செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

நகரத்தை விட்டு வெளியேற்றப்படும் பழங்குடியினர்- சி.முருகேசன்

கிருஷ்ணகிரி நகராட்சியால் 15 இருளர் பழங்குடியினர் குடும்பங்கள் நகரத்தை விட்டு வெளியேற்றப்படும் நிலையில் உள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக இருளர் பழங்குடி மக்கள் உள்ளனர். காடுகளில் வசித்த இவர்கள் கடந்த காலங்களில் வனத்துறையினரால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இருப்பிடமும் வாழ்வாதாரமும் இல்லாமல் தவித்தனர். எலிகளையும் அவற்றின் வளைகளில் கிடைக்கும் தானியங்களையும் உணவுக்கு பயன்படுத்தினர்.

கொத்தடிமைகளாகவும் காகிதம் பொறுக்கும் நிலைக்கும் சிறார்கள் தள்ளப்பட்டனர். அதிகார வர்க்கமும் பிறரும் கண்டு கொள்ளாத ஒதுக்குப்புறமான இடங்களில் குடில் அமைத்து தங்கினர். உழைக்கும் சிறார் பள்ளிகள் மூலம் கல்வி கற்கும் வாய்ப்பை இவர்கள் அண்மை காலமாக பெறத்தொடங்கினர். கடந்த சில ஆண்டுகளாக இச்சிறார்களில் ஒரு பகுதியினர் முறையான பள்ளிகளில் சேர்ந்து படிக்கின்றனர். கிருஷ்ணகிரி நகரத்திற்குள் ராசு வீதி ராயல் கிணறு அருகே 30 ஆண்டுகளுக்கு முன்பு 15 இருளர் குடும்பங்கள் குடில் அமைத்து தங்கின.

எம்.ஜி.ஆர்.ஆட்சியின் போது இவர்கள் அனைவருக்கும் அதே இடத்தில் தொகுப்பு வீடுகள் கட்டி வழங்கப்பட்டன. அவற்றை ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணகிரி நகராட்சி அதிகாரிகள் புல்டோசர் கொண்டு வந்து இடித்து விட்டதாக அம்சவல்லி (22) கூறினார். பழைய காகிதம் சேகரிக்கும் தொழில் செய்யும் இவர் மேலும் கூறுகையில், அவங்க காட்டின எடத்திலதான் இப்ப வரைக்கும் பிளாஸ்டிக் பேப்பர்ல குடிசை போட்டு வசிக்கிறோம். இதையும் எடுக்கப் போறாங்களாம். எங்க பசங்க இப்பதான் பள்ளிக் கூடம் போறாங்க. அதையும் கெடுக்கப்பாக்குறாங்க என்றார்.

நகராட்சி தூய்மைப் பணியாளர்களின் தொகுப்பு வீடுகள் உட்பட இதே பகுதியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு அருந்த தியர்களின் சில வீடுகளை நகராட்சி நிர்வாகம் இடித்து தள்ளியது. தீக்கதிர் நாளிதழில் இதுகுறித்து விரிவான செய்தி அப்போது வெளியிடப்பட்டது. உடனடியாக வீடு கட்டித்தரக்கோரி நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களது கோரிக்கையை ஏற்பதாக அறிவித்த நகராட்சி நிர்வாகம், இதுவரை வீடு கட்டி தராததால் அதே இடத்தில் இடிபாடுகளுக்கிடையே குடியேறினர். இப்போது இருளர் பழங்குடியினரையும் அப்புறப்படுத்தி விட்டு தான் வீடு கட்டி வாடகைக்கு தர முடியும் என்கிறது நகராட்சி நிர்வாகம். நகராட்சி ஊழியர்களும் இருளர் பழங்குடியினரும் நீண்ட காலமாக குடியிருக்கும் இடங்களுக்கு தமிழக முதல்வர் அறிவித்துள்ளபடி பட்டா வழங்க வேண்டும். அவர்கள் சொந்தமாக வீடு கட்டிக் கொள்ள உதவி செய்ய வேண்டும். அடித்தட்டில் உள்ள ஏழைகளின் குடியிருப்பை உறுதிப்படுத்துவதே அவர்களது முன்னேற் றத்திற்கு முதல் தேவை என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். கவனத்தில் கொள்ளுமா வருவாய் துறையும் நகராட்சி நிர்வாகமும்.
- தீக்கதிரில் வெளியான கட்டுரை

தீண்டாமைச்சுவர் அகற்றம் : அருந்ததிய மக்கள் நன்றி

21 ஆண்டுகாலமாக தங்களை மறித்து நின்ற தீண்டமைச்சுவரை அகற்றித்தர அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி,ஆதித் தமிழர் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகளுக்கு கோவை, சிங்காநல்லூர், 10-வது வட்டம் பெரியார் நகர்வாழ் மக்கள் நன்றி தெரிவித்தனர்.

