுதிகளுக்கு சென்றிருக்கிறார்கள்.
பாதிக்கப்பட்ட தலித் குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் இன்னும் பள்ளிக்கூடங்களுக்கு திரும்பவில்லை. பள்ளிக்கூடங்களுக்கு திரும்பிய குழந்தைகளுக்கும் படிப்பதற்கு போதிய வசதி இல்லை. அவர்களுக்கு இந்த ஆண்டு இறுதித்தேர்வில் கூடுதல் மதிப்பெண்களை வழங்க வேண்டும் என்றும் பல்வேறு அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன. அதோடு, இத்தகைய பேரழிவுகள் ஏற்படும்போது நிவாரண நடவடிக்கைகளில் சாதிப்பாகுபாடு பார்க்காமல் இருப்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய, மாநில அரசுகள் உருவாக்க வேண்டும் என்றும் ஆய்வின் முடிவாக தெரிவித்துள்ளனர்.

வெண்மணி தியாகிகள் நினைவிட நிதி: ரூ.1 லட்சம் வழங்கிய சாலைப் பணியாளர்கள்

சாலைப்பணியாளர்கள் சங்கத்தின் மாநில மாநாட்டு நிறைவுப் பொதுக்கூட்டம் திருப்பூர் டவுண் ஹாலில் நடை பெற்றது. மாநிலத் தலைவர் மா.சண்முகராஜா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டச் செயலாளரும்- அரூர் சட்டமன்ற உறுப்பினருமான டில்லிபாபு, சிஐடியு மாநிலச் செயலாளர் பா.விக்ரமன், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநிலத் தலைவர் ஆர்.தமிழ்ச்செல்வி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
அப்போது அவர்களிடம் வெண்மணி தியாகிகள் நினைவக கட்டட நிதியாக ரூ. 75 ஆயிரம் வழங்கப்பட்டது. ஏற்கெனவே வழங்கப்பட்ட ரூ. 25 ஆயிரத்துடன் சேர்த்து, சாலைப்பணியாளர் சங்கம் சார்பில் இதுவரை ரூ. 1 லட்சம் நிதி வழங்கப்பட்டு உள்ளது.

ஆதிதிராவிட மாணவிகளுக்கு விடுதி: ஜி.லதா எம்எல்ஏ கோரிக்கை ஏற்பு

வேலூர் மாநகரத்தில் ஊரிஸ், முத்துரங்கம், டி.கே.எம், ஆக்சீலியம் மற்றும் கல்லூரிகளில் ரெகுலர், மாலை நேர கல்லூரிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள், இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பும், பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் படிப்பும் படித்து வருகின்றனர்.
இதில் ஆயிரக்கணக்கான ஆதிதிராவிட மாணவர்களுக்கு விடுதி வசதி கிடையாது. இவர்கள் தங்களுக்கு அரசு விடுதி துவங்க வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.
இதுபற்றி குடியாத்தம் எம்.எல்.ஏ., ஜி.லதா, சட்டமன்றத்திலும் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சரிடமும் கோரிக்கை விடுத்து இருந்தார். இக்கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, வேலூர்  மாநகரில் கல்லூரி மாணவிகளுக்கு விடுதி அமைக்க இடம் தேர்வு செய்தது.
பல இடங்களில் பார்வையிட்டும் இடம் இல்லாததால் வேலூர் முத்துரங்கம் அரசு கலை கல்லூரியில் இடம் உள்ளது எனவும் தஞ்சாவூர் அரசு கல்லூரியிலும், கரூர் அரசு கல்லூரியிலும் மற்றும் வாலாஜா அரசு கல்லூரியிலும் மாணவிகளுக்கான விடுதி உள்ளதைபோல் வேலூரிலும் விடுதி அமைக்க வேண்டுமென ஜி.லதா எம்எல்ஏ, மாவட்ட ஆதிதிராவிட அலுவலரிடம் எடுத்துக் கூறினார்.
இக்கோரிக்கையை ஏற்று முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் மாணவிகளுக்கு விடுதி தேர்வு செய்ய மாவட்ட வருவாய் அலுவலர் சரவண வேல்ராஜ், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் சொர்ணலதா, வேலூர் தாசில்தார் அருண் ஆகியோர், ஜி.லதா எம்எல்ஏ-வுடன் சென்று, முத்துரங்கம் அரசு கல்லூரி வளாகத்தில் 1 ஏக்கர் 10 சென்ட் இடத்தை தேர்வு செய்தனர். இதில் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் உடன் இருந்தார்.

மனிதனை மிருகமாக்கும் சாதிவெறி: பி.சம்பத்

அருந்ததிய மக்களுக்கு அரசு அறிவித்த உள்இடஒதுக்கீட்டை வேலைவாய்ப் பில் முழுமையாக அமலாக்கக் கோரி  தமிழகம் முழுவதும் திங்களன்று (15.2.10) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதனொரு பகுதியாக ஈரோட்டில்  தலைமை மின்வாரிய அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப் புக்குழு உறுப்பினர் கே.குப்புசாமி தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டைக் கல்வித் துறையில் மட்டுமல்லாமல்  வேலைவாய்ப்புகளிலும் அமலாக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் 30 இடங்களில் இன்றைய தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது.
அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த 56 பேர் மருத்துவக் கல்லூரியிலும், 1165 பேர் பொறியியல் கல்லூரியிலும், சேர வாய்ப்புக் கிடைத்ததை மட்டுமே அடிக்கடி சுட்டிக்காட்டி முதல்வர் கலைஞர் பேசுகிறார். அதைநாம் மறுக்கவில்லை, ஆனால் மின்வாரியம், இடைநிலை ஆசிரியர், கல்லூரி ஆசி ரியர், பட்டதாரி ஆசிரியர் என பல்லாயிரம் பேருக்கு வேலை கிடைக்கக் கூடிய வேலைவாய்ப்புகளில் அருந்ததிய இளைஞர்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. உள்ஒதுக்கீடு குறித்த அரசின் உத்தரவு வெளியாவதற்கு முன்பே வேலை நியமன தயாரிப்புகள் துவங்கி விட்டதாக கலைஞர் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டம் வெளியான தேதியிலிருந்துதான் இது அமலாக வேண்டும். உயர்நீதிமன்றம் இத்தகைய தீர்ப்பு வழங்கிய பிறகும் தமிழக அரசுக்கு இதுவரை தீர்ப்பு உறைக்கவில்லை.
தந்தை பெரியார் பிறந்த ஈரோடு மாவட்டத்தில் நிலவும் தீண்டாமைக் கொடுமைகளை இங்கு பட்டியலிட்டார்கள். பல கிராமங்களில் அருந்ததியர் மக்களுக்கு மயானமோ அல்லது மயானப் பாதையோ இல்லை. திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகா வாலசமுத்திரம் என்ற கிராமத்தில் அருந்ததியர் சடலத்தை வறட்டாறு நதி வெள்ளத்தில் இறக்கி கொண்டு செல்லும் கொடுமை வெளிவந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் வேலாயுதபுரம் என்ற கிராமத்தில் தலித் மக்கள் ஆண் நாய் வளர்க்கக் கூடாதாம். வளர்த்தால் அந்த நாய் ஆதிக்க சாதித் தெருக்களில் பெண் நாயுடன் உறவு கொண்டு குட்டி போடுமாம். அந்தக் குட்டி பெண் நாயுடன் சுற்றித் திரிந்து தெருவே தீட்டாகிவிடுமாம். எனவே தலித் தெருவில் உள்ள ஆண் நாய்களை அடித்துக் கொன்றார்கள். சாதிவெறி மனிதருள் மிருக வெறியை ஏற்படுத்த, தற்போது மிருகங்களுக்கும் சாதி ஏற்படுத்தி ஒடுக்குகிறார்கள். தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியும்தான் இந்தக் கொடுமைக்கு அந்த கிராமத்தில் முடிவு கட்டியது.
இப்படி எண்ணற்ற கொடுமைகளைப் பட்டியலிட முடியும். ஈரோடு மாவட்டத்தில் புனிதா என்ற தலித் சிறுமி படுகொலை செய்யப்பட்டு பல ஆண்டுகளாகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் சுதந்திரமாக வீதிகளில் உலா வருகிறார்கள். பல சாதனைகளைச் செய்ததாகப் பட்டியலிடும் தமிழக முதல்வர் இத்தகைய தீண்டாமைக் கொடுமை களுக்கு முடிவு கட்ட ஏன் முழுமையான நடவடிக்கை எடுக்கவில்லை?
தொழிலாளி வர்க்கத்தின் பிரிக்க முடியாத அங்கம் தலித்துக்கள் ஆவர். குறிப்பாக அருந்ததியர் மக்கள். எனவே, தொழிலாளி வர்க்கத்தின் எந்த அங்கமும் செயல்படாமல் இருப்பதை செங்கொடி இயக்கம் ஏற்காது. அது போல உழைப்பாளிகளான தலித் மக்கள் சமூக ரீதியாக ஒடுக்கப்படுவதற்கு எதிராகவும் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகவும், உறுதியாகப் போராடுவோம். தீண்டாமை ஒழிப்பு தொழிலாளி வர்க்க ஒற்றுமைக்கு அவசியமானதாகும். இப்பார்வையோடு சமூக, பொருளாதார ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவோம்.
இவ்வாறு பி.சம்பத் பேசினார்.

சுடுகாட்டை அடைய ஆற்றைக் கடக்கும் அருந்ததியர்கள்

1993 ஆம் ஆண்டு, திண்டுக்கல் மாவட்டம் பாலசமுத்திரத்தைச் சேர்ந்த ஆர்.முருகேசன் என்பவர் மரணமடைகிறார். அவரது உடலை எடுத்துக் கொண்டு வழக்கம் போல வரட்டாற்றைத் தாண்டி செல்ல முற்படுகிறார்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள். அப்போது நீர்வரத்து அதிகமாக இருந்ததால் முருகேசனின் இறந்த உடல் ஆற்றில் அடித்துச் செல்லப்படுகிறது. அவரது உடலை சுமந்து சென்று கொண்டிருந்தவர்களோ தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள போராட வேண்டியிருந்தது.
தங்கள் பகுதியிலிருந்து சுடுகாட்டிற்கு வேறு பாதை இல்லாததால் சாலை வசதி அமைத்துத் தாருங்கள் என்ற அருந்ததியர்களின் கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதர சாதியினருக்கு அந்தக் கிராமத்தில் மயானம் உள்ளது. தனி மயானம் உள்ள தலித்துகளோ அதற்குப் போகும் பாதை இல்லாததால் ஆற்று நீரில் இறங்கி மயானத்திற்கு சென்று கொண்டிருக்கின்றனர். பாலம் அமைத்துத் தருகிறோம் என்று நிர்வாகம் கொடுத்த உறுதிமொழி, உறுதிமொழியாக மட்டுமே இருக்கிறது.
பாலசமுத்திரம் பேரூராட்சியில் மொத்தம் 700 குடும்பங்கள் உள்ளன. அதில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 250 குடும்பங்கள். இந்தப்பிரச்சனை முப்பது ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது என்கிறார் அப்பகுதியைச் சேர்ந்த எம்.வேலுசாமி. மேலும் கூறிய அவர், இதற்கு முன்பாக பட்டா நிலமொன்றில் அருகிலிருந்த சாலையை நாங்கள் பயன்படுத்தி வந்தோம். ஆனால் அந்த நிலத்திற்குச் சொந்தமானவரோ, சாலையின் நடுவில் சாமிசிலை ஒன்றை வைத்துள்ளார். பிணங்கள் அந்த வழியாகப் போக முடியாது என்றும் கூறிவிட்டார். அப்போதிருந்து ஆற்றில் இறங்கிதான் செல்கிறோம் என்றார்.
2003 ஆம் ஆண்டில் வருவாய் அதிகாரி மற்றும் தாசில்தார் ஆகிய இருவரும் இந்த பகுதிக்கு வந்து சென்றுள்ளார்கள். ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுகிறோம் என்றார்கள். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. பலமுறை பிணங்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மழை காரணமாக மயானத்திற்கே செல்லாமல் பல பிணங்கள் ஆற்றின் கரையிலேயே எரிக்கப்பட்டன. மீண்டும் பிரச்சனை எழுந்துள்ளது. வழக்கம் போலவே மாவட்ட நிர்வாகம், இந்தப் பிரச்சனை பற்றி வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
செய்தி ஆதாரம் - டைம்ஸ் ஆப் இந்தியா.

