“தாழ்த்தப்பட்டோர் குறித்த புள்ளி விவரங்கள் தமிழக அரசிடம் இல்லை” என்று தாழ்த்தப்பட்டோ ருக்கான தேசிய ஆணையம் புகார் தெரிவித்துள்ளது.
தேசிய ஆணையத்தின் துணைத்தலைவர் என்.எம்.காம்ப்ளே, உறுப்பினர் மகேந்திரபோத் ஆகியோர் அடங்கிய குழு வியாழக்கிழமை சென்னை வந்தது.
தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, பல்வேறு துறைகளின் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர், செய்தியாளர்களிடம் கூட்டாக அவர்கள் அளித்த பேட்டி:
“தாழ்த்தப்பட்டோருக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கி பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால், அவற்றை செயல்படுத்தும் விதம் குறித்து மாவட்ட அளவிலோ அல்லது துறை ரீதியிலோ புள்ளி விவரங்களை வைத்திருக்கவில்லை. மாநில அரசுத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் எத்தனை பேர், அவர்களில் எத்தனை பேருக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது என்ற தகவல்கள் இல்லை.
அரசுத் துறைகளில் பணியாற்றும் தாழ்த்தப்பட்டோர் ஊழியர்களுக்கான சங்கங்களுக்கும், அரசுக்கும் இடையே கருத்துப் பரிமாற்றம் மேற்கொள்ள துணைச்செயலாளர் அளவிலான தொடர்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் அதுபோன்ற அதிகாரி நியமிக்கப்படவில்லை. பின்னடைவு காலிப் பணியிடங்களை சிறப்பு வேலை நியமனத்தின் மூலம் நிரப்ப வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அரசுத் துறைகளில் பின்னடைவுக் காலிப்பணியிடங்கள் ஏதுமில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கல்வித் துறையில் குறிப்பாக தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஆசிரியர்கள் எத்தனை பேர் பணிபுரிகின்றனர் என்ற தகவல் அரசிடம் இல்லை. கல்வித் துறையில் மொத்தமாக 5 சதவீதம் பின்னடைவு காலிப் பணியிடங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த, முற்போக்கான மாநிலமாக கருதப்படும் தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் குறித்த புள்ளி விவரங்கள் இல்லாதது வருத்தம் அளிக்கிறது.
தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கப்பட்ட நிலங்களில் ஆதிக்க சாதியினர் ஆக்கிரமிப்புச் செய்துள்ளனர். அவற்றை அகற்றி உரியவர்களுக்கு நிலங்களை வழங்கும் பணியில் அரசு அக்கறை காட்டவில்லை. ஆக்கிரமிப்பு தொடர்பாக, இதுவரை 8 ஆயிரம் புகார்கள் உள்ளன. சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றங்களையும் நாட முடியாமல் உள்ளனர்.
தாழ்த்தப்பட்டோர் நலன் தொடர்பாக முதல்வர் தலைமையில் விழிப்பு மற்றும் கண்காணிப்பு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாக அரசுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தக் கமிட்டி ஆண்டுக்கு இருமுறையாவது கூட வேண்டும். ஆனால், சம்பந்தப்பட்டவர்களை தனித்தனியாக முதல்வர் சந்திப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதிலிருந்து, ஏற்கெனவே அமைக்கப்பட்ட கமிட்டி செயல்படாமல் இருப்பது தெரிகிறது.
மனிதக் கழிவை மனிதனே அள்ளும் நிலை இல்லை என்று தமிழக அரசு தெரிவிக்கிறது. ஆனால், அந்த நிலைமை தமிழகத்தில் இருப்பதற்கான புகைப்பட ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன”. இவ்வாறு அவர்கள் கூறினர்.