சனிக்கிழமை காலையில் ஆனந்தக் கண்ணீர் மல்க தீண்டாமைச்சுவர் கீழே விழுந்ததைக் கண்ட மக்கள், அன்று மாலையே அதற்கான முயற்சிகளை மேற்கொண்டவர்களுக்கு பாராட்டு தெரிவிக்க விழைந்தனர். இரவு எட்டு மணிக்கு பெரியார் நகர் மக்கள் அனைவரும் கலந்து கொண்ட கூட்டத்தில் அனைத்து அமைப்புகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

சுவர் அகற்றுவதை நோக்கிச் செல்லுகையில் எத்தகைய தடைகள் மற்றும் அத்தடைகளைக் களைய கிடைத்த ஆதரவுகள் ஆகியவை பற்றி ஆதித்தமிழர் விடுதலை முன்னணியின் மாநில அமைப்பாளர் ரவிக்குமார் எடுத்துக் கூறினார். அவரைத் தொடர்ந்து அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத் தலைவர் சி.பத்மநாபன், கோவை மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அமைப்பாளர் யு.கே.சிவஞானம், மார்க்சிஸ்ட் கட்சியின் சிங்கை நகரச் செயலாளர் கே.மனோகரன் ஆகியோர் ஒட்டு மொத்த தீண்டாமை ஒழிப்பு நோக்கிய பாதையில் பயணிக்க வேண்டிய அவசியத்தையும், அதற்காக அனைத்துப்பகுதி உழைப்பாளி மக்களும் இணைய வேண்டியதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறினர்.

பேச்சுவார்த்தை
சுவர் மட்டும் அகற்றப்பட்டுள்ள நிலையில், முழு மையான பாதையாக அது உருவாகும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் விருப்பம். தங்கள் பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் விநாயகர் சிலையை வைத்துக் கொள்ள அவர்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, திங்களன்று மாலை ஐந்து மணியளவில் ஆர்.டி.ஓ. முன்னிலையில் மாவட்ட நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடக்கிறது.

நெடி கிராம தலித் மக்கள் அய்யனார் கோவிலில் பொங்கலிடலாம்; வழிபட கூடாதாம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம் நெடி கிராமத்தில் உள்ளது அய்யனார் ஆலயம். இந்த ஆலயத்தில் தலித் மக்கள் வழிபட அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. மேலும், பொதுச்சொத்துக்களில் தலித் மக்களால் உரிமை கொண்டாட முடியவில்லை. தலித் மக்கள் வசிக்கும் பகுதியில் போதுமான அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை.

இப்பிரச்சனைகள் குறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், தமிழக முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர், காவல்துறை உயர் அதிகாரிகள் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஜனவரி 26 குடியரசு தினத்தன்று அய்யனார் ஆலயத்தில் பொங்கலிட்டு படைக்கும் போராட்டத்திற்கு வாலிபர் சங்கம் திட்ட மிட்டது.

இதனையடுத்து ஜனவரி 20ம் தேதி அதிகாரிகள் சமாதான கூட்டத்தை நடத்தினர். இந்த கூட்டத்தில் வாலிபர் சங்கத்தினர் தலித் மக்களின் உரிமைகள் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஜனவரி 30 காந்தி நினைவு தினத்தன்று மீண்டும் போராட்டத்தை நடத்த வாலிபர் சங்கத்தினர் முடிவு செய்தனர்.

இதன்படி சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.ஆனந்தன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.முத்துக்குமரன், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் கண்ணப்பன், செயலாளர் செந்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் கே.முனியாண்டி, மாணவர் சங்க செயலாளர் கார்க்கி ஆகியோர் தலைமையில் நெடி கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று கோவிலுக்குள் வழிபட முயன்றனர். அப்போது காவல் துறையினரும், ஆதிக்கச் சக்திகளும் வழியை மறித்ததால் சிறிது நேரம் அங்கு பதட்டம் நிலவியது.

