குடிசை மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்கவில்லை என்றால் சட்டமன்றம் முன்பு வருகிற ஏப்ரல் 19-ஆம் தேதியன்று ‘பட்டினிப்போராட்டம்’ நடைபெறும் என 14-02-2010 அன்று நடைபெற்ற கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அறிவித்துள்ளதை கடுமையாக விமர்சித்து முதல்வர் கலைஞர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். போராட்டம் ஏன் என்பதை தெளிவுபடுத்திட வேண்டிய அவசியம் உள்ளது.
இக்கட்டுரையாளரை, கட்சியின் மாநிலக்குழு மாநிலச்செயலாளராக தேர்ந்தெடுத்தமைக்காக கலைஞர் வாழ்த்து தெரிவித்திருந்தார். தமிழகத்திலுள்ள மூத்த தலைவர்களில் முக்கியமானவரிடமிருந்து வாழ்த்துச் செய்தி கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது. எனவே, உடனடியாக என் சார்பிலும், கட்சியின் மாநிலக்குழு சார்பிலும் கலைஞருக்கு நன்றி தெரிவித்தோம்.
பல ஆண்டுகளாக குடியிருக்கும் குடிசை வாசிகளுக்கு பட்டா கோரி பல கட்ட இயக்கங்கள் நடத்திய பிறகும் பட்டா கிடைக்காததால்தான் ஏப்ரல் 19-ல் போராட்டம் நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. கடைசியாக நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் இறுதி நாளில், மார்ச் 13-ஆம் தேதியன்று புதிய சட்டமன்ற வளாகம் திறக்கப்படும் என முதல்வர் அறிவித்தார். நாங்கள் போராட்டம் நடத்தப்போவது ஏப்ரல் 19-ம் தேதியன்று. அதாவது வளாகம் திறக்கப்பட்டு ஒரு மாதத்திற்குப் பிறகுதான் போராட்டம் நடைபெறும். இந்நிலையில், போராட்டத்தால் வளாகத் திறப்பு விழாவிற்கு இடையூறு உள்ளது போல் கலைஞர் சொல்வதின் உள்நோக்கம் என்ன? போராட்டத்தை திசை திருப்புவதா?
போராட்டத்தின் நோக்கம் என்ன?
கோயில் நிலத்தில் குடியிருப்போர், அரசு புறம்போக்கு இடத்தில் குடியிருப்போர், மாநில அரசு மற்றும் மாநகராட்சி இடத்தில் குடியிருப்போர், நத்தம் புறம்போக்கில் குடியிருப்போர், தனியார் டிரஸ்ட் நிலத்தில் குடியிருப்போர் என சுமார் 10 லட்சம் குடும்பங்கள், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சொந்த வீடில்லாமல் உள்ளனர். இவர்களின் வாழ்வாதாரமான வீட்டுமனைபட்டா கோரிதான் ஏப்ரல் 19-ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள பட்டினிப்போர். இவர்கள் கோரிக்கைகளுக்காகத்தான் ஏப்ரல் 19-ல் பட்டினிப்போர்.
இந்த 10 இலட்சம் பேரின் கோரிக்கைகளை பகுதிவாரியாக விளக்குவதற்கு ஏடு இடம் தராது என்றாலும், உதாரணத்திற்கு ஓரிரு பகுதிகளைப் பரிசீலிப்போம்.
மேலே இருக்கின்ற படத்தை உன்னிப்பாகப் பாருங்கள். அந்தக் கட்டிடத்தில் மூவர் ணக்கொடியின் கீழ் ஆதிதிரா விடர் பொதுநலச்சங்கம் என்ற வாசகங்களைப் பார்க்கலாம். அந்த வாசகத்திற்கு மேல் தோற்றம் 1947 என்று உள்ளது. சங்கம் உருவாகி சுமார் 62 ஆண்டுகள் ஆகின்றன. இது அம்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட சர்வே எண்.72க்குட்பட்ட மங்களபுரம். 10-2-2010 அன்று, நானும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் டி.கே.சண்முகம், அம்பத்தூர் நகரச் செயலாளர் லெனின் சுந்தர் ஆகியோர் அப்பகுதி மக்களை சந்தித்தோம். தங்களுக்கு பட்டா வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை மனுவை அவர்கள் அளித்தனர்.
மங்களபுரத்தில் சுமார் 780 குடும்பங்கள் உள்ளன. மக்கள்தொகை சுமார் 3 ஆயிரம். இதில் 97 சதவிகிதம் தலித் மக்கள். இது கிராமநத்தம் பகுதி. கால்கடுக்கச் சென்று அதிகாரிகளை சந்தித்தது தான் மிச்சம். சுமார் நூறாண்டுகளுக்கு மேல் வசிக்கும் மங்களபுரத்தில் உள்ள குடும்பங்களுக்கு இதுநாள் வரையிலும் பட்டா வழங்கப்படவில்லை.
பாடிப்புதுநகர்
அம்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட (சர்வே எண். 253/14) பாடிப்புதுநகரில் சுமார் 900 குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களுக்கு குடிசை மாற்று வாரியம், மனை ஒதுக்கீடு செய்து கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறார்கள். தொடர்ச்சியாக தங்களுக்கு பட்டா வேண்டுமென்று வலியுறுத்துகிறபோது, குடிசை மாற்று வாரிய அதிகாரிகள், பாடிப்புதுநகர் இடம் வருவாய்த்துறைக்கு சொந்தமானது. வருவாய்த்துறை எங்களிடம் ஒப்படைக்காமல் பட்டா வழங்க முடியாதென கூறுகிறார்கள். வருவாய்த் துறைக்கு குடிசை மாற்று வாரிய தலைவர் பலமுறை கடிதம் எழுதியும் எதுவும் நடக்கவில்லை. இவ்வாறு ஒவ்வொரு பகுதியிலும் பட்டா கிடைக்காத பல சோகக்கதைகள் உண்டு. இதற்கு கலைஞரின் பதில் என்ன?