உள் ஒதுக்கீட்டை அமல்படுத்தக்கோரி எழுச்சி ஆர்ப்பாட்டம்

இடைநிலை ஆசிரியர், கல்லூரி ஆசிரியர், மின்வாரிய தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களில் அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு வழங்காததை கண்டித்தும், அனைத்து அரசுத் துறைகளிலும் அருந்ததியருக்கு உள்ஒதுக்கீட்டை அமலாக்க வேண்டும்; பின்ன டைவு பணியிடங்களை நிரப்பவேண்டும்; அருந்ததியர்களுக்கு சாதிச் சான்றிதழை முறையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், 15.2.2010 அன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
விருதுநகர்
அதனொரு பகுதியாக விருதுநகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமுஎகச மாவட்டத் தலைவர் தேனிவசந்தன் தலைமை வகித்தார். அருந்தமிழர் விடுதலை இயக்கத்தின் மாநில அமைப்பாளர் கு.ஜக்கையன் துவக்கவுரை ஆற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் பி.சுகந்தி சிறப்புரை ஆற்றினார்.
அருந்ததியர் ஜனநாயக விடுதலை முன்னணியின் மாநில அமைப்பாளர் கௌதமன், எம்.ஊர்க்காவலன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச்செயலா ளர் ஜே.ஜெ.சீனிவாசன், மா.பாண்டியன், பெருமாள்சாமி, விஜயபாண்டி, முருகன் உட்பட பலர் பங்கேற்றனர். முத்துக்குமார் நன்றி கூறினார்.
திருவில்லிபுத்தூர்
திருவில்லிபுத்தூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமுஎகச-வின் மாவட்டக்குழு உறுப்பினர் மரியடேவிட் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.முத்துவேலு துவக்கவுரை ஆற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் எம்.திருமலை கண்டன உரையாற்றினார். விநாயகமூர்த்தி, ரேணுகாதேவி, முனியப்பன், பி.முருகேசன் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
காரியாபட்டி
காரியாபட்டியில் சிவபாக்கியம், ஆறுமுகம் ஆகியோர், ஆர்ப்பாட்டத்திற்கு தலை மை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.சேகர் பேசினார். தாலுகா செயலாளர் வி.முருகன் கண்டன உரையாற்றினர். இதில், தமிழ்ப்புலிகள் மாவட்டத்தலைவர் கே.தமிழரசிகனி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச் செயலாளர் கு.பாண்டியராசு, தமிழ்ப்புலிகள் சார்பில் பழனிமுருகன், வாலிபர் சங்கத் தின் நிர்வாகிகள் சுரேஷ், ரமேஷ், மாதர்சங்க செயலாளர் பஞ்சு ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
திருத்தங்கல்
திருத்தங்கல்லில் சிஐடியு கன்வீனர் எஸ்.மாடசாமி, ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் ராமமூர்த்தி துவக்கவுரை ஆற்றினார். மாதர் சங்க மாவட்டத் தலைவர் சி.ஜோதிலட்சுமி கண்டன உரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் பி.பாண்டி, வாலிபர் சங்கம் சார்பில் கே.ஆர். பாண்டி ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆலங்குளம்
ஆலங்குளத்தில் முனியசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தைத் துவக்கி வைத்து, கரிசல் இயக்குநர் முனியாண்டி பேசினார். தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் மாவட்ட அமைப்பாளர் கே.சாமுவேல்ராஜ், ஒன்றியச் செயலாளர் எம்.சுந்தர பாண்டியன், அருந்ததியர் ஜனநாயக முன்னணியின் மாவட்டச் செயலாளர் பரமசிவம், எழுத்தாளர் பெருமாள்சாமி, சிஐடியு கன்வீனர் சேர்வை ஆகியோர் உட்பட பலர் பங் கேற்றனர்.
இராஜபாளையம்
இராஜபாளையத்தில் சிஐடியு கன்வீனர் சக்திவேல் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் ஜி.கணேசன் துவக்கவுரை ஆற்றினார். மாதர் சங்கம் சார்பில் கனகமுத்து, ஆர்.முருகன், பொன்ராஜ், சுப்பிரமணியன், அம்மாசி, பால்ராஜ், பொன்னுச்சாமி, அருந்தமிழர் விடுதலை இயக்கத்தின் பெருமாளம்மாள் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர். இராஜபாளையம் மேற்கு ஒன்றியத்தில் ஏ.கருப்பையா தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் டி.நீராத்திலிங்கம் துவக்கவுரை ஆற்றினார். வாலிபர் சங்க மாநில துணைத் தலைவர் என்.முத்துராஜ் நிறைவுரை ஆற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஏ.ராமர், கந்தசாமி ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
வத்திராயிருப்பு
வத்திராயிருப்பில் ஜீவானந்தம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. துவக்கி வைத்து என்.ஏ.சிங்கராஜ் பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.பாலசுப்பிரமணியன் கண்டன உரையாற்றினார். ஒன்றியச் செயலாளர் சி.ஜெயக்குமார், சின்னத்தம்பி, அமலன், கன்னியம்மாள் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
சாத்தூர்
சாத்தூரில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் கே.சுப்பாராஜ் தலைமை தாங்கினார். மாதர் சங்க மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.கே.பொன்னுத்தாய் கண்டன உரையாற்றினார். மாதர் சங்க வட்டச் செயலாளர் சரோஜா, அருந்தமிழர் விடுதலை இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் தமிழ்ச்செல்வன், சீனிவாசன், விஸ்வநாத் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டையில் மாரி, சந்திரன், இளங்கோ ஆகியோர், ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தனர். ராஜாராம் துவக்கவுரை ஆற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் எம்.தாமஸ் கண்டன உரையாற்றினார். இதில் கணேசன், ளகாளிமுத்து, மகராசி, நாச்சியார் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
பந்தல்குடி
பந்தல்குடியில் எம்.ஞானப்பிரகாசம், ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் ஆர்.அண்ணாத்துரை துவக்கவுரை ஆற்றினார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் எஸ்.ஞானகுரு கண்டன உரையாற்றினார். மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பூங்கோதை, தமிழ்ப் புலிகள் ஒன்றியச் செயலாளர் சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் சந்திரமோகன் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
எரிச்சநத்தம்
எரிச்சநத்தத்தில் விவசாயிகள் சங்க வட்டச் செயலாளர் பி.நேரு, ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் எம்.முத்துக்குமார் துவக்கவுரை ஆற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.சேகர் கண்டன உரையாற்றினார். கோவிந்தராஜ், மாரியப்பன், தமிழ்ப்புலிகள் சார்பில் முத்தையா, ஆதித் தமிழர் பேரவையின் சார்பில் வேல்முருகன் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்.ஆர்.நகர்
ஆர்.ஆர்.நகரில் கே.குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் எம்.சி.பாண்டியன் துவக்கி வைத்துப் பேசினார். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.விஜயமுருகன் சிறப்புரை ஆற்றினார். இதில் பாலமுருகன், ஆரோக்கியராஜ் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
வன்னியம்பட்டி
வன்னியம்பட்டி விலக்கில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க வட்டத் தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். துவக்கி வைத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் கே.பால்கண்ணன் பேசினார். விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.குருசாமி கண்டன உரையாற்றினார். புரட்சிப் புலிகள் சார்பில் கோவிந்தன், சந்திரன், இருளப்பன், இசக்கி ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
சிவகாசி
சிவகாசியில் எஸ்.மாடசாமி, ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்தார். புரட்சி புலிகள் அமைப்பின் மாநில அமைப்பாளர் எஸ்.கே.பழனிச்சாமி துவக்கவுரை ஆற்றினார். நகரச் செயலாளர் பி.என்.தேவா கண்டன உரையாற்றினார். சிஐடியு சார்பில் ஜே.லாசர், வாலிபர் சங்க நகரத் தலைவர் கே.முருகன் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
தேனி மாவட்டம்
தேனியில் ஸ்டேட் பேங்க் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பாளர் டி.வெங்கடேசன் தலைமை வகித்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொறுப்பாளர் ஏ.லாசர் சிறப்புரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.ராஜப்பன், அருந்ததியர் மக்கள் முன்னேற்ற இயக்க மாவட்ட அமைப்பாளர் எம்.ராஜேந்திரன், ஆதித் தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் வி.வீரபாண்டியன், தமிழ்ப்புலிகள் மாவட்டச் செயலாளர் சி.ஆதிநாகராஜ், ஏஎச்ஆர்எப் ஒருங்கிணைப்பாளர் பி.முருகேசன், எஸ்.எம்.சுரேஷ்குமார், மாதர் சங்க தேனி மாவட்டச் செயலாளர் எம்.விஜயா, சி.மஞ்சுதா உட்பட நூற்றுக்கும் மேற்பட்ளடோர் பங்கேற்றனர்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம்
திருச்சி ஜங்ஷன் காதி கிராப்ட் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, கட்சியின் மாநகரச் செயலாளர் கே.அண்ணாதுரை தலைமை வகித்தார். கிளைச் செயலாளர்கள் என்.நாகராஜ், சி.குமார், சி.சந்திரபிரகாஷ், எம்.வள்ளுவன், ஏ.வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன் எம்எல்ஏ, மாவட்டச் செயலாளர் எஸ்.ஸ்ரீதர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே.வி.எஸ்.இந்துராஜ், ஆர்.சம்பத், அன்வர் உசேன், பகுதிச் செயலாளர்கள் வீரமுத்து, குமார், ஜெயபால், ராஜேந்திரன், கார்த்தி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் வெற்றிச்செல்வன், மாவட்டத்தலைவர் சசிகுமார், மாதர் சங்க நிர்வாகிகள் சித்ரா, ரேணுகா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்டம்
நெல்லை- பாளையங்கோட்டை ஜவஹர் மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் ஆர்.கிருஷ்ணன் தலைமை வகித்தார். அருந்ததியர் மகாசபை தலைவர் மரியதாஸ் முன்னிலை வகித்தார். எஸ்.சி. எஸ்.டி., நலச்சங்க மாவட்டச் செயலாளர் பூ.கோபாலன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்துப் பேசினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வீ.பழனி, சிஐடியு மாவட்டத் தலைவர் ம.ராஜாங்கம், மாவட்டச் செயலாளர் ஆர்.கருமலையான், எஸ்.சி., எஸ்.டி. மத்திய - மாநில அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலா ளர் அம்பேத்கர், மாவட்டத் தலைவர் ஹரிராம், மக்கள் கண்காணிப்பகம் மாவட்ட நிர்வாகி கணேசன் ஆகியோர் பேசினர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் என்.நன்மாறன் எம்எல்ஏ நிறைவுரையாற்றினார்.

