வியாழன், 19 நவம்பர், 2009

உத்தப்புரம் பிரச்சனை: ஆட்சியர், எஸ்.பி. பதிலளிக்க உத்தரவு

உத்தப்புரம் பிரச்சனை தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றக் கிளை (16.11.09) அன்று உத்தரவிட்டது.

உத்தப்புரம் தலித் மக்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதல் குறித்தும், தாக்குதலால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு நிவாரணம், தவறிழைத்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை உத்தப்புரத்திலும் தமிழகத்தின் மற்ற அடையாளங் காணப்பட்ட வன்கொடுமை நடக்கும் இடங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.கே.பொன்னுத்தாய், மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இவரது மனுவை விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்றம், காவல்துறை நடத்திய தாக்குதல் குறித்து விசா ரணை நடத்த உத்தரவிட்டு, விசாரணை நீதிபதிகள் அளித்த அறிக்கையின்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் உத்தப்புரம் குறித்த மனு மீதான விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.முருகேசன், எஸ்.நாகமுத்து ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் லஜபதிராய், வன்கொடுமை தடுப்புச்சட்டப்படி உத்தப்புரத் தில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 25ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

புதன், 18 நவம்பர், 2009

காட்டுக்கீரை பறித்த தலித் பெண்கள் மீது தாக்குதல்


கோவை துடியலூர் அருகே உள்ளது பன்னிமடை ஊராட்சி. இங்குள்ள கொண்டல்சாமி நகரில் கவிதா, துளசிமணி, தெய்வானை ஆகியோர் வசித்து வருகின்றனர்.

அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் அப்பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வந்ததால் செங்கல் சூளைகள் இயங்கவில்லை. இதனால் அவர்களுக்கும் வேலையில்லை.

எனவே திங்களன்று (16.11.09) மாலை உணவுக்காக காட்டுக்கீரை பறிக்கச் சென்றனர். அவர்கள் கீரை பறித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் உள்ள வாழைத் தோட்டத்தின் உரிமையாளர் கோபால் (எ) ராஜகோபால் அவர்களது சாதியைக் குறித்து இழிவாகப் பேசியதுடன் கையில் வைத்திருந்த தடியால் மூன்று பேரையும் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த தலித் பெண்கள் மூவரும் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக கவிதா துடியலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில், போலீசார் முதலில் சாதாரண பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் தகவலறிந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட நிர்வாகி வி.பெருமாள் தலையிட்டு பேசியதையடுத்து வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கொங்குநாடு
இந்நிலையில் தலைமறைவாக உள்ள ராஜகோபாலுக்கு ஆதரவாக கொங்குநாடு முன்னேற்றப் பேரவையினர் வியாழனன்று இரவு துடியலூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் தோட்டத்தில் பெண்கள் காய்கறி, கீரை மற்றும் பழங்களைத் திருடியதாகப் புகார் அளித்துள்ளனர்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆறுதல்
இந்நிலையில் வெள்ளியன்று தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர்கள் கோவை அரசு மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்ட பெண்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். முகாம் மருத்துவரை அணுகி அவர்கள் சிகிச்சை விபரங்கள் குறித்தும் கேட்டறிந்தனர். பின்னர் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கோவை மாவட்ட அமைப்பாளர் யு.கே.சிவஞானம் தெரிவித்ததாவது:

“தலித் பெண்களை ஆதிக்க வெறியோடு தாக்கிய ராஜகோபாலை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும். இதுகுறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி தொடர் நடவடிக்கைகளில் ஈடுபடும்’’ என்றார்.

சந்திப்பின் போது அமைப்பின் மாவட்ட நிர்வாகிகள் வி.பெருமாள், என்.ஜாகீர், மார்க்சிஸ்ட் கட்சியின் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியச் செயலாளர் ஆர்.கேசவமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

செவ்வாய், 17 நவம்பர், 2009

போராட்டம் வெற்றி.... வேலூர் குறவன், குரும்பன்ஸ் மக்களுக்கு சாதிச் சான்றிதழ்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மலைவாழ் மக்கள் சங்கத்தின் அயராத போராட்டத்தைத் தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தில் குறவன் மற்றும் குரும்பன்ஸ் இன மக்களுக்கு ஒரு மாதத்திற்குள் சாதிச் சான்றிதழ் வழங்குவதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.

இக்கோரிக்கைக்காக சனிக்கிழமையன்று (14.11.2009) மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தம்மை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களிடம் இதனை அவர் தெரிவித்தார்.

கடந்த 4-ம் தேதி இதே கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதம் நடைபெற்றது. பின்னர், மலைவாழ் மக்கள் சங்க தலைவர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்தபோது, ஆட்சியர் அவர்களைஅவமானப்படுத்தினார்.

ஆட்சியரின் இத்தகைய செயலை கண்டித்து வெள்ளியன்று தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன்பின்னர் தலைவர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர், ஒரு மாதத்திற்குள் குறவன், குரும்பன்ஸ் இன மக்களுக்கு சாதிச்சான்றிதழ் வழங்குவதாக உறுதியளித்தார். மேலும், பழங்குடி மக்களை இழிவுபடுத்தும் நோக்கம் எதுவும் தமக்கு இல்லை என்றும், கம்யூனிஸ்ட் கட்சியை தாம் மிகவும் மதிப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரன் தெரிவித்தார்.

திங்கள், 16 நவம்பர், 2009

குறவன் இனச் சான்றிதழ் கேட்டு போராட்டம் : வேலூர் மாவட்டத்தில் காவல்துறை அடக்குமுறை

குறவன் இன மக்களுக்கு சாதி சான்றிதழ் கேட்டு மனு கொடுக்க வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களை அவமரியாதை செய்த மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து வெள்ளியன்று(13.11.2009) தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குறவன் இன மக்களுக்கு சாதிச்சான்றிதழ கேட்டு, கடந்த 4- ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் குறவர் இன மக்கள் சங்கத்தினர் இணைந்து பட்டினிப் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் முடிவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளருமான பெ.சண் முகம், கட்சியின் வேலூர் மாவட்டச் செயலாளர் ஏ.நாராயணன், குறவர் பழங்குடி மக்கள் சங்கத் தலைவர் ஏ.வி.சண்முகம் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் செ.ராஜேந்திரனை சந்தித்து மனு அளித்து முறையிட்டனர்.

அப்போது, எங்களின் கோரிக்கைக்கு எப்போது தீர்வு கிடைக்கும் என்று தலைவர்கள் கேட்டபோது, கோபமடைந்த ஆட்சியர், தலைவர்களை “வெளியே போங்கள்'' என்று கூறிஅவமானப்படுத்தினார்.

இச்சம்பவத்தைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு காவல்துறை அனுமதி அளிக்காமல் வியாழன் இரவு 10 மணியளவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்கு வந்து அனுமதி இல்லை என்பதைத் தெரிவித்தனர்.

மேலும், பெருமளவு காவல்துறையினரை அந்த பகுதியில் குவித்து, மறுநாள் ஆர்ப்பாட்டம் நடத்தும் இடத்திற்கு வரும் கட்சியினரை வழியிலேயே மடக்கி கைது செய்தனர்.

மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.டி.சங்கரி, எம்.வி.எஸ்.மணி ஆகியோரை வலுக்கட் டாயமாக தரதரவென்று இழுத்துச் சென்று போலீஸ் வேனில் ஏற்றினர். பின்னர் ஆர்ப்பாட்டத்திற்காக வந்து கொண்டிருந்த, பெ.சண்முகம், டில்லிபாபு எம்எல்ஏ, ஜி.லதா எம்எல்ஏ உள்ளிட்ட தலைவர்கள் வந்த வாகனத்தையும் வழிமடக்கி கைது செய்ய முற்பட்டனர். இதனால் வாக்குவாதம் எழுந்தது. முடிவில் டிஎஸ்பி பாலசந்தர், ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதால் உங்களைக் கைது செய்கிறோம் என்று சொல்ல, பதிலுக்கு தலைவர்களும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்வோம் என்று உறுதியுடன் இருக்கவே, பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு மாவட்ட ஆட்சியர் இல்லை. கூட்டத்தில் இருப்பதாக கூறினர். வெகுநேரமாகியும் மாவட்ட ஆட்சியர் வராததால் கோபமுற்ற தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்பின்னர் காவல்துறையினரின் ஏற்பாட்டின் பேரில், தலைவர்கள் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து கோரிக்கைகளை எடுத்துரைத்தனர்.

சனி, 14 நவம்பர், 2009

வாச்சாத்தி வழக்கு: நவ. 30-க்கு ஒத்திவைப்பு


தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி வட்டம், வாச்சாத்தி கிராமத்தில் 1992-ஆம் ஆண்டு மலை வாழ்மக்களை சேர்ந்த 18 பெண்கள் வனத்துறையினரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட் டனர்.

இதுதொடர்பாக வனத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்த் துறையைச் சேர்ந்த 269 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிபிஐ விசாரணைக்கும் மாற்றப்பட்டது.

அதன்பின் கடந்த 16 ஆண்டுகளாக கிருஷ்ணகிரி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு, கடந்த 2009-ஜூன் மாதம் தருமபுரி அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. ஆகஸ்ட் 20, 21 தேதிகளி மாவட்ட நீதிபதி எஸ்.குமரகுரு தலைமையில் நடைபெற்ற குறுக்கு விசாரணையில் வனத்துறை யினரால் பாதிக்கப்பட்ட 18 பெண்களில், ஜெயா, சித்ரா, அமுதா, காந்தி, லட்சுமி ஆகிய ஐந்து பேர் முதல் நாளிலும், முத்துவேடி, பாப்பாத்தி, மல்லிகா, மாரிக்கண்ணு ஆகிய நான்கு பேர் இரண்டாம் நாளிலும் சாட்சியம் அளித்தனர்.

