கிருஷ்ணகிரி நகராட்சியால் 15 இருளர் பழங்குடியினர் குடும்பங்கள் நகரத்தை விட்டு வெளியேற்றப்படும் நிலையில் உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக இருளர் பழங்குடி மக்கள் உள்ளனர். காடுகளில் வசித்த இவர்கள் கடந்த காலங்களில் வனத்துறையினரால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இருப்பிடமும் வாழ்வாதாரமும் இல்லாமல் தவித்தனர். எலிகளையும் அவற்றின் வளைகளில் கிடைக்கும் தானியங்களையும் உணவுக்கு பயன்படுத்தினர்.
கொத்தடிமைகளாகவும் காகிதம் பொறுக்கும் நிலைக்கும் சிறார்கள் தள்ளப்பட்டனர். அதிகார வர்க்கமும் பிறரும் கண்டு கொள்ளாத ஒதுக்குப்புறமான இடங்களில் குடில் அமைத்து தங்கினர். உழைக்கும் சிறார் பள்ளிகள் மூலம் கல்வி கற்கும் வாய்ப்பை இவர்கள் அண்மை காலமாக பெறத்தொடங்கினர். கடந்த சில ஆண்டுகளாக இச்சிறார்களில் ஒரு பகுதியினர் முறையான பள்ளிகளில் சேர்ந்து படிக்கின்றனர். கிருஷ்ணகிரி நகரத்திற்குள் ராசு வீதி ராயல் கிணறு அருகே 30 ஆண்டுகளுக்கு முன்பு 15 இருளர் குடும்பங்கள் குடில் அமைத்து தங்கின.
எம்.ஜி.ஆர்.ஆட்சியின் போது இவர்கள் அனைவருக்கும் அதே இடத்தில் தொகுப்பு வீடுகள் கட்டி வழங்கப்பட்டன. அவற்றை ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணகிரி நகராட்சி அதிகாரிகள் புல்டோசர் கொண்டு வந்து இடித்து விட்டதாக அம்சவல்லி (22) கூறினார். பழைய காகிதம் சேகரிக்கும் தொழில் செய்யும் இவர் மேலும் கூறுகையில், அவங்க காட்டின எடத்திலதான் இப்ப வரைக்கும் பிளாஸ்டிக் பேப்பர்ல குடிசை போட்டு வசிக்கிறோம். இதையும் எடுக்கப் போறாங்களாம். எங்க பசங்க இப்பதான் பள்ளிக் கூடம் போறாங்க. அதையும் கெடுக்கப்பாக்குறாங்க என்றார்.
நகராட்சி தூய்மைப் பணியாளர்களின் தொகுப்பு வீடுகள் உட்பட இதே பகுதியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு அருந்த தியர்களின் சில வீடுகளை நகராட்சி நிர்வாகம் இடித்து தள்ளியது. தீக்கதிர் நாளிதழில் இதுகுறித்து விரிவான செய்தி அப்போது வெளியிடப்பட்டது. உடனடியாக வீடு கட்டித்தரக்கோரி நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களது கோரிக்கையை ஏற்பதாக அறிவித்த நகராட்சி நிர்வாகம், இதுவரை வீடு கட்டி தராததால் அதே இடத்தில் இடிபாடுகளுக்கிடையே குடியேறினர். இப்போது இருளர் பழங்குடியினரையும் அப்புறப்படுத்தி விட்டு தான் வீடு கட்டி வாடகைக்கு தர முடியும் என்கிறது நகராட்சி நிர்வாகம். நகராட்சி ஊழியர்களும் இருளர் பழங்குடியினரும் நீண்ட காலமாக குடியிருக்கும் இடங்களுக்கு தமிழக முதல்வர் அறிவித்துள்ளபடி பட்டா வழங்க வேண்டும். அவர்கள் சொந்தமாக வீடு கட்டிக் கொள்ள உதவி செய்ய வேண்டும். அடித்தட்டில் உள்ள ஏழைகளின் குடியிருப்பை உறுதிப்படுத்துவதே அவர்களது முன்னேற் றத்திற்கு முதல் தேவை என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். கவனத்தில் கொள்ளுமா வருவாய் துறையும் நகராட்சி நிர்வாகமும்.
- தீக்கதிரில் வெளியான கட்டுரை