கீரிப்பட்டி ஊராட்சியை புறக்கணிப்பதா? ஊராட்சித் தலைவர் பால்ச்சாமி வேதனை

தமிழகத்தில் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம், விருதுநகர் மாவட்டம் கொட்டக்காச்சியேந்தல் கிராம ஊராட்சிகளுக்கு இடதுசாரிகளின் தொடர் முயற்சி மற்றும் தமிழக முதல்வர் கருணாநிதியின் உரிய தலையீடுகள் காரணமாக வெற்றிகரமாக தேர்தல் நடைபெற்று தலித் தலைவர்கள் அங்கு பொறுப்பிலே உள்ளனர்.
குறிப்பாக இந்த ஊராட்சிகளில் தேர்தல் நடத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்தினர்.
வெற்றிபெற்ற ஊராட்சித் தலைவர்களுக்கு சென்னை கலைவாணர் அரங்கில் 13.11.2006 அன்று தமிழக முதல்வர் தலைமையில் சமத்துவப் பெருவிழா நடைபெற்றது.
பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம், கொட்டக்காச்சியேந்தல் ஊராட்சிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்டப் பணிகளிலிருந்து அரசின் எந்த ஒரு நலத்திட்டப்பணியும் தொய்வின்றி நடைபெற வேண்டும் என தமிழக முதல்வர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
ஆனால் இன்றைக்கு கீரிப்பட்டி ஊராட்சியில் செயல்படுத்த வேண்டிய பல்வேறு பணிகளுக்கு நிர்வாக ஒத்துழைப்பு இல்லை என கவலை தெரிவிக்கிறார் ஊராட்சித் தலைவர் பாலுச்சாமி.
இதுகுறித்து பல்வேறு விஷயங்களை சுட்டிக் காட்டியுள்ள பாலுச்சாமி, 2008-2009ம் ஆண்டில் தாம் கையெழுத்திட்டு 80 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்திட்டத்திற்கு பரிந்துரை செய்ததாகவும், அதில் ஒருவருக்குக் கூட இன்று வரை உதவித்தொகை கிடைக்கவில்லை என்கிறார்.
மேலும் அவர் கூறியதாவது:
தலித்மக்கள் வசிக்கும் தெருவிற்கு மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டித்தர வேண்டுமென மாவட்ட ஆட்சியராக இருந்த ஜவஹரிடம் வலியுறுத்தியும், அது இன்றும் நிறைவேறவில்லை; இங்கு அரசின் சார்பில் கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடம் மணமகன், மணமகள் அறைகள் இல்லாமல் வெறுமனே விடப்பட்டுள்ளது; சமையல் அறை இல்லை; மழையின் போது நனைந்து கொண்டே சமைக்கும் அவலம் உள்ளது.
அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் கழிப்பறை ஒன்று 2006-2007ம் ஆண்டு கட்டிக்கொடுக்கப்பட்டது. இன்று வரை அது பூட்டப்பட்டே உள்ளது. இதற்கு மின்வசதி செய்து தரவில்லை. ரேசன் கடைக்கு மின் வசதி செய்துதரவில்லை. புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி அலுவலகத்திற்கும் மின்வசதி செய்துதரவில்லை.
அண்ணா மறு மலர்ச்சி திட்டப்பணிகள் சம்பந்தமாக ஊராட்சித் தலைவர் என்ற முறையில் என்னிடம் கலந்தாலோசிப்பதில்லை. வேலை முடிந்த பிறகு, அந்த வேலை நடந்துள்ளது, இந்த வேலை நடந்துள்ளது என்கிறார்கள். இலவச கேஸ் அடுப்பு  எத்தனை பயனாளிகளுக்கு வழங்கவேண்டும் என்று, லெட்டர் பேடில் எழுதிக் கொடுங்கள் போதும் என்றார்கள். கிட்டத்தட்ட 700 பயனாளிகளுக்கு வழங்க வேண்டுமென எழுதிக் கொடுத்தேன்; இன்னும் கேஸ் அடுப்பு கிடைக்கவில்லை.
இவ்வாறு பாலுச்சாமி தனது குமுறலை அடுக்கிக் கொண்டே போனார்.

சாதிவெறியர்கள் அராஜகம்: சிபிஎம் ஊழியர் மீது தாக்குதல்

ஒட்டன்சத்திரம் அருகே உள்ளது கொசவபட்டி. இப்பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளராக பி.செல்வராஜ் உள்ளார். இவர் தலித் ஆவார்.
காப்பிளியபட்டியில் தண்ணீர் வழங்குவது சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சனையில் இவரை, ஊராட்சித் தலைவர் இளங்கோவன் கடுமையாக தாக்கியுள்ளார். அதனால் செல்வராஜுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு- செல்வராஜ், 10 நாட்கள் சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால் காவல்துறையினர் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்ய மறுத்துள்ளனர்.
இதுசம்பந்தமாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளதுடன், பிப்ரவரி 16-ம் தேதி ஒட்டன்சத்திரத்தில் மறியல் போராட்டத்தையும் அறிவித்துள்ளது. இப்போராட்டத்தில் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் கே.ஆர். கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

வாலிபர் சங்கத்திற்கு அம்பேத்கர் பாசறை நன்றி

கடலூர் மாவட்டத்தில், அரசமைப்புச் சட்ட சிற்பி அம்பேத்கர் சிலையை மீண்டும் நிறுவப்போராடிய வாலிபர் சங்கத்திற்கு புரட்சியாளர் அம்பேத்கர் விழிப்புணர்வு பாசறை பாராட்டும் நன்றியும் தெரிவித்தது.
இதுதொடர்பாக இந்த அமைப்பின் பொதுச்செயலாளர் கோ.நீலமேகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது:
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தாலுகா பழையபட்டிணம் கிராமத்தில் பொது இடத்தில் வைக்கப்பட்ட அண்ணல் அம்பேத்கர் சிலையை அகற்றியே தீருவோம் என திட்டம் போட்டு தீண்டாமைத் தீயை மூட்டும் செயலில் சில மத பழமைவாதிகள் இறங்கியபோது, சகோதரர்களாக இணைந்து வாழ வேண்டிய தலித்-முஸ்லிம் மக்களிடையே மோதல் நடக்க இருந்த நிலையில் ஒருசில தலைவர்களே சிலையை அகற்ற ஒப்புதல் அளித்து சாதிவெறிக்கு துணைபோனது வேதனைக்குரியது. துரோகத்தால் தலித் மக்கள் நிலை குலைந்தபோது, சாதி வெறியரோடு கூட்டு சேர்ந்து வருவாய் துறையும், காவல்துறையும், தலித் மக்களுக்கு எதிராக களம் இறங்கியபோது ஒடுக் கப்பட்ட மக்களின் உரிமை தோழன் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிவரும் வாலிபர் சங்கத் தோழர்கள் டி.அமிர்தலிங்கம் தலைமையில் அணிதிரண்டு, பல கட்ட போராட்டங்கள் நடத்தி தலித் மக்களின் சுயமரியாதை காக்கவும், அம்பேத்கர் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும் ஈடுபட்டதைப் பாராட்டுகிறோம்.
தலைவர்களின் சிலையை அவமரியாதை செய்வோர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயும் என தமிழக அரசு அறிவித்த நிலையிலும் இத்தகைய செயல் தொடர்கிறது.
சமூக மாற்றத்திற்காக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி இளைஞர்களை எழுச்சி பெற செய்யும் வாலிபர் சங்கம் சரியான நேரத்தில் தலையீடு செய்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அம்பேத்கர் சிலைக்கு சட்ட பாதுகாப்பு ஏற்படுத்தியதோடு அவரின் புகழுக்கு பெருமை சேர்த்தது. தலித் மக்களுக்காக போராட்டங்கள் நடத்தி சுயமரியாதை ஏற்படுத்தி தந்த இடதுசாரி பாதையில் அணி வகுக்கும் வாலிபர் சங்கத் தலைவர்களுக்கும் தோழர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை புரட்சியாளர் அம்பேத்கர் விழிப்புணர்வு பாசறை தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு நீலமேகம் கூறியுள்ளார்.

தீண்டாமை ஒழிப்பு விருந்தல்ல, மருந்து! - பி.சம்பத்

பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டக்கச்சியேந்தல் ஆகிய 4 ஊராட்சிகளில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, தலித் பிரதிநிதிகள் ஊராட்சித் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டமை, உத்தப்புரம் தீண்டாமைச் சுவர் உடைப்பு, கோவை பெரியார் நகர் தீண்டாமைச்சுவர் உடைப்பு, அருந்ததியர் மக்களுக்கு 3 சதவீத உள்இடஒதுக்கீடு போன்றவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு  தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தலித் மற்றும் அருந்ததியர் அமைப்புகளின் வற்புறுத்தல் - போராட்டங்களால் கலைஞர் தலைமையிலான தமிழக அரசு ஏற்றுக்கொண்டு நிறைவேற்றப்பட்டவையாகும்.
இவ்வாறு தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளை சிபிஐ(எம்) மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்கவே செய்தன. இவ்வாறு வரவேற்றதை அவ்வப்போது ‘முரசொலி’ பத்திரிகையும் மேற்கோள் காட்டி பல கட்டுரைகளை வெளியிடவும் செய்தது.
ஆனால் 11-02-2010 தேதிய முரசொலியில் ‘மனிதநேயமும், மாசற்ற அரசியல் நாகரிகமும்’ என்ற தலைப்பிட்டு கலைஞர் அவர்கள் உடன் பிறப்புக்கு மடல் எழுத, அதனை பரவலாக பல பத்திரிகைகளும் வெளியிட்டுள்ளன. அதன் உள்ளடக்கத்திலும், வார்த்தை ஜாலத்திலும் நளினம் மட்டுமல்ல, இடதுசாரிகளுக்கு எதிரான வெறுப்பும் சேர்ந்தே வெளிப்படுவதை படிப்பவர்கள் உணர முடியும்.
சமீப காலமாக அருந்ததியர் மக்களும், அருந்ததியர் அமைப்புகளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலையீடுகளை வரவேற்று நடத்திவரும் விழாக்கள் கலைஞருக்கு உறுத்தலை ஏற்படுத்தியுள்ளன என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. கலைஞருக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்வோம்.  சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கலைஞருக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் “அருந்ததியர் உள்ஒதுக்கீடு கோரிக்கையை என்னிடம் யாரும் முன்வைக்கவில்லை, நானே என்னிடம் கோரிக்கை வைத்து நானே அதை நிறைவேற்றினேன்” என தன்னைத் தானே பாராட்டிக் கொண்டாரே அத்தகைய விழாக்கள் அல்ல இவை. 25 ஆண்டு கால அருந்ததிய மக்கள் மற்றும் அமைப்புகளின் போராட்டங்களை அங்கீகரித்து, அவர்களின் கோரிக்கைகளுக்காக மார்க்சிஸ்ட் கட்சி கடந்த 3 ஆண்டுகளாக நடத்திய போராட்டங்களை அம்மக்கள் வரவேற்று நடத்தப்படும் விழாக்கள் இவை. அருந்ததியர் மக்கள் - அமைப்புகள்- மார்க்சிஸ்ட் கட்சி - தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இணைப்பை வலுப்படுத்தும் விழாக்கள் இவை. கலைஞர் சொல்வது போல இந்த விழாக்கள் தமிழக அரசின் செயலை இருட்டடிப்பு செய்யவுமில்லை. பிறகு ஏன் விருந்திட்டோருக்கு நன்றி கூறாமல் விருந்தை அருந்தியவர்களுக்கு நன்றியும் பாராட்டுமா என கலைஞர் சாடுகிறார்? இதன் நோக்கம் ஒன்றே ஒன்றுதான்.
தலித் மற்றும் அருந்ததியர் மக்களின் சமீபகால வெற்றிகளில், சிபிஐ(எம்) தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட இடதுசாரிகளுக்கு எந்த பங்கும் இல்லை- எல்லாமே தன் சாதனைதான் - தானே அறிந்து புரிந்து தலையிட்டு தீர்வு கண்டவைதான் என மக்களிடம் தம்பட்டமடித்து அரசியல் ஆதாயம் தேடத்தான். எனவேதான் “பல ஆண்டு காலமாக நடைபெறாமல் இருந்த, நடைபெற்றாலும் உயிருடன் இருக்க முடியாத ஊராட்சிமன்ற தேர்தல்களை பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டக்கச்சி யேந்தல் ஆகிய ஊர்களில் நடத்த முன்வந்த ஆட்சி எது? இருபதாண்டு காலமாக  இருந்த தீண்டாமைச்சுவர் என திகழ்ந்த தீய சுவர்களை இடித்து எறிந்தது எந்த ஆட்சி - யார் துணையோடு? கோரிக்கை வைத்தவர்களின் துணையோடா? அல்லது இந்த ஆட்சியின் அதிகாரிகளைக் கொண்டு நடத்தப்பட்ட நிகழ்வா?” என கேள்விக்கணைகளைத் தொடுக்கிறார். இதன் மூலம் தீண்டாமைக் கொடுமைகளை ஆய்வுசெய்து கண்டறிந்து அம்பலப்படுத்தி, அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து, மக்களைத் திரட்டி இயக்கம் நடத்திய இடதுசாரி அமைப்புகளின் பங்கை உதாசீனப்படுத்துகிறார்.
கலைஞரிடம் நாம் சில கேள்விகளை முன் வைக்க விரும்புகிறோம். 5 முறை முதல்வராக இருந்தீர்களே? -அதிகாரிகள், காவலர்கள் புடைசூழ ஆட்சி நடத்துகிறீர்களே - தமிழகத்தின் பெரிய அரசியல் கட்சியாக திமுக இருக்கிறதே? உங்களால் ஏன் தமிழ்நாட்டில் பல்லாயிரம் கிராமங்களில் இன்றளவும் நிலவும் தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவு காண முடியாமல் போயிற்று. உத்தபுரம், பெரியார் நகர் தீண்டாமைச்சுவர்களை 20 ஆண்டுகாலத்தில் நீங்களே கண்டறிய முடியாமலும், அல்லது தமிழக அரசு நிர்வாகத்தின் கவனத்திற்கு சில ஆண்டுகள் முன்பே புகாராக வந்தும், தகர்த் தெறிய முடியாமலும் போயிற்று? அருந்ததியர் உள்ஒதுககீடு கோரிக்கையை உங்களது கடந்த கால ஆட்சியில் ஏன் நிறைவேற்ற முடியாமல் போயிற்று? தமிழகக் கிராமங்களில் பல நூறு கோவில்களில் தலித்துகள் இன்றளவும் நுழைய முடியவில்லை என்பது உண்மைதானே? இரட்டைக்குவளை முறை, பொதுப்பாதை மறுப்பு, மயான உரிமை இல்லாமை, மயான பாதை இல்லாமை என பல ஒடுக்கு முறைகள் உள்ளனவே, இவற்றை ஒழிக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? தலித் மக்களின் சமூக, பொருளாதார உரிமைகளை நிலை நாட்ட பெரியார் பாதையை உறுதியுடன், ஏன் கடைப்பிடிக்கவில்லை - காங்கியனூர்-உத்தபுரம் போன்ற கிராமங்களில் தலித் மக்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது? பலரையும்சிறையில் அடைத்தது ஏன்? இவை எல்லாம் வெறும் கேள்விகள் அல்ல. உண்மைகள்.
ஆக, கடந்த 42 ஆண்டுகால திராவிட இயக்கக் கட்சிகள் ஆட்சிக்காலத்தில் தமிழ் நாட்டில் தீண்டாமைக் கொடுமைகளை ஒழிக்க முடியவில்லை என்பது மட்டுமல்ல;
20 ஆண்டுகால உத்தபுரம், பெரியார்நகர் தீண்டாமைச் சுவர்கள் போல பல ஒடுக்கு முறைகள் வெளித்தெரியாமல்  மறைத்து வைக்கப்பட் டுள்ளன என்பதை கலைஞர் மறுக்க முடியாது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி போன்ற இடது சாரி இயக்கங்கள் பல்லாயிரம் கிராமங்களில் ஆய்வு செய்து, அமுக்கப்படும் தீண்டாமைக் கொடுமைகளை வெளிக்கொணர்ந்து, தலித் மக்களின் சமூக - பொருளாதார உரிமைகளுக்காகப் போராடி வருகின்றன. பல தலித் மற்றும் அருந்ததியர் அமைப்புகளையும் இப்போராட்டத்தில் இணைத்துக் கொள்கின்றன. இப்போது நடை பெறும் இயக்கங்களும், விழாக்களும் இதன் ஒருபகுதிதான். பெரியார் பாதையில் நடைபோடுவதாகக் கூறும் திமுக அரசு இப்பிரச்சனைகளில் தலையிட்டு தலித் மக்களின் உரிமைகளை நிலை நாட்ட முன்வருவது அதன் சட்டபூர்வமான கடமையாகும்.
தீண்டாமை ஒழிப்பு என்பது கலைஞர் சொல்வது போல விருந்து அல்ல. சமூகப் பிணிபோக்கும் மருந்து. தமிழ்நாட்டின் இன்றைய நிலையில் தீண்டாமை ஒழிப்பு என்ற மருத்துவம் பெரிய அளவில் சமுதாயத்தை சீர்படுத்த தேவைப்படுகிறது. இடதுசாரி இயக்கங்கள் இதற்கான பங்களிப்பை மேலும் வலுப்படுத்தும். தமிழக அரசும் தனக்குரிய சட்டபூர்வமான கடமையை நிறைவேற்ற முன்வரவேண்டும். மாநில அளவில் முதல்வர் தலைமையில் அமைக்கப்பட்ட தீண்டாமை ஒழிப்புக்குழு ஒரு முறைகூட கூடவில்லை என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி வெளிவந்த ஒரு தகவலாகும். மாவட்ட அளவில், தமிழக அர சால் சம்பிரதாயமாக அமைக்கப்பட்டுள்ள தீண்டாமை ஒழிப்புக்குழுக்கள் செயல்படவில்லை என்பதை உணர்ந்து, தீண்டாமை ஒழிப்பில் அக்கறையுள்ள அமைப்புகளையும், ஆர்வலர்களையும் உள்ளடக்கி ஆய்வுக்குழுக்களை அமைத்து தமிழகத்தில் பரவலாகக் காணப்படும் தீண்டாமைக் கொடுமைகளை வெளிக்கொணர வேண்டும். கலைஞர் கூறுவது போல இவை அங்கொன்றும் இங்கொன்றுமாக இல்லை என்பதை உணர வேண்டும். இக்கொடுமைகளுக்கு முடிவு கட்ட உருப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழக அரசிடம் வலியுறுத்தியபடி சட்டபூர்வமான அந்தஸ்தும், அதிகாரமும் கொண்ட தேசிய ஆணையம் போல தமிழ்நாடு தலித்-பழங்குடி ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டங்களை உறுதியாக அமல்படுத்த வேண்டும், அருந்ததியர் மக்கள் பிரச்சனைகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியிடம் முதல்வர் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும்.
கட்டுரையாளர்: மாநில அமைப்பாளர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி

தீண்டாமைச் சுவர் அகற்றம்: மார்க்சிஸ்ட் கட்சிக்கு திருமண அமைப்பாளர்கள் நன்றி

கோவையில், தீண்டாமைச் சுவரை அகற்ற நடவடிக்கைகள் மேற்கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, அனைத்து இன திருமண அமைப்பாளர்கள் ஒருங்கிணைப்புக்குழு நன்றி தெரிவித்தது.
இதுகுறித்து அச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் தமது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்ததாவது:
கோவை வரதராஜபுரம் பெரியார் நகரில், 21 ஆண்டுகாலமாக இருந்த தீண்டாமைச் சுவரை அகற்ற துணை நின்ற மார்க்சிஸ்ட் கட்சிக்கும், தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கும் எங்கள் சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தீண் டாமைக்கு எதிரான பணிகள் தொடரவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

வியாழன், 4 மார்ச், 2010

அகற்றப்பட்ட அதே இடத்தில் அம்பேத்கார் சிலையை நிறுவ வேண்டும்- வாலிபர் சங்கம் தொடுத்த வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கடலூர் மாவட்டம், பழையபட்டினம் கிராமத்தில் அகற்றப்பட்ட அதே இடத்திலேயே டாக்டர் அம்பேத்கரின் சிலையை மீண்டும் நிறுவ வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டத்தில் உள்ளது பழையபட்டினம் கிராமம். இக்கிராமத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்றவர்கள் கைது என்று தினசரி பத்திரிகைகளில் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பழையபட்டினம் கிராமத்திற்கு விசாரித்தனர்.
அப்போது அந்த கிராம மக்கள் தெரிவித்த விவரங்கள் வருமாறு: -
பல்வேறு சமூகத்தை சேர்ந்த மக்கள் பழையபட்டினம் கிராமத்தில் வசித்து வந்தாலும், தலித் மக்கள்தான் பெரும்பான்மையாக இருக்கிறோம். இந்நிலையில், கடந்த 2008-ம் ஆண்டு கிராமத்தின் பொது இடத்தில்- நூலகம், ஊராட்சி மன்ற கட்டிடம் உள்ள இடத்தில்- அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது.
அதுவரை பொதுமையாக இருந்த ஒரு தரப்பினர் (முஸ்லிம்கள்) அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கக் கூடாது என்றும், அந்த சிலையை அகற்ற வேண்டும் என்றும் குரல் எழுப்பி வந் தனர். இவர்களுக்கு ஆதரவாக அரசு எந்திரம் செயல்பட்டது.
மேலும், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவனை சந்தித்த அந்த சமூக மக்கள், அம்பேத்கர் சிலையை அகற்ற வேண்டும் என்றும் கூறவே, அவரும் சிலையை அகற்றி வேறு இடத்தில் வைக்க சம்மதம் தெரிவித்து எழுத்துப் பூர்வமாக கடிதம் கொடுத்தார். இது எங்கள் தலித் மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, எந்த தரப்பிற்கும் இடையூறு இன்றி பொது இடத்தில் உள்ள சட்டமேதை அம்பேத்கர் சிலையை அப்புறப்படுத்தக் கூடாது என்றும், அவர் சிலைக்கு மாலை அணிவிக்கும் போராட்டத்தையும் வாலிபர் சங்கம் அறிவித்தது. அதன்படி கடந்த டிசம்பர் மாதம் 25ம் தேதி வெண்மணி தியாகிகள் நினைவு தினத்தன்று தீண்டாமை ஒழிப்பு தினமாக கடைப்பிடித்து போராட்டத்தை நடத்தியது. இதற்கு அந்த கிராம மக்களும் ழுழு ஆதரவும் தெரிவித்தனர்.
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்ற வாலிபர் சங்கத்தினர் 200 பேரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதோடு கைது செய்தனர். மேலும் ஏராளமான காவல்துறையினரை குவித்து பதட்டத்தை ஏற்படுத்தியதோடு கிராமத்திற்குள் யாரையும் நுழைய விடாமல் அராஜகத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் அந்த சிலையை அகற்றி வேறு இடத்தில் வைப்பதற்கான முயற்சியில் காவல்துறையும், வருவாய்த் துறையும் ஈடுபட்டு வந்தது. இதனால் வாலிபர் சங்கத்தின் பழையபட்டினம் கிளைச் செயலாளர் டி.அமிர்தலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்தார். அந்த வழக்கில் அம்பேத்கர் சிலை யை அகற்ற தடை விதிக்க வேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கோகலே, நீதிபதி சசி தரன் ஆகியோர் 2010 ஜனவரி மாதம் 20ம் தேதி வரை தடை ஆணையை பிறப்பித்தனர். இதனை அறிந்த காவல்துறையும், வருவாய்த்துறையும் கடந்த ஜனவரி மாதம் 20-ம் தேதி நள்ளிரவில் நீதி மன்றத்தின் உத்தரவை மீறி சிலையை அகற்றி, தலித் மக்கள் வசிக்கும் பகுதியில்  உள்ள குளத்தை சமப்படுத்தி அம்பேத்கர் சிலையை நிறுவிவிட்டுச் சென்றனர்.
இந்த சம்பவத்தின் போது பழையபட்டினம் கிராமத்திற்குச் சென்று தலித் மக்களை வீட்டிலிருந்து வெளியே வர விடாமல் காவல் துறையினரை குவித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
காவல்துறையினரின் இந்த அராஜகச் செயல் தலித் மக்களிடையே மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் வாலிபர் சங்கத்தின் கிளைச் செயலாளர் அமிர்தலிங்கம் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கை தொடர்ந்தார். இம்மனுவை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம் பல கட்ட சாட்சியங்களை விசாரணை செய்தது. பின்னர் குழு ஒன்றையும் அமைத்தது. உயர்நீதிமன்ற பதிவாளர் விஜயன் தலைமையில் 5 வழக்கறிஞர்கள் பழையபட்டினம் கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கிற்காக கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் 2 முறை சென்னை சென்று சாட்சி யம் கூறினார்கள். இதேபோல் காவல்துறையினர், வருவாய்த்துறையினர் சாட்சியம் அளித்தனர்.
இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கோகலே, நீதிபதி சசிதரன் ஆகி யோர் வியாழனன்று தீர்ப்பளித்தனர். அதில் மிகப்பெரிய தலைவர்களின் சிலைகளை அவமதித்த காவல்துறை, வருவாய்த்துறையினரை இந்த நீதிமன்றம் வன்மையாக கண்டிக்கிறது என்றனர்.
நீதிமன்றத்தின் தடை உத்தரவையும் மீறி இரவு 11 மணிக்கு மேல் சிலையை அப்புறப்படுத்திய தையும் கண்டிக்கிறது. அம்பேத்கர் சிலையை ஏற்கனவே இருந்த பொது இடத்திலேயே மீண்டும் நிறுவ வேண்டும். பிப்ரவரி 20 இறுதிக்குள் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் திறப்பு விழா நடத்த வேண்டும் என்றும், சிலையை அப்புறப்படுத்திய வட்டாட்சியர், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், ஆய்வாளர் ஊதியத்தில் இருந்து ரூ. 20 ஆயிரம் பிடித்தம் செய்து மனுதாரர் அமிர்தலிங்கத்துக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அந்த தீர்ப்பில் உத்தரவிட்டனர்.
மனுதாரர் சார்பில் உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் திருமூர்த்தி, தியாகு, புருஷோத்தன் ஆகியோர் ஆஜரானார்கள்.
இந்த தீர்ப்பு குறித்து வாலிபர் சங்க கடலூர் மாவட்ட தலைவர் என்.அசோகன் கூறுகையில், இது வாலிபர் சங்கத்தின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் நீதி நியாயம் வென்றுள்ளது என்றும் தெரிவித்தார். நீதிமன்ற தீர்ப்பை தலித் மக்கள் வரவேற்றுள்ளதோடு வாலிபர் சங்கத்திற்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.