அடுத்தகட்டமாக நவம்பர் 13 அன்று நடைபெற்ற குறுக்கு விசாரணையில், எஞ்சிய செல்வி, தேன்மொழி, காந்திமதி, பாப்பாத்தி, சுகுணா, கம்சலா, பழனியம்மாள், பூங்கொடி, சரோஜா ஆகிய ஒன்பது பேர் தங்களுக்கு நடந்த கொடுமைகளை நீதிபதி முன் சாட்சியளித்தனர்.

இவ்வழக்கில் அரசுத் தரப்பு சிபிஐ வழக்கறிஞர் ஜெயபால், எதிர்தரப்பு வழக்கறிஞர் வெங்கடேசன் ஆகியோர் வாதாடினர். இதன்பின்னர் வழக்கு விசாரணையை நவcபர் 30-ம் தேதிக்கு நீதிபதி எஸ். குமரகுரு ஒத்தி வைத்தார்.

விசாரணைக்காக வாச்சாத்தி பெண்கள் வந்திருந்த போது தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம், மாநில துணைச்செயலாளர் பி.டில்லிபாபு எம்.எல்.ஏ., விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.என்.மல்லையன் மற்றும் அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே. பூபதி, மாவட்டச் செயலாளர் கிரைச மேரி ஆகியோர் உடனிருந்தனர்.

தலித் மக்களின் நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம், நவம்பர் 12, 13 (2009)ஆகிய தேதி களில் சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தாலுகா, ஒட்டப் பிடாரம் பஞ்சாயத்திற்குட்பட்ட 1533 ஏக்கர் நிலங்களை சிப்காட் இரண் டாம் கட்டத்திற்காக கையகப்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலங்களில் 70 சதவீதம் தலித் மக்களுக்கு சொந்தமானவை. இவர்களுக்கு இது மட்டுமே வாழ்வாதாரம். அந்தப் பகுதியில் நன்கு விளையும் நிலங்களும், நிலத்தடி நீர்மட்டம் போதுமான அளவும் விவசாயம் மற்றும் குடிநீருக்கு லாயக்கான நிலத்தடி நீர் உள்ள பகுதியும் இதுவே. இந்த நிலங்களின் சொந்தக்காரர்களுக்கு இதைத் தவிர வேறு வாய்ப்புகள் கிடையாது.

ஆனால் இந்த இடத்திலிருந்து அதிகபட்சமாக பத்து கிலோமீட்டர் தூரத்திலும், குறைந்தபட்சம் 4 கிலோ மீட்டர் தூரத்திலும் வனத்துறைக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் உள்ளது. இதில் அபூர்வ தாவரங்களோ, விலங்கினங்களோ கிடையாது. வேறு பெரிய மரங்களும் கிடையாது. வகைப்படுத்துதலில் மட்டுமே அது வனப்பகுதியாக உள்ளது. இதுதவிர அரசு தரிசு நிலங்களும் உள்ளன.

எனவே, மேற்கண்ட 1533 ஏக்கர் அளவுள்ள அந்த இடம் கையகப்படுத்தப்பட்டால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும். எனவே ஒட்டப்பிடாரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் சிப்காட் வளாகத்திற்காக தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த விவசாயிகளின் நிலங்களைக் கையகப்படுத்தும் முயற்சியைக் கைவிட வேண்டும்.

வியாழன், 12 நவம்பர், 2009

சிறுதாவூரில் மெத்தனம் காட்டுவது யார்? - முதலமைச்சருக்கு சிபிஎம் கேள்வி

காவேரிராஜபுரத்தில் நீதிபதி தினகரன் ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்டு, நிலமற்ற தலித் மக்களுக்கு வழங்கும் வகையில், நிலமீட்புப் போராட்டத்தை நடத்தப் போவதாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்திருந்த நிலையில், அப்போராட்டத்தை ஒடுக்க முதல்வர் கருணாநிதி தலைமையிலான அரசும் காவல்துறையும் தீவிரமாக இயங்கின. இப்போராட்டத்தை முதல்வர் கருணாநிதியும் தனக்கே உரிய பாணியில் விமர்சித்தார்.

அதற்குப் பதிலளித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என். வரதராஜன் (9.11.2009) அன்று வெளியிட்ட அறிக்கை வருமாறு:

காவேரிராஜபுரத்தில் நீதிபதி பி.டி.தினகரன் ஆக்கிரமிப்பில் இருந்த அரசுப் புறம்போக்கு நிலங்களை மீட்டு தலித் மக்களுக்கு வழங்கும் போராட்டம் தொடர்பாக முதலமைச்சர் கலைஞர் கரு ணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறுதாவூர் நிலம் பற்றி தற்போது மார்க்சிஸ்ட் கட்சியினர் அவசரம் காட்டவில்லை” என்று குற்றஞ்சாட்டியுள்ளது, எந்த விதத்திலும் பொருத்தமானது அல்ல.

“தற்போது” என்று முதலமைச்சர் கூறியுள்ளது அஇஅதிமுகவுடன் மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி உடன்பாடு கொண்ட பின்னணியைக் குறிப்பதாக உள்ளது. அவ்வாறு உடன்பாடு கொண்டு தேர்தல் களத்தில் நின்றிருந்த போதே திமுக தரப்பில் சிறுதாகூர் பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “சிறுதாவூர் நிலப் பிரச்சனையில் மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைபாடு எவ்வித மாற்றமும் இன்றித் தொடர் கிறது” என்று தெளிவுபடுத்தப் பட்டது. அதே காலகட்டத்தில் இப்பிரச்சனை தொடர்பான விசா ரணை ஆணையத்தின் முன்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் நேரடி சாட்சியம் அளிக்கப்பட்டது மட்டுமின்றி, கட்சியின் சார்பில் வழக்கறிஞர் மூலமான வாதங்களும் முன்வைக்கப்பட்டு விட்டன.

இப்பிரச்சனையில் இறுதி அறிக்கை தர வேண்டிய விசாரணை ஆணையத் தலைவர் நீதிபதி சிவசுப்பிரமணியன், வேறொரு விசார ணையில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதால் சிறுதாவூர் பிரச்சனை கிடப்பில் போடப்பட்டுள்ளதே தவிர, மார்க்சிஸ்ட் கட்சி அவசரம் காட்டாததால் அல்ல.

மேற்குவங்கத்துக்கு ஒரு சட்டம், தமிழ்நாட்டுக்கு ஒரு சட்டம் என்று மார்க்சிஸ்ட் கட்சியினர் செயல்படக்கூடாது என்றும் முதல மைச்சர் கூறியுள்ளார். நிலச்சீர்திருத்தச் சட்டம் மேற்குவங்கத்தில் எவ்வளவு சிறப்பாக அமல்படுத்தப்பட் டுள்ளது என்பதை, மண்டல் கமிஷன் அறிக்கையே பதிவு செய்துள்ளதையும், தமிழ்நாட்டில் நிலச்சீர்திருத்தச் சட்டம், மறைந்த அண்ணா அவர்களாலேயே ‘உச்சவரம்பா, மிச்ச வரம்பா’ என்று ஏகடியம் பேசப்பட்ட நிலைமாற வில்லை என்பதையும் மார்க்சிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விழைகிறது.

காவேரிராஜபுரத்தைப் பொறுத்தவரை, நீதிபதி தினகரன் தரப் பிலேயே ஆக்கிரமிப்பு வேலிகள் அகற்றப்பட்டுவிட்ட நிலையில், அந்நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு நீதிமன் றத் தடை யாணை ஏதுமற்ற பின்னணியில், தமிழக அரசு மெத்தனம் காட்டக் கூடாது என்பதற்காக அமைதியான முறையில் நீலமீட்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைபாட்டில் எந்த முரண்பாடும் இல்லை. ஆக்கிரமிப்பு நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கட்சி ஒத்துழைப்பை நல்கும். நிலமீட்பு போராட்டத்தை சட்டம் - ஒழுங்குப் பிரச்சனையாக சித்தரிக்க முதலமைச்சர் முற்பட வேண்டாம் எனவும் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

இவ்வாறு என்.வரதராஜன் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

தலித்துகள் மீது வெறித் தாக்குதல்: நம்பிவயல் கிராமத்தில் அராஜகம்

நம்பிவயல் கிராமத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் மீது நடத்தப்பட்ட கொலை வெறித் தாக்குதலையும், காவல்துறையினரின் அலட்சியத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், நம்பிவயல் கிராமத்தில் ஏர்டெல் நிறுவனம் ஒன்று, புகழேந்தி என்பவர் இடத்தில் டவர் அமைத்துள்ளது. கடந்த 21.10.2009 அன்று இந்த டவர் பராமரிப்பு பணிக்காக வேப்பங்குளம் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் அங்கு சென்று பணி முடித்து திரும்பியிருக்கிறார்.

அவரை புகழேந்தி என்பவர் வழிமறித்து நீ எந்த ஊர்? உன்னுடைய சாதி என்ன? எனக்கு ஏன், வணக்கம் செய்யவில்லை? என்று கேட்டு தகராறு செய்துள்ளார். விஜயக்குமார் தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை தெரிந்து கொண்டு சாதியைச் சொல்லி இழிவாக பேசி புகழேந்தி அடித்திருக்கிறார். கீழே விழுந்தவரை உயிர்நிலை யில் மிதித்தும் இருக்கிறார். இதனால் அவர் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளார்.

இவரை மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல கூட புகழேந்திக்கு பயந்து யாரும் முன்வரவில்லை. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குபேந்திரன் என்பவர் பட்டுக்கோட்டை மருத்துவமனையில் கொண்டு போய்ச் சேர்த்திருக்கிறார். புகழேந்தி மீது புகார் கொடுக்கப்பட்டும் காவல் துறை எந்தவித நடவடிக் கையும் எடுக்கவில்லை.