கோவிலுக்குள் சென்று வழிபாடு நடத்தாமல் இங்கிருந்து செல்லமாட்டோம் என்று தலித்மக்கள் உறுதிபட அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதனையடுத்து கோட்டாட்சியர், காவல்துறை அதிகாரிகள் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன்பிறகு தலித் மக்கள் பொங்கலிட மட்டும் அனுமதிக்கப்பட்டது. அதே சமயம் சாமியை வழிபட அனுமதி மறுக்கப்பட்டது.

இரு சமூக மக்களையும் அழைத்து பிப்ரவரி 1 அன்று மீண்டும் சமாதானக் கூட்டம் நடத்தி, தலித் மக்களை ஆலயத்திற்குள் அனுமதிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் வழக்கம் போல் உறுதியளித்தனர்.

கண்டனம்
நெடி கிராமத்தில் தலித் மக்கள் பொங்கல் வைத்து வழிபட முற்பட்டதோடு ஆதிக்க சாதி வெறியர்களால் அடித்து விரட்டப்பட்டுள்ளனர். காவல்துறையும், வருவாய் துறையும் வேடிக்கை பார்த்துள்ளதோடு தலித் மக்களின் உரிமையை நிலைநாட்டாமல் மெத்தனமாக செயல்பட்டத்தை இந்திய ஜனநாயாக வாலிபர் சங்கம் வன்மையாக கண்டித்துள்ளது.

திண்டுக்கல் முனிசிபல் தொழிலாளர் சங்கம்- அருந்ததியர் விடுதலைக்கான முன்னோடி!: என்.வரதராஜன் பெருமிதம்

திண்டுக்கல் முனிசிபல் தொழிலாளர் சங்கம், அருந்ததியர் விடுதலை மற்றும் உரிமைகளை பெற்றுத்தந்த முன்னோடிச் சங்கம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் கூறினார்.

முன்னாள் கவுன்சிலரும், முனிசிபல் தொழிலாளர்களின் உரிமைக்கு பாடுபட்டவருமான தோழர் பி.முத்தனின் படத்திறப்பு விழா, ஞாயிறன்று (31.01.2010) முனிசிபல் காலனியில் நடைபெற்றது. இந்த விழாவில் தோழர் பி.முத்தன் படத்தைத் திறந்து வைத்து என்.வரதராஜன் பேசியதாவது:-

திண்டுக்கல் முனிசிபல் தொழிலாளர் சங்கத்திற்கு ஒரு பாரம்பரியம் உண்டு. இந்தப் பகுதியில் பல கட்சிகள் இருக்கலாம். ஆனால் முனிசிபல் தொழிலாளர்களுக்கு பல்வேறு உரிமைகளைப் பெற்றுத் தந்தது செங்கொடி இயக்கமான முனிசிபல் தொழிலாளர் சங்கம் தான். 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அலுவலகத்தில் நான் ஒரு ஊழியராக பணியாற்றி உள்ளேன். இப்பகுதியில் அனைத்து குடும்பத்தினருடனும் எனக்கு நல்ல பரிச்சயம் உண்டு. அவர்களது வீடுகளில் உணவருந்தியுள்ளேன். இந்த அருந்ததிய மக்கள் தங்களுக்கு எத்தகைய பிரச்சனை ஏற்பட்டாலும் நமது கட்சி அலுவலகத்திற்குத்தான் வருவார்கள்.

இந்திய நாடாளுமன்றத்தில் 543 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்களில் 303 பேர் கோடீஸ்வரர்கள். மத்திய மந்திரிகள் 64 பேர் ரூ. 500 கோடிக்கும் மேல் சொத்து வைத்துள்ளனர். 33 மத்திய அமைச்சர்கள் ரூ. 50 கோடிக்கும் மேல் சொத்து வைத்துள்ளனர். இவர்கள் எல்லாம் எந்த வர்க்கத்திற்கு சாதகமாக இருப்பார்கள் என்பதை நாம் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் கடந்த 50 ஆண்டுக்கு முன்பு இந்த முனிசிபல் காலனி எப்படி இருந்ததோ அதே போலத்தான் உள்ளது. எந்த முன்னேற்றமும், மாற்றமும் இல்லை. இப்பகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்திலும் மாற்றம் இல்லை. இந்த பகுதியிலுள்ள வீடுகளுக்கு பட்டா கூட இன்னும் கொடுக்கப்படவில்லை.