தோளோடு தோள்நின்று போராட ரவிக்குமார் அழைப்பு

கோவை பெரியார் நகரில் நடைபெற்ற பாராட்டு விழாவில், ஆதித்தமிழர் விடுதலை முன்னணியின் மாநில அமைப்பாளர் கோவை இரவிக்குமார் பேசியதாவது:
25 ஆண்டுகாலமாக அருந்ததியர் உள்இடஒதுக்கீட்டு கோரிக்கை சமூகத் தளத்தில் இருந்தது. அதனை பொதுத்தளத்தில் எதிரொலித்து வெற்றியை ஈட்டித்தந்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான். தீண்டாமை ஒழிப்பு முன்னணி உருவான போது மற்ற கட்சிகளில் உள்ளது போன்று தலித் மக்களுக்கு பதவி தந்து கவுரவப்படுத்தும் ஓர் அமைப்பு என்றே நினைத்தோம். ஆனால் தலித் அல்லாதோரும் பொறுப்பேற்று, உருவான நான்காண்டு காலத்தில் எங்கு அநீதி நடந்தாலும் அருந்ததியர் இயக்கங்களுடன் இணைந்து களம் காண்கிறது.
கத்தியின்றி, ரத்தமின்றி பெரும் போராட்டங்களின்றி தீண்டாமைச்சுவர் வெற்றிகரமாக அகற்றப்பட்டது. நாங்கள் போராடிய போதும், முறையிட்ட போதும் அரசு கேட்கவில்லை. உத்தப்புரத்தை ‘உத்தமபுரமாக’ மாற்றுவதாகச் சொன்ன முதல்வர், மார்க்சிஸ்ட் கட்சி தலையிட்டதும் நடவடிக்கை எடுத்தார். ஆதித்தமிழர் விடுதலை முன்னணி சார்பில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேற்கு மாவட்டங்களில் இதேபோன்ற சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எங்களுடன் தோளோடு தோள் நின்று போராட வாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு ரவிக்குமார் பேசினார்.

தீண்டாமைக்கு எதிரான போரில் அனைவரும் இணைய என்.வரதராஜன் அழைப்பு

தீண்டாமைக்கொடுமைக்கு எதிரான போராட்டத்தில் யாரையும் வேறுபடுத்தி பார்க்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரும்பவில்லை. ஜனநாயக, சமூகநீதி சக்திகள் இந்த போராட்டத்தில் இணைந்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் குறிப்பிட்டார்.
கோவை 10-வது வட்டம் தந்தை பெரியார் நகரில் 21 ஆண்டுகாலமாக நீடித்த தீண்டாமைச் சுவரை அகற்ற போராடியதற்காக புதனன்று நடைபெற்ற நன்றி பாராட்டு விழாவில் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் பேசியதாவது:
தீண்டாமைக் கொடுமை கண்டு வெகுண்டெழுந்து வைக்கம் வரை சென்று போராடியவர் தந்தை பெரியார். ஆனால் இங்கு பெரியார் நகர் அருந்ததியர் மக்களை பொது வழியில் செல் லவிடாமல் வழிமறித்து 21 ஆண்டுகளாக தீண்டாமை சுவர் நீடித்துள்ளது. சுவருக்கு அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் உள்ளவர்கள் பஞ்சாலைத் தொழிலாளர்கள்தான். அங்கு ஒன்றாக கூலிப் போராட்டத்தை நடத்த வேண்டியவர்கள்தான்.
இங்குள்ள தீண்டாமைச் சுவரை அகற்றியதற்காக தமிழக முதல்வரைப் பாராட்டுகிறோம். கார் டிரைவருக்கு முக்கிய பணி கார் ஓட்டுவது. அதற்காக அவரை யாரும் பாராட்டிக் கொண்டிருப்பதில்லை. இருந்தாலும் விபத்தில்லாமல் லாவகமாக கார் ஓட்டியதற்காகப் பாராட்டுவோம். அதை விடுத்து நேரெதிர் திசையில் வந்தால் விபத்து தான் ஏற்படும்.
தமிழகத்தில் 50 இடங்களில் புதைகுழிச் சாக்கடைகள் உள்ளன. அவற்றில் இறங்கி அப்புறப்படுத்துவது யார்? அருந்ததிய இளைஞர்கள்தானே. தமிழகம் முழுவதுமுள்ள சுடுகாடுகளில் பிணம் எரிப்பது, புதைப்பதும் யார்? தலித் மக்கள்தானே.
சென்னையில் மட்டும் சாக்கடை அள்ள இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் அங்கு மட்டும் தான் 173 மயானப் பணியாளர்கள் அரசு ஊழியர்கள் ஆக்கப்பட்டுள்ளனர். இதனைத் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்திக் கொண்டுவர வேண்டும் என்கிறோம்.
தரிசு நில, புறம்போக்கு நில விநியோகம் என்றால், தொகுப்பு வீடுகள் கட்டித்தருவது என்றால், அதில் முதல் நபராக அருந்ததியருக்குக் கொடு என்கிறோம். 63 ஆண்டுகால சுதந்திர வாழ்வில் அருந்ததியர் வாழ்நிலை இன்னும் நிமிரவில்லையே? கட்டுவதற்குத் துணியின்றி, குந்தக் குடி சையின்றி பரிதவிக்கிறார்களே.
இந்த அவலத்தைப் போக்க அனைவரும் எழுந்து போராட வேண்டும், தீண்டாமையை ஒழிக்க பாடுபட வேண்டும். இதில் நாங்கள் யாரையும் வேறுபடுத்திக் பார்க்கவில்லை. இந்தியப் பணம் ரூ. 90 லட்சம் கோடி சுவிஸ் வங்கியில் உள்ளதே. இதற்கும் விலைவாசி உயர்வுக்கும் தொடர்பு இல்லையா? தாங்கமுடியாத விலைவாசியால் பல குடும்பங்கள் நொறுங்கிப் போயிருக்க, ஆன்-லைன் வர்த்தக அனுமதியால் பெருமுதலாளிகள் கொள்ளையடிக்கிறார்கள். அதை எதிர்த்த போராட்டத்திலும் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.
இவ்வாறு என்.வரதராஜன் பேசினார்.

உத்தப்புரத்தின் உந்துசக்தியே கோவை வெற்றி

உத்தப்புரத்தின் தீண்டாமைச்சுவரை அகற்றியதில் பெற்ற உந்துசக்தியால்தான் கோவை தீண்டாமைச் சுவரும் உடனடியாக அகற்றப்பட்டு வெற்றி கிட்டியது என்று கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கூறினார்.
கோவை தந்தை பெரியார் நகர் மக்களின் சார்பில் நடந்த நன்றி பாராட்டு விழாவில் அவர் கலந்து கொண்டு பேசியதாவது:
இங்கு பேசிய இரவிக்குமார் தீண்டாமைச்சுவர் உடனடியாக அகற்றப்பட்டது என்றார். இது சும்மா நடக்கவில்லை. மதுரை மாவட்டம் உத்தப்புரத்தில் இருந்த தீண்டாமைச் சுவரை அகற்றியதால் பெற்ற உந்து சக்தியால்தான் இது நடந்தது. உத்தப்புர தீண்டாமைச் சுவரை அகற்றுவதற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் நெடிய போராட்டமும், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதும், உத்தப்புரம் மக்களின் பல நாள் சிறைவாசமும் காரணமாக இருந்தன. உத்தப்புரம் ஒரு கிராமம். ஆனால் கோவை நகர்ப்புறம். கடந்த காலத்தில் இதை கவனிக்கவில்லை. தெரியவந்தவுடன் அதிரடி நடவடிக்கையில் இறங்கினோம்.
இவ்வாறு பி.ஆர்.நடராஜன் பேசினார்.
விழாவில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயலாளர் யு.கே.வெள்ளிங்கிரி, மாநிலக்குழு உறுப்பினர் கே.சி.கருணாகரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கோவை மாவட்ட அமைப்பாளர் யு.கே.சிவஞானம், சிபிஎம் சிங்கை நகரச் செயலாளர் கே.மனோகரன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். நூற்றுக்கணக்கான பொதுமக்கள் விழாவில் பங்கேற்றனர்.

சுவரை உடைத்தது மக்களை ஒன்றுபடுத்தத்தான்!

பஞ்சாலைகளில் மகத்தான கூலிப்போராட்டங்களை நடத்திக் காட்டியவர்கள் கோவை மக்கள். அவர்களை ஒன்றிணைப்பதற்காகவே தீண்டாமைச் சுவர் உடைக்கப்பட்டது என்று தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத் பேசினார்.
கோவை சிங்காநல்லூரில், தந்தை பெரியார் நகர் அருந்ததிய மக்கள் சார்பில் நடந்த பாராட்டு விழாவில் அவர் மேலும் பேசியதாவது:
உடைக்கப்பட்ட தீண்டாமைச்சுவரைப் பார்வையிடுவதற்காக நான் இப்பகுதிக்கு வந்த போது, இம்மக்களின் ஏக்கத்தைக் கண்டேன். சாதியைக் காக்கவும் ஒரு பிள்ளையாரா என்று நெஞ்சம் கலங்கியது. இது ஒடுக்குமுறை அல்லவா?
2007-ம் ஆண்டு மே மாதம் உத்தப்புரம் தீண்டாமைச் சுவரைக் கண்டறிந்து அகற்றக் கோரிய போது முதலில் தமிழக அரசு செவிசாய்க்கவில்லை. மனித உரிமை மறுக்கப்பட்ட தலித் மக்கள் ஆயிரம் பேருடன் பிறபகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஆயிரம் பேரும் திரண்டு மதுரையில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். பின்னர் பிரகாஷ்காரத் நேரில் வருவதாக அறிவித்தவுடன் உடனடியாக அரசு, சுவரின் ஒரு பகுதியை மட்டும் இடித்து வழி ஏற்படுத்தியது. காலம் தாழ்த்தினாலும் சுவரை இடித்த தமிழக அரசைப் பாராட்டினோம்.
கோவை நகரின் இந்த தீண்டாமைச்சுவர் பிரச்சனையிலும் அரசுக்கு உத்தப்புரம் ஞாபகம் வந்திருக்கும். ‘சுவரை இடி, இல்லாவிட்டால் இடிப்போம்,’ என்று நாம் நிர்ப்பந்திப்போம் என்று அறிந்துதான் தமிழக அரசே சுவரை இடித்துள்ளது. இதற்கும் தமிழக முதல்வரைப் பாராட்டுகிறோம்.
இச்செயலை விரைவாகச் செய்தார்கள் என்பதற்காக ‘நானல்லவோ விருந்து படைத்தேன். விருந்து படைத்தோரை விடுத்து, விருந்துண்டோரைப் பாராட்டலாமா?’ என்கிறார் முதல்வர். அடுக்கப்பட்ட மூட்டைகளில் அடிமூட்டையாக உள்ள அருந்ததியர்களுடன் இணைந்து விருந்துண்பதற்காக மகிழ்கிறோம். ஒற்றுமைப்படுத்திப் பேசிய கலைஞரைப் பாராட்டுகிறோம்.
சுவரை இடித்தபோது நானும், என்.வரதராஜனும் திண்டுக்கல்லில் இருந்தோம். தகவலறிந்த ஒரு மணி நேரத்தில் முதல்வரைப் பாராட்டினோம். நாங்கள் சொன்னோம், நீங்கள் செய்தீர்கள். அதனால் பாராட்டுகிறோம். ஆனால் திமுக ஐந்து முறை தமிழகத்தை ஆண்டுள்ளது. கடந்த 40 ஆண்டு கால திராவிட ஆட்சியில் இதுபோன்ற தீண்டாமைச்சுவர்களைக் கண்டறிந்தீரா? தமிழகம் முழுவதும் தீண்டாமை தலைவிரித்தாடுகிறதே? அரசு நிர்வாகத்தில் ஆட்சியர், எஸ்.பி., ஆணையர், தாசில்தார் என்று எத்தனை அதிகாரிகள், நிர்வாக அமைப்புகள்? அதனைக் கொண்டு ஏதேனும் நடவடிக்கை எடுத்தீரா? அந்தப் பொறுப்பேதும் அரசுக்கு இல்லையா? நீங்கள் உங்கள் கடமையைத்தான் செய்தீர்கள். இருந்தாலும் உடனே செய்தீர்கள் என்பதால் பாராட்டினோம். பிறகு ஏன் எரிச்சல்படுகிறீர்கள்?
இங்கு வரும்போது சில பெண்கள் சொன்னார்கள், ‘நாங்கள் ஒரு பாவமும் செய்யவில்லை,’ என்று. நமது வாழ்வை நொறுக்கும் விலைவாசி உயர்வை எதிர்த்துப் போராட விடாமல் தீண்டாமை, சாதிய வேறுபாடுகளைக் காட்டி நம்மைப் பிரிக்கப் பார்த்திருக்கிறார்கள். தற்போது உடைபட்ட சுவர்கள் இந்தியா முழுவதும் அதிர்வை ஏற்படுத்தும். ஆதிக்கச் சுவர்கள் இப்போதே அதிர்ந்துதான் போயுள்ளன. தீண்டாமை அவலம் ஜனநாயகத்திற்கே மிகப்பெரும் சவால்.
இவ்விழா, மகத்தான போராட்டங்களுக்கான கால்கோள் விழா. அரசியல் சட்டத்தின் சிற்பி அம்பேத்கர் சொன்னார்: நான் உருவாக்கிய அரசியல் சட்டம் அமலாகும் போதும் தலித் மக்கள் தீண்டாமைக் கொடுமைக்கு ஆட்படுகிறார்கள். நீங்கள் இச்சட்டங்களை மட்டும் நம்பி நிற்காதீர்கள். ஜனநாயக சக்திகளுடன் ஒன்றுபட்டு போராடுங்கள் என்று அறைகூவி அழைத்தார். அதன்படி மார்க்சிஸ்ட் கட்சி மக்களை ஒன்றுபட்டு நிறுத்தி வென்று காட்டும்.
இவ்வாறு பி.சம்பத் பேசினார்.

