அருந்ததிய மக்களுக்கு அரசு அறிவித்த உள்இடஒதுக்கீட்டை வேலைவாய்ப் பில் முழுமையாக அமலாக்கக் கோரி தமிழகம் முழுவதும் திங்களன்று (15.2.10) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதனொரு பகுதியாக ஈரோட்டில் தலைமை மின்வாரிய அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப் புக்குழு உறுப்பினர் கே.குப்புசாமி தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டைக் கல்வித் துறையில் மட்டுமல்லாமல் வேலைவாய்ப்புகளிலும் அமலாக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் 30 இடங்களில் இன்றைய தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது.
அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த 56 பேர் மருத்துவக் கல்லூரியிலும், 1165 பேர் பொறியியல் கல்லூரியிலும், சேர வாய்ப்புக் கிடைத்ததை மட்டுமே அடிக்கடி சுட்டிக்காட்டி முதல்வர் கலைஞர் பேசுகிறார். அதைநாம் மறுக்கவில்லை, ஆனால் மின்வாரியம், இடைநிலை ஆசிரியர், கல்லூரி ஆசி ரியர், பட்டதாரி ஆசிரியர் என பல்லாயிரம் பேருக்கு வேலை கிடைக்கக் கூடிய வேலைவாய்ப்புகளில் அருந்ததிய இளைஞர்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. உள்ஒதுக்கீடு குறித்த அரசின் உத்தரவு வெளியாவதற்கு முன்பே வேலை நியமன தயாரிப்புகள் துவங்கி விட்டதாக கலைஞர் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டம் வெளியான தேதியிலிருந்துதான் இது அமலாக வேண்டும். உயர்நீதிமன்றம் இத்தகைய தீர்ப்பு வழங்கிய பிறகும் தமிழக அரசுக்கு இதுவரை தீர்ப்பு உறைக்கவில்லை.
தந்தை பெரியார் பிறந்த ஈரோடு மாவட்டத்தில் நிலவும் தீண்டாமைக் கொடுமைகளை இங்கு பட்டியலிட்டார்கள். பல கிராமங்களில் அருந்ததியர் மக்களுக்கு மயானமோ அல்லது மயானப் பாதையோ இல்லை. திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகா வாலசமுத்திரம் என்ற கிராமத்தில் அருந்ததியர் சடலத்தை வறட்டாறு நதி வெள்ளத்தில் இறக்கி கொண்டு செல்லும் கொடுமை வெளிவந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் வேலாயுதபுரம் என்ற கிராமத்தில் தலித் மக்கள் ஆண் நாய் வளர்க்கக் கூடாதாம். வளர்த்தால் அந்த நாய் ஆதிக்க சாதித் தெருக்களில் பெண் நாயுடன் உறவு கொண்டு குட்டி போடுமாம். அந்தக் குட்டி பெண் நாயுடன் சுற்றித் திரிந்து தெருவே தீட்டாகிவிடுமாம். எனவே தலித் தெருவில் உள்ள ஆண் நாய்களை அடித்துக் கொன்றார்கள். சாதிவெறி மனிதருள் மிருக வெறியை ஏற்படுத்த, தற்போது மிருகங்களுக்கும் சாதி ஏற்படுத்தி ஒடுக்குகிறார்கள். தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியும்தான் இந்தக் கொடுமைக்கு அந்த கிராமத்தில் முடிவு கட்டியது.
இப்படி எண்ணற்ற கொடுமைகளைப் பட்டியலிட முடியும். ஈரோடு மாவட்டத்தில் புனிதா என்ற தலித் சிறுமி படுகொலை செய்யப்பட்டு பல ஆண்டுகளாகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் சுதந்திரமாக வீதிகளில் உலா வருகிறார்கள். பல சாதனைகளைச் செய்ததாகப் பட்டியலிடும் தமிழக முதல்வர் இத்தகைய தீண்டாமைக் கொடுமை களுக்கு முடிவு கட்ட ஏன் முழுமையான நடவடிக்கை எடுக்கவில்லை?
தொழிலாளி வர்க்கத்தின் பிரிக்க முடியாத அங்கம் தலித்துக்கள் ஆவர். குறிப்பாக அருந்ததியர் மக்கள். எனவே, தொழிலாளி வர்க்கத்தின் எந்த அங்கமும் செயல்படாமல் இருப்பதை செங்கொடி இயக்கம் ஏற்காது. அது போல உழைப்பாளிகளான தலித் மக்கள் சமூக ரீதியாக ஒடுக்கப்படுவதற்கு எதிராகவும் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகவும், உறுதியாகப் போராடுவோம். தீண்டாமை ஒழிப்பு தொழிலாளி வர்க்க ஒற்றுமைக்கு அவசியமானதாகும். இப்பார்வையோடு சமூக, பொருளாதார ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவோம்.
இவ்வாறு பி.சம்பத் பேசினார்.