அருந்ததியர்களின் சமூக விடுதலைக்காக, மார்க்சிஸ்ட் கட்சி இயக்கங்கள் நடத்தி வருகிறது. 3 சதவீத இடஒதுக்கீட்டை நாம் போராடி பெற்றுள்ளோம். இன்றைக்கு நமது பிள்ளைகளும் டாக்டர்களாக , என்ஜினீயர்களாக கல்லூரிகளில் படிக்கிறார்கள். இது நமது போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி. 6 சதவீத இடஒதுக்கீட்டுக்கான போராட்டத்தையும் நாம் தொடர வேண்டியுள்ளது.

தோழர்கள் ஏ.பாலசுப்ரமணியம், எஸ்.ஏ.தங்கராஜன் ஆகியோர் இப்பகுதி மக்களுக்காக அரும்பாடுபட்டனர். அவர்களுடன் இணைந்து நமது செங்கொடி இயக்கத்தை இப்பகுதியில் கட்டுவதற்கு முத்தன் போன்றவர்களின் பணி அளப்பரியது.

இவ்வாறு என்.வரதராஜன் பேசினார்.

இக்கூட்டத்திற்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ஆர்.கணேசன் தலைமை வகித்தார். மாரியப்பன் வரவேற்றார். திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.பாண்டி, நகரச் செயலாளர் வ.கல்யாணசுந்தரம், சிஐடியு மாவட்டப் பொருளாளர் கே.முத்துராஜ் மற்றும் பி.ஆசாத், ஏ.பிச்சைமுத்து, தன்னாசி, டி.காமாட்சி, சுந்தரம், மரியதாஸ், திருப்பதி, முருகன் மற்றும் முத்தன் குடும்பத்தினர் பங்கேற்றனர்.

தலித் மக்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்: தீண்டாமை ஒழிப்பு முன்னணி - `அம்மி’ வலியுறுத்தல்

தீண்டாமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விழிப்புணர்வுப் பொதுக்கூட்டம் தேனியில் நடைபெற்றது. அருந்ததியர் மக்கள் முன்னேற்ற இயக்க மாவட்ட அமைப்பாளர் எம்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். இயக்க ஆலோசகர் டி.வி.முருகேசன் முன்னிலை வகித்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில நிர்வாகி கே.சாமுவேல்ராஜ் சிறப்புரையாற்றினார்.

விழுதுகள் அமைப்பாளர் எம்.தங்கவேல், மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கப் பொறுப்பாளர் சண்முகவேல், தீண்டாமை ஒழிப்பு முன்னணி தேனி மாவட்ட அமைப்பாளர் டி.வெங்கடேசன், அம்மி திட்ட இயக்குநர் ராஜரத்தினம், பி.முருகேசன், ஆதித் தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் வீரபாண்டியன் உள்ளிட்டோர் பேசினர். மாதர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.கே.பொன்னுத்தாய் சிறப்புரை ஆற்றினார்.

இக்கூட்டத்தில், அருந்ததியர் மக்கள் முன்னேற்ற இயக்கம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அருந்ததியர் மீதான எதிர்வழக்குகளை காவல்துறை திரும்பப் பெற வேண்டுமென தீண்டாமை ஒழிப்பு முன்னணியும், அருந்ததியர் மக்கள் முன்னேற்ற இயக்கமும் (அம்மி) வலியுறுத்தின.

நத்தம் அருகே தலித் மக்களுக்கு முடிதிருத்த மறுப்பு

நத்தம் அருகே, சாணார் பட்டி ஒன்றியம் ஆவிளிபட்டியில், தலித் மக்களுக்கு ஆண்டாண்டு காலமாக முடிதிருத்த மறுக்கும் தீண்டாமைக் கொடுமை நிலவி வருகிறது. இப்பகுதி தலித் மக்கள் சாணார்பட்டிக்குச் சென்றுதான் முடிதிருத்தி வருவார்கள்.

இக்கொடுமையை எதிர்த்து ஞாயிற்றுக்கிழமையன்று (31.01.2010) போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அறிவித்தது.

இதையடுத்து, திண்டுக்கல் வட்டாட்சியர், வாலிபர் சங்க நிர்வாகிகளை, வெள்ளிக்கிழமையன்றே அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் வாலிபர் சங்க மாவட்டச்செயலாளர் கே.பிரபாகரன், மாவட்டத் தலைவர் ஏ.அரபு முகமது, வெள்ளைக்கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் என்.பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். சாதி ஆதிக்க சக்தியினரும் கலந்து கொண்டனர்.

இதில், முடிதிருத்த மறுப்பது சட்ட விரோதம், அவ்வாறு மீண்டும் தீண்டாமையை கடைப்பிடித்தால் யாராக இருந்தாலும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று வட்டாட்சியர் எச்சரித்தார். பின்னர் சுமூக முடிவு எடுக்கப்பட்டது.