கோவை பெரியார் நகர் மக்கள் சார்பில் என்.வரதராஜனுக்கு உணர்ச்சிமிகு வரவேற்பு

கோவை தந்தை பெரியார் நகருக்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜனை, தாரை தப்படையுடன், வாண வேடிக்கை முழங்க ஆரத்தி எடுத்து அருந்ததியர் மக்கள் வரவேற்றனர்.
கோவை, சிங்கை 10-வது வட்டம் தந்தை பெரியார் நகரில் 21 ஆண்டுகாலமாக நீடித்த தீண்டாமைச் சுவர், மற்றும் அதனைக்காக்க வைத்திருந்த பிள்ளையார் சிலை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஆதித்தமிழர் விடுதலை முன்னணி ஆகியவற்றின் தொடர் தலையீட்டிற்குப் பின் தமிழக அரசால் அகற்றப்பட்டது. அருந்ததியர் மக்களின் பயன்பாட்டுக்கு முழுமையாக பொது வழி கிடைத்தது.
இதையடுத்து, தீண்டாமைச் சுவரை அகற்ற பாடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கு நன்றி பாராட்டு விழாவை பெரியார் நகர் அருந்ததியர் மக் களும், ஆதித்தமிழர் விடுதலை முன்னணியினரும் நடத்தினர்.
இப்பாராட்டு விழாவிற்கு, விழாவிற்கு புதனன்று (10.2.2010) மாலை வருகை தந்த என்.வரதராஜன், பி.சம்பத் ஆகியோருக்கு, காமராசர் சாலை முகப்பிலிருந்து அருந்ததிய மக்கள் வரவேற்பளித்தனர். ஜீவா வீதி முதல் பெரியார்நகர் வரை வாழ்த்து தட்டிகள், வாழை மரங்கள் கட்டப்பட்டிருந்தன. திரளான பெண்கள் குலவையிட்டும் ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர். பட்டணம் சங்கே முழங்கு குழுவினரின் ஜமாப் மேளம் மற்றும் பறைகளும் அதிர அதிர முழங்கின. சர வெடிகளை வெடித்து மகிழ்ச்சி ஆரவாரத்துடன் இளைஞர்கள் நடனமாடியபடியே தலைவர்களை வரவேற்று அழைத்துச் சென்றனர்.
விழாவிற்கு பெரியார் நகர் பகுதி பிரமுகர் தண்டபாணி தலைமை வகித்தார். 1989ல் மற்றுமொரு பொதுவழிக்காக போராடிய துடியலூர் வேலுச்சாமி உள்ளிட்டோரை என்.வரதராஜன் சால்வைகள் அணிவித்துப் பாராட்டினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் யு.கே.வெள்ளிங்கிரி, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாநிலக்குழு உறுப்பினர் கே.சி.கருணாகரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட அமைப்பாளர் யு.கே.சிவஞானம், மாநிலக்குழு உறுப்பினர் வி.பெருமாள், தீக்கதிர் துணை ஆசிரியர் கே.கணேஷ், வழக்கறிஞர் வெண்மணி, மார்க்சிஸ்ட் கட்சியின் சிங்கை நகரச் செயலாளர் கே.மனோகரன், மாவட்டக்குழு உறுப்பினர் வி. தெய்வேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் தலைவர்களுக்கு பொதுமக்கள் சார்பில் சால்வைகளும், நினைவுப்பரிசாக புத்தகங்களையும் அளித்து பெரியார் நகர் மக்கள் கவுரவித்தனர். நூற்றுக்கணக்கான பொதுமக்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி ஊழியர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

பழங்குடியினர் பட்டியல் விவகாரம்: முதல்வர் தலையிட கோரிக்கை

பழங்குடியினர் பட்டியல் தொடர்பான விவகாரத்தில் தமிழக முதல்வர் தலையிட வேண்டும் என்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பொதுச்செயலாளர் பெ.சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, தமிழக முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் பெ.சண்முகம் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது:
ஈரோடு மாவட்ட மலையாளி, நரிக்குறவர், குறுமன்ஸ் இனத்தின் உட்பிரிவினர், குறவன் இனத்தின் உட்பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக, அவர்களின் வாழ்வியல் சூழல் குறித்து அறிக்கை அனுப்புமாறு, கடந்த 2001-ஆம் ஆண்டு மத்திய அரசு கேட்டுக் கொண்டது.
அதன் அடிப்படையில், பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தின் ஆய்வுக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழக பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் தமிழகம் முழுவதும் விரிவான ஆய் வினை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அளித்தது. அதன் அடிப்படையில், மேற்கண்ட மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான பரிந்துரையை, 2006ம் ஆண்டு மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பியது.
தற்போது இந்தியப் பதிவாளர் குறுமன்ஸ் இனத்தில் “குறுமன்” என்பதை மட்டும் ஏற்றுக் கொண்டு, இதர உட்பிரிவுகள் அனைத்தையும் ஏற்கத்தக்கதல்ல என்று தமிழக அரசுக்கு தெரிவித்து விட்டதாக அறிகிறோம்.
பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தல் - நீக்கல் குறித்து மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ள வழி முறைகளில் ஒன்றான மூன்று முறை திருப்பி அனுப்பப்பட்டு விட்ட பரிந்துரையை மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை என்ற வழிமுறையைக் காட்டி தள்ளுபடி செய்திருப்பது எந்த விதத்திலும் சரியானதல்ல என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
மேற்படி இனமக்கள் அனைவருமே கடந்த 30 ஆண்டு காலமாக பல்வேறு காலகட்டங்களில் தமிழக அரசால் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க பரிந்துரைக்கப்பட்டு நிலுவையில் வைக்கப்பட்டுள்ளவர்கள், ஒவ்வொரு முறையும் கிடப்பிலே போடுவது அல்லது புதிது புதிதாக விளக்கம் கேட்பது என்ற அணுகுமுறையைத்தான் இந்தியப் பதிவாளர் மேற்கொண்டு வருகிறார்.
எனவே, இந்தப் பிரச்சனையில் தாங்கள் உடன் தலையிட்டு இந்தியப் பதிவாளர் கேட்டுள்ள விளக்கங்களையும், விபரங்களையும் உடன் அனுப்ப ஏற்பாடு செய்வதுடன், தள்ளுபடி செய்யப் பட்டுள்ள குறுமன்ஸ் இனத்தின் உட்பிரிவினரை மீண்டும் பரிசீலிக்க தகுந்த நடவடிக்கை எடுத்து மேற்படி இனமக்கள் அனைவரையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க தங்களின் மேலான தலையீட்டை வேண்டுகிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

வாச்சாத்தி வழக்கு பிப்.26-க்கு ஒத்திவைப்பு

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் வாச்சாத்தி கிராமத்தில் 1992-ம் ஆண்டு மலைவாழ் மக்களைச் சேர்ந்த 18 பெண்களை வனத்துறையினர் பாலியல் கொடுமைப்படுத் தினர். இதுதொடர்பாக வனம், காவல், வருவாய் ஆகிய துறைகளைச் சேர்ந்த 269 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. பின்னர் இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கடந்த 16 ஆண்டுகாலமாக கிருஷ்ணகிரி அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. பிறகு, கடந்த ஆண்டு ஜூன் மாதம் தருமபுரி அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப் பட்டது.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 18 பெண்கள் குறுக்கு விசாரணையில் சாட்சியமளித்தனர். அதன் பின்பு சிறைக்காவலர் லலிதாபாய் சாட்சியம் அளித்தார்.
மாவட்ட அமர்வு நீதி மன்றத்தின் நீதிபதி எஸ்.குமரகுரு தலைமையில் வியாழக்கிழமை(11.2.2010) அன்று மீண்டும் வழக்கின் விசாரணை நடந்தது. சிபிஐ சார்பில் ஏடிஎஸ்பி(ஓய்வு) சாட்சியம் அளித்தார். வனத்துறையினருக்காக வழக்கறிஞர்கள் ஆர்.வெங்கடேசன், விஜயராகவன், அன்பு ஆகியோர் வாதாடினர்.
பிறகு இந்த வழக்கின் அடுத்த விசாரணையை இம்மாதம் 26ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

நரிக்குடி ஒன்றியம், உளுத்திமடை கிராமத்தில் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்திய தலித் மக்களைத் தாக்கிய ஆதிக்கசாதியினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், பாதிக்கப்பட்ட தலித் மக்கள் மீதே வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதைக் கண்டித்தும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நரிக்குடியில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் தேவி தலைமை வகித்தார். கலைவேந்தன் துவக்கவுரை ஆற்றினார். போராட்டத்தை ஆதரித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.முருகேசன் பேசினார். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்கள் வி.முருகன், எஸ்.ஞானகுரு, ஒன்றியச் செயலாளர் ஏ.பி.கண்ணன், பூமிநாதன், அன்புச்செல்வன் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.

வன்கொடுமைகள் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம்: சிவகங்கை ஆட்சியரை இடம்மாற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

தலித்துக்களுக்கு இழைக்கப்படும் வன்கொடுமைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத சிவ கங்கை மாவட்ட ஆட்சியரை மாற்ற வேண்டும் என்று, தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டக்குழு கூட்டம் வி.சௌந்த ரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில், இக்கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
அத்தீர்மானத்தில் இதுபற்றி மேலும் குறிப்பிட்டு இருப்பதாவது:
தீண்டாமை மற்றும் வன்கொடுமைகளுக்கு ஆளாகி பாதிக்கப்படுகிற தலித் மக்கள் கொடுக்கிற புகார்கள் மீது உரிய வழக்குகள் பதிவு செய்யப்படுவதில்லை. பதிவு செய்யப்பட்ட வழக்குகளும் கூட அடுத்த சில மாதங்களில் எம்எஃப் (பொருண்மைத் தவறு) என்று தள்ளுபடி செய் யப்படுகிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைத்தடுப்புச் சட்ட அமலாக்கத்தின் கண்காணிப்பு மற்றும் விழிப்புக்குழுவின் தலைவர் என்ற முறையில் மாவட்ட ஆட்சியர் சிறப்புக் கவனம் செலுத்துவதில்லை. வன்கொடுமை நிகழ்ந்த இடங்களை நேரில் பார்வையிடுவது, வன்கொடுமைக்கு ஆளாகி இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது, தலித் மக்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் மாவட்ட ஆட்சியர் ஈடுபடுவதில்லை.
கடந்த 26.01.2010 குடியரசு தினத்தன்று கிராமசபைக் கூட்டத்திற்கு சென்று கொண்டிருந்த திருப்புவனம் ஒன்றியம் டி.ஆலங்குளம் ஊராட்சி மன்ற (தலித்) பெண் தலைவர் மனோன்மணி என்பவரையும், அவரது கணவரையும் ஆதிக்க சாதியைச்சேர்ந்த ஊராட்சி எழுத்தர் கத்தியால் குத்தி கொலைமுயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவத்தில் காவல்துறை உரிய வழக்கும் பதிவு செய்யவில்லை, குற்றவாளியையும் இதுவரை கைது செய்யவில்லை.
அதேபோல மானாமதுரை ஒன்றியம் வேம்பத்தூர் ஊராட்சி மன்ற (தலித்) தலைவர் முருகன் குடும்பத்தினர் மீது ஆதிக்க சாதியினர் தாக்கியதில் அவரது தம்பி முத்துக்கிருஷ்ணன் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திலும் காவல்துறை உண்மைக் குற்றவாளிகளை விட்டு விட்டதாகத்தெரிகிறது. இத்தகைய தலித் ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீதான வன்கொடுமை தாக்குதல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க, வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படியான கடமைகளை மாவட்ட ஆட்சியர் ஆற்றிடவில்லை.
எனவே சிவகங்கை மாவட்டத்திற்கு செயல்துடிப்புள்ள, ஐஏஎஸ் அதிகாரியை மாவட்ட ஆட்சியராக நியமித்திடுமாறு தமிழக முதல்வரையும், தலைமைச் செயலாளரையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டக்குழு கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் எம்.அர்ச்சுணன், செயற்குழு உறுப்பினர்கள் எ.ஆர்.கே.மாணிக்கம், ஆர்.கே. தண்டியப்பன், எம்.கந்தசாமி, ஆர்.மணியம்மா, ஒன்றியச் செயலாளர்கள் எஸ்.பாண்டி யன், ஏ.ஆர்.மோகன், வி.கருப் பச்சாமி, எ.கிருங்கைச்செல் வன், எஸ்.எம்.பூபதி, கே.அழ கர்சாமி, ஏ.ஜெயராமன், ஏ.சேது ராமன், பி.செல்வராஜ் மற்றும் சாந்தி, ஷேக்முத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