இதனைக் கண்டித்து சில ஜனநாயக அமைப்புகள் இணைந்து பட்டுக்கோட்டையில் 2.11.2009 அன்று தர்ணாப்போராட்டத்தை நடத்தியிருக்கின்றன. இதற்கு அடுத்த நாள் நம்பி வயல் கிராமத்தில் குபேந்தி ரன் வீடு, தங்கத்துரை டி.வி. மெக்கானிக் கடை ஆகியவை புகழேந்தி மற்றும் அவரின் உறவினர்களால் தாக்கப்பட்டு சொத்துக்கள் சூறையாடப்பட்டுள்ளது. மேலும் பக்கத்தில் உள்ள இப்ராகிம் என்பவரின் டீ கடையையும் தாக்கியுள்ளார்கள்.

இதனால், ஆத்திரமுற்ற பொதுமக்கள் சாலை மறியல் செய்திருக்கின்றனர். ஆனாலும் போலீசார் குற்றவாளிகளை கைது செய்ய மறுக்கின்றனர். பட்டுக்கோட்டை கோட்டாட்சியர், நேரில்சென்று விசாரணை மேற்கொண்டார்.

அதன் அடிப்படையில் குற்றவாளிகளில் கதிரேசன், பிரசாத் என்ற இருவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் முதல் குற்றவாளி புகழேந்தி கைது செய்யப்படவில்லை. இது அப்பகுதி தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு குற்றச் செயல்களுக்கு காரணகர்த்தாவான புகழேந்தியை காவல்துறை கைது செய்ய ஏன் தயக்கம் காட்டுகிறது என்பது புதிராக உள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பியுள்ளது. இச்செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிப்பதுடன், தஞ்சை மாவட்ட காவல் துறையினர் குற்றவாளி களை கைது செய்து சட்டப் படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்; பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் கூறியுள்ளார்.



நம்பிவயல் தாக்குதல்
சிபிஎம் ஆர்ப்பாட்டம்

தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்திய சாதிவெறியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், பாதிப்புக்குள்ளானவர்களுக்கு வன் கொடுமை பாதிப்பு அரசு நிதி வழங்கிடவும் வற்புறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம்.செல்வம் தலைமை தாங்கினார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் சின்னை.பாண்டியன் கண்டன உரையாற்றினார். கோரிக்கைகளை வலியுறுத்தி மதுக்கூர் ஒன்றியச் செயலாளர் எஸ்.சாம்பசிவம், திருவோணம் ஒன்றியச் செயலாளர் கே.ராமசாமி, நகரச் செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஏ. கோவிந்தசாமி, எம்.அய்யாவு, விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் ஏ.மூக்கையன், வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் ஆர்.வாசு, கிளைச் செயலாளர் எஸ்.ஏங்கெல்ஸ் மற்றும் நம்பிவயல் கிராம மக்கள் கட்சி ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



தீண்டாமை ஒழிப்பு முன்னணி
கண்டனம்

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தஞ்சை மாவட்ட அமைப்பாளர் சின்னை. பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

குற்றவாளி புகழேந்தியை காவல்துறையினர் கைது செய்யவில்லை. ஆனால் புகழேந்தி போலீஸ் அதிகாரிகளுக்கு நெருக்க மாக காட்டிக் கொள்வதாகவும் சொல்லப்படுகிறது. இதனால்தான் வன்கொடுமைக் குற்றம் புரிந்தும், வீடு கடைகளை அடித்து நொறுக்கியதற்கும் காரணமான புகழேந்தியை காவல்துறை கைது செய்ய மறுக்கிறதா? சாதிய ஆதிக்க சக்திகளுக்கு துணைபோகிறதா?

பட்டுக்கோட்டை பகுதியில் காவல்துறையின் நடவடிக்கை வன்கொடுமை தாக்குதலுக்கு உள்ளாகும் தலித் மக்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை. மதுக்கூர் ஒன்றியம் சொக்கனாவூர், பட்டுக்கோட்டை ஒன்றியம் தாமரங்கோட்டையிலும் தலித்துக்களை சாதி ஆதிக்க வெறியர் தாக்கிய போதும் காவல்துறை அவர்களுக்கு ஆதரவாக செயல் பட்டது. தொடர்ந்து சாதி ஆதிக்க வெறியருக்கு ஆதரவாக செயல்படும் பட்டுக்கோட்டை சரக காவல்துறையை தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தஞ்சை மாவட்டக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

இதில் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது என்று கூறியுள்ளார்.

சாதிவெறியில் நடந்த கவுரவக் கொலை

பழநி சாலைப்புதூர் அழகாபுரியில் வசித்து வந்தவர் தலித் சமூகத்தைச் சேர்ந்த அம்மாபட்டியன் மகன் பத்ரகாளி (வயது 25). பத்ரகாளியும், பழநி சண்முகாநதி பகுதியைச் சேர்ந்த கள்ளர் சமூகத்தவரான சீனிவாசனின் (வயது 65) மகள் ஸ்ரீபிரியா (வயது 21)-வும் வெவ்வேறு கல்லூரியில் பி.எட் பட்ட வகுப்பு படித்து வந்த நிலையில், பழநி அருகே அழகாபுரியில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் பயிற்சி ஆசிரியர்களாக கடந்த ஆண்டு வேலை செய்தனர். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இதற்கு ஸ்ரீபிரியா வீட்டினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 29-ம் தேதி பத்ரகாளியும், ஸ்ரீபிரியாவும் சேலத்தில் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர்.

இதையறிந்து பழநியில் இருந்த வீட்டைக் காலி செய்து தமது குடும்பத்தாருடன் திருச்சிக்குச் சென்றுவிட்ட சீனிவாசன், புதுமணத் தம்பதிகளை தானும் தனது உறவினர்கள் மூலமும் மிரட்டியுள்ளார்.

எனவே பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஸ்ரீபிரியா தமக்குப் பாதுகாப்புக் கோரி மனுக் கொடுத்திருந்தார். பாதுகாப்புக் கருதி உடுமலை அருகே மடத்துக்குளம் தேவேந்திரர் வீதியில் உள்ள பத்ரகாளியின் அக்கா ராணி வீட்டில் பத்ரகாளியும், ஸ்ரீபிரியாவும் தங்கியிருந்தனர்.

கடந்த 4-ம் தேதி சீனிவாசன், அவரது உறவினர்கள் ஆசைத்தம்பி என்கிற ராஜ்கண்ணன் (27), பண்ணாடி (30) ஆகியோர் மடத்துக்குளத்துக்கு வந்து ஸ்ரீபிரியாவைச் சந்தித்துள்ளனர். திருச்சியில் அம்மாவின் உடல் நிலை மிக மோசமாக இருப்பதால் நேரில் வந்து பார்த்துச் செல்லும்படி அவர்கள் அழைத்துள்ளனர்.

அப்போது பத்ரகாளி வெளியே சென்றிருந்தார். எனவே இவர்கள் அழைப்பதில் சந்தேகம் அடைந்த ஸ்ரீபிரியா நேரில் வர மறுத்ததுடன் வேண்டுமானால் செல்போனில் பேசுவதாகக் கூறியுள்ளார். இதைக் கேட்டு அவர்கள் திரும்பி சென்றுவிட்டனர்.

சிறிது நேரம் கழித்து அவர்கள் மீண்டும் வந்துள்ளனர். அங்கிருந்த ராணி மற்றும் பக்கத்து வீட்டுப் பெண் இருவரையும் பக்கத்தில் இருந்த அறையில் தள்ளி கதவைத் பூட்டிவிட்டு ஸ்ரீபிரியாவின் கழுத்து, மார்பு, அடிவயிறு பகுதியில் சரமாரியாகக் கத்தியால் குத்தினர். இதில் பலத்த காயமடைந்த ஸ்ரீபிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சாதி கவுரவத்தை மீறி தலித் இளைஞரை திருமணம் செய்வதா? என்ற ஆத்திரத்தில் இந்தக் கொ
லையைச் செய்து விட்டு மூவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

உடுமலை டிஎஸ்பி ராஜா தலைமையில் போலீசார் தீவிரமாகத் தேடி வியாழக்கிழமை ஸ்ரீபிரியாவின் தந்தை சீனிவாசன், ஆசைத்தம்பி, பண்ணாடி மூவரையும் கைது செய்தனர். இவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீபிரியாவின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்குப் பின் அவரது கணவர் பத்ரகாளி குடும்பத்தாரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

இதேபோன்று இப்பகுதியில் 'சாதி கௌரவத்தை' பாதுகாக்கிறோம் என்று கூறிக்கொண்டு, கடந்த 2 ஆண்டு காலத்தில் மட்டும் 7 'கவுரவ' கொலைகள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

தடையையும் மீறி நடந்த நிலமீட்புப் போராட்டம் - கி.வரதராசன் உள்பட 500 பேர் கைது


நீதிபதி பி.டி.தினகரன் சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ள அரசு புறம்போக்கு மற்றும் தரிசு நிலங் களை மீட்டு நிலமற்ற தலித் விவசாயத் தொழிலாளர்களுக்கும் ஏழைகளுக்கும் விநியோகம் செய்திட காவேரிராஜபுரத்தை நோக்கி சென்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர்கள் மற்றும் 200 பெண்கள் உட்பட 500 பேரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

இந்த ஒற்றைப் போராட்டத்தைத் தடுப்பதற்காக, திருவள்ளூர் மாவட்டம் முழுவதிற்குமே அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்தும், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தும், காவல் துறையினர் மற்றும் அரசின் அனைத்து கெடுபிடிகளையும், மிரட்டல்களையும் மீறி இந்த போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. காவேரிராஜபுரம் கிராமத்தை காவல்துறை முழுமையாக ஆக்கிரமித்து முற்றுகையிட்டிருந்தும் தலித் மக்கள் திரளாக இந்த போராட்டத்தில் பங்கேற்று சிறைசென்றனர்.