தமிழக அரசின் நடவடிக்கைக்கு பி.சம்பத் வரவேற்பு

கோவையில் தீண்டாமைச்சுவரை அகற்ற தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையை தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத் வரவேற்று அறிக்கை விடுத்தார்.

அந்த அறிக்கை வருமாறு:

கோவையில் கட்டப்பட்டிருந்த தீண்டாமைச்சுவர் தொடர்பாக தீண்டாமை ஒழிப்பு முன்னணியும், ஆதித்தமிழர் விடுதலை முன்னணியும் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, கோவை மாநகராட்சி ஆணையரிடமும் ஜனவரி 29 அன்று மகஜர் அளித்தனர். இதனைத்தொடர்ந்து அரசு நிர்வாகம் தந்தை பெரியார் நகரில் கட்டப்பட்டுள்ள தீண்டாமைச்சுவரை அப்புறப்படுத்தியுள்ளது. சாலையின் முழுமையான பயன்பாட்டிற்காக, நடுவே உள்ள விநாயகர் கோயிலை வேறு இடத்திற்கு மாற்றுமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். மாற்று இடம் தருவதற்கான ஏற்பாடும் நடந்து வருகிறது.

தமிழ்நாடு அரசு கோவை, பெரியார் நகர் தீண்டாமைச் சுவரை அகற்ற எடுத்த நடவடிக்கைகளை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலக்குழு வரவேற்கிறது. இதோடு மாற்று இடத்தில் விநாயகர் கோவில் அமைக்க ஏற்பாடு செய்து அச்சாலையை தலித் மக்கள் சுதந்திரமாகப் பயன்படுத்த நடவடிக்கையை தாமதமின்றி மேற்கொள்ளுமாறு தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ்நாடு முழுவதும் தீண்டாமை ஒழிப்பிற்கான முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு அனைத்துப் பகுதி மக்களையும், ஜனநாயக இயக்கங்களையும் கேட்டுக் கொள்வதோடு தமிழக அரசு அதற்கான முயற்சிகளை முனைப்புடன் மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகிறோம்.

பிள்ளையார் சிலையை வைத்து

இந்து மக்கள் கட்சியினர் அடாவடி
தீண்டாமைச் சுவர் இடிக்கப்பட்ட போது அங்கு வந்த இந்து மக்கள் கட்சியின் சிவபிரகாசம், இந்து முன்னணியின் ஸ்டோன் சரவணன் உள்ளிட்டோர் தீண்டாமை சுவரின் உட்புற மாட்டு தொழுவத்தில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலையை அகற்றக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் காவல்துறை அதிகாரிகளுடன் சுவரை இடித்தது தப்பு எப்படி இடிக்கலாம் என வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் இந்து மக்கள் கட்சியின் கொடியினை கொண்டு வந்து தீண்டாமை சுவரோடு இருந்த பிள்ளையார் சிலை இருக்கும் பகுதியில் கட்ட முயன்றனர். அதனை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

அப்போது இந்து மக்கள் கட்சியினர், அருந்ததிய மக்களை தரக்குறைவாக பேசினர். அப்போது இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. காவல்துறையினர் அப்பகு தியில் இருந்து அனைவரையும் செல்லுமாறு விரட்டினர்.

இதனால் சுவர் இடிக்கப்பட்டாலும் நடுவழியை மறைத்து இருக்கும் மாட்டு தொழுவ பிள்ளையார் சிலையால் அருந்த தியர் மக்களுக்கு முழுமையாக வழி பிறக்க வில்லை. அதிகாரிகள் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினரிடம் பிள்ளையார் சிலைக்கு மாற்று இடம் பார்த்த உடனே இந்த சிலை அகற்றப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

ஆட்சியர் உறுதி
பின்னர் மாலை 3 மணியளவில் தீண்டாமை சுவர் இடிக்கப்பட்ட இடத்தை கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் பு.உமாநாத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அருந்ததியர் மக்கள், கடவுளின் பெயரால் மறுபடியும் எங்களுக்கான வழியை மறித்து இருப்பது எப்படி நியாயம்? தாங்கள் சுவரை இடிக்க நடவடிக்கை எடுத்தது போல், முழுமையாக வழி கிடைக்க இந்த மாட்டுத் தொழுவத்தையும் அதன் உள்ளே இருக்கும் பிள்ளையார் சிலையையும் அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் கூறினார்.