வங்கிக்கடன் கேட்டு நெறிக்குறவர்கள் மனு

திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் பெரும் பண்ணையூரில் வசிக்கும் நெறிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த 14 குடும்பத்தினர், தொழிற்கடன் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டுதலுடன், மாவட்ட ஆட்சியர் எம்.சந்திரசேக ரனை சந்தித்த நெறிக்குறவர் சமூகத் தலைவர் சொ.காளிமுத்து, வங்கிகள் தங்கள் வாழ்க்கை மேம்பாட்டிற்கு உதவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
மாவட்ட ஆட்சியர் அச்சமூகத்தினரின் கோரிக்கையை அக்கறையுடன் ஏற்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

தீண்டாமையால் பாழடைந்த திருப்பூர் தொழிற்பேட்டை !

திருப்பூர் முதலிபாளையம் அருகே சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் தாட்கோ தொழிற்பேட்டை அமைந்துள்ளது. இதில் 99 தொழிற்கூடங்கள் இயங்கிவருகின்றன. முழுக்க ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் தொழில் முன்னேற்றத்திற்காக அமைக்கப்பட்ட இந்த தொழிற்பேட்டை தற்போது பாழடைந்த நிலையில் உள்ளது. பெரும்பாலான இளைஞர்கள் தொழிற்கூடத்தை கைவிட்டுவிட்டனர். தொழிற்கூடங்களை இயக்கி வரும் சிலரும் குறைந்த வேலைவாய்ப்பு சூழலில் தத்தளித்து வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி தொழில் முனைவோர் கூறுகையில் , “இங்கு தொழில் நடத்தும் இளைஞர்கள் பலர் திறமையானவர்களே, இருந்தாலும் வேலை செய்ய போதுமான  ஆர்டர்கள் (வாய்ப்புகள்) கிடைக்கவில்லை. வாய்ப்பு வழங்கக் கூடிய பெரும் தொழில்கள் எல்லாம் ஆதிக்க சாதியினர் வசமே இருக்கின்றன. இதனால் தலித் இளைஞர்கள் ஒருவகை “தொழில் தீண்டா மைக்கு” ஆளாகின்றனர். இதனால் திறமையிருந்தும் சாதியின் காரணமாக தலித் இளைஞர்கள் இழப்பை சந்திக்கின்றனர்” என்று குறிப்பிட்டனர்.

அருந்ததியர் உள்ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த வேண்டும்- பிப்.15-ல் மாநிலம் தழுவிய போராட்டம்

அருந்ததியர் உள்ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் பிப்ரவரி 15-ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் போராட்டங்களை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அருந்ததிய அமைப்புகளின் தலைவர்கள் இப்போராட்டங்களை தலைமை ஏற்று நடத்துவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்கள், கல்லூரி ஆசிரியர்கள், மின்வாரியத் தொழில்நுட்ப உதவியாளர்கள் நியமனங்களில் அருந்ததியர் உள்ஒதுக்கீட்டை தமிழக அரசு அமல்படுத்தாத தைக் கண்டித்தும், அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிலும் அருந்ததியருக்கான உள்ஒதுக்கீட்டை உறுதியாக அமல்படுத்தக் கோரியும், பல மாவட்டங்களில் அருந் ததியினர் பிரிவினருக்கு உரிய சாதிச் சான்றிதழ் வழங்காததைக் கண்டித்தும், தமிழகத்தின் அனைத்து பின்னடைவு காலியிடங்களை உடனடியாக நிரப்பவும், பல்லாயிரக்கணக்கான காலியிடங் களை பூர்த்தி செய்ய வலியுறுத்தியும் பல்வேறு மாவட்டங்களில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.
அதில் பங்கேற்போர் விபரம்:
ஈரோடு  -    பி.சம்பத், எஸ்.எஸ்.சுப்பிரமணியன், பி.பி.பழனிச்சாமி, சக்தி கருப்பசாமி, கே.சென்னியப்பன்.
விருதுநகர்  - கே.பாலபாரதி, கே.சாமுவேல்ராஜ், பி.சுகந்தி, ஜக்கையன்
திருநெல்வேலி - என்.நன்மாறன், ஆர்.கிருஷ்ணன், மரியதாஸ்
திருச்சி  -  எஸ்.கே. மகேந்திரன், எம்.ஜெயசீலன், அண்ணாதுரை,
கோவை - ஜி.லதா, யு.கே.சிவஞானம், ரவிக்குமார், வி.பெருமாள், வெண்மணி
திருப்பூர் - சி.கோவிந்தசாமி, எஸ்.கண்ணன், ராமமூர்த்தி
நாமக்கல் - டில்லிபாபு, துரைசாமி
தருமபுரி - பி.சண்முகம், வெங்கடேசன், வேல்முருகன்
தேனி - ஏ.லாசர், வெங்கடேசன்.
தூத்துக்குடி - க.கனகராஜ், இசக்கிமுத்து
நீலகிரி - சதாசிவம், ஆர்.பத்ரி
சேலம் - கே.எஸ்.கனகராஜ், ஆர்.தர்மலிங்கம்.
ஈரோட்டில் மின்வாரியத் தலைமைப்பொறியாளர் அலுவலகம் முன் பாகவும், திருப்பூரில் மாந கராட்சி அலுவலகம் முன்பும், மற்ற இடங்களில் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் முன்பாகவும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.

காவேரிராஜபுரத்தில் விவசாயிகள் மறியல்

திருவள்ளூர் மாவட்டம் காவேரிராஜபுரத்தில் நீதிபதி தினகரன் ஆக்கிரமித்துள்ள அரசு புறம் போக்கு நிலங்களை மீட்டு அக்கிராமத்தில் உள்ள இருளர் மற்றும் அருந்ததியர் உள்ளிட்ட தலித்துகளுக்கும், நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கும் வழங்க வலியுறுத்தி விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.
திருத்தணியை அடுத்த காவேரிராஜபுரத்தில் அரசுக்கு சொந்தமான நிலங்களை கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி.தினகரன் ஆக்கிரமித்துள்ளார். இந்நிலையில், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை எடுத்து அப்பகுதியில் உள்ள இருளர் மற்றும் அருந்ததியர் உள்ளிட்ட தலித் மக்களுக்கும் நிலமற்ற தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த நான்கு மாதங்க ளாக நிலமீட்பு போராட்டம், ஆர்ப்பாட்டம் என பல்வேறு போராட்டங்களை விவசாயிகள் சங்கத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
வலுவான போராட்டங்களுக்கு பிறகு, நில ஆக்கிரமிப்பு காரணத்திற்காக நீதிபதியின் பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் மத்திய நில அளவை குழுவினர் கடந்த ஒரு மாதமாக நிலத்தை அளந்து வருகின்றனர். நீதிபதிக்கு சொந்தமான பட்டா நிலம், அரசு புறம்போக்கு நிலம் என தனித்தனியாக பிரித்து அளந்து முடித்துள்ளனர்.
இந்த நிலையில் அரசு புறம் போக்கு நிலம் என கருதும் 199.53 ஏக்கர் நிலத்தை முதல் கட்டமாக எடுத்து நிலமற்றவர்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி புதன்கிழமையன்று (பிப்.10) திருவள்ளூர் காமராஜர் சிலை அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் மறியல் நடைபெற்றது.
அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் எஸ்.திருநாவுக்கரசு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.தயாநிதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலகுழு உறுப்பினர் ப.சுந்தரராசன், மாவட்டச் செயலாளர் கே.செல்வராஜ், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.எம்.அனீப், மாவட்டச் செயலாளர் பி.துளசி நாராயணன், மாவட்டப் பொருளாளர் கே.ஆறுமுகம், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் அ.து.கோதன்டன், மாவட்ட துணைச் செயலாளர் பி.நடேசன், மக்கள் வாழ்வாதார மண்ணுரிமை இயக்க மாநிலத் தலைவர் வி.எம்.ராமன், மக்கள் இயக்கத்தின் கூட்டமைப்பு தலைவர் கொல்லாபுரி ஆகியோர் பேசினர். இதில் 300 பெண்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பெ.சண்முகம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செய லாளர் பெ.சண்முகம் பேசியதாவது:-
காவேரிராஜபுரம் நில விவகாரம் சம்மந்தமாக கடந்த மூன்று மாதமாக அரசு அசைவின்றி இருக்கிறது. மத்திய அரசு நில அளவை குழுவை வைத்து நிலங்களை ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நிலம் என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து உச்சநீதிமன்றத்திற்கும், மாநில அரசுக்கும் அறிக்கை அனுப்பிய பிறகு நடவடிக்கை எடுக்க வேண்டும். காலம் தாழ்த்தவே இந்த நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். தமிழக அரசு நிலத்தை எடுத்து ஏழைகளுக்கு வழங்க யாரிடமும் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை. சாதிய சாயம் பூசுவது எல்லாம் பிரச்சனையை திசை திருப்பும் நோக்கமே என்றார்.

தலித் ஊராட்சித்தலைவி மீது கொலைவெறித் தாக்குதல்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் உள்ள டி.ஆலங்குளம் தலித் ஊராட்சித் தலைவரான தன்னையும், தனது கணவரையும் கொடூரமான ஆயுதத்தால் வெட்டிய சாதிவெறியன் மீது மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பாதிக்கப்பட்ட தலித் ஊராட்சித் தலைவர் ம.மனோன்மணி கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர், மதுரையில் புதனன்று (10.2.2010)செய்தியாளர்களிடம் கூறியதாவது:
டி.ஆலங்குளம் ஊராட்சியின் முதல் தலித் பிரதிநிதியாக கடந்த 2006-ஆம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறேன். அப்போது ஊராட்சி மன்ற எழுத்தராக பணிபுரிந்த பா.பாலகுரு என்பவர், நான் தலித் என்பதால் மக்கள் பணி செய்ய விடாமல் தொடர்ந்து தடுத்து வந்தார். மேலும் கடந்த 31.3.2008 அன்று எனது சாதியைச் சொல்லித் திட்டி மானபங்கம் செய்ய முயன்றார். இதுகுறித்து திருப்புவனம் காவல் நிலையத்தில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நட வடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் நான் கொடுத்த புகாரின் அடிப்படையில், எழுத்தர் பாலகுரு, இடமாறுதல் செய்யப்பட்டார். இதனால் அவரும், அவரு டைய அடியாட்களும் தொடர்ந்து மிரட்டி வந்தனர்.
இந்நிலையில் கடந்த 26.1.2010 அன்று குடியரசு தினக்கொடியேற்றி, கிராம சபைக் கூட்டம் நடத்துவதற்காக செல்ல காரில் புறப்பட்டஎன்னை, பாலகுரு சாதியைச் சொல்லித் திட்டி, நீ கொடியேற்றக்கூடாது என்று கூறிக்கொண்டே தான் மறைத்து வைத்திருந்த வாளால் வெட்டினார். இதில் எனக்கும், எனது கணவர் மதிவாணனுக்கும் படுகாயம் ஏற்பட்டது. அப்போது காரின் முன் அமர்ந்திருந்த திருப்புவனம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமலிங்கமும், நானும் காப் பாற்றுங்கள் என சத்தம் போட்டதால் பாலகுரு அங்கிருந்து ஓடிவிட்டார். திருப்புவனம் காவல் நிலையத்தில் சென்று கதறினோம். அவர்கள் முதலுதவி அளித்து மதுரை தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வாக்குமூலம் வாங்கப்பட்டது. ஆனால், எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என முதல் தகவல் அறிக்கையை பார்த்த பின்புதான் தெரியவந்தது.
எம்.பில். படித்துள்ள என்னை மக்கள் பணி செய்யவிடாமல் பாலகுரு தடுப்பது குறித்து பலமுறை புகார் அளித்தும் மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தாக்குதல் நடத்திய பாலகுரு மீது உரிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யாத மானாமதுரை டி.எஸ்.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் குடும்பத்தினருக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண் டும். எங்களுடைய மருத்துவச்செலவு முழுவதையும் தமிழக அரசே ஏற்க வேண்டும்.
இவ்வாறு மனோன்மணி கூறினார்.
இப்பேட்டியின் போது மக்கள் கண்காணிப்பக நிர் வாக இயக்குநர் ஹென்றி டிபேன், வழக்கறிஞர் சி.சே. ராசன், சுப்பு ஆகியோர் உடனிருந்தனர்.