போலீசாரின் தடை உத்தரவையும் மீறி, திட்டமிட்டபடி, தமிழ்நாடு விவசாயிகள் திங்களன்று (நவ. 9- 2009) காவேரி ராஜபுரத்தை நோக்கி ஆயிரக்கணக்கானோர் ஊர்வலமாக சென்றனர். அவர்களை காவல்துறையினர் திருவள்ளூர் காமராஜர் சிலை அருகில் தடுத்து நிறுத்தினர். இதனால் போராட்டக் குழுவினர் அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் ஒன்றரை மணி நேரம் இம்மறியல் போராட்டம் நீடித்தது. மீண்டும் அங்கிருந்து காவேரிராஜபுரத்தை நோக்கி புறப்பட முயற்சித்த போது காவல்துறை ஐ.ஜி, டி.ஐ.ஜி ஆகியோர் தலைமையில் கூடியிருந்த போலீசார் வலுக்கட்டாயமாக அனைவரையும் கைது செய்தனர்.

இதில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கி.வரதராசன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் உ.வாசுகி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் கே.முகமது அலி, மாநிலப் பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பொருளாளர் பெ.சண்முகம், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கோ.வீரையன், பொதுச்செயலா ளர் எஸ்.திருநாவுக்கரசு, பொருளாளர் ஜி.மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் கே.செல்வராஜ், மாநிலக்குழு உறுப்பினர் ப.சுந்தரராசன், விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் எஸ்.எம். அனீப், பி.துளசி நாராயணன், கே. ஆறுமுகம், பி.கதிர்வேல், அ.து.கோதண்டன், வி.எம்.ராமன் (காவேரிராஜபுரம்) உள்ளிட்ட 500 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதில் சுமார் 200 பேர் பெண்களாவர். பெண்கள் கை குழந்தைகளுடன் கைதானது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, மறியல் போராட்டத்தின் போது உரையாற்றிய தலைவர்கள், நீதிபதி பி.டி.தினகரன் சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ள நிலங்களை மாவட்ட நிர்வாகமும், முதலமைச்சரும் உடனடியாக மீட் டெடுக்க வேண்டும் என்றும், அந்த நிலங்களை இரண்டு ஏக்கர் இலவச நிலம் வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

நீதிபதியால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலங்களை மீட்டெடுக்கும் வரை விவசாயிகள் சங்கத்தின் போராட்டம் ஓயாது என்றும், எத்தகைய மிரட்டல்களையும் செங்கொடி இயக்கம் சந்திக்கும் என்றும், அடக்கு முறைக்கு அஞ்சாது என்றும் எச்சரித்தனர்.

திங்கள், 9 நவம்பர், 2009

நிலமோசடி நீதிபதிக்கு ஆதரவாக தமிழக அரசு - திருவள்ளூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு - பெ.சண்முகம் - தலைவர்கள் கைது

திருவள்ளூர் மாவட்டம் காவேரிராஜபுரம் கிராமத் தில், கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி.தின கரன் ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்க வலியு றுத்தி தமிழ்நாடு விவசாயி கள் சங்கமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தொடர்ச்சியான போராட் டங்களை நடத்தி வருகின்ற னர். இதுதொடர்பான நீதி விசாரணையை நியாயமாக நடத்த தலையிடுமாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கும் புகார் அனுப்பப்பட்டுள் ளது. எனினும் தமிழக அர சும், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமும் ஆக்கிரமிக் கப்பட்ட நிலத்தை மீட்கும் நடவடிக்கைகளை மேற் கொள்ளாமல், இதை எதிர்த்து போராடுகிற விவசாயிகளை ஒடுக்கும் முயற்சியிலேயே ஈடுபட்டுள்ளது.

இந்தப் பின்னணியில், காவேரிராஜபுரம் கிராமத் தில் நீதிபதி தினகரனால் சட்டவிரோதமாக ஆக் கிரமிக்கப்பட்டுள்ள அரசு புறம்போக்கு மற்றும் தரிசு நிலங்களை மீட்டு, தலித் மற் றும் நிலமற்ற ஏழைகளுக்கு வழங்கும் போராட்டத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்தது.

2009 நவம்பர் 9 -ம் தேதி, விவசாயிகள் சங்க பொதுச்செயலாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான கி.வரதராசன் தலைமையில் இப்போராட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்தப் போராட்டத்தை சீர்குலைக்க திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் ஞாயிறன்று காலை முதலே அராஜக நடவடிக்கைகளை துவக்கி விட்டன. கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து ஏராளமான போலீஸ் பட்டாளத்தை திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் குவித்துள்ளது. மேலும், மாவட்டம் முழு வதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவேரிராஜபுரம் கிராமத்திலும், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அக்கிராமத்தைச் சேர்ந்த தலித் மக்கள் வீட்டை விட்டு வர முடியாத அளவிற்கு வீட்டுக்குள்ளேயே சிறை வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், ஞாயிறன்று மாலை 5 மணியளவில் போராட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அழைப்பின் பேரில் அவரது அலுவலகத்திற்குச் சென்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொருளாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான பெ.சண்முகம், கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.செல்வராஜ், மாநிலக்குழு உறுப்பினர் ப.சுந்தரராசன், மாவட்டத் தலைவர்கள் கே.துளசி நாராயணன், கே.ராஜேந்திரன் ஆகியோரை காவல் துறையினர் அராஜகமாக கைது செய்தனர்.

எனினும், போராட்டத்தை முடக்க அரசு மேற்கொள்ளும் இத்தகைய கைது நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதாகவும், அரசு எத்தகைய மிரட்ட லில் ஈடுபட்டாலும், அனைத் தையும் மீறி திங்களன்று காவேரிராஜபுரம் கிராமத்தில் நிலமீட்பு போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்தார்.

மேலும், சட்டவிரோ தமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை மீட்டு முதலமைச்சரின் இரண்டு ஏக்கர் இலவச நிலம் வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கிட நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டும் தமிழக அரசு, சட்டவிரோத நில ஆக்கிரமிப்பை பாதுகாத்திட இத்தனை சுறுசுறுப்புடன் செயல்படுவது ஏன் என்றும் தனது அறிக்கையில் அவர் கேள்வி எழுப்பினார்.

காவேரிராஜபுரத்தில் நிலமீட்பு போராட்டத்தை முடக்க விவசாயிகள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்களை அராஜகமாக கைது செய்துள்ள காவல்துறையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வன்மையாகக் கண்டித்தது. கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

காவேரிராஜபுரம் கிராமத்தில் நீதிபதி பி.டி.தினகரன் அவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு புறம்போக்கு தரிசு நிலங்களை மீட்டு தலித் மற்றும் நிலமற்ற ஏழைகளுக்கு வழங்கிட வற்புறுத்தி திங்களன்று கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், விவசாயிகள் சங்க அகில இந்திய பொதுச் செயலாளருமான கி.வரதராசன் தலைமையில் போராட்டம் நடைபெற இருந்தது.

இந்நிலையில், போராட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வருமாறு திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விடுத்த அழைப்பின் பேரில் கண்காணிப்பாளரின் அலுவலகத்திற்கு ஞாயிறன்று மாலை 5 மணியளவில் சென்ற பெ.சண்முகம் உள்ளிட்ட தலைவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து, ஏராளமான போலீஸ் படையைக் குவித்து பொதுமக்களையும், காவேரிராஜபுரம் மக்களையும் மிரட்டி வருகின்றனர்.

பேச்சுவார்த்தைக்கு என அழைத்து விட்டு, தலைவர்களை கைது செய்து சிறையில் அடைத்திருப்பது காவல்துறையின் கையாலாகாத்தனத்திற்கு எடுத்துக் காட்டாகும். தமிழக அரசின் இத்தகைய அராஜகமான போக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாகக் கண் டிக்கிறது.

இத்தகைய அராஜகப் போக்கை கைவிட்டு, கைது செய்துள்ள தலைவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும், மேலும், 144 தடை உத்தரவையும், குவிக்கப்பட்டுள்ள போலீசையும் திரும்பப் பெற வேண்டுமெனவும், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை உறுதி செய்திட வேண்டுமெனவும், நீதிபதியால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை மீட்டு தலித் மற்றும் நிலமற்றவர்களுக்கு வழங்கிட துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட வற்புறுத்தி கண்டனக் குரல் எழுப்பிட வேண்டுமென கட்சி அமைப்பு களையும், ஜனநாயக அமைப்புகளையும் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது அறிக்கையில் கூறியது.

சனி, 7 நவம்பர், 2009

ஊழலை மறைக்க சாதியை முன்நிறுத்துவதா?

தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் பேரணியையொட்டி, மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் அக்டோபர் 27ந் தேதி தமிழக முதலமைச்சரைச் சந்தித்தபோது, இதர பல்வேறு பிரச்சனைகளு டன், காவேரிராஜபுரத்தில் நீதிபதி பி.டி.தினகரன் ஆக்கிரமித்துள்ள நிலம் குறித்தும் அவரது கவனத் திற்குக் கொண்டுவந்தனர்.

விவ சாயிகள் சங்கத்தின் அகில இந் திய பொதுச் செயலாளர் கே.வரத ராசன், இந்தப் பிரச்சனையில் உச்சநீதிமன்றம் தமிழக அரசிடம் அறிக்கை கேட்டிருப்பதாகப் பத்திரிகைகளில் செய்தி வந் துள்ளதைக் குறிப்பிட்டு தமிழக அரசு அறிக்கை அனுப்பும்போது திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் அறிக்கைக்கு மாறாக அது அமைந்துவிடக்கூடாது என்று வலியுறுத்தினார்.