இவ்வாறு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பட்டா கிடைக்காத அவல நிலை உள்ளது. இதைப்போலவே கோயில் இடத்தில் குடியிருப்போருக்கு அரசாணை 456-ன் படி தரை வாடகை விதிக்கப்பட்டு, குடியிருப்போர் விழி பிதுங்கி நிற்கின்றனர். அதிகமான வாடகை விதிக்கப்பட்டு, வாடகை கட்ட முடியாமல் சிரமப்படுவோர் மேல்முறையீடு செய்ய வேண்டுமென்றால், வாடகை பாக்கியை செலுத்திட வேண்டும். வாடகை பாக்கி பல லட்சம் வருவதால் வாடகை செலுத்த முடியவில்லை. ஆனால் கோயில் நிர்வாகம் 456 அரசாணைப்படி 70-80 ஆண்டுகள் அங்கேயே வசித்து வரும் இவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என அறிவித்து வெளியேற்றிட முயற்சித்து வருகிறது.
தோழர் மணலி கந்தசாமி, தனது அரசு உத்தரவிட்டதை பாராட்டினார். ஆனால் மார்க்சிஸ்ட்கள் பாராட்ட மறுப்பது மட்டுமன்றி போராட்டம் வேறு நடத்துகிறீர்களே என்ற ஆதங்கம் முதல்வரின் அறிக்கையில் பளிச்சென தெரிகிறது. பாராட்டத்தக்க காரியங்களை கலைஞரின் அரசு மேற்கொண்ட போதெல்லாம் - அந்த நடவடிக்கையை சிபிஐ(எம்) பாராட்டத் தவறியதில்லை. ஆனால் இன்றைக்கும் பல லட்சம் குடும்பங்கள் பட்டா இல்லாமல் அனுதினமும் அஞ்சி அஞ்சி வாழும் நிலையில், பொறுப்பு வாய்ந்த எந்த இயக்கமும் ஏழை மக்களை பாதுகாத்திட அரசை நிர்ப்பந்திக்க போராட்டம் நடத்துவது தவிர்க்க இயலாது என்பது அறிந்த ஒன்றே. இந்த அடிப்படை அரசியல் கடமையைத்தான் சிபிஐ(எம்) மேற்கொண்டு வருகிறது என்பதை தெரிவிக்கிறேன்.
1946-ஆம் ஆண்டு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இந்தியாவிற்கு சுதந்திரம் தர வேண்டுமென்று, அட்லி பிரதமராக இருந்தபோது முடிவெடுத்தார்கள். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது. சுதந்திரத்திற்காக போராடிய கண் ணீரும் செந்நீரும் சிந்திய காந்திக்கும், நேருவிற்கும், கம்யூனிஸ்ட்டுகளுக்கும் பெருமை சேராது. இந்தியாவிற்கு சுதந்தி ரம் கிடைத்ததன் பெருமை இங்கிலாந்து பிரதமர் அட்லிக்கே போய்ச்சேரும் என்றால் கலைஞர் ஏற்றுக் கொள்வாரா?
கீழத்தஞ்சையில் பண்ணையடிமையை ஒழிக்க 1952-ஆம் ஆண்டு ராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது பண்ணையாள் பாதுகாப்புச்சட்டம் கொண்டு வந்தார். பண்ணையடிமையை ஒழிப்பதில் உயிர்த்தியாகம் செய்த களப்பால் குப்புவுக்கோ, வாட்டாக்குடி இரணியனுக்கோ, சிவராமனுக்கோ, இவர்களுக்கெல்லாம் தலைமை தாங்கிய பி.சீனிவாசராவுக்கோ எந்த பங்கும் இல்லை. பண்ணையடிமையை ஒழித்த பெருமையெல்லாம் இராஜாஜியை சாரும் என்றால் யாராவது ஏற்றுக் கொள்வார்களா? கீழத் தஞ்சையில் தலித் மக்கள் குடியிருக்கும் மனைகளை குடியிருக்கும் விவசாயிகளுக்கே சொந்தமாக்க வேண்டுமென்று கம்யூனிஸ்ட்டுகள் நடத்திய போராட்டம், அவர்கள் செய்த தியாகம், அதுதான் அன்றைய திமுக அரசு சட்டம் கொண்டு வர நிர்ப்பந்தமாக அமைந்தது.
தமிழகத்தில் குடிசை மக்களுக்கு மனைப்பட்டா கேட்டால் வங்கத்தையும், கேரளத்தையும் காட்டுகிறார். திமுக வுக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்திய மக்களுக்கு இது தான் கலைஞர் தரும் பதிலா? பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டை பாக்குக்கு விலையைச் சொல்வதா?
- ஜி.ராமகிருஷ்ணன்,
மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)
தமிழ்நாடு மாநிலக்குழு
புதன், 24 மார்ச், 2010
பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்குக்கு விலை சொல்வதா? - கருணாநிதிக்கு மார்க்சிஸ்ட் கட்சி கேள்வி
லேபிள்கள்:
கருணாநிதிக்குப் பதில்,
கொட்டைப்பாக்குக்கு விலை,
ஜி.ராமகிருஷ்ணன்