தலித் பிணத்தை எரிக்கவிடாமல் அராஜகம் : கட்டளைப் பட்டியில் தொடரும் தீண்டாமை

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ளது கட்டளைபட்டி கிராமம். இங்கு அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த பழனிச்சாமி (50) கடந்த 8-ம் தேதி இறந்தார். இந்நிலையில் அவரது உடலை அடக்கம் செய்ய  ஏற்பாடு செய்தனர்.
அப்போது திடீரென ஆதிக்க சமூகத்தை சேர்ந்தவர்கள் சுடுகாடு எங்களுக்கு சொந்தமானது. எனவே, தலித் பிணத்தை எரிக்க விடமாட்டோம் என சுடுகாட்டிற்கு வந்து தடுத்தனர். மேலும், இரவோடு இரவாக அந்த இடத்தை சுற்றிலும் கல் ஊன்றி வேலி போடவும் முயற்சி செய்தனர். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர்.
பின்னர் தாசில்தார், டிஎஸ்பி ஆகியோர் இரு தரப்பினரையும் பேச்சு வார்த்தைக்கு அழைத்தனர்.
பேச்சுவார்த்தையில், நிலம் தங்களுக்குச் சொந்தமானது என்று கூறும் ஆதிக்கசாதியினரிடம் அது தொடர்பான பட்டா அல்லது பத்திரம் இருந்தால் தாருங்கள் என்று அதிகாரிகள் கேட்டனர். அதற்கு அவர்கள் தயங்கவே, உரிய ஆதாரம் வழங்கும் வரை ஏற்கனவே உள்ள நடை முறையே தொடரும் என்று ஒப்பந்தம் ஏற்படுத்தினர்.
அருந்ததியர் தரப்பில் ஊர் பெரியவர்கள் கிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன், துரைப்பாண்டி, மாரிச்சாமி ஆகியோர் உட்பட பலர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.
பின்பு காவல்துறையின் பாதுகாப்புடன் பழனிச்சாமியின் உடலை அருந்ததியர் மக்கள் அடக்கம் செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக அருந்ததிய மக்கள் கூறியதாவது:
இந்த இடம் ஊர்ப் பொது இடம்தான். அனைத்து சமூக மக்களும் நீண்ட காலமாக இங்குதான் பிணங்களை எரித்து வருகிறோம். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆதிக்க சமூகத்தை சேர்ந்த ஒருவர் இறந்து விட்டார். அன்றைய தினம் நாங்கள் அனைவரும் திருமண நிகழ்ச்சிக்காக விருதுநகர் சென்று விட்டோம். அதற்கு இறுதி சடங்கு செய்ய நாங்கள் வரவில்லை என்ற கோபத்திலேயே இவ்வாறு செய்கின்றனர். மேலும் எங்களுக்கு தற்போது வரை சுடுகாட்டுக்கு கூரை இல்லை. மழைக் காலங்களில் நனைந்து கொண்டே பெரும் சிரமத்துடன்தான் பிணங்களை எரிக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஏற்கனவே, தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் தலித் மக்களை சுகாதார வளாகத்திற்குள் அழைத்து செல்லும் போராட்டம் இதே கட்டளைப்பட்டியில்தான் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தலித் மக்களுக்கு முழு பாதை கிடைத்தது

கோவை பெரியார் நகரில் தீண்டாமைச்சுவர் இருந்த பகுதியில் பொதுப்பாதையை மறித்தபடி வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை திங்களன்று அதிகாரிகளால் அகற்றப்பட்டு வேறு இடத்தில் வைக்கப்பட்டது. இதனால் அருந்ததியர் மக்களுக்கு முழுமையான பொதுப்பாதை பயன்பாட்டுக்கு வந்தது.
கோவை 10-வது வட்டம் பெரியார் நகரில் கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக அருந்ததியர் மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் அங்கு குடியேறியவுடன் அருகில் உள்ள ஜீவா வீதியில் வசித்து வரும் ஆதிக்க சாதியினர், அப்பொதுவழியில் அருந்ததியர் நுழைவதைத் தடுக்கும் நோக்கில் சுவர் எழுப்பினர்.
பின்னர் சுவரைக் காக்க திடீர் பிள்ளையார் சிலையையும்  வைத்தனர். இதனால் முக்கிய சாலையான காமராசர் சாலையை அடைய அருந்ததியர் மக்கள் நீண்டதூரம் சுற்றித்தான் செல்ல வேண்டியிருந்தது. பலமுறை அம்மக்கள் அரசு நிர்வாகத்தில் முறையிட்டும் எவ்விதப் பலனும் ஏற்படவில்லை. இந்நிலையில் தகவலறிந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் ஆதித்தமிழர் விடுதலை முன்னணி ஆகியவை பாதையை மீட்க களத்தில் இறங்கின.
கடந்த ஜனவரி 29-ம் தேதியன்று கோவை மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ராவிடம் தீண்டாமைச்சுவர் மற்றும் கோவிலை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு அமைப்புகளின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து ஜனவரி 30-ம் தேதியன்று கோவை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் தீண்டாமைச்சுவரை இடித்து அகற்றின. ஆனாலும் ஆதிக்க சக்தி கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கிருந்த பிள்ளையார் கோவில் மட்டும் அகற்றப்படாமல் அவ்விடத்திலேயே நீடித்தது.
இதனால் பொதுப்பாதையை அருந்ததியர் மக்களால் முழுமையாகப் பயன்படுத்த முடியவில்லை. இந்நிலையில் கோட்டாட்சியர் பிரபாகரன் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 6 அன்று தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத் தீண்டாமைச் சுவர் அகற்றப்பட்ட இடத்தைப் பார்வையிட்டார். இதனையடுத்து ஜீவா வீதியை முழுமையாகப் பயன்படுத்த காலதாமதமின்றி நடவடிக்கை எடுத்து உதவுமாறு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் ஞாயிறன்று முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதையடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் பு.உமாநாத் உத்தரவின் பேரில் திங்களன்று பிள்ளையார் சிலை அப்புறப்படுத்தப்பட்டது. முன்னதாக ஆகம முறைப்படி  பிள்ளையார் சிலைக்கு பூசை செய்யப்பட்டது. பின்னர் உடனடியாக சிலையைத் தனியாக எடுத்து, அருந்ததிய மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள சக்தி முத்துமாரியம்மன் கோவில் அருகில் நிறுவப்பட்டது. மாநகராட்சி ஏற்பாடு செய்த அர்ச்சகர்கள் இருவர் பூசைகளைச் செய்தனர். ஏற்கனவே கோவிலுக்கென அமைக்கப்பட்டிருந்த நான்கு தூண்கள், சிறிய மேடை, தகரக்கொட்டகை ஆகியவை இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதனால் முழுமையான பொதுவழி பெரியார் நகர் மக்களுக்கு கிடைத்தது.
கோட்டாட்சியர் பிரபாகரன், தெற்கு வட்டாட்சியர் சுப்பிரமணி யன், மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலர்கள் ரவிச்சந்திரன், புவனேஸ்வரி, 11-வது வட்ட உதவிப் பொறியாளர் கலாவதி உள்ளிட்ட அதிகாரிகளும், மாநகர காவல்துறை உதவி ஆணையர் கோபால் சாமி தலைமையிலான போலீசாரும் சிலை அகற்றப்படும்போது உடனிருந்தனர்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட அமைப்பாளர் யு.கே.சிவஞானம், ஆதித்தமிழர் விடு தலை முன்னணி மாநில அமைப்பாளர் கோவை இரவிக்குமார், மார்க்சிஸ்ட் கட்சியின் சிங்கை நகரச்செயலாளர் கே.மனோகரன் உள்ளிட்ட திரளானோர் குவிந்திருந்தனர்.
முழுமையான பாதை கிடைத்தவுடன் பெரியார் நகர் அருந்ததியர் மக்கள் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர். அவர்கள் மார்க்சிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகளுக்கு மகிழ்வோடு தங்கள் நன்றியையும் தெரிவித்தனர்.

கோவை பெரியார் நகர் விநாயகர் சிலை இடமாற்றம்: மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கையை ஏற்று, கோவை பெரியார் நகரில், அருந்ததிய மக்களுக்கு தடையாக ஏற்படுத்தப்பட்டு இருந்த விநாயகர் சிலையை இடமாற்றம் செய்த தமிழக அரசின் நடவடிக்கையை, கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் வரவேற்றார்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முன்முயற்சியை அடுத்து, கோவை மாநகரம் சிங்காநல்லூர் கிழக்கு மண்டலம் 10-வது வட்டம் பெரியார் நகர் ஜீவா வீதியில் இருந்த தீண்டாமைச் சுவரை 30.01.2010ல் தமிழக அரசு அகற்றியது. எனினும் தீண்டாமைச் சுவரைப் பாதுகாக்கும் நோக்குடன் சுவரின் முன்புறம் ஜீவா வீதியின் நடுப்பகுதியில் வீதியின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை மாற்று இடத்தில் வைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. இப்பின்னணியில், தமிழக முதல்வர் தலையிட்டு பிள்ளையார் சிலையை மாற்று இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுத்ததை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வரவேற்கிறது.
இப்பிரச்சனையில் அவ்வட்டார அருந்ததியர் மக்கள் மற்றும் ஜனநாயகப் பிரிவினர் ஒன்றுபட்டு செயலாற்றியதற்காக நெஞ்சார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான கிராமங்களில் அருந்ததியர் உட்பட தலித் மக்களுக்கு எதிராக ஏராளமான தீண்டாமைக் கொடுமைகளும், ஒடுக்குமுறையும் நிலவுகின்றன. இவற்றுக்கு முடிவு கட்டுவதற்கு உறுதியான தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
இவ்வாறு என்.வரதராஜன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பி.சம்பத்
இப்பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு எடுத்துள்ள சரியான நடவடிக்கைகளை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத்தும் வரவேற்றார்.
மேலும், கடந்த ஆண்டு அக்டோபர் 27 அன்று சென்னையில் அமைப்பின் சார்பில் கோட்டை நோக்கி தலித் - பழங்குடியினர் பேரணி நடத்தி, முதல்வரிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை பட்டியலில் வலியுறுத்தி இருந்தபடி தமிழகத்தில் பரவலாக கிராமங்களில நிலவும் தீண்டாமைக் கொடுமைகளைக் கண்டறிந்து முடிவு கட்டுமாறும், தேசிய தலித், பழங்குடியினர் ஆணையத்தைப் போன்று தமிழ்நாடு தலித் பழங்குடியினர் ஆணையம் அமைத்து அதற்கு சட்டப்பூர்வமான அந்தஸ்தும், அதிகாரமும் அளிக்குமாறும்; தமிழ்நாட்டில் தலித் -பழங்குடி மக்களுக்கு எதிரான தீண்டாமைக் கொடுமைகளுக்கும் வன்கொடுமைகளுக்கும் எதிராக உடனடியாகவும், உறுதியாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறும் பி.சம்பத் தனது அறிக்கையில் வலியுறுத்தினார்.