முதல்வர் இந்தக் கோரிக்கைக்கு மாறான எந்தக் கருத்தையும் தெரிவிக்க வில்லை.

திருவள்ளூர் மாவட்ட ஆட் சியர் உச்சநீதிமன்றத்திற்கு அனுப் பியுள்ள அறிக்கை அரசு நிலங் கள் நீதிபதியால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளதை உறுதி செய்துள்ளது. தமிழக அரசும் இதையே உறுதி செய்யுமானால் அது தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நில ஆக்கிர மிப்பு குறித்து எழுப்பியுள்ள புகார்களின் நம்பகத்தன்மைக்கு வலு சேர்ப்பதாக அமையும்.

அக்டோபர் 31ம் தேதி முர சொலியில், வெளியிடப்பட்டுள்ள படங்களும், அவற்றுக்குக் கீழே பிரசுரிக்கப்பட்டுள்ள பாரதி யாரின் கவிதை வரிகளும், முன் னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை இடித்துரைப்பதோடு மட்டுமின்றி, நீதிபதி தினகரனின் மோசடியை நியாயப்படுத்தும் விதமாகத் தோற்றமளித்துள்ளன. அதுமட்டுமல்லாமல், நிலமோசடி, அரசு நிலம் ஆக்கிரமிப்பு, உச்ச வரம்புக்கு மேல் நிலம்குவிப்பு என்ற மையப்பிரச்சனையை பின்னுக்குத்தள்ளி, சாதிப் பிரச் சனையை முன்நிறுத்துவதற்கு இது இட்டுச் செல்லும்.

நவம்பர் 2ந் தேதி முரசொலி யில், சின்னக்குத்தூசியின் விமர் சனக் கட்டுரையில் எடுத்தாண் டுள்ள உதாரணங்களும் இந்தக் கருத்தை உறுதிப்படுத்தும் விதத் தில் உள்ளன. படங்களும், பாரதி யின் பாடல் வரிகளும், சின்னக் குத்தூசியின் குத்தலான விமர்சன மும் முதல்வரின் கவனத்திற்கு வராமல் இருக்க வாய்ப்பில்லை.

முரசொலியில் வந்த படமும் - பாடல் வரிகளும் பல வண்ணங் களில் பெரிய சுவரொட்டிகளாக அச்சிடப்பட்டு திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் ‘நன்றி முர சொலி’ எனப்போட்டு ஒட்டப்பட் டுள்ளது. இவை அனைத்தையும் தொகுத்துப்பார்த்தால், தமிழக அரசு நீதிபதி தினகரனின் நில ஆக்கிரமிப்புப் பிரச்சனையில், உண்மைகளின் அடிப்படையில் நியாயமான நிலைபாடு எடுத்துச் செயல்படுமா?, என்ற ஐயப்பாட் டைக் கிளப்புகிறது.

ஜெயலலிதா சட்டவிரோத மாக அரசு நிலத்தை ஆக்கிரமித்து பங்களா கட்டியுள்ளார் என்றால் நடவடிக்கை எடுக்க வேண்டியது மாநில அரசுதானே? அத்துமீறி கட்டப்பட்ட பங்களாவை இடித் துத் தரைமட்டமாக்குவதை யார் தடுத்தது? அரசின் மவுனத்திற்கு சாதியை இழுப்பது ஏன்?

ஒரு தலித் உச்சநீதிமன்ற நீதிபதி ஆவ தைத் தடுக்கவே இந்தப் பிரச்சனை எழுப்பப்படுகிறது என்ற குற்றச் சாட்டு ஜமுக்காளத்தில் வடிகட் டின பொய்யாகும். தினகரனை விட்டால் உச்சநீதிமன்ற நீதிபதி ஆகும் தகுதி படைத்த தலித் சமுதாயத்தைச் சேர்ந்த நீதிபதி வேறு யாருமே இல்லையா? அவ் வளவுக்குத் தகுதி குறைவாகவா, ஆள் பற்றாக்குறையாகவா, இன்று தலித் சமூகம் இருக்கிறது.

மற்றவர்களின் குற்றத்தைப் பொதுமைப்படுத்துவதன் மூல மாகத் தான் செய்த குற்றத்தை நியா யப்படுத்த முயற்சிப்பது ஒரு அர சியல் போக்காக ஆகிவிட்டது.

மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டு வெளிவந்த போது, பிஜேபி ஆட் சியில் இதைவிட அதிகமாக ஊழல் நடந்ததென்றும், ராசா தலித் என்பதால் பெரிதுபடுத்தப்படு கிறது என்றும் கூறப்படுகிறது. இத்தகைய ஊழல் மோசடிகளை செய்து மாட்டிக்கொண்டால் தப் பித்துக்கொள்வதற்கான தகுதியாக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்ததை மாற்றுவது நியாயமா காது.

ஆள் பார்த்து, சாதி பார்த்து, வேண்டியவர், வேண்டாதவர் என்று பார்த்தெல்லாம் அரசியல் நிலைபாடு எடுப்பது கம்யூனிஸ்ட் டுகளுக்கு பழக்கமில்லை.

காவேரிராஜபுரத்தில் வசிக்கும் மக்களில் 470 பேர் மாவட்ட ஆட் சித் தலைவரிடம் நீதிபதி தின கரன் ஆக்கிரமித்துள்ள அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டுத் தங்களுக்கு வழங்க வேண்டு மென்று மனுக் கொடுத்துள்ளனர். 470 பேரில் 450 பேர் தாழ்த்தப் பட்ட மக்களும் - பழங்குடியின மக்களும்தான். பல நூறு தலித் துகள் நிலமில்லாமல் அன்றாடங் காய்ச்சிகளாக அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் போது, ஒரு வசதி படைத்த தலித் ஓராயிரம் ஏக்கர் நிலத்தை வளைத்துக் கொள்வது நியாயமா? இதுதான் சமூக நீதியா?

சிறுதாவூரில் தலித் மக்க ளுக்கு அரசு வழங்கிய நிலத்தை மோசடியாக அபகரித்ததையும் அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்து, விசாரணைக் கமிஷன் அமைக்க வைத்ததும் மார்க் சிஸ்ட் கட்சி தானே? மூன்று மாதத் தில் விசாரணை முடித்து அறிக் கை அளிக்கப்படும் என்று அறி வித்து, மூன்று ஆண்டுகளாகியும் கிடப்பிலே போடப்பட்டிருக் கிறதே? கமி ஷன் அறிக்கையைப் பெற அரசு முயற்சி எடுக்க வேண்டாமா?

எனவே, பிரச்சனையைத் திசை திருப்பும் தவறான போக் கைக் கைவிட்டு, நிலத்தை வளைத் திருப்பது தண்டச் சோறுண்ணும் குலமானாலும், வர்க்கமானாலும், சட்டத்தையும் நீதியையும் மைய மாக வைத்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே நமது எதிர்பார்ப்பு!

நிலத்தையே நம்பி வாழும் விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் நிலம் கிடைக்க அனைவரும் சேர்ந்து முயற்சிப்போம். நவம்பர் 9ம் தேதி நீதிபதி தினகரன் வளைத்து வைத்துள்ள நிலத்தை மீட்டு நிலமற்றவர்களுக்கு விநி யோகிப்பதற்காக மாபெரும் நில மீட்சி இயக்கம் நடைபெற இருக்கிறது. இதற்கு முன்னதாக அங்குள்ள தலித் ஏழைகளின் முகத்தில் சிரிப்பைக் கொணர அரசு செயல்படட்டும்.
- பெ. சண்முகம்,
பொதுச்செயலாளர்-
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம்,
தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர்-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

செட்டிபுலம் சாதி வெறியர்களின் முன்ஜாமீன் மனுவை ஏற்கக் கூடாது

சென்னை, நவ. 4 -
செட்டிப்புலத்தில் தலித் மக்களுக்கு எதிராகவும், அரசு நிர்வாகத்திற்கு எதிராகவும் வன்முறை வெறியாட்டம் நடத்தியோரை தண்டனையிலிருந்து தப்பவிடக் கூடாது என்றும், அவர்கள் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்துள்ள மனுவை ஏற்கக் கூடாது என்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி கூறியது.

இதுதொடர்பாக தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத் உயர்நீதிமன்றத்தில் நவம்பர் 3-ம் தேதி மனு ஒன்றையும் தாக்கல் செய்தார்.

செட்டிப்புலம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் தலித் மக்களை 70 ஆண்டுகளுக்கும் மேலாக நுழைய விடாமல், அங்குள்ள சாதி ஆதிக்க வெறியர்கள் தடுத்து வந்தனர். இந்த தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக கடந்த செப்டம்பர் 30-ம் தேதி கோயில் நுழைவுப் போராட்டத்தை நடத்துவதென தீண்டாமை ஒழிப்பு முன்னணி அறிவித்தது.

அதன்படி நாகப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வீ.மாரிமுத்து, முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத் ஆகியோர் தலைமையில் தலித் மக்கள் கோயில் நுழைவுக்காக சென்ற போது, சாதி ஆதிக்க வெறியர்கள் கோயிலின் கதவை பூட்டிவிட்டுச் சென்று விட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஆகியோர் சாதி வெறியர்கள் போட்ட பூட்டிற்கு சீல் வைத்தனர்.

மேலும், கோயில் நுழைவு தொடர்பாக அக்டோபர் 10-ம் தேதி அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தனர். அதில், தலித் மக்கள் கோயிலுக்குள் செல்வதை எதிர்க்க மாட்டோம் என்று சாதி ஆதிக்க வெறியர்கள் ஒப்புக்கொள்ளவே, வி.மாரிமுத்து எம்எல்ஏ தலைமையில் அக்டோபர் 14-ம் தேதி தலித் மக்கள் கோயிலுக்குள் சென்று வழிபாடு நடத்துவதென அறிவிக்கப்பட்டது.

