வியாழன், 10 டிசம்பர், 2009

தலித் மக்களுக்கு ஆதரவாக தர்ணா நடத்திய விருதுநகர் ஆட்சியர் : தீண்டாமை ஒழிப்பு முன்னணி பாராட்டு


சமாதானக் கூட்டத்தில் தலித் மக்களை மிரட்டியவரை உடனடியாக கைது செய்யக் கோரி விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் சிஜிதாமஸ்வைத்யன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

தலித் மக்களுக்கு நம் பிக்கை ஏற்படுத்திய மாவட்ட ஆட்சியரின் போராட்டத்தை, தீண்டாமை ஒழிப்பு முன்னணி பாராட்டியது.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ளது டி.வேப்பங்குளம் கிராமம். இங்கு கடந்த அக்டோபர் மாதம் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்திற்காக புகைப்படம் எடுக்கப்பட் டது. அப்போது புகைப்படம் எடுக்க வந்த தலித் மக்களை சாதி ஆதிக்க சக்தியினர் நீண்ட நேரம் காத்திருக்க வைத்துள்ளனர். அப்போது தலித் பிரிவை சேர்ந்த ஒருவர் “எங்களை ஏன்? நீண்ட நேரம் காத்திருக்க வைக்கிறீர்கள்” என கேட்கவே, சாதி ஆதிக்க வெறியர்கள், தலித் மக்களை கடுமையாக தாக்கினர். இதையடுத்து தலித் மக்கள் அனைவரும் குடும்பத்துடன் ஊரையே காலி செய்து அருகில் உள்ள சின்ன காரியாபட்டியில் தங்கினர்.

இப்பிரச்சனையில் நியாயம் கிடைக்க வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் சாதி ஒழிப்பு முன்னணி போன்ற அமைப்புக்கள் போராட்டம் நடத்தின.

இந்நிலையில் டி.வேப்பங்குளத்தில் சமாதானக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஏற்பாடு செய்தார். புதன்கிழமை மாலை, அக்கிராமத்திற்கு சென்று இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மனோகரன் என்பவர், “எத்தனை சமாதானக் கூட்டம் நடத்தினாலும் உங்களைச் சும்மா விட மாட்டோம்” என ஆட்சியர் முன்னிலையிலேயே தலித் மக்களை பகிரங்கமாக மிரட்டினார்.

அப்போது தலித் மக்கள், “உங்கள் முன்பே, இப்படி மிரட்டினால் நாங் கள் என்ன செய்வது; எப்படி அமைதியாக வாழ முடியும்?” என ஆட்சியரிடம் கேட்கவே, உடனே, மாவட்ட ஆட்சியர் சிஜி தாமஸ் வைத்யன், தலித் மக்களை மிரட்டிய, சாதிவெறியன் மனோகரனை கைது செய்ய உத்தர விட்டார். இந்நிலையில் மனோகரன் அங்கிருந்து தப்பிவிடவே, அவரைக் கைது செய்யும் வரை ஊரை விட்டுப் போகமாட்டேன் என ஆட்சியர் அங்கேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பல மணி நேரத்திற்கு பின்பு குற்றவாளி கைது செய்யப்பட்ட பின்னரே ஆட்சியர் அங்கிருந்து சென்றார்.

இச்சம்பவம் குறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின், விருதுநகர் மாவட்ட அமைப்பாளர் கே.சாமுவேல்ராஜ் விடுத்த அறிக்கையில், (3.12.09) "தலித் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் மாவட்ட ஆட்சியர் செயல்பட்டதை தீண்டாமை ஒழிப்பு முன்னணி பாராட்டுகிறது; மேலும், நரிக்குடி ஒன்றியம் இருஞ்சிறை கிராம வழக்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் உயர்நீதிமன்றத்திற்கு சென்று அக்கிராமத்தில் தீண்டாமை உள்ளது என வெளிப்படையாக வாக்குமூலம் அளித்ததையும் பாராட்டுகிறோம் என்று குறிப்பிட்டார்.

22 ஆயிரம் ஏக்கர் பஞ்சமி நிலங்களை மீட்போம்: கே.பாலகிருஷ்ணன்


தமிழகத்தில் புறம்போக்கு நிலத்தை யார் ஆக்கிரமித்திருந்தாலும் அதை மீட்டு ஏழைகளுக்கு தரும்வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டம் ஓயாது என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

சிறுதாவூர் நிலப்பிரச்சனையில் தமிழக முதல்வரின் திசைதிருப்பும் நடவடிக்கைகளை கண்டித்தும், உண்மை நிலையை விளக்கியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருப்போரூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்டக்குழு உறுப்பினர் எம்.மனோகரன் தலைமை தாங்கினார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் ஜி.மோகனன், மாவட்டக்குழு உறுப்பினர் இ.சங்கர், பகுதிச் செயலாளர் எம்.அழகேசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் கே.நேரு, செயலாளர் சி. பாஸ்கரன், ஆர்.மணி மற்றும் பலர் பேசினர்.

இந்த பொதுக்கூட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரே ஒரு கிராமத்தில் 415 விவசாயிகளின் சாகுபடி நிலங்களை நில உரிமையாளர்களுக்கு தெரியாமலே விற்பனை செய்துள்ள கொடுமை நடந்துள் ளது. மாநிலம் முழுவதும் சமூக விரோதச் செயல்கள் அதிகரித்து வருகின்றன. நிலமோசடியை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி போராடி வருகிறது. அந்த வகையில்தான் நீதிபதி தினகரன் ஆக்கிர மித்து வைத்துள்ள நிலத்தையும் மீட்பதற்கு போராட்டம் நடத்தினோம். ஆனால், ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழக அரசு, போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கட்சி மீது பாய்வதில் என்ன நியாயம்? என்பதை முதல்வர் கருணாநிதிதான் விளக்க வேண்டும் என்றார்.

காவேரிராஜபுரமாக இருந்தாலும், சிறுதாவூராக இருந்தாலும் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டெடுக்க மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும். ஏழைகள் மீது அக்கறை கொண்ட முதல்வர் என்றால் இந்த ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டெடுத்து இரண்டு ஏக்கர் திட்டத்தின் கீழ் முதலமைச்சர் கருணாநிதி ஏழைகளுக்கு கொடுத்திருக்க வேண்டாமா? சிறுதாவூர் நிலத்தை மீட்டுக் கொடுப்பதில் தயக்கம் இருப்பதால்தான் வழக்கை கிடப்பில் போட்டுள்ளார்...

அரசியல் ஆதாயத்திற்காக கொள்கைகளை விலைபேசும் பழக்கம் மார்க்சிஸ்ட் கட்சிக்கு கிடையாது. நிலத்தை யார் ஆக்கிரமித்திருந்தாலும் மீட்டெடுத்து அடித்தட்டு ஏழை மக்களுக்கு தரும்வரை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஓயாது; மாநிலம் முழுவதிலும் உள்ள 22 ஆயிரம் ஏக்கர் பஞ்சமி நிலங்களையும் மீட்டெடுக்க தொடர்ந்து போராட்டங்களை நடத்துவோம்.

இவ்வாறு பாலகிருஷ்ணன் பேசினார். (தீக்கதிர், 2.12.09)