குறித்தபடி 14-ம் தேதி தலித் மக்கள் கோயிலுக்குள் செல்ல மாரிமுத்து எம்எல்ஏ தலைமையில் ஊர்வலமாக வந்த போது, பெருங்கூட்டமாக எதிரே வந்த கலகக்காரர்கள், பிரச்சனையில் ஈடுபட்டனர். மாவட்ட நிர்வாகத்தின் தரப்பில் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கோட்டாட்சியரே தலித் மக்களை கோயிலுக்குள் அழைத்துச் செல்வதென முடிவுசெய்து, அதன்படி தலித் மக்களை அழைத்துச் சென்றபோது, திடீரென 300-க்கும் மேற்பட்ட சாதி ஆதிக்க வெறியர்கள், அதிகாரிகள், தலித் மக்கள் மற்றும் போலீசார் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். இரும்புக் கம்பிகள், உருட்டுக் கட்டைகள், கற்கள் போன்றவற்றால் கடுமையாகத் தாக்கினர். இதில், ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். கோட்டாட்சியரின் வாகன ஓட்டுநர் பலத்த காயம் அடைந்தார். போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடும் அளவிற்கு நிலைமை போனது.

இந்த வன்முறை தொடர்பாக பெயர் தெரிந்த 15 பேர் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் மீது, கிராம நிர்வாக அலுவலரின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டம் 147, 148, 188, 324, 341, 332, 153(ய)(ஐஐ) மற்றும் பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் பிரிவு 3(ஐ) அத்துடன் வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவு 3(ஐ)(ஓஐ) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே வழக்கில் தொடர்புடையோரில் சந்தோசம், ஜெயபால், பால்ராஜ், முருகானந்தம், மகேந்திரன், ஜெகதீசன், சிவகுமார், கந்தசாமி, செல்வராஜ், நாகராஜ் ஆகிய 10 பேர் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 482-ன் கீழ் மனு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் அதைத் தொடர்ந்து நாங்கள் நீதிமன்றத்தில் சரணடையும் அன்றே தங்களின் மனுவை கருணையோடு பரிசீலித்து ஜாமீன் வழங்குவது தொடர்பாக அன்றே தீர்ப்பு வழங்க தஞ்சாவூர் முதன்மை அமர்பு நீதிபதிக்கு (தனி நீதிமன்றம்) உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தனர்.

அக்டோபர் 26-ம் தேதி விசாரணைக்கு வந்த இந்த மனு மீது நவம்பர் 3-ம் தேதி மீண்டும் விசாரணை நடைபெற்றது. நீதிபதி சி.டி.செல்வம் மனுவை விசாரித்தார்.

அப்போது தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதில், குற்றம் சாட்டப்பட்டுள்ளோரின் மனுக்கள் நிலை நிற்கத்தக்கதல்ல என்றும்; அவை நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு விரோதமானது; எனவே அவற்றை ஏற்கக் கூடாது என்று கூறப்பட்டிருந்தது. மேலும் இந்த வழக்கில் தனது தரப்பையும் கேட்டு நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என்று சம்பத் குறிப்பிட்டிருந்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் ஆஜராகி வாதாடினார்.

அதைத்தொடர்ந்து இவ்வழக்கை நவம்பர் 10-ம் தேதிக்கு தள்ளிவைப்பதாக கூறிய நீதிபதி, வழக்கு தொடர்பாக மூத்த வழக்கறிஞர் வி.கோபிநாத், நீதிமன்றத்திற்கு உதவுமாறும் உத்தரவிட்டார்.

வியாழன், 5 நவம்பர், 2009

தலித் மக்களுக்கான மயானப் பாதை திறப்பு: பிணத்துடன் 2 மணி நேரம் நடந்த போராட்டம்

நாகப்பட்டினம் மாவட் டத்தில் தலித் சமூகத்திற் கான மயானப் பாதை திடீ ரென்று மறைக்கப்பட்டது. 2 மணி நேரத்திற்கும் மேலாக பிணத்துடன் போராட்டம் நடத்தியதை அடுத்து அதி காரிகள் மூலம் பாதை மீண்டும் திறக்கப்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் பஞ்சநதிக்குளம் கிழக்கு ஊராட்சியைச் சேர்ந்த 102 வயதான குப்பான் என்னும் தலித் சமூகத்தைச் சேர்ந்த வர் மரணமடைந்தார். இவ ரது உடலை மயானத்திற்கு கொண்டு செல்லும்போது, மயானத்திற்கான பாதை சிவப்பிரகாசம் என்பவரால் அடைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து பாதை அடைக்கப்பட்ட இடத்தி லேயே பிணத்தை வைத்து போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் கோவை சுப்பிரமணியம், மாவட்டக் குழு உறுப்பினர் வி.அம்பிகாபதி, ஒன்றியக் குழு உறுப்பினர் செந்தில் குமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.

தகவல் அறிந்த டிஆர்ஓ அண்ணாத்துரை, ஆர்டிஓ ராnஜந்திரன், டிஎஸ்பி சந் திரசேகரன், தாசில்தார் கருணாகரன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத் திற்கு நேரில் வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். பின் னர் அடைக்கப்பட்ட பாதை மீண்டும் திறக்கப்பட்டது.

இப்பிரச்சனை மீண்டும் ஏற்படாத வகையில் ஆதி திராவிட நலத்துறையின் மூலம் மயானத்திற்கு சாலை அமைத்துத் தரப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.


நாகை மாவட்டத்தில் மூன்றாவது வெற்றி

நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் வாட்டாக்குடியில் தலித் மக்களுக்கென கட்டப் பட்டு, சாதி ஆதிக்க வெறி யர்களால் இடிக்கப்பட்ட மயானம் மீண்டும் கட்டப் பட்டு பொது மயானமாக ஏற்க வைக்கப்பட்டது செட்டிப்புலத்தில் தலித் மக்களின் ஆலய நுழைவு உறுதி செய்யப்பட்டது. இப்போது பஞ்சநதிக் குளத் தில் தலித் மக்களின் மயா னத்திற்கு பாதை திறக்கப்பட் டது என மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய தொடர் போராட்டத்திற்கு மும் முனை வெற்றி கிடைத்துள் ளது.

சாதி ஆதிக்க வெறியில் இது ஒரு விநோதம்!

அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடியைச் சேர்ந்த அருந்ததியர் சரவணன். இவர் பந்தல் குடி யில் உள்ள கடை ஒன்றில் குடிப்பதற்கு தண் ணீர் பாக்கெட் வாங்கியுள் ளார். அதை குடித்துவிட்டு சாலையில் போட்டுள்ளார்.

அப்போது அந்த வழி யாக வந்த வாகனம் ஒன்று அந்த பாக்கெட் மீது ஏறிய தும் சாலையில் சென்ற ஒருவர் மீது பாக்கெட்டில் இருந்த தண்ணீர் துளிகள் தெறித்துள்ளன.

அவர் அக்கிராமத்தைச் சேர்ந்த ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர் ஆவார். தலித் அருந்ததிய இளைஞர் குடித் துப்போட்ட பாக்கெட்டி லிருந்து தன்மீது தண்ணீர் தெறிப்பதா என்று ஆத்திர மடைந்த அவர் சரவண னை அடிக்க முயன்றார். அப்போது அருகில் இருந்த வர்கள் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள் ளனர்.

இந்நிலையில் தீபாவளி யன்று மாலை ஆதிக்க சமூ கத்தைச் சேர்ந்த 4 பேர் தலித் மக்கள் வசிக்கும் பகுதியில் வந்து சரவணன் உட்பட பலர் மீது தாக்குதல் நடத் தினர்.

எனவே தலித் மக்கள் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்துறையிடம் புகார் மனு தந்துள்ளனர். காவல் துறை வழக்குப்பதிவு செய்ய மறுத்துள்ளது.

பின்பு மார்க் சிஸ்ட் கட் சியின் கடும் நிர்பந்தத்திற்கு பிறகே வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட தலித் மக்கள் 8 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனை கண் டித்து பந்தல்குடியில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ஆர். சந்திரமோகன் தலைமை யேற்றார். ஆர்.அண்ணா துரை, கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப் பினர் சி.முருகேசன் பேசி னார். மாவட்டக்குழு உறுப் பினர்கள் எம்.தாமஸ், எஸ். பூங்கோதை, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் கே.சாமுவேல்ராஜ் கண் டன உரையாற்றினர். எம். செல்லத்துரை உட்பட 200 பேர் கலந்து கொண்டனர்.

புதன், 4 நவம்பர், 2009

தீண்டாமை ஒழிப்பு இயக்கமும் அக். 27 பேரணியும் -பி. சம்பத்

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் சமீபகாலப் போராட்டங்களும், அக்டோபர் 27ல் சென்னை மாநகரில் பதினைந்தாயிரம் பேர் பங்கேற்ற மகத் தானப் பேரணியும் தமிழ்நாட்டில் தலித் - பழங்குடி மக்களின் உரிமைப் போராட்டங் களில் ஒரு திருப்புமுனையாக அமைந் தன என்பதில் ஐயமில்லை. இப்பேரணி யில் பங்கேற்றவர்களில் கணிசமானவர் கள் தலித்துகள். தீண்டாமை என்பது தலித் மக்களின் பிரச்சனையல்ல. மாறாக அது தேசத்தின் இழிவு - ஜன நாயக இயக்கங்களுக்குச் சவால் என்ற முறையில் இந்த தீண்டாமை ஒழிப்புப் பேரணியில் பல தலித் அமைப்புகளுடன் இணைந்து பல்வேறு வர்க்க, வெகுஜன அமைப்புகளைச் சார்ந்தவர்களும் ஜன நாயக உள்ளம் படைத்த தனிநபர்களும் இணைந்து கலந்து கொண்டனர். இது இப்பேரணியின் தனித்த அம்சமாகும்.


போர்ப்படை பேரணி

பேரணியில் பங்கேற்றவர்களில் குறிப் பிடத்தக்க எண்ணிக்கையினர் இளை ஞர்கள் மற்றும் பெண்கள் என்பது இதன் மற்றொரு சிறப்பு அம்சமாகும். ஏராளமான பேனர்களும், கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளும், தலித் மக்களின் வாழ்வுரி மையைச் சித்தரிக்கும் ஓவியங்களு மாகச் சேர்ந்து இப்பேரணியின் தோற்றம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. பேரணியில் பங்கேற்றோர் எழுப்பிய முழக்கங்களும் அணிவகுப்பும் பார்த் தோரை பரவசமடையச் செய்தது. வர்க் கச் சுரண்டலையும் சமூக அநீதியையும் ஒருசேர அழிக்க முனையும் போர்ப்படை யாக இந்த அணிவகுப்பு அமைந்தது என்றால் அது மிகையல்ல.


தமிழக முதல்வருடன் சந்திப்பு - கோரிக்கைகள் ஏற்பு

பேரணியின் நிறைவாக தோழர்கள் என்.வரதராஜன், கே. வரதராசன், பி. சம் பத், பெ.சண்முகம், கே. பாலபாரதி, கே. மகேந்திரன், கே.ஆர். கணேசன், கு. ஜக் கையன், மாசிலாமணி, மோகன் ஆகி யோர் கொண்ட குழு, தமிழக முதல்வரை சென்னை கோட்டையில் சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை அளித்தது. கோரிக்கைகள் குறித்து சுமார் அரை மணிநேரம் தமிழக முதல்வருக்கும் தலைவர்களுக்கும் இடையே விவாதம் நடைபெற்றது.


கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை முழுமையாகப் படித்த தமிழக முதல்வர், அனைத்துக் கோரிக்கைகளுமே தமிழக அரசுக்கு ஏற்புடையதுதான் எனத் தெரி வித்தார்.


* மாநகராட்சிகளில் பாதாளச் சாக் கடை மரணங்களை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அனைத்து மாநகராட்சி களிலும் பாதாளச் சாக்கடை அடைப்பு களை அகற்றும் இயந்திரங்கள் கொள் முதல் செய்யப்பட்டு வருவதாகவும், நக ராட்சிகளிலும் இதற்கான நடவடிக்கை கள் எடுக்கப்படும் என்றும் இதைப் போல் மனிதக் கழிவை மனிதர்கள் அகற் றும் பணியும் முற்றிலுமாக துடைத்தெறி யப்படும் எனவும் தெரிவித்தார்.


* தமிழ்நாட்டில் தலித் - பழங்குடி மக்களின் பொருளாதார நிலைமைகளை ஆய்வு செய்து தீர்வுகாணவும், தலித்-பழங் குடி மக்களின் பிரச்சனைகளில் அவ்வப் போது தலையிடவும் அகில இந்திய அள வில் செயல்படும் தலித் - பழங்குடியினர் ஆணையம் போல சட்டப்பூர்வமான அதிகாரமும் அந்தஸ்தும் கொண்ட தமிழ் நாடு அளவிலான ஆணையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீ லித்து விரைவில் முடிவு எடுப்பதாக தெரி வித்தார்.


* விடுதலைப் போராளி ஒண்டிவீர னுக்குத் தமிழக அரசின் சார்பாக சிலை யும், நினைவகமும் நிறுவிட ஏற்றுக் கொள்வதாகவும் விரைவில் இதனை அமல்படுத்துவதாகவும் தெரிவித்தார்.


* சிபிஐ (எம்) மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியபடி அருந்ததியர் மக்களுக்கு தமிழக அரசு 3 சதமான உள்ஒதுக்கீடு வழங்கியிருப் பதைச் சுட்டிக்காட்டிய தமிழக முதல்வர், இம்மக்களின் இதர கோரிக்கைகளுக்குத் தீர்வுகாண உரிய நடவடிக்கைகள் மேற் கொள்வதாகத் தெரிவித்தார்.


* செப்டம்பர் 30ல், அமரர் பி.சீனிவாச ராவ் நினைவு தினத்தன்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய ஆலய நுழைவு இயக்கத்தின் போது காவல்துறை யினர் விழுப்புரம் மாவட்டம், காங்கியனூ ரில் நடத்திய தடியடித் தாக்குதலையும் இதில் ஜி. லதா எம்.எல்.ஏ., மிகவும் பாதிக் கப்பட்டதையும், கே. பாலகிருஷ்ணன் (விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர்), ஜி. ஆனந்தன் (சிபிஐ (எம்)) விழுப்புரம் மாவட்டச் செயலாளர்), உள் பட 103 பேர் கைது செய்யப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டதையும் அவர்கள் மீது வழக்கு தொடர்ந்து கொண்டிருப்ப தையும் சுட்டிக்காட்டி, இச்சம்பவங்கள் பற்றி நீதிவிசாரணை நடத்தி தவறிழைத்த காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் இதர அதிகாரிகள் மீது நடவடிக் கை எடுக்குமாறும், வழக்குகளை வாபஸ் பெறுமாறும் கோரிய போது; இது சம்பந்த மாக உடனடியாகத் தலையிடுவதாகவும், உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதாக வும் தெரிவித்தார்.


* தர்மபுரி நகராட்சி செங்கொடிபுரத் தில் 62 ஆண்டுகளாகக் குடியிருந்து வரும் பல்வேறு சமூகப் பிரிவினருக்கு தமிழ்நாடு அரசு குடிமனைப்பட்டா வழங்கியுள்ள நிலையில், அருந்ததியர் பிரி வினருக்கு மட்டும் குடிமனைப்பட்டா வழங்கவில்லை. தர்மபுரி நகராட்சி தவ றான முறையில் இம்மக்களை அங்கி ருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. செங்கொடிபுரம் தலித் மக்க ளுக்கு ஆதரவாகப் பலகட்டப் போராட் டங்கள் நடந்துள்ளன. தமிழக முதல்வர் இப்பிரச்சனையில் தலையிட்டு இம்மக் களுக்கு பட்டா வழங்க வேண்டுமென வற்புறுத்திய போது , அதில் உடனடியாகத் தலை யிடுவதாக ஏற்றுக் கொண்டார்.


* தமிழ்நாட்டின் ஏராளமான ஆலயங் களில் தலித்துகளுக்கு சம உரிமை மறுக் கப்படுவதையும், சட்டத்தையும் நீதிமன் றத் தீர்ப்புகளையும் மீறும் வகையில் பல இடங்களில் சாதிய சக்திகள் செயல்படு வதையும், அரசு நிர்வாகத்தின் செயல்பா டும் பல இடங்களில் சட்டப்பூர்வமான தாக இல்லை என்பதையும் கவனத் திற்கு கொண்டு வந்த போது காங்கியனூ ரிலும், செட்டிப்புலத்திலும் தமிழக அரசு, தலித் மக்களை ஆலயத்திற்கு அழைத் துச் சென்றதைச் சுட்டிக்காட்டி, தமிழக அரசு இத்தகைய பிரச்சனைகளில் உறு தியான நடவடிக்கைகளை மேற்கொள் ளும் எனத் தெரிவித்தார்.


* பழங்குடி மக்களின் வனவுரிமைச் சட்டத்தை உறுதியுடன் அமல்படுத்த வேண்டும் எனக் கோரியபோது தமிழக அரசு அதற்கான நடவடிக்கைகளை எல்லா மாவட்டங்களிலும் எடுத்து வருவ தாகவும் இப்பணி விரைவுபடுத்தப்படும் எனவும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் பழங் குடி மக்களுக்கு என தனி ஆணையர் நிய மனம் செய்யப்பட்டாலும் இவர்களுக்கு என தனித்துறை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.


* பல்லாயிரக்கணக்கான தலித் பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்திய போது, முந்தைய அரசு நிரப்பாமல் வைத் திருந்த காலியிடங்கள் உள்பட ஏராள மான பதவிகளை தற்போதைய அரசு நிரப்பி வருவதாகவும், தலித்-பழங்குடி பின் னடைவு காலியிடங்கள் நிரப்பப்படவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும் எனவும் தெரிவித்தார்.


* தலித் மக்களுக்கான பழுதடைந்த தொகுப்பு வீடுகளை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டி ருப்பதாகவும், இப்பணியை அரசு தொடர்ந்து முழு அளவில் நிறைவேற்றும் எனத் தெரிவித்தார்.


* தமிழ்நாட்டில் தீண்டாமைக் கொடு மைகளுக்கு முடிவு கட்ட தீண்டாமை ஒழிப்புச் சட்டம், வன்கொடுமைத் தடுப் புச் சட்டங்களின் அமலாக்கத்தை உறுதிப்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள ஏற்றுக் கொண்டார்.


* தலித்-பழங்குடி மக்களுக்கான இட ஒதுக்கீட்டை அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப 18 சதவிகிதத்திலிருந்து 19 சதவிகிதமாக உயர்த்துவது, தலித் -பழங்குடி மக்களுக்கு நிலம் வழங்குவது, பஞ்சமி நிலங்களை மீட்டுத் தருவது, வீட்டுமனைப்பட்டா வழங்குவது, தலித் - பழங்குடி மக்ளுக்கு, அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப பட்nஜட்டின் உபதிட் டத்தில் நிதி ஒதுக்கி, அதனை முழுமை யாகச் செலவிடுவது உள்பட உள்ள கோரிக்கைகளை பரிசீலித்து படிப்படி யாக நிறைவேற்ற ஆவன செய்வதாகத் தெரிவித்தார்.


இவ்வாறு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அக்டோபர் 27 பேரணி யில் முன்வைத்த பல்வேறு கோரிக்கை களை பேச்சுவார்த்தையின் போது தமி ழக முதலமைச்சர் ஏற்றுக் கொண்டதும், இவற்றை நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்ததும் வரவேற்கத்தக்க அம்சமாகும். இதோடு திமுகவின் அதிகாரப்பூர்வமான நாளிதழ் முரசொலி (30.10.09) யில் அக்டோபர் 27 பேரணி குறித்தும் பேச்சுவார்த்தையில் ஏற்றுக் கொண்ட சில பிரதான அம்சங்கள் குறித்தும் தமிழக முதல்வர் அவர்களே ஒரு சிறப்புக் கட்டுரையும் எழுதியுள்ளார்.


தலித் - பழங்குடி மக்களின் பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு சொல் அளவிலும், எழுத்து அளவிலும் ஏற்றுக் கொண்டதோடு மட்டுமின்றி, செயல் வடிவிலும் உறுதியாக அமல்படுத்தும் என நம்புகிறோம் - எதிர்பார்க்கிறோம்.


சமீபகால வெற்றிகள்

சமீப ஆண்டுகளில் சிபிஐ (எம்) மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி எடுத்த முயற்சிகளாலும் நடத்திய போராட்டங்களாலும்;


* அருந்தியர் உள் ஒதுக்கீடு 3 சதம் கிடைத்தது.


* உத்தப்புரம் தீண்டாமைச் சுவரின் ஒரு பகுதி உடைக்கப்பட்டு தலித் மக் களுக்குப் பொதுப்பாதை கிடைத்தது.


* திருவண்ணாமலை மாவட்டம், தாமரைப்பாக்கம் அக்னீஸ்வரர் கோவில்;


* திண்டுக்கல் மாவட்டம், ஆயக்குடி காளியம்மன் கோவில்


* நெல்லை மாவட்டம், பந்தப்புளி மாரியம்மன் கோவில்


* பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட் டை தாலுகா பாதாங்கி கிராமம் சிவன் கோவில்


* பெரம்பலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியம் அழகாபுரம் காசிவிஸ்வ நாதர் கோவில்


* திருவண்ணாமலை மாவட்டம், வேட வந்தாடி கிராமம் கூத்தாண்டவர் கோவில்


* விழுப்புரம் மாவட்டம், காங்கியனூர் கிராமம் திரௌபதியம்மன் கோவில்


* நாகை மாவட்டம் செட்டிப்புலம் கிராமம் ஏகாண்ட ஈஸ்வரர் கோவில்


- ஆகிய ஆலயங்களில் தலித் மக்களின் ஆலயப் பிரவேசம் வெற்றி பெற்றது.

தமிழகத்தில் பல கிராமங்களில் இரட் டைக் குவளை முறை ஒழிப்பு, முடிவெட்டும் உரிமை, பொதுப்பாதையை பயன் படுத்தும் உரிமை, சலவையகங்களில் துணி சலவை செய்துதரும் உரிமை, பொதுக் கழிப்பிடத்தை பயன்படுத்தும் உரிமை, பொது மயான உரிமை, தனி மயானத்தில் பாதை உரிமை என பல தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களில் வெற்றி கிடைத்தன.


இந்த வெற்றிகளின் தாக்கமும் உற் சாகமும் அக்டோபர் 27 பேரணியில் பிரதி பலித்தன. பல்லாயிரம் பேர் பங்கேற்பு இதன் சாட்சியம். இப்பேரணியானது தற் போது வேறு பல புதிய வெற்றிகளையும் குவித்துள்ளன.



போராட்டங்கள் தொடரும்

தலித் - பழங்குடி மக்களின் உரிமை களுக்கான நமது கடந்த காலப் பாதை கரடுமுரடானது. பயணமோ சவால்கள் நிறைந்தது. தாக்குதலும் அச்சுறுத்தலும் கூடவே வந்தன. ஆனால் இவை எதுவும் நமது பயணத்தைத் தடுக்க முடியவில்லை; வெற்றிகளை வீழ்த்த முடியவில்லை - இந்த அனுபவங்களோடு நமது பயணத்தைத் தொடர்வோம் - ஒடுக்கப்பட்ட மக் களின் சமூக உரிமைகளுக்கு மட்டு மின்றி, வாழ்வாதார உரிமைகளுக்கும் சேர்ந்தே போராடுவோம். சுரண்டலும் ஒடுக்குமுறைகளும் ஒழிக்கப்படும் வரை நமது போராட்டங்கள் தொடரும்.

திங்கள், 2 நவம்பர், 2009

சமூக நீதிக்கு குழிபறிக்கும் கபில் சிபல் நாடகம் - தீக்கதிர் தலையங்கம் (21.10.09)

மத்தியில் ஆளும் ஐ.மு.கூட்டணி அரசு கல்வித் துறையில் மெல்ல மெல்ல சமூக நீதியைக் கைகழுவிவிட திட்டமிட்டுள்ளது. மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபலின் ஒவ்வொரு பேட்டியும் ஒவ்வொரு செயலும் அதை நோக்கித்தான் அமைந்துள்ளன.
சமீபத்தில் ஐஐடி படிப்புக்கு நுழைவுத்தேர்வு எழுத பனிரெண்டாம் வகுப்பில் 60 சதம் மதிப் பெண் என்பதற்கு பதிலாக, இனிமேல் 80 சதம் என்று ஆக்கப்படும் என்ற செய்தி வெளிவந்தது. இதையொட்டி எதிர்ப்பு கிளம்பியதும் செய்தி ஆதாரமற்றது என்கிறார் அமைச்சர். ஆனால், அடுத்த வரியிலேயே இதைப்பற்றி ஐஐடி கவுன் சில்தான் இறுதி முடிவெடுக்கும். அதற்கான அதிகாரம் அவர்களுக்குத்தான் உண்டு என நழுவுகிறார். இதன் பொருள் ரகசியமானதல்ல. நிச் சயமாக வெகு விரைவில் 80 சதம் மதிப்பெண் என்பதை ஐஐடி கவுன்சில் அறிவிக்கும். அதில் தனக்கு சம்பந்தம் இல்லையென இப்போதே கூறி, சமூக நீதிக்கு சவக்குழி தோண்ட மண் வெட்டி கொடுத்து உதவுகிறார் கபில் சிபல்.

பத்தாம் வகுப்புக்கு தேர்வு கிடையாது என அறிவித்தபோதே குழப்பத்திற்கு அடிகோலப் பட்டுவிட்டது. மேற்கு வங்கம், கேரளா, தமிழகம் உட்பட பல மாநிலங்கள் எதிர்த்தும் அதனை மத் திய பள்ளிகளில் அமலாக்க முயல்வதும், மாநி லங்களின் எதிர்ப்பை மீறி கல்வியை படிப்படி யாக மத்திய பட்டியலுக்கே கொண்டு போக கபில் சிபல் முயல்வதும் சமூக நீதிக்கும், மாநில உரிமைக்கும் எதிரான முயற்சியே. இந்தியா, வர்க்கரீதியாகவும், சாதிரீதியாகவும் பிளவுண்டு கிடக்கிற சமூகம். இங்கே தாழ்த்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவனுக்கோ ஏழை எளிய மாணவனுக்கோ உரிய அங்கீகார மும், உரிய மதிப்பும் கிடைப்பதில்லை என்பது உள்ளங்கை புண் ஆகும். இதைப் பார்க்க கண் ணாடி தேவையில்லை.

தகுதியும் திறமையும் ஒரு குறிப்பிட்ட சமூகத் திற்கோ மேல்தட்டு மக்களுக்கோ சொந்தமல்ல. உண்மையிலேயே மிகவும் அறிவுபூர்வமான மாணவர்கள், அவர்களின் சமூகச்சூழல் காரணமாக தங்கள் திறமையை ஆங்கிலத்தில் வெளிப்படுத்த இயலாமல் உள்ளனர். இதனால் அவர்களின் உண்மையான தகுதிக்கு உரிய மதிப்பெண் வெறும் மொழியால் தீர்மானிக்கப் பட்டு மறுக்கப்படுகிறது.

அடித்தட்டில் இருக்கிற மக்களை கை தூக்கி விட சமூக நீதி பார்வை அவசியம். சமூக நீதியில் லாமல் இந்தியாவில் சம நீதி சாத்தியமில்லை. இதனை மேல்சாதி வெறி கொண்ட பாஜக ஒப்புக்கொள்வதில்லை. மண்டல் கமிஷனுக்கு எதிராக அவர்கள் நடத்திய கலவரமே இதற்கு சாட்சி. கபில் சிபலோ மென்மையான வார்த்தை களைப் பேசி ரொம்பவும் நுட்பமாக வாதாடி, நல்லது செய்வதுபோல் காட்டி சமூக நீதியை சத்தமில்லாமல் சாகடிக்கிறார்.

ஐஐடி நுழைவுத்தேர்வு சம்பந்தமாக தற்போது அப்படி திட்டம் எதுவும் இல்லை என்று கை விரித்தாலும், பொறுப்பை ஐஐடி கவுன்சிலிடமே ஒப்படைத்துவிட்டு அரசுக்கு எந்த பங்குமில்லை என்று சொல்வது திட்டமிட்ட நாடகமே.

ஏற்கெனவே பல உயர்கல்வி நிறுவனங்க ளுக்கு இட ஒதுக்கீட்டிலிருந்து விலக்களித் திருப்பதும், ஐஐடியில் இட ஒதுக்கீடு கிட்டத் தட்ட கைவிடப்பட்டிருப்பதும் கண்கூடு. இந் நிலையில் அமைச்சரின் பேச்சும் செயலும் நம்பத்தகுந்ததாக இல்லை. சமூக நீதிக்கு குரல் கொடுப்பதாக மார்தட்டும் திமுக, தங்கள் கூட்டணி அமைச்சரின் செயலுக்கு என்ன விளக்கம் சொல்லப